Saturday, July 20, 2024
முகப்புகட்சிகள்தி.மு.கஇராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?

இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?

-

தமிழக அரச சார்பில் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதற்கு ஆயிரமாண்டு நிறைவு விழா நிகழ்த்தப் பெற்றது. மக்களாட்சிக்கு நிகரான நிர்வாகத்தையும், மக்கள் நல திட்டங்களையும் செயல்படுத்திய ராசராசனின் ஆட்சியை போல மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி நடைபெறுவதாக காங்கிரசு தலைவர் வாசன் கூறுகிறார். மக்களாட்சியை திறம்பட நடத்தியவன் ராசராசன் என்கிறார் கருணாநிதி. வரி கட்ட முடியாதவர்களின் நிலம் பறிக்கப்பட்டு கருவூலத்தில் சேர்க்கப்பட்டதாகவும் சொல்கிறார். கோவிலை கட்டுவது பெரிதல்ல தொடர்ந்து அதனை நிர்வகிப்பதுதான் சிரமம் என்கிறார் கனிமொழி.

ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை, எனவே குழு அமைத்து வரலாறு எழுத வேண்டும் என்கிறார் அமைச்சர் துரைமுருகன். தமிழ் மொழியே ஒரு வரலாறுதானே. தமிழை முடக்க நினைத்தவர்களிடமிருந்து திருமறைகளை மீட்டவன் ராசராசன், வடமொழியில் பாடுபவர்களை விட அதிக அளவில் ஓதுவார்களை பெரிய கோவிலில் நியமித்தான், ஒரு கலாச்சார மாற்றத்தை தடுத்து நிறுத்தினான் என்கிறார் அன்பழகன். பிற்காலத்தில் இன உணர்வு மங்கியதால் சமஸ்கிருத ஆதிக்கம் மிகுந்ததாகவும் அதனை 20 ஆம் நூற்றாண்டின் இன உணர்வு மீட்டெடுத்ததாகவும், அந்த போராட்டத்தின் விளைவாகத்தான் இன்று ஆலயங்களில் தமிழில் வழிபாடு கட்டாயமாக்கப்பட்டது என்றும் ஸ்டாலின் பேசுகிறார்.

திருமறைகளை கண்டெடுத்ததாக சொல்லப்படும் சிதம்பரத்திலேயே மனித உரிமை பாதுகாப்பு மையமும், சிவனடியார் ஆறுமுகசாமியும் இரத்தம் சிந்தி போராடித்தான் தமிழில் வழிபடும் உரிமையை பெற்றனர் என்பது சமகால வரலாறு.  வரலாறு இல்லாமல் எந்த சமூகமும் இல்லை. ஆனால் வரலாற்றை திரிக்க நினைக்கும் ஆளும் வர்க்கம் மேற்கண்டவாறு முரண்பாட்டுடன் பேசுவது இயல்பே. பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில்தான் தமிழகத்தில் முதன்முதலாக சமஸ்கிருதம் அச்சேறியது. முன்னர் தானமளிக்கப்பட்டு களப்பிரர் காலத்தில்  பிடுங்கப்பட்ட நிலங்களை மீண்டும் பார்ப்பனர்களுக்கே வழங்கியது சோழர் ஆட்சிதான். போரில் தோற்றவர்களில் இருந்தும் வரி கட்ட முடியாமல் போன குடியானவ வீடுகளில் இருந்தும் தகுதியான பெண்களை தெரிவு செய்து, உடலில் சூடும் போட்டு, கல்வெட்டுகளில் பெயரையும் பதிவு செய்து சுமார் 400 பேரை பெரிய கோவிலில் தேவரடியார் என்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தியவன் ராசராசன். மீந்த பெண்களை பெரிய கோவிலின் கொட்டாரத்தில் நெல் குற்ற அனுப்பினான்.

சோழர் காலத்தில் நீர்ப்பாசன வசதியை தனது கைப்பிடியில் வைத்திருந்தது கோவில் நிர்வாகமே. அன்றைய ஆளும்வர்க்கமான பார்ப்பன மற்றும் வெள்ளாள சாதிக்கு போக மீந்த ஆற்று மற்றும் ஏரி நீர்தான் குத்தகை விவசாயிகளுக்கு.  அதுவும் அவர்களுக்கு தோதான நேரத்தில்தான் அளிக்கப்பட்டது. எனவே விளைச்சல் குறைவதும், வரியோ பார்ப்பன வேளாள சாதிகளின் நில விளைச்சலுக்கு நிகராக இருப்பதும் தவிர்க்க முடியாத துயரமானது.

