கேள்வி : //இந்து மதங்களையும் சாதாரண மக்களையும் எவ்வாறு பிரித்து பார்ப்பது… ஏன் என்றால்? விநாயகர் சதுர்த்தி முன் இருந்ததை விட இப்போது அதிக அளவில் கொண்டாடப்படுகிறது குறிப்பாக கிராமங்களில் எப்படி இது அதிக அளவில் பரவியது…//

– ஷாம்

ன்புள்ள ஷாம்,

இந்துமதத்தில் சாதாரண மக்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு மட்டுமே உரிமை பெற்றவர்கள். கருவறையில் நுழைந்து கடவுளைத் தொட்டு பூஜை செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று அவர்களது தாய் மொழியாம் தமிழை (சமஸ்கிருதம் அல்லாத மற்ற மொழிகளையும்) கருவறைக்குள் கொண்டு செல்ல முடியாது. இந்துமத தத்துவங்கள், புராணங்கள் அனைத்தும் சாதாரண மக்களை சூத்திரர்கள் – பஞ்சமர்கள் என்றே அழைக்கிறது.

Hindu-Munnani-vinayagar-07சூத்திரன் என்றால் வேசிமகன் என்கிறது வேதம். மேலும் பார்ப்பன, ஷத்திரிய, வைசிய பெண்கள் தமக்கு கீழே உள்ள வர்ண ஆண்களோடு சேர்ந்து பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் சூத்திரர்கள் என்று வேதம் கூறுகிறது. சாதாரண மக்களின் குல தெய்வங்களான மாரியம்மன், இசக்கி, சுடலைமாடன், காத்தவராயன், மதுரை வீரன் போன்ற நாட்டுப்புற கடவுள்களை சிறு தெய்வம் என்று இந்துமதம் இழிவுபடுத்துகிறது. நாட்டுப்புற தெய்வ வழிபாட்டில் விலங்கு பலி, கறி படையல், அனைத்தும் உண்டு. இதையும் இந்துமதம் இழிவுடனே பார்க்கிறது.

விநாயகர் சதுர்த்தி ஆரம்பத்தில் வீட்டுப் பண்டிகையாக ‘மேல்’ சாதி இந்துக்களால் கொண்டாடப்பட்டு சிறிய அளவிலான சிலைகள் ஊரின் கிணறுகள், குளத்தில் கரைக்கப்பட்டு வந்தன. 1980-களுக்குப் பிறகு இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் முயற்சியால் பொது இடங்களில் பிரம்மாண்டமாக சிலை வைத்து, அதைக் கரைக்கும் நாளில், மசூதி இருக்கும் தெரு வழியாகத்தான் போவோம் என கலவரம் செய்து வருகிறார்கள்.

பல இடங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வாழும் பகுதியில் பணமும், சிலையும் கொடுத்து வம்படியாக விநாயகர் சதுர்த்தியை அமல்படுத்தி வருகிறார்கள். இன்று கிராமங்களிலும் இந்தப் போக்கு பரவுவதற்கு இந்து மதவெறி அமைப்புகள்தான் பிராதன காரணம். ஆளும் அரசுகளும் மறைமுகமாக இதை பக்தி என்ற பெயரில் ஆதரிக்கின்றன. இன்று பாஜக நாடாளும் கட்சியாக இருக்கும் போது இன்னும் அதிகம் செய்கிறார்கள்.

♦ ♦ ♦

கேள்வி : //பருவ வயதை அடைந்தவுடன் பெண் தாய்மைக்கு தயாராகி விடுகின்றாள். அப்படி இருக்கும் போது எதுக்கு 18 வயது வரை காத்திருக்கணும் ?//

– அன்சாரி முகமது

ன்புள்ள அன்சாரி முகமது,

ஆண் 21 வயதிலும், பெண் 18 வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இந்திய சட்டம் வரையறுத்திருக்கிறது. பருவ வயதை எட்டிய உடன் ஒரு சிறுமி தாய்மைக்கு தயாராகிவிட்டாலும், சமூக ரீதியாக அவள் ஒரு குடும்ப வாழ்வை நடத்துமளவுக்கு முதிர்ச்சி அடைவதில்லை. இதில் உயிரியில் காரணத்தை விட சமூக காரணங்களே முக்கியம்.

child-marriageஇந்தியாவில் சட்டத்தை மீறி குழந்தைகள் திருமணம் நடைபெறுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் குழந்தை திருமணங்கள் குறைந்தாலும் இந்தி பேசும் மாநிலங்களில் இன்னும் செல்வாக்கோடு இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்திலேயே குழந்தைகள் திருமணம் தடை செய்யப்பட்டாலும் அது இன்னமும் தொடர்கிறது. பாஜக, காங்கிரசு போன்ற கட்சிகளே இந்தி பேசும் மாநிலங்களை ஆண்டு வருகின்றன. அங்கே இக்கட்சிகள் குழந்தைகள் திருமணத்தை தடை செய்ய போதிய முன்முயற்சி எடுப்பதில்லை. கூடவே கண்டுகொள்வதுமில்லை.

