கேள்வி: //”நீ பெரிய ஆளாக (பணக்காரன், வக்கீல், சமூக அந்தஸ்து பெற்றவன்) இருந்தால் தான் மக்கள் நீ சொல்வதைக் கேட்பார்கள். இல்லையெனில் மக்களுக்காக களப்பணி செய்யும் உன்னைப் போன்ற எவரையும் மக்கள் சட்டை செய்ய மாட்டார்கள். உன் உழைப்பும், எதிர்காலமும் வீணாகிவிடும்.

அப்படித்தான் அம்பேத்கர், பெரியார், அப்துல் கலாம் சமூகத்தின் மாற்றத்திற்கு பங்களிப்பு செய்தார்கள். மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்று மக்கள் பணி செய்யும் என்னைப் போன்ற தோழர்களை அவநம்பிக்கைக்கு உள்ளாக்கி விடுகிறார்கள். அவநம்பிக்கையும் ஏற்பட்டு மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது?//

– மா.பேச்சிமுத்து

ன்புள்ள பேச்சிமுத்து,

அப்துல் கலாம் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு திணிக்கப்பட்டு பிரபலமானவர். அதனாலயே அவர் இறந்து போன பிறகு மக்களும் கணிசமாக மறந்து போனார்கள். அம்பேத்கரும், பெரியாரும் தங்களது திட்டமிட்ட செயல்பாட்டால் பிரபலமானார்கள். அதற்காக சொல்லடியும் கல்லடியும் பட்டு களத்தில் போராடினார்கள். அந்த போராட்டம் மலர் குவிந்த மென்மையான ரம்மியமான பாதையில் அல்ல!

periyar-ambedkarஅண்ணல் அம்பேத்கர் தனது காலத்தில் சாதி தீண்டாமைக்கு காரணமான இந்துமதத்தை, பார்ப்பனியத்தை முற்று முழுதாக அம்பலப்படுத்தினார். அதற்காகவே அவர் காலத்தில் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்ந்த காந்தியை துணிவுடன் எதிர்கொண்டார். காந்தியை விமரிசிப்பது என்பது மைய நீரோட்ட அரசியலை எதிர்ப்பதாகும். இருப்பினும் அதற்காக அவர் கவலைப்படவில்லை. அதே போன்று பெரியாரும் சமூகநீதிக்காகவும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்தும் போராடினார். எனவே இவர்களுக்கு கிடைத்த பிரபலம், புகழ் என்பது அவர்களது சொந்த முயற்சிக்கு கிடைத்த ஒன்றாகும். சொல்லப்போனால் அவர்களுக்குரிய சமூக அந்தஸ்து இதனால் ஆரம்பத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. தொடர்ச்சியான அவர்களது செயல்பாடே அவர்களுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பை பெற்றுத் தந்தது.

இந்திய போன்ற நிலவுடமை சமூகச் செல்வாக்கு உள்ள நாடுகளில் சமூக அந்தஸ்து உள்ளோருக்கு ஒரு செல்வாக்கும் புகழும் இருக்கும் என்பது உண்மையே. ஏற்றத் தாழ்வான வளரச்சி கொண்ட நம் நாட்டில் சொத்துடமையால் பிரிந்து கிடக்கும் சமூகத்தில் சமூக அந்தஸ்து கொண்டோர் பிரபலமாக முடியும் என்பதும் உண்மையே.

அதே நேரத்தில் சமூகத்தில் இருக்கும் மாற்றம் என்பது தனிநபர்களை மட்டும் மையமாக வைத்து தோன்றிடும் ஒன்றல்ல. அது சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் வீச்சில் சில தனிநபர்களை குறிப்பிட்ட காலத்தில் தோற்றுவிக்கிறது. திராவிட இயக்கத்தின் செயல்பாட்டில் அத்தகைய சமூக அந்தஸ்து இல்லாத பல தலைவர்கள் தோன்றியிருக்கின்றனர்.

karunanidhiகருணாநிதியையே எடுத்துக் கொண்டால் அவர் பள்ளிப் படிப்பை கூட முடித்தவரல்ல. அவரது சாதியும் ஆதிக்க சாதி போன்று செல்வாக்கு கொண்டது அல்ல, சிறுபான்மையான மக்களைக் கொண்ட சாதி. ஆனால் அவரது முயற்சியால் அவர் தலைவரானார். பள்ளி நாட்களில் கையெழுத்து பத்திரிகை ஆரம்பித்தார். பின்பு முரசொலியை அச்சிட்டு ஆரம்பித்தார். உள்ளூரில் நாடகம் போட்டார். பின்பு நாடக வசனம் எழுதி சினிமாவிற்கு வசனம் எழுதும் நிலையை அடைந்தார். உள்ளூரில் பேசி பிறகு மாநிலம் முழுக்க பேசி பிரபலமானார். அன்றைக்கு இவரைப் போன்ற பலரை திராவிட இயக்கம் உருவாக்கியிருந்தது. முடிவெட்டும் சலூன்கள், மாணவர்களின் விடுதிகள் போன்றவை திராவிட இயக்கத்தின் அரசியல் பேசப்படும் மையங்களாகின. பார்ப்பனிய செல்வாக்கு கொண்ட ஒரு நாட்டில் சலூன்கள் எப்படி அரசியல் மையங்களாகின என்பது உங்களது கேள்விக்கு ஒரு விடை.