வரி கட்ட முடியாதவர்களுக்கு சிவ துரோகி என்ற பட்டமளித்து, அவர்களது நிலத்தை விற்று மைய அரசிடம் சமர்ப்பித்தது ஊர் சபை. அந்த விற்பனைக்கு ராசராசனும் அவனது தமக்கையும் பணம் அளித்ததை கல்வெட்டுகள் பல ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. அந்த நிலங்கள் ஆலயத்திற்கு சொந்தமான தேவ தானங்களாகவும், பிராமணர்களுக்கு சொந்தமான பிரம்மதேயங்களாகவும் மற்றும் வேதகல்விச் சாலைகளுக்கான மானியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சதுர்வேதி மங்கலங்களாகவும் பின்னர் மாற்றப்பட்டது. அதே நேரத்தில் வரிகட்ட முடியாத ஏழை குத்தகை விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.

பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் ஏற்கெனவே வளமான நெல் விளையும் பூமியாகவும், தேவரடியார்களுக்கு வழங்கப்பட்டது முதன்முதலாக விவசாயத்திற்காக திருத்தப்பட்ட தரிசு நிலமாகவும் இருந்ததை கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகிறது. அதிலும் நக்கன் போன்ற உயர்சாதி பெண்கள் தம்முடன் சொத்தாக பெற்று வரும் நிலத்திற்கு வரிவிலக்கு பெறுவதால் அவர்களே ஒரு கொடையாளியாகவும், வட்டிக்கு கடன் கொடுக்கும் லேவாதேவிக்காரராகவும் இருந்தனர். ஆனால் தாழ்த்தப்பட்ட குத்தகை விவசாயிகளின் பெண்டிருக்கோ அரசு ஒரு வேலி நிலம் தரும்.  பயிரிடும் அவர்களது தந்தையால் வரி கட்ட முடியாமல் மீண்டும் சிவதுரோகி ஆவதும் தொடர்ந்தது. இதனை அடுத்து வந்ததுதான் சதுரி மாணிக்கம் போன்ற பெண்களின் கோபுர தற்கொலைகளும் தொடர்ந்து வந்த மக்களது கலகங்களும்.

பெரிய காற்றளி கோவில், பெரிய விமானம், பெரிய நந்தி, பெரிய சிவலிங்கம், பெரிய பிரகாரம் என பெரிய கோவில் பெரிதாக மாத்திரமே திகழ்வதால் பெரிதினும் பெரிது கேள் என்பதற்கு இலக்கணமே ராசராசன்தான் என்கிறார் முன்னாள் துணைவேந்தர் ஔவை நடராசன். பேரரசு ஒன்று தோன்றியதும் இப்போதுதான். சுயசார்புள்ள கிராமத்தின் குறைந்த உபரியை மாத்திரமல்ல அதன் சுயசார்பையும் உறிஞ்சிதான் கோவிலும் பேரர‍சும் செழித்தது. 12 சதவீத வட்டிக்கு பணம் தரும் லேவாதேவி வேலையையும் வட்டி வசூலிக்க ஒரு படையையும் வைத்திருந்த பெரிய கோவிலைத்தான் பகைவர்களின் தாக்கதலில் இருந்து காப்பதற்காகவும் கட்டியிருப்பார்கள் என்கிறார் அன்பழகன்.

ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மாத்திரம்தான் உறுப்பினராக முடியும். கோவில் பண்டாரம் ஆக கூட குறைந்த பட்ச தகுதி நிலம்தான். மன்னார்குடி ஊர்சபையே கூட வரி கட்ட முடியாமல் தாங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக போக இருப்பதாக தீர்மானம் இயற்றியிருக்கிறார்கள் என்றால் வரியின் கொடுமையை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

நந்தா விளக்கு எரிப்பதற்காக ராசராசன் நாற்பது சாவாமூவா பேராடுகளை (எப்போதும் எண்ணிக்கை மாறாத வகையில் இறந்தவற்றுக்கு பதில் புதியதை வாங்கி விட வேண்டும்) கோவிலுக்கு தானமளிக்கிறான். தினமும் உழக்கு நெய் கொடுத்து விட்டு மீந்தவற்றை மேய்ப்பவர்கள் வைத்துக் கொள்ளலாமாம்.  பழ நைவேத்தியம் செய்வதற்காக பழ வியாபாரிகளுக்கு தரப்பட்ட கடனிலிருந்து வட்டிப்பணத்தை எடுத்துக் கொள்ள ஆணை பிறப்பித்தான் ராசராசன்.