இந்தியாவில் குற்றவியல் சட்டப்படியும் 18 வயதுக்குட்பட்ட நபர் மைனர் என்றே நடத்தப்படுகிறார். குற்றங்கள் போக சொத்துரீதியான உரிமைகள் வரும்போது மைனர்களுக்கு ஒரு காப்பாளர் தேவைப்படுவார். இப்படி அனைத்து கோணங்களிலும் 18 வயது வரை காத்திருப்பது அவசியமாகிறது.

ஒரு பெண் இந்த சமூகத்தை புரிந்து கொண்டு ஓரளவு சுயேச்சையாக வாழ்வதற்கு இந்த காத்திருத்தல் அவசியம். சிறிய வயதிலேயே திருமணம் செய்து, குழந்தைகளை பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்துவதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் கொடுமையானது. இதனாலேயே உலகில் பல நாடுகள் பெண்ணுக்குரிய திருமண வயதாக 18-ஐ வைத்திருக்கின்றன.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : //புதிய தமிழகத்தின் புதிய அரசியல் சூட்சுமம் என்ன?//

– இராஜாராமசாமி

ன்புள்ள இராஜா ராமசாமி,

ஆர்.எஸ்.எஸ் – பாஜக உதவியுடன் கடையை நடத்துவதுதான் புதிய தமிழகத்தின் புதிய சூட்சுமம்.

♦ ♦ ♦

கேள்வி : //படிக்கின்ற விசயங்கள் மற்றும் தோன்றும் எண்ணங்களை வார்த்தை வடிவில் கொண்டுவர தடுமாற்றம் தோன்றுகிறது.. எழுத நினைக்கும் போது எண்ணங்கள் மறந்துவிடுகிறது ஏன்?//

– நவநீதன்

ன்புள்ள நவநீதன்,

எழுதுவதற்கு முன்னர் நாம் நிறைய படிக்க வேண்டும். அந்த படிப்பையும் ஏதேனும் ஒரு தேவையின் அடிப்படையில் குறிப்புகளோடு படிப்பது அவசியம். குறிப்பிட்ட நூலில் இருந்து நாம் என்ன புதிதாக கற்றுக் கொண்டோம், அந்த நூலில் நம் மனம் கவர்ந்தது எது – ஏன், கவராதது எது – ஏன்? என்பதை நம் சொந்த மொழியில் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தலைப்பில் நீங்கள் எழுத நினைக்கிறீர்கள். அந்த தலைப்பு குறித்து உங்கள் குறிப்புகளில் ஏதும் கருத்துக்கள் உள்ளதா என்று பார்த்து அதன் வழியில் சிந்திப்பதும், சிந்தனை துளிகளை குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டு ஓரிரு நாள் அசை போடுங்கள். பிறகு அந்த குறிப்புகளை திரைக்கதை போல சுருக்கமாக எழுதுங்கள். இப்போது அந்த குறிப்புகள் மூலம் படிப்பவர் ஏதேனும் ஒரு புதிய விசயத்தை படிக்க முடியும் என உங்களுக்குத் தோன்றுகிறதா, பாருங்கள். அப்படி இருப்பின் பிறகு திரைக்கதை குறிப்புகள் உதவியுடன் எழுதுங்கள். ஆரம்பத்தில் சில பல தயக்கம், தடுமாற்றம் இருந்தாலும் மனந்தளராமல் திரும்பத் திரும்ப எழுதுங்கள். எழுத்து வரும்.

எழுத்துக்கு திட்டமிட்ட செயல்பாடும், திட்டமிடாத கற்பனை வளம் இரண்டும் வேண்டும். அதற்கு இந்த செயல்முறை உதவுமென நம்புகிறோம். நீங்கள் குறிப்பாக இன்னதுதான் எழுதப் போகிறீர்கள் என்பதறியாமல் இந்த கருத்து பொதுவாக முன்வைக்கப்படுகிறது.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : //நான் தற்போது இதழியல் துறையில் முதுகலைப்பட்டம் பயின்று வருகிறேன்.. எனக்கு ஓர் செய்தி ஊடகத்தில் வேலை கிடைத்துள்ளது… நான் ஒரு திராவிட கட்சியில் அடிப்படை உறுப்பினராக உள்ளேன். அந்த கட்சியின் எதிரி கட்சியில், (எதிர் கட்சி அல்ல..) வேலை செய்ய போகிறேன்… ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்க நேருமா? நான் பின்பற்றி வரும் கொள்கைகளுக்கு பங்கம் நிகழுமா??//