படிக்க:
கேள்வி பதில் : சதுர்த்தி – குழந்தை திருமணம் – நினைத்ததை எழுதுவது எப்படி ?
♦ மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?

இதற்கு நேரெதிராக ஜெயலலிதாவின் தலைமைப் பண்பை எடுத்துக் கொள்வோம். அவர் எம்.ஜி.ஆரால் நேரடியாக அரசியலில் திணிக்கப்பட்டார். பிறகு பார்ப்பனிய ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் அவரை தலைவராக சமூகத்தில் முன்வைத்தன. அவரும் எழுதிக் கொடுக்கப்பட்ட உரையை பிரச்சாரங்களில் வாசித்தார். அவரது பன்மொழிப்புலமையை மாபெரும் திறமையாக ஊடகங்கள் முன்வைத்து அவரை ஒரு இரும்புத் தலைவி என்றெல்லாம் சித்தரித்தன. இடையில் அரசியலை விட்டே ஓடுவதற்கும் அவர் தயாராக இருந்தார். அவர் பேசும் கூட்டங்களுக்கு மக்கள் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டனர். அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சமூகநலத் திட்டங்களுக்கு அவரது பெயரே வைக்கப்பட்டு, ஏதோ ஜெயலலிதா தனது கைக்காசை போட்டு மக்களுக்கு வழங்கினார் என்பதாக சித்தரிக்கப்பட்டார். அந்த வகையில் அப்துல் கலாம் போன்று ஜெயலலிதாவும் சாதிய வர்க்க சமூகத்தில் திணிக்கப்பட்டு தலைவரானவர்களில் ஒருவர்.

நக்சல்பாரி எழுச்சி, தெலுங்கானா போராட்டம், மார்க்சிய-லெனினியக் கட்சியின் உதயம் போன்றவையும் இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரும் மாற்றத்திற்கு வழிகோலிய நிகழ்வுகளாகும். இதிலெல்லாம் தனிநபர்களை விடுத்து ஒரு இயக்கமே மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள், மக்கள் அதிகாரம் போன்றவை மக்களிடையே அவற்றினது போராட்டம், கொள்கையால் மட்டுமே பிரபலமாகிறதே அன்றி அவற்றில் உள்ள தலைவர்கள், தனிநபர்களை வைத்து அல்ல!

PALAஒரு பேருந்து அல்லது ரயிலில் புதிய ஜனநாயகம் அல்லது புதிய கலாச்சாரம் பத்திரிகையை விற்கும் போது அந்த இடத்தில் பேசும் தோழரை மக்கள் தைரியமானவராக, இயக்கத்தின் செயல்பாட்டளராக கருதி ஆதரிக்கின்றனர். அதே போன்று மேடையில் பொதுக்கூட்டத்தில் பேசும் போதும் அப்படி கருதுகின்றனர். இங்கெல்லாம் தோழர்கள் ஒரு இயக்கத்தின் பிரதிநிதி என்று கருதப்பட்டு மக்களால் போற்றப்படுகின்றனர். அந்தஸ்து என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் என்பது சாதிய சமூகத்தின் நிலை. மாறாக அந்த நிலையை செயல்பாட்டால் கிடைக்கும் ஒன்றாக மாற்றுவது இத்தகைய சமூக இயக்கங்களே!

படிக்க:
உ.பி. : மதிய உணவிற்கு ரொட்டி – உப்பு : அம்பலப்படுத்தினால் சதி வழக்கு !
♦ இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் ! நூல் – PDF வடிவில் !

ஆதிக்கசாதி மக்கள் பெரும்பான்மையாக வாழும் சில இடங்களில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் பிறப்பினால் தலித்துகளாக உள்ள தோழர்கள் இயக்க பொறுப்புகளில், தலைமையில் உள்ளனர். அந்த வகையில் அந்த இடத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு தலைமையும் தாங்குகின்றனர். இங்கே பிறப்பினால் கிடைக்கும் சாதிய அந்தஸ்துக்கு பதில் இயக்கத்தினால் கிடைக்கும் மதிப்பு ஒரு சான்று. அதுவும் சாதிய சமூகத்தின் நடைமுறையை மறுத்துவிட்டு கிடைக்கும் மதிப்பு அது. இத்தகைய நடைமுறையை வேறு இயக்கங்கள் செய்வது கடினம்.

எனவே நாம் பெரிய ஆளாக இல்லாமல் சமூகத்தில் வேலை செய்தால் பயனில்லை என்று பேசுவோரை வைத்து மனச்சோர்வு அடையத் தேவையில்லை. நமது காலச்சூழலை மாற்றுவதற்கு நாம் பல்வேறு தோழர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் போது அந்த மாற்றம் நிச்சயம் வரும். அப்போது நமது போராட்டம் இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்படும். இதன் போக்கில் நமது நடைமுறையில் போராட்டங்களில் புடம் போடப்பட்டு புதிய தலைவர்களும் தோன்றுவார்கள்.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

1 மறுமொழி

  1. பேச்சிமுத்து தோழர்..கேடான இந்த சமூக அமைப்பை மாற்றிடவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக போராடுகிறீர்கள்..சிலரின் இது போன்ற கருத்துக்களால் உங்களின் போராட்டம் பயணம் தடை பட அவசியமில்லை..புரட்சிகர போராட்டத்தின் வழியே வரலாறு உருவாக்கும் அந்த தலைவராக நீங்கள் இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்..வினவின் துல்லியமான பதிலுக்கு நன்றி..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க