ஒரு சமுதாய நோக்கத்தோடு கோவிலுக்கான எல்லா தரப்பு மக்களின் பங்களிப்பையும் பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில் காண முடிகிறது என்கிறார் தங்கம் தென்னரசு. 1000 பேர் ஆடிய கின்னஸ் சாதனை நடனத்தை கல்வெட்டிலும் பொறிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் நடனக்கலைஞர் பத்மா சுப்ரமணியம்.

அரசன் முதல் ஆண்டி வரை சோழர்களுக்கு ஒன்றுதான் என்கிறார்கள் இவர்கள். தனது விருப்பமில்லாமல் தனது குடும்பத்தை காப்பாற்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண் கல்வெட்டில் தனது பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்றா கோரியிருப்பாள்? தொழில் அடிப்படையில் தனது வாரிசுகளும் சேவை சாதிகளாக மாறுவ‌தற்கு உதவும் கல்வெட்டில் தனது பெயர் இல்லை என்பதற்காக குப்பனும் சுப்பனும் அழுதா இருப்பார்கள்? இழிவை உயர்வாக திரித்து விட்டு வரலாறு இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்பார்கள் போலும்.

மதங்களை அரசுக்கு மேலாக வைத்திருந்த சூழலில் அவற்றை சமமாக பாவித்தவன் ராசராசன் என்கிறார் கனிமொழி. ஆனால் ஈசான சிவ பண்டிதர் என்பவரை காசுமீரத்திலிருந்து கொண்டு வந்து தனக்கு ராஜகுருவாக நியமித்து கொண்டான் ராசராசன். இவரது வழிகாட்டலின் பேரில் சூத்திர சாதியில் இருந்து சத்ரிய சாதியாக தன்னை மேனிலையாக்கம் செய்துகொள்ள விரும்பிய ராசராசன் ரண்யகர்ப்ப யாகமும் செய்து பார்ப்பனர்களுக்கு பொன்னையும் பொருளையும் நிலங்களையும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கினான்.

ஒரு கலாச்சார படையெடுப்பையே தடுத்து நிறுத்தினான் ராசராசன் என்கிறார் அன்பழகன்.  ஆனால் பார்ப்பன கலாச்சாரத்தை தமிழகத்தில் புகுத்தியவனே ராசராசன்தான் என்கிறது வரலாறு. அன்று எழுந்த வந்த வணிக வர்க்கத்தின் வியாபார நடவடிக்கைகளுக்கு சுங்கம் விதித்து முட்டுகட்டை போட்டதும் இவனது ஆட்சியில்தான். இதனை இவனது பேரனான முதல் குலோத்துங்கன் வந்து விலக்கி சுங்கம் தவிர்த்த சோழனாக பெயர் பெற்றதும் வரலாறாகித்தான் உள்ளது.

வரிக்கொடுமை தாங்காமல் தங்களைத் தாங்களே கோவிலுக்கு அடிமையாக விற்றுக்கொள்ளும் 12 குடும்பங்களின் கதை செங்கற்பட்டு மாவட்ட கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. பார்ப்பனர்களுக்கு பொற்காலமாக விளங்கிய இக்காலத்தில் மன்னனுடைய மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்களை கூட மனுஸ்மிருதி யின் படி நாடுகடத்த மட்டுமே செய்தான் ராசராசன். கோவில் சொத்துக்களை இன்று போலவே அன்றும் பார்ப்பனர்கள் கையாடல் செய்ததை கல்வெட்டுக்களில் காணப்படும் தண்டனைகளின் வழியே அறிய‌ முடிகிறது. கோவிலை மையமாக கொண்ட ஊரும் அதற்கு வெளியே சேரியையும் அமைத்த பெருமையும் சோழர்களுக்கே உண்டு.

குடவோலை முறையில் ஜனநாயகம் அன்று இருந்ததாக நீண்ட காலமாக வரலாற்று பாடப்புத்தகத்தில் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அந்த குடவோலையானது சொத்துள்ளவர்கள் மாத்திரமே இருக்கும் ஊர்சபையில் உள்ள பார்ப்பனர்களில் அவர்களது பிரதிநிதியை தெரிவுசெய்வதற்கு நடத்தப்படுவதே ஆகும் என்பதை சொல்லத் தவறுகிறார்கள். இப்போது நடக்கும் போலி ஜனநாயகத்திற்கான தேர்தலோடு தன்மையில், முடிவில் எல்லாம் ஒத்துப் போவதால் கருணாநிதி இதனை மக்களாட்சி என்று விளிப்பது ஒருவகையில் சரிதான்.

