ஈழம் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ம.க.இ.க.வினர் எழுதியவற்றில் இருந்து ஓரிரு மேற்கொள்களை எடுத்துக்காட்டி அவற்றைத் திரித்து, அவற்றில் இல்லாத தமது சொந்த வியாக்கியானங்கள் கொடுத்து, சமரன் குழு ம.க.இ.க.வினர் மீது அவதூறும் செய்கின்றனர். இதையும், விடுதலைப் புலிகளைப் பற்றி சமரன் குழு முன்பு எழுதி, ‘ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்’ என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள நூலில் மீண்டும் பதிப்பித்துள்ள கருத்துக்களையே எடுத்துக்காட்டி அவர்களின் பித்தலாட்டங்களையும் பு.ஜ. 2013, அக்டோபர், டிசம்பர் இதழ்களில் நாம் அம்பலப்படுத்தியிருந்தோம். ம.க.இ.க. வினரின் நிலைப்பாடுகள் மீதான விமர்சனங்கள் என்ற பெயரில் இதே பாணியிலான பித்தலாட்டங்களைத்தான் அந்நூலில் அவர்கள் அடுக்கியுள்ளனர் என்பதற்கு மேலும் சில சான்றுகளை இங்கே பார்க்கலாம்.
“தரகு முதலாளித்துவ மற்றும் திருத்தல்வாதிகளின் அணிவரிசையில் புரட்சி பேசும் புதிய ஜனநாயகம் மற்றும் ம.க.இ.க. குழுவினர் இராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக அணி வகுத்துள்ளனர்” (பக்.14) என்கிறது, சமரன் குழு. எவ்வளவு மோசமான அறிவு நாணயமற்றவர்களாக இருந்தால் இப்படியொரு பொய்யைச் சொல்லுவார்கள்! ம.க.இ.க.வை அறிந்த யாரும் இப்படி ஓர் அபாண்டத்தை நம்புவார்களா? பின்வரும் மேற்கோள் ஒன்றை இந்த அபாண்டத்திற்கு ஆதாரமாக அந்நூலில் அக்குழு காட்டுகிறது.
“அதாவது, ஈழம், புதிய சூழ்நிலை, புதிய பாதை என்று கூறித் தனி ஈழம் சாத்தியமில்லை என்றும் அக்கோரிக்கையைக் கைவிடவேண்டும் என்றும் பு.ஜ. மற்றும் ம.க.இ.க. குழுவினர் கூறுகின்றனர்.” (பக்.14.)
மீண்டும் அதே பாணியிலான பித்தலாட்டம்! இங்கே எடுத்துக்காட்டியிருக்கும் மேற்கோளுக்குத் தமிழறிந்த, அறிவுநேர்மையுள்ளவர்கள் யாரும் சமரன் குழு கூறும் பொருளை ஏற்பார்களா? அக்குழு காட்டியுள்ள மேற்கோளில் உண்மையில் மூன்று கருத்துக்களைத்தான் நாம் சொல்கிறோம் :
- இன்றைய யதார்த்த நிலையில் ஈழப் பிரச்சினைக்கு உடனடியான, தற்காலிகத் தீர்வு எதுவும் கிடையாது; எல்லாவற்றையும் அரிச்சுவடியிலிருந்து தொடங்கி அமைப்பையும் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.
- இனவாத நோக்கில் உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்பக்கூடாது.
- சிறியவையானாலும் இராஜபக்சேக்களின் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள், உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகளின் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப் போராடுவதுதான் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு.
இப்படிச் சொல்லுவது எப்படி இராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக அணிவகுப்பதாகும் என்று சமரன் குழுவும் அதன் சீடர்களும் நேர்மையாக விளக்கட்டும். “இராஜபக்சேக்களின் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட” என்பது தவிர மேற்கண்ட எமது கருத்துக்களில், ஈழப் பிரச்சினைக்கான தீர்வில் சமரன் குழு எங்கே மாறுபடுகிறது? வேறு ஏதோ தீர்வு தன்னிடம் இருப்பதாக இன்னொரு பித்தலாட்டமும் செய்கிறது.
சிங்கள உழைக்கும் மக்களுடன், பாட்டாளிகளுடன் வர்க்க ஒற்றுமையைக் கட்டவேண்டும் என்று சமரன் குழுவே பலமுறை வலியுறுத்துவதை இதே நூலிலிருந்து நாம் காட்டமுடியும் என்றாலும் “இராஜபக்சேக்களின் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள்” என்று கிடையாது என்று வேறு புளுகுகிறார்கள்.
