கேள்வி: //டாலர் என்றால் என்ன? அது மட்டும் எப்படி உலகம் முழுவதும் இருக்கிறது? அதன் மதிப்பு எப்படி மதிப்பிடப்படுகிறது? அது எந்த மதிப்பீட்டின் பெயரில் அச்சடிக்கப் படுகிறது?//

– சந்திரன்

ன்புள்ள சந்திரன்

டாலர் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, சிங்கப்பூர், தைவான் மற்றும் அமெரிக்காவை உள்ளிட்டு 20  நாடுகள் தமது செலவாணியை வைத்துள்ளன. ஆனால் உலகம் முழுவதும் டாலர் என்றால் அமெரிக்காவின் டாலரைத்தான் குறிப்பிடுகிறார்கள். அது உலக செலவாணி போல செல்வாக்குடன் இருக்கிறது. மேலும் கரீபியன் நெதர்லாந்து, கிழக்கு திமோர், ஈக்வெடார், மார்ஷல் தீவுகுள், சிம்பாவே போன்ற சில சிறிய நாடுகளும் கூட அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ செலவாணியாக வைத்துள்ளன.

US-dollarஇருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு உலகம் முழுவதும் வளர்ந்து வந்தது. சமூக ஏகாதிபத்தியமான சோவியத் யூனியன் 90-களில் வீழ்ச்சி அடைந்த பிறகு அமெரிக்காவே ஒற்றைத் துருவ வல்லரசாக உலகில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. 1971-ம் ஆண்டு வரை பெரும்பான்மை நாடுகள் தமது செலவாணி அச்சடிப்பை தங்கத்தின் இருப்பைக் கொண்டு நடத்தின. அதன்பின் எவ்வளவு அன்னியச் செலவாணி (டாலர்) இருக்கிறது என்பதை வைத்து (கூடவே தங்கம், கடன் பத்திரங்கள்) செலவாணியை அச்சடிக்கிறார்கள். மேலும் ஒரு நாட்டில் செல்வ மதிப்பு என்பது அது எத்தனை டாலர் வைத்திருக்கிறது என்பதை வைத்து மதிப்பிடப்படுகிறது.

இது தொடர்பாக புதிய ஜனநாயகம் கட்டுரை ஒன்றின் பகுதியை கீழே தருகிறோம்.

‘‘அமெரிக்கா டாலர்களை உற்பத்தி செய்கிறது; உலகின் பிற பகுதியினர் அந்த டாலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்” என டாலரின் ஆதிக்கம் பற்றிக் கூறுகிறார், ஹென்றி லியூ என்ற பொருளாதார அறிஞர். உலகின் பிற பகுதியினர் என்பதில் சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல; ரசியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வல்லரசு நாடுகளும் அடங்கும்.

இன்று உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினில் ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா விழுந்தால், வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல, பிற மேல்நிலை வல்லரசுகளும் சேர்ந்தே விழ வேண்டியதுதான். இந்த நாடுகள், தமது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக மட்டும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கவில்லை. ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் தாம் ஈட்டும் டாலரில் பெரும்பகுதியை அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்கின்றன. அதனால்தான், அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தேள் கொட்டினால், இவர்களுக்கு நெறி கட்டிவிடுகிறது.

படிக்க:
பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?
♦ அமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் – பட விளக்கம்

அமெரிக்கா இந்த நாடுகளை இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. இந்நாடுகளில் இருந்து மிகவும் மலிவான விலையில் நுகர்பொருட்களை இறக்குமதி செய்து, தனது சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. அமெரிக்காவின் இந்த இறக்குமதி சார்ந்த கொள்கையால் அதிகரித்துக் கொண்டே போகும் வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் பற்றாக்குறை) டாலரை அச்சடித்தோ அல்லது தனது நாட்டில் முதலீடு செய்யப்படும் டாலர்களைக் கொண்டோ ஈடுகட்டிக் கொள்கிறது. வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் அதிக வட்டியில் முதலீடு செய்வதற்கும், தனது போர்ச் செலவுகளுக்கும்கூடத் தனது நாட்டுக் கடன் பத்திரங்களில் பிற நாடுகள் முதலீடு செய்யும் டாலர்களைப் பயன்படுத்தி வருகிறது.

டாலரின் மேலாதிக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிற நாடுகளின் உழைப்பையும், சேமிப்பையும் உறிஞ்சிக் கொழுக்கும் ஒட்டுண்ணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் வாழுகிறது என்பதைதான் இது எடுத்துக் காட்டுகிறது. டாலருக்குப் போட்டியாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வராதவரை அமெரிக்காவின் இந்த ஒட்டுண்ணித்தனம் கேள்விகேட்பாரின்றிச் செல்லுபடியாகும்.

uncle-samபொருட்களை உற்பத்தி செய்வதைவிட, டாலரை இடையறாது அச்சடித்து, அதனை வெளியே புழக்கத்தில் விடுவதுதான் இப்பொழுது அமெரிக்காவில் இலாபகரமான வர்த்தகம் எனக் குறிப்பிடுகிறது எக்கானமிஸ்ட் என்ற இதழ். இதுநாள்வரை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலரில் ஏறத்தாழ 70 சதவீத டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியேதான் சுற்றிக் கொண்டுள்ளன. இதில் ஒரு 5 சதவீத டாலரை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டாலே அதன் பொருளாதாரம் நிலைகுலைந்து போய்விடும் எனக் கூறப்படுகிறது. எனினும், எண்ணெய் வளம் டாலருக்கு மட்டும் விற்கப்படுவது என்ற அலாதியான ஏற்பாட்டின் காரணமாகவும், தனது இராணுவ பலத்தைக் கொண்டும் டாலரின் புழக்கத்தையும், அதன் மேலாதிக்கத்தையும் அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.