_______________________________________________

– வசந்தன்

_______________________________________________

இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா?

 

தொடர்புடைய பதிவுகள்

 1. இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா? | வினவு!…

  விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது….

 2. “போர்களில் எதிரி நாட்டு வீரர்களை கொன்ற பாவத்திலிருந்து தப்பிக்க, நீ ஒரு தங்க பசுவின் பின்புறம் நுழைந்து வாய்ப்புறம் வெளிவர வேண்டும். பிறகு அந்த பசுவை பிராம்மணர்களுக்கு தானமாக தர வேண்டும்” என்ற பார்ப்பனர்களின் ஆலோசனையின் படி, பொன்னாலான மிகப்பெரிய பசுவை செய்து, பொன்பசுவின் பின்புறம் நுழைந்து வாய்ப்புறம் வெளிவந்து, அந்த பொன் பசுவை பிராம்மணர்களுக்கு தானமாக தந்தான் ராஜராஜன் என்று எங்கோ இணையத்தில் படித்ததாக நினைவு. உண்மையா?

 3. nalla pathivu… ithe varalaru sorpamaga ennakku therinthirundum, mulumayaga ariya mudyavillaye endru irunda pozhuthil….. ungal pathivu…. nandri tholarae………..
  namathu pandaya varalaru endra peyaril, pala van kodumaigal nadantheri erupinum athani veera varalaraga mattume sitharikkum pokkinai thughiluriyum katturai. vazthukkal………

 4. பள்ளிக்கூட வரலாற்று பாட புத்தகங்களை படித்து ராஜராஜனின் காலம் பொற்காலம் என்றே மனதில் பதிந்துபோனது. இந்த இடுகை வரலாற்றில் இல்லாத மற்ற பக்கங்களை, மக்களின் உண்மை நிலையை தெரிய வைக்கிறது.

  ”உடையார்” என்ற நாவலையும் கொஞ்சம் குறுக்குவெட்டுப் பார்வை பார்த்திருக்கலாம்…:-)

 5. […] This post was mentioned on Twitter by வினவு, Saravana Kumar , karthick, kavin, sandanamullai and others. sandanamullai said: RT @vinavu: இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?https://www.vinavu.com/2010/09/30/rajaraja-cholan/ RT Pls […]

 6. கெடச்ச நாலஞ்சு கல்வெட்ட வச்சி அவனவன் கதை சொல்லீட்டு இருக்கான், அங்கயும் புகுந்து கருத்து சொல்றேன்னு உங்க சொம்பை தூக்கீட்டு போய்ட்டீங்களா!, வெளங்கின மாதிரித்தான்.

  அம்மா கூட சீட்டு தருமா, அய்யா கூடத்தருவாரா, கேப்டன் கண்டுக்குவாரா எதுவும் வெளங்கலைன்னா மருத்துவர்கிட்ட எதாவது தேருமான்னு சுத்தீட்டு இருக்கற தோழர்களை புடிச்சி உக்கார வச்சி கருத்து சொல்லுங்க….இன்னிக்கு நிலமைக்கு அதுதான் முக்கிய தேவை!

 7. உறுத்திக் கொண்டே இருந்தது .. பிறகும் மனம் சொன்னது .. நமக்கே எழுத தோன்றிவிட்ட பிறகு வினவுக்கு தோன்றியிருக்காதா?.. என்று ..

  அருமையான கட்டுரை ..

 8. நல்ல ஆய்வு! அப்படியே களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என வர்ணித்ததன் பிண்ணனியையும், அவர்களின் ஆட்சிமையையும் ஆய்ந்து பார்க்கும் கட்டுரை ஒன்றை வெளியிட வேண்டுகிறேன்

 9. எந்த ஒரு ஆட்சியாளரின்
  மறுபக்கமும் இருளே –
  நிழலைப் போல!

  விதிவிலக்கு இல்லை!
  இதுவே இயற்கை!

 10. My dear friend, writing about history needs some competence. It is very clear from the glaring errors in your article that you know nothing about the subject that you chose to write upon. Your agenda to sensationalise this by painting such a wrong impression on a great ruler, belittles your linguistic skills. I suggest either you stick to your turf or educate yourself before putting up such silly misguided views on the net. Please be a responsible blogger.