“இராஜபக்சேவின் இராணுவப் பாசிசத்திற்கு எதிராகச் சிங்களப் பகுதியில் ஒரு அமைப்பும் போராட முன்வராத ஒரு சூழலில், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்துப் போராட அங்கே ஒரு அமைப்பும் முன்வராத ஒரு சூழலில், இரு இனமக்களும் ஒன்று சேர்ந்து வர்க்கப் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறுவது தமிழீழக் கோரிக்கையைக் கைவிடச் செய்வதற்கான தந்திரமின்றி வேறென்ன?” (பக்.15).
“அவர்கள் (ம.க.இ.க.,வினர்) இன்று மட்டுமல்ல, கடந்த 30 ஆண்டு காலமாகவே உதட்டில் ஈழத்தை உச்சரிப்பதும் உண்மையில் ஈழக் கோரிக்கைக்குக் குழி பறிக்கும் வேலையைத்தான் செய்து வருகின்றனர். தமிழீழத்தை ஆதரிப்பதுபோல் பேசுவது, மறுபுறம் இலங்கை அரசின் பாசிசப் போக்கையும் புலிகளின் பாசிசப் போக்கையும் சமப்படுத்திப் பேசினர். இறுதியில் புலிகளின் பாசிசப் போக்கை எதிர்த்துப் போராடுவதையே முதன்மைப் பணியாகக் கொண்டனர். இவ்வாறு ஈழப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்து வந்தனர். அதையேதான் இன்றைய சூழலிலும் அவர்கள் தொடர்கின்றனர்.” (பக்.14.)
இப்படிப் புளுகுவதன் மூலம் புலிகள்தான் தமிழீழம், புலிகளின் பாசிசத்தை எதிர்ப்பது தமிழீத்தையே எதிர்ப்பதாகும் என்றும் ஈழத்துக்கு மேலாகப் புலி விசுவாசத்தைத்தான் காட்டுகின்றனர்.
“30 ஆண்டுகாலமாகவே” என்று அவர்கள் சொல்வது 1983 ஆம் ஆண்டிலிருந்து நாம் இப்படிச் செய்வதாகிறது. புலிகளின் பாசிசத்தை எதிப்பதாலேயே இந்த 30 ஆண்டு காலமாக, ம.க.இ.க.வினர் தமிழீழத்துக்குத் துரோகமிழைப்பதாகவும் ஈழக் கோரிக்கைக்குக் குழி பறிக்கும் வேலையைச் செய்வதாகவும், சமரன் குழு குற்றஞ்சாட்டுகின்றது.
ஈழத் தமிழ் அகதிகள் கொடுத்த ஆதாரபூர்வ செய்திகளின் அடிப்படையில் “ஈழத்து எம்.ஜி.ஆர். பிரபாகரனின் பொய்கள், சதிகள், கொலைகள்” என்ற கட்டுரையை 1987 ஜனவரியில் புதிய ஜனநாயகம் வெளியிட்டது. அப்போதிருந்துதான் புலிகளின் பாசிசத்தை பு.ஜ.குழு மற்றும் ம.க.இ.க.வினர் எதிர்க்கத் தொடங்கினர். அதுவரை புலிகளை பாசிஸ்டுகளாக வரையறுக்கவோ, எதிர்க்கவோ கிடையாது. அதன் பிறகும், 1987-இல் ஈழ ஆக்கிரமிப்பை இந்தியா தொடங்கியதிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறும் வரையிலான காலகட்டத்தில் புலிகளை ஆதரிக்கவே செய்தோம். அதன் பிறகு முள்ளிவாய்க்கால் போர் முடியும்வரை புலிகள் தம் பாசிசத்தை முழுவீச்சில் கடைப்பிடித்ததால் எதிர்த்தோம். அதேசமயம், புலிகளுக்கு எதிரான ஈழத் துரோகிகள் மற்றும் எதிரிகளின் தடை, தாக்குதல்களை எதிர்த்தே வந்துள்ளோம். ராஜீவ் உட்பட ஈழ எதிரிகளுக்கும் ஈழத் துரோகிகளுக்கும் எதிரான புலிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளின் அரசியல் நியாயத்தை உயர்த்திப் பிடித்து வந்துள்ளோம். ஆனால், அவை பற்றி புலிகள், புலி விசுவாசிகள் – தமிழினவாதிகள்கூட மௌனம் சாதிக்கவே செய்தனர்.