– ரே

ன்புள்ள நண்பருக்கு,

பத்திரிகை துறையில் உள்ளவர்கள் முகநூலில் உணவு, ஆன்மீகம், ரசனை, சினிமா விமர்சனம், இலக்கியம், வீட்டு விலங்குகள், பண்டிகை தின வாழ்த்துக்கள் என்று பதிவுகள் போடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

சிலர் கட்சி சார்ந்த சானல்களில் பணியாற்றி அவர்களும் அதே கட்சிகளில் இருக்கும் போது அவர்கள் போடும் அரசியல் பதிவுகளுக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் முற்போக்காக, மோடி – அதிமுக ஆட்சியை எதிர்ப்போர், ஆதிக்க சாதிவெறியை கண்டிப்போர் இவர்கள் எந்த சானலில் வேலை பார்த்தாலும் எதாவது ஒரு தருணத்தில் கட்டம் கட்டப்படுகிறார்கள்.

அந்த வகையில் கருத்து சுதந்திரத்தைக் காக்க வேண்டிய பத்திரிகைத் துறையில் ஒரு பத்திரிகையாளருக்கே கருத்து சுதந்திரமில்லை. இதற்கு பத்திரிகையாளர்கள் வலிமையான தொழிற்சங்கமாக அணிதிரள்வதே தீர்வு.

♦ ♦ ♦

கேள்வி : //பெண்மை எதற்காக இன்னும் அடிமைப்பட்டுக்கிடக்க இந்த சமூகம் அளவிளா ஆவல் கொண்டு ஆடுகிறது.✍//

– சேஷாசலம்

ன்புள்ள சேஷாசலம்,

வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு போன்ற வேலைகளை பெண்கள் மட்டுமே செய்கிறார்கள். இதை இலவச உழைப்பாக சமூகம் குறிப்பாக ஆண்கள் கருதுகிறார்கள்.

இரண்டாவது வெளி வேலைக்கு பெண்கள் சென்றாலும் அந்த வருமானம் குடும்பத் தலைவர் என்ற முறையில் ஆண்களுக்கே வந்தாக வேண்டும். உழைக்கும் உதிரிப் பாட்டாளி வர்க்கத்திலோ பெண்கள் உழைப்பில் ஆண்கள் குடிக்கிறார்கள். எனவே பெண்கள் அடிமைப்பட்டு கிடப்பதை இந்த சமூகம் – ஆண்கள் விரும்பவே செய்கிறது.

♦ ♦ ♦

கேள்வி : //உத்திர பிரதேசத்தில் நடக்கின்ற யோகியின் ஆட்சி தான் பா.ஜ.க.-வின் ” செயல் விளக்க மாநில ஆட்சி ” என்பதற்கான மாதிரியா…?//

– எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

ஆமாம். உத்திரப்பிரதேசத்தில் நேரடியாக ஒரு சாமியார் அதுவும் ரவுடி சாமியார் முதல்வராக இருக்கிறார். ஊர் பெயர்கள் மாற்றப்படுகின்றன. கொலைக் குற்றவாளிகளான பசுக்குண்டர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு பகிரங்கமாக வரவேற்கப்படுகிறார்கள்.

நேரடியாக முசுலீம்களுக்கு மிரட்டல் விடுவிக்கப்படுகிறது. பீம் சேனாவின் தலைவர் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார். காவலைரைக் கொன்ற இந்துமதவெறியர்கள் கூட பிணையில் எளிதாக வெளியே வருகிறார்கள். இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரியாக உ.பி மாற்றப்பட்டு வருகிறது.

♦ ♦ ♦

கேள்வி : //சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் வாக்கு இயந்திரத்தின் பங்கு ஆளும்கட்சிக்கு சாதகமாக அமைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்பது எந்த அளவுக்கு உண்மை?//

– ஏ.பி.நடராசன்

ன்புள்ள நடராசன்,

பெரிய அளவுக்கு உண்மையில்லை. அதற்கு தமிழக, கேரள, தெலுங்கானா, ஆந்திர முடிவுகளே சாட்சி.