  “பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில்தான் தமிழகத்தில் முதன்முதலாக சமஸ்கிருதம் அச்சேறியது. ” – Is this a correct statement. I think you have to be ashamed of disseminating such wrong information. If you have any sense of shame, you must publish a written apology.

  “திருமறைகளை கண்டெடுத்ததாக சொல்லப்படும் சிதம்பரத்திலேயே மனித உரிமை பாதுகாப்பு மையமும், சிவனடியார் ஆறுமுகசாமியும் இரத்தம் சிந்தி போராடித்தான் தமிழில் வழிபடும் உரிமையை பெற்றனர் என்பது சமகால வரலாறு – ” – This is deliberate twisting of facts – Tirumurais have always been sung in Thillai. The problem arose as to where it will be sung from. If you are to write an unbiased article, you must mention that Sri Raja Raja instituted the post of Oduvar ( though we do have references to their recital from earlier times) – he did set a living tradition of it.

  கோவில் சொத்துக்களை இன்று போலவே அன்றும் பார்ப்பனர்கள் கையாடல் செய்ததை கல்வெட்டுக்களில் காணப்படும் தண்டனைகளின் வழியே அறிய‌ முடிகிறது – There are always good and bad among subjects, but is this not proof for the fairness of the Justice system then.

  இவரது வழிகாட்டலின் பேரில் சூத்திர சாதியில் இருந்து சத்ரிய சாதியாக தன்னை மேனிலையாக்கம் செய்துகொள்ள விரும்பிய ராசராசன் ரண்யகர்ப்ப யாகமும் செய்து பார்ப்பனர்களுக்கு பொன்னையும் பொருளையும் நிலங்களையும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கினான். – This is a wrong statement. The Hiranya Garba Yaga is done to end the cycle of birth and rebirth and to become one with God after the current birth.

  Do you know what is the first panel that greets you as you enter the big temple – its of Kannappa Nayanar feeding Udumbu Kari to Shiva.

  Please do not belittle a great soul for gaining a few addnl point in readership.

  மேலும் நன்றாக படித்துவிட்டு அறிவு முதிர்ச்சி வந்தவுடன் தெளிவான பதிவுகளை இடுங்கள்.

  விஜய்

  • ஹிரண்ய கர்ப்ப தானம் என்றால் என்ன என்பதை மராட்டிய மோடி ஆவணங்கள் தெளிவாகவே குறிப்பிடுகின்றன. சத்திரியனல்லாத மன்னர்களுக்கு (உதாரணம்: சிவாஜி, துளஜா, ஷர்போஜி, பிரதாப்சிங் உள்பட மராட்டிய பரம்பரை) பார்ப்பனர்கள் சுத்தி செய்யும் சடங்காகத்தான் ஹிரணிய கர்ப்ப தானத்தைச் செய்யக் கோரி உள்ளனர். பொன்னால் செய்யப்பட்ட பசுவின் வயிற்றில் நுழைந்து பின் பசுவை பார்ப்பனர்களுக்கே கொடுத்து விடுவது மரபு. முதலில் இதனைப் படித்து விட்டு வந்து பின்னூட்டத்தை தெளிவாக இடும் வழியைப் பார்க்கவும்.

   • sunapana, why do you want to exhibit your ignorance by such hearsay mis information

    you started off saying Sri Raja Raja was a ” சூத்திர ” and now you say சத்திரியனல்லாத மன்னர்களுக்கு – If you have ever had the fortune of reading any of the plates of the cholas, you will know the glorious lineage they hail from. The Emperor himself is mentioned in numerous places in his inscriptions with his title as Kshatriya Sigamani. and for your further ref, He and his Queen Dantisaktivitankiyar alias lokamahadeviyar did perfrom the Hiranya Garaba in Tiruvisalur temple in his final years 1013-1014, wherein the lineage of cholas is known from the plates of his forefathers itself. Its clear that he didn’t have to resort to any yaga to ascertain his kshatriya status. On his mother’s side, you can trace the ancestry of Malaiyaman and see their glorious tamil lineage as well.

    Do not tarnish the image of such a great person, who has given us tamil an identify and an edifice that makes us hold our head high in pride – albeit for your cheap ulterior motives.

 11. எல்லா வரலாற்று நாயகர்களுக்கும் இருபக்கம் உண்டு. லெனின், ஸ்ராலின், ஏப்ரகாம் லிங்கன், யோன் எவ்.கென்னடி போன்றோருக்கும் இது போல் இரு பக்கம் இருந்தன. எடுத்துக்காட்டாக கென்னடி ஒரு பெண் பிரியராக இருந்தார்.