புலிகளை அரசியல்ரீதியில் விமர்சித்ததற்காக ம.க.இ.க.வினரை சமரன் குழு அவதூறு செய்கிறது. ஆனால், புலிகள் இலங்கை, இந்திய அரசுகளுடன் சமரசம் செய்வார்கள் என்றும் அதற்கான வேர்கள் இருப்பதாக ஐயப்படுவதாகவும் சமரன் குழு எழுதியதில்லையா? புலிகள், ‘இலங்கை பாசிச ஆட்சிக்கு மாறாக, ஒரு இராணுவ அதிகார வர்க்க ஆட்சி முறையைச் செயல்படுத்தினர்; ஒரு படையின் ஆட்சி அல்லது அனைத்து அதிகாரத்தையும் தனது ஏகபோகமாக்கிக் கொள்வது என்ற பாசிசக் கொள்கையைப் பின்பற்றினர்; புலிகளின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்ப்பதற்கு ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்க வேண்டும்; புலிகளுக்கு அமெரிக்கா மீதிருந்த மாயையும், இந்திய அரசின் மீதான குருட்டு நம்பிக்கையும், கஸ்பர் சாமியார் போன்ற துரோகிகளை நம்பியதும்தான் விடுதலைப் போரில் தோல்விக்கும் தலைமையின் அழிவிற்கும் காரணம் என்று இப்போதும் சமரன் குழு எழுதவில்லையா? சமரன் குழுவின் கண்ணோட்டப்படி புலிகள் பற்றிய அக்குழுவின் இவ்வாறான அணுகுமுறையை வைத்து ஈழப் போராட்டத்துக்கு அவர்கள் துரோகம் இழைத்து வந்தனர் என்றும் ஈழக் கோரிக்கைக்குக் குழிபறிக்கும் வேலையைத்தான் செய்து வருகின்றனர் என்றும் ஏன் கருதக்கூடாது?
இந்த ‘30 ஆண்டு காலமாகவே’ பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய ஈழத் தன்னுரிமைக் கோரிக்கையை ம.க.இ.க.வினர் ஏற்றுப் போராடாத காலம் என்று எதையாவது இவர்களால் காட்ட முடியுமா? ஈழத் தன்னுரிமைக் கோரிக்கை என்பது தனி ஈழம் அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியது இல்லையா? புலிகளே தனி ஈழக் கோரிக்கையைக் கைவிடுவதாவும் அதற்கு மாறாக சுயாட்சியை ஏற்பதாகவும் கூறியபோது, அதை ம.க.இ.க.வினர் எதிர்க்கவில்லையா? இப்படிச் செய்வதைத்தான் புலிகளின் “பேரம், பேரம்” என்று பு.ஜ. கூறுவதாக, சமரன் குழுவினர் அவதூறு செய்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் கொடூரம் நடந்தவுடனேயே இராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக்கி “நூரம்பர்க்” வழியிலான விசாரணையும் தண்டனையும் வழங்கக் கோரிப் போராடியவர்கள், ம.க.இ.க.வினர். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு இரண்டாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் வந்தது, அதை ஆதரிக்கக் கோரி நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, அதை நீர்த்துபோகும் தீர்மானத்துடன் இந்தியா ஆதரித்தது. அடுத்த ஆண்டு நீர்த்துப்போன அத்தீர்மானம் வந்தபோதுதான் தமிழ்நாட்டில் பொது மாணவர் எழுச்சி ஏற்பட்டது. அதன்பிறகு மட்டுமே, அதை அறுவடை செய்து கொள்ள விழித்துக்கொண்ட சமரன் குழு, ஈழ மக்கள் மீதான தனது அக்கறையற்ற மெத்தனத்தை ஈடுகட்ட ம.க.இ.க.வினர் மீது அவதூறுகளை அள்ளிவீசுகின்றது.
“இராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்காக ஐ.நா. அவை மூலம் தண்டிக்க வேண்டும் என்று போராடும் மாணவர்களை எள்ளிநகையாடும் ம.க.இ.க.வினர், ‘நூரம்பர்க்’ போன்ற விசாரணை மன்றம் தேவை எனப் புரட்சி வேடம் போடும் ம.க.இ.க.வினர், இராஜபக்சேவைத் தண்டித்தால் ஈழத் தமிழர்களுக்கு இன்னல் அதிகரிக்கும் என்று பயமுறுத்துகின்றனர்.” (பக்.14).
ம.க.இ.க.வினர் மீதான இந்த அவதூறுக்கு சமரன் குழு பின்வரும் ஆதாரத்தை முன்வைக்கிறது: “அப்படி ஒரு நடவடிக்கை வந்தால் இராஜபக்சேவைப் போன்ற ஒரு நரித்தனமான பாசிஸ்டு அதை எப்படி எதிர்கொள்வான் என்பதை நாம் பார்க்கவேண்டும். அதை இலங்கையின் இறையாண்மை மீதான தாக்குதலாக இராஜபக்சே சித்தரிக்கப் போகிறார். அதையொட்டி மீண்டும் தேசவெறியும், இனவெறியும் தூண்டப்படும். ஏற்கெனவே இலங்கையின் இறையாண்மையில் இந்தியா அல்லது அமெரிக்கா தலையிடுகிறது என்ற கோணத்திலேதான் அங்கேயிருக்கிற சிங்கள இனவெறியர்கள் அதை எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்’ என்று ம.க.இ.க. வினர் எழுதுகிறார்கள்.”