டாலருக்கு மாற்றாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெறும் 0.1 சதவீதம்தான். அதே யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த பிரான்சிலோ இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி சுழியமாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ‘வளர்ச்சிக்கு’க்கூட இந்த நாடுகள் அமெரிக்காவைதான் நம்பியுள்ளன. அது மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி உள்ளிட்டு 17 நாடுகள் அமெரிக்காவைவிட மோசமாகப் பொதுக் கடன் பிரச்சினையில் சிக்கித் திண்டாடி வருகின்றன. தனது உறுப்பு நாடுகளைக்கூடக் கைதூக்கிவிட முடியாத நிலையில் உள்ள ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுக்கும் டாலருக்கும் மாற்றாக வர தற்சமயம் வாய்ப்பில்லை.

உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினையே நம்பி இருப்பதால், அமெரிக்காவின் டாலரும், அதன் சந்தையும் சரிந்துவிடாமல் காப்பதில் ஏனைய நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. தனக்கு மிகக் குறைந்த விலையில் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், குறைந்த வட்டியில் கடன் கொடுக்கவும் ஏனைய நாடுகள் தயாராக இருப்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் மைனரைப் போலக் கவலையின்றி இருக்கிறது.

படிக்க:
கேள்வி பதில் : சமூக மாற்றத்திற்கு சமூக அந்தஸ்து உள்ள தலைவர் தேவையா ?
♦ உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

டாலருக்கு மாற்றாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வர வேண்டும் என்றால், அமெரிக்காவிற்குக் கடன் கொடுத்துள்ள நாடுகள் தமது டாலர் முதலீடுகளைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படும். இப்படித் திரும்பப் பெறும் முதலீடுகளை மறு முதலீடு செய்ய ஒரு இடம் வேண்டும். அமெரிக்காவுக்கு பதிலாக தங்களது பொருட்களை நுகர்வதற்கான வேறொரு சந்தையையும் அவர்கள் தேட வேண்டும். இதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்பதால் டாலரின் மேலாதிக்கத்திற்கு பெரிய அச்சுறுத்தல் ஏதும் தற்சமயம் ஏற்பட வாய்ப்பில்லை.

அமெரிக்கா போண்டியாகிவிட்டது என்பது இன்று உலகறிந்த உண்மை. எனினும், அந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் அனைத்தும் அடுத்த கணமே போண்டியாகிவிடும். எனவே, கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்வதைத் தவிர மற்ற நாட்டு அரசுகளுக்கு வேறு வழி இல்லை.

இனி, அமெரிக்காவுக்குப் பொருளை விற்றவர்கள் பில்லைக் கொடுத்துப் பணம் கேட்டால் அமெரிக்க அரசு இப்படி வெளிப்படையாகவே பதில் சொல்லக்கூடும், “ கனவான்களே, ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். மெசின் ஓடிக் கொண்டிருக்கிறது; டாலர் நோட்டுகள் காய்ந்தவுடன் எடுத்து வெட்டி, எண்ணி, கட்டித் தந்து விடுகிறோம்’’. கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்கள் பிரசாதத்தையும் நம்பித்தானே ஆக வேண்டும்.”

முழுமையான கட்டுரையை கீழே உள்ள இணைப்பில் படிக்கலாம்.

இந்தக் கட்டுரை 2008-ம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட சிக்கலை விளக்கும் வண்ணம் எழுதப்பட்டது. இன்றைக்கு அந்த நெருக்கடி மேலும் தீவிரமாகியிருக்கிறது. விரைவிலேயே அமெரிக்காவை மையமாக வைத்து ஒரு பெரும் நெருக்கடி வரும், முதலாளித்துவ உலகில் அதை தடுத்து நிறுத்த எந்த சீர்திருத்தங்களும் இல்லையென முதலாளித்துவ அறிஞர்களே எழுதி வருகின்றனர்.

அதன் அறிகுறியாக அமெரிக்கா சீன வர்த்தகப் போர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முரண்பாடு, ரசியா தனியாக எண்ணெயை ஏற்றுமதி செய்வது, ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடை என நிறைய பிரச்சினைகள் சமீப மாதங்களில் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் டாலரின் ஏகபோகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் அமெரிக்கா வீழ்ந்தால் மொத்த உலகமும் விழ வேண்டியிருக்கும் என்ற சுழலில் முழு உலகமும் சிக்கியிருக்கிறது.

2008 அமெரிக்க நெருக்கடி குறித்த கட்டுரையை கீழே படிக்கலாம்.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க