  இராசராசன் இதற்கு விதி விலக்கல்ல. அவன் காலம்தான் தமிழர்களது பொற்காலம். அவன்தான் இந்தியாவின் முதல் கடற்படையை உருவாக்கி யாவகம், புட்பகம், கடாரம் எங்கும் படையெடுத்துச் சென்றான். அவன் காலத்தில் இந்து சமுத்திரத்தில் புலிக்கொடி நீக்கமறப் பறந்தன். தஞ்சைப் பெரிய கோயில் கட்டியது பொருளாதார வீண் என்றால், திருப்பதி, வட்டிக்கன், வெஸ்மினிஸ்டர், பிரமிட்டுகள் எல்லாம் வீண்தான். இன்று கட்டிடக் கலையில் தமிழனின் பெருமையைப் பறைசாற்றும் கட்டிடங்களில் பெரிய கோயிலும் ஒன்று. வடமொழிக்கு ஆதரவு வழங்கினாலும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பாடுபட்டான். அவன் காலத்தில்தான் பன்னிருதிருமுறை தொகுக்கப்பட்டது. இங்கிலாந்தை எட்டாவது ஹென்றி (1491-1647) 1509 ஏப்பிரில் 21, 1509 தொடக்கம் ஆட்சி செய்தான். அவனுக்கு 6 மனைவியர். அதில் இரண்டு பேரை கழுத்தை வெட்டிக் கொலை செய்தான். இராச இராசனுக்கு 14 மனைவியர். அவர்களில் ஒரு மனைவியை ஆவது கொல்ல வேண்டாம் தள்ளி வைத்தான் என்றாவது வரலாறு உண்டா?

  • நமக்கும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் அப்படியொன்றும் தனிப்பட்ட பகை கிடையாது. பள்ளிக்கூட பாடப்புத்தகத்தில் மதிப்பெண்களுக்காக “சோழர் வரலாறு” படித்ததோடு சரி.

   சிறு வயதில் அம்மா கூட்டிப் போன ஏ.பி.நாகராஜனின் 4975 மீட்டர் நீளமுள்ள “ராஜராஜ சோழன்” படத்தினைப் பார்த்து வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் வியந்திருக்கிறேன். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் படம் அதுதான். பின்னர் பல வருடங்கள் கழித்து தஞ்சை மண்ணில் கால் வைத்தபோது பிரமிப்பு விலகாமல் அணு அணுவாக ரசித்த இடம் ஒன்று உண்டென்றால் அது தஞ்சை பெரிய கோயிலாகத்தான் இருக்க முடியும்.

   பதிமூன்று அடுக்குகள் கொண்ட அதன் வேலைப்பாடுகளும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. நேற்று கட்டிய காமன்வெல்த் விளையாட்டிற்கான பாலமே குப்புறக் கவிழ்ந்து பலபேர் குற்றுயிராய்க் கிடக்கும்போது பத்து நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் இன்னமும் கம்பீரமாய் காட்சி தருகிறதே என்ன காரணம்?

   ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பி.இ., படிப்பும் இல்லை… எம்.இ., படிப்பும் இல்லை… பெற்றோரது அடிவயிற்றில் கட்டியிருக்கும் பணத்தைக் கூட அடித்துப் பிடுங்கும் பொறியியல் கல்லூரிகளும் இல்லை… அப்புறம் எப்படிக் கை வந்தது இந்தக் கலை? அதுதான் பட்டறிவுக்கும் பாட அறிவுக்கும் உள்ள வேறுபாடு. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அந்த மக்களது அயராத உழைப்பும்… தொழில் நுட்ப அறிவும்… கலை நயமும்தான் இன்று அது விண்ணுயர எழுந்து நிற்கக் காரணம். கூடவே மன்னனது ரசனையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கும்தான்.

   சரி… இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்… வழிபாட்டுத்தலங்கள்… சிற்பங்கள்… ஓவியங்கள்… அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்? அதுதானே முக்கியம்?

   “மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?” எனக் கேட்டுவிட்டு உப்பரிகையில் ஓய்வெடுக்கப் போய் விட்டார்களா? அல்லது மக்களோடு மக்களாக நின்று அவர்களது துயரங்களைத் துடைக்கத் துணை நின்றார்களா? இதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி.