♦ ♦ ♦

கேள்வி : //உண்மையில் நம்முடைய முன்னோர்கள் யோகா செய்தார்களா ? யோகா செய்தால் உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியுமா? யோகாவால் எந்த நோயும் ஏற்படாது என அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளதா?//

– கா. அசோக் பால் ராஜன்

ன்புள்ள அசோக் பால் ராஜன்,

இன்றைக்கிருக்கின்ற யோகா ஒரு பேக்கேஜாக சென்ற நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் அதனுடைய வெவ்வேறு வடிவங்களை துறவறம் சார்ந்தவர்கள் செய்து வந்தார்கள். இன்றைக்கு முன்வைக்கப்படுகிற யோகா உடலை நீட்டி இழுத்து மடித்து செய்கின்ற ஒரு உடற்பயிற்சி மட்டுமே.

முழுமையான உடற்பயிற்சிக்கு கலோரிகளை எரிக்கின்ற நடை, சைக்கிள் இதர பயிற்சிகள், எடை தூக்கும் பயிற்சிகள் ஆகியவையும் அவசியம். யோகா என்றில்லை பொதுவில் உடற்பயிற்சிகள் செய்வது உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும் ஒரு முன் தயாரிப்பு மட்டுமே. அதனாலேயே நோய் ஏற்படாது என்பதில்லை.

நுண்ணுயிர் தொற்றிகள் மூலம் தொற்று நோயோ மற்ற நோய்களோ கூட ஏற்படலாம். சரியான உடற்பயிற்சி, சரியான சமவிகித உணவு, ஆரோக்கியத்தை உத்திரவாதப்படுத்தும் வாழ்க்கை சுகதாரா வசதிகள் ஆகியவையும் நோயிலிருந்து காக்கும் முன் எச்சரிக்கைக்கு அவசியம். அவை வசதி, வர்க்கம் சார்ந்தே பிரிந்து இருக்கின்றன.

கீழ்க்கண்ட கட்டுரை யோகாவைப் பற்றியும் விரிவாக விளக்குகிறது. படித்துப் பாருங்கள்!

♦ ♦ ♦

கேள்வி : //திராவிடர்களுக்கும், தமிழர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? பெரியார் திராவிட கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்து இருந்தார். ஆனால், தமிழர்கள் என்று மட்டும் தான் பேசினாரா?//

– சுரேஷ்குமார்

ன்புள்ள சுரேஷ்குமார்,

வட இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மொழிகள் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. தென்னிந்தியாவில் தமிழை உள்ளிட்ட பெரும்பான்மை மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அதில் தமிழ் மட்டும் சமஸ்கிருதமயமாகாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவை திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருப்பினும் வடமொழிக் கலப்பு அதிகம். ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பனிய எதிர்ப்பை சுட்டுவதற்காகவே திராவிடர், திராவிட இயக்கம், திராவிடர் கழகம் என்ற பெயர்கள் வைக்கப்பட்டன. அன்றைக்கு மதராஸ் மாகாணம் என்பது தென்னிந்தியாவை குறித்ததால் நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்களை அதாவது தென்னிந்திய மக்களின் நலனையும், அதற்கு எதிரான பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும் முன்வைத்தார்கள்.

திராவிட இயக்கத்தை சேர்ந்த சில அறிஞர்கள் திராவிடத்தை இனம் என்றும் கூறுகிறார்கள். அது சரியல்ல. திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதைத்தாண்டி தென்னிந்திய மக்கள் அனைவரும் ஒரே இனத்தை அதாவது தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. திராவிடர் கழகத்தின் முதன்மைச் செயல்பாடு தமிழகம் என்பதால் பெரியார் தமிழ் மக்களிடையே தனது கருத்துக்களை முன்வைத்தார்.

♦ ♦ ♦

கேள்வி : //ராஜராஜ சோழன் பற்றிய ரஞ்சித் கருத்திற்கு பலதரப்பட்ட கருத்துகள் பதில்களாக வந்திருக்கும் இந்த நேரத்தில் ராஜராஜ சோழன் காலத்து உற்பத்தி முறை, சமூகவியல் வரலாறைப் பற்றி மார்க்சியப் பார்வையில் கூறுங்களேன்..//

– மா பே மு

ன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கேள்விக்கு புதிய கலாச்சாரத்தின் கீழ்க்கண்ட கட்டுரை நேரடியாக பதிலளிக்கிறது. படித்துப் பாருங்கள். நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

1 மறுமொழி

  1. ஏன்? என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை.

    வினவில் கேட்கப்படும் கேள்விகள் என் போன்றோரின் மனதில் தோன்றும் கேள்விகளே! பதில் முன்பைவிட எளிமையாகவும், சுருக்கமாகவும் உள்ளது.

    செம!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க