“அதாவது இராஜபக்சேவைத் தண்டிப்பதுகூடத் தமிழர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் வாதிடுகின்றனர். இதைவிட இராஜபக்சேவுக்கு ஆதரவாக யாராவது பேசமுடியுமா?” (பக்.14,15.) என்று சமரன் குழு கேட்கிறது.
மீண்டும் ஒரு மேற்கோள் பித்தலாட்டம்! “இராஜபக்சேவைத் தண்டித்தால் ஈழத் தமிழர்களுக்கு இன்னல் அதிகரிக்கும்” என்றோ, “இராஜபக்சேவைத் தண்டிப்பதுகூடத் தமிழர்களுக்கு ஆபத்து” என்றோ பொருள் கொள்ளும் விதமான அடிப்படை ஏதாவது இந்த மேற்கோளில் இருக்கிறதா? சமரன் குழுவின் கோணல் புத்திக்கு மட்டும்தான் அப்படியான பொருள் கொள்ளத் தோன்றும். “இராஜபக்சேவைப் போன்ற ஒரு நரித்தனமான பாசிஸ்டு அதை எப்படி எதிர்கொள்வான்” என்பதை விளக்கி, இவ்வாறு எதிரியின் சிங்களப் பேரினவாத வெறியூட்டும் சதியை எதிர்கொள்ள, இராஜபக்சேக்களின் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகளை வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி “போர்க் குற்றங்களுக்காக இராஜபக்சேவைத் தண்டிப்பது எப்படி?” என்று தலைப்பிட்டு எழுதியதிலிருந்து ஒரு பகுதியை திரித்துப் பொருள் கூறுகிறது, சமரன் குழு.
இந்தப் பித்தலாட்டத்தை முன்வைத்து சமரன் குழு மாணவர்களுக்கு ஒரு அறைகூவல் விடுக்கிறது: “இவ்வாறு பு.ஜ.குழு மற்றும் ம.க.இ.க.வினர் உருவாக்கியுள்ள ஈழத் தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர்கள் கூட்டமைப்பும் தமிழீழத்துக்குத் துரோகம் செய்வதை மாணவர்கள் புரிந்துகொண்டு புறந்தள்ள வேண்டும். அவர்கள் இராஜபக்சேவுக்கும் இந்திய அரசுக்கும் துணைபோகும் சந்தர்ப்பவாதத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.” (பக்.15)
இந்த அறைகூவலைப் புரிந்து கொண்டு மாணவர்கள் புறந்தள்ளுகிறார்கள், பு.ஜ.குழு மற்றும் ம.க.இ.க.வினரை அல்ல; சமரன் குழுவைப் புறந்தள்ளத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களைத்தான் எங்கேயும் எப்போதும் களத்தில் காணவில்லை.
(தொடரும்)
_____________________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014
_____________________________________________
வினவு அய்யா…
சமரன் என்ன சொன்னால் என்ன? கீழ்கண்ட உங்கள் வரிகள் மூலம் நான் தெரிந்து கொள்வது
”1.இன்றைய யதார்த்த நிலையில் ஈழப் பிரச்சினைக்கு உடனடியான, தற்காலிகத் தீர்வு எதுவும் கிடையாது; எல்லாவற்றை….” என்று ஆரம்பித்து நீங்கள் 3 வரை சொல்லியிருப்பதின் பொருள் என்ன… ஏன் கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடுவானேன்… வெளிப்படையாக சொல்லலாம்.. ஈழம் என்பது காரிய சாத்தியமானதா என்பதுதான்.. என்னைப் பொருத்தவரை அது உண்மை என்றே நினைக்கிறேன்.. உங்களைப் பொருத்த வரை உங்கள் முற்போக்கு சார்பு மற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை etc etc (போன்ற பெருங்கதையாடல்கள்) சுற்றி வளைத்துப் பேச வைக்கிறது… சரி அப்படியே பிரிந்து போன ரசிய கூட்டரசின் துண்டு துண்டான நாடுகள் எந்த லட்சணத்தில் உள்ளது…? நமக்குத் தெரியாதா…? ஏன் வீண் வறட்டு கௌரவம்