   தஞ்சை பெரிய கோயில் கம்பீரமாக நிற்கிறது வெளிப்புறத்தில். ஆனால் மக்கள் வழிபாடு நடத்துவதற்கும்… வழிபடுவதற்கும் சமத்துவம் நிலவியதா உட்புறத்தில்? இல்லை… இல்லை… இல்லவேயில்லை! என்கின்றன சோழர் காலத்திய கல்வெட்டுகளும் ஆய்வு நூல்களும்.

   சமயத்தலத்தில் சமத்துவமின்மை மட்டுமல்ல சோழப் பேரரசில் மக்கள் நிலை எவ்வாறிருந்தது? அவர்களது கல்வி எவ்வாறு இருந்தது? பெண்களது நிலை எவ்வாறு இருந்தது? நிலம் யார் வசம் இருந்தது? பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது? இதுவெல்லாம் முக்கியமில்லையா நமக்கு?

   சரி… மக்கள் எப்படி இருந்தார்கள்? அதை முதலில் பார்ப்போம். சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காவிரி ஆற்றின் தென் கரையில் இருந்த இரு ஊர்களை தங்களின் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட அறிஞர்கள் அதிர்ந்து போனார்கள். ஊரே சாதியால் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து.

   ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி சோழப் பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இடுகிறான். அதன் பின்னர் வந்த சோழப் பேரரசர்களும் வைதீகம் செழித்து வளர பொன்னையும் பொருளையும் நிலத்தையும் தானமாக அள்ளி வழங்குகிறார்கள். எல்லோருக்கும் அல்ல. சிலருக்கு மட்டும். இதனை துல்லியமாகப் போட்டு உடைக்கிறார் கே.கே.பிள்ளை என்கிற வரலாற்று ஆய்வாளர்.

   “வேத நெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடி புகுந்த பிராமணருக்கு பொன்னையும் பொருளையும் வழங்கினர். அவர்களுக்குத் தனி நிலங்களும், முழு கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என பல பெயரில் அழைக்கப்பட்டன. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிர்வாகத்திற்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் கூட அவற்றினுள் செயல்பட முடியாது. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள்… கட்டணங்கள்… கடமைகள்… ஆயங்கள்… என அனைத்தில் இருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட்டன” என்று சோழர்களது கல்வெட்டுக்களில் இருந்தே எடுத்துக் காட்டி அம்பலப்படுத்துகிறார் கே.கே.பிள்ளை.

   நிலமும் இலவசம்… வரிகளும் கிடையாது… கட்டணங்களும் இல்லை… அரசன் கூட கேள்வி கேட்க முடியாது… ஆனால் அதே சோழ சாம்ராஜ்ஜியத்தில் மற்ற மக்கள் எப்படி வாழ்ந்தார்களாம்? அதற்கும் இருக்கிறது கல்வெட்டு.

   வேதம் ஓத வந்தவர்களுக்கு சோழ அரசு சலுகை காட்டிய அதே வேளையில் உழவர்கள், கைவினைக் கலைஞர்கள், பிறதொழில் செய்வோர் மீது கடுமையான வரிகளை விதித்தது. இவற்றுள் அடித்தள எளிய மக்களான சலவையாளர்கள், குயவர், தறி நெய்பவர், தட்டார், ஓடங்களைச் செலுத்தியோர் மீது முறையே… வண்ணார்பாறை பயன்பாட்டு வரி… குசக்காணம்… தறிக்கூரை… தட்டார்பாட்டம்… என வரி மேல் வரி போட்டுத் தள்ளியதோடு நிறுத்தாமல் உழவர்கள் ஒரு பயிருக்கு ஊடாக இன்னொரு பயிரை வளர்த்தால்கூட அதற்கும் ஊடுபோக்கு என வரி போட்டு பரிபாலனம் செய்தவர்கள்தான் இந்த ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ பராக்கிரம ராஜ கெம்பீர மன்னர்கள்.

   நிர்வாகமும் நீதியும் இப்படியிருக்க… பெண்கள் நிலை எப்படி இருந்ததாம்? அதற்கும் இருக்கிறது ஆப்பு. எண்ணற்ற பெண்கள் பொட்டுக் கட்டுதல் என்கிற பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.

   அது சரி… கல்வி?

   அதுவும் குலத்துக்கொரு நீதிதான். அப்புறம் எங்கு போகும் எல்லோருக்கும் கல்வி?

   இதையெல்லாம் பாமரன் சொன்னால் தப்பென்று சொல்லலாம். ஆனால் பண்டிதர்கள் சொன்னால்? அதுவும் இவைகளை தமிழக அரசே வெளியிட்டால்? ஆம் தமிழக அரசே வெளியிட்டது. இப்போதல்ல. 1976-ல். அதுவும் தி.மு.க. அரசு! தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனமே “தமிழ் நில வரலாறு” என்கிற நூலை வெளியிட்டது அதன் பதிப்பாசிரியர் கோ.தங்கவேலு. சோழர் கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கு எப்பேர்ப்பட்ட பொல்லாத காலமாக விளங்கியது என்பதை அக்குவேறாக அலசியது அந்த நூல். பிற்பாடு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இது “பிரம்மதேய ஆலோசகர்” குழுவால் தடை செய்யப்பட்டது.

   மன்னர் காலத்தில் ஏன் மார்க்சீயம் வரவில்லை? ராஜராஜ சோழன் ஏன் பின் நவீனத்துவம் பற்றிப் பேசவில்லை? என்பது போன்ற கேள்விகளல்ல நமது கேள்விகள்.

   ஈழம் வென்றதும்… கடாரம் சென்றதும்… வெற்றிக்கொடி நாட்டியதும் மகிழத்தக்கதுதான். ஆனால்… தனது குடிமக்களுக்குள்ளேயே ஏன் பாகுபாடு காட்டினான்? ஒரு பக்கம் சுகத்தையும், இன்னொரு பக்கம் சுமையையும் ஏற்றியது ஏன்? இந்தக் கேள்விகள் நிறைகளைப் பற்றி சிலாகிக்கும் வேளையிலும் நெஞ்சில் உறுத்தும் கேள்விகள் அல்லவா?

   –nanri koodal.com

   • “சமயத்தலத்தில் சமத்துவமின்மை மட்டுமல்ல சோழப் பேரரசில் மக்கள் நிலை எவ்வாறிருந்தது? அவர்களது கல்வி எவ்வாறு இருந்தது? பெண்களது நிலை எவ்வாறு இருந்தது? நிலம் யார் வசம் இருந்தது? பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது? இதுவெல்லாம் முக்கியமில்லையா நமக்கு?”

    இதை அளவுகோளாக கொண்டால் கடந்த கால அரசுகள்(உலகம் முழுவதும்) எதையுமே நல்ல அரசு என சொல்ல முடியாது. வேண்டுமானால் கெட்டவனில் யார் அதிக நல்லவன் என கண்டுபிடிக்கலாம்.

 12. புதிய் வரலாறு எக்ஷழுதும் உங்க்ள் கர்ப்பனை திரஅன் வாழ்க.

 13. All the rulers over world are not good try to take the good thing fron the history and sole the negative in history at present..Simply blaming Raja rajan alone is not good

 14. raja raja cholan – stalin
  paarpanan – communisa thozirchangam endru sollikonda saamarthiya saaligal
  keezh thattu makkal – keezh thattu makkal
  peria kovil – vinveliyil naay anupvadhu, kurangu anupavadhu, lab galil kirumigalai kandu pidpathu, pani por endru solli kondu padai selavu.

  Ellam onnu thaan sir! Peria kovilil nadanthai vida ‘paravai koodu’ yendru solli kondu seidha communisa attagasangal….

 15. ஒவ்வொரு அரசனும் உத்தமனாக இருப்பது என்பது நடவாத காரியம். இரண்டு வித கலவை என்பது தான் உண்மை. அங்கே நடந்த விழாவில் ராஜா ராஜனை பற்றி புகழ வேண்டும் என்பதற்காக சிலவற்றையும் சேர்த்து சொல்லி வைத்தார்கள்

 16. மிக ஆழமான கற்பனையுடன் தெளிவாகப் பதிக்கப் பட்ட பதிவு. தாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் ஒத்துக்கொள்ளப் படவேண்டிய ஒன்று. மன்னராட்சி காலத்தில் இதுவே நடந்திருக்கப்பட வேண்டியது. நிலவுடைமைச் சமூக அமைப்பின் இயல்புகளை ஆராயும்போது இவையனைத்தும் தவறானதல்ல.

  //”உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம்.”//

  ஒவ்வொரு மன்னனும் தத்தம் குடிமக்களைக் காக்கவும், தனது நாட்டின் வாணிபத்தைப் பெருக்கி, செல்வம் ஈட்ட, பிறநாட்டாரின் ஆக்கிரமிப்புகளிலிருந்து காக்க ‘போர்’ என்ற அழிவின் பாதையை கையாண்டதையும் தவறாகக் குறிப்பிட முடியாது. இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் தங்களை அந்தந்த காலகட்டத்துக்கு நிலைப்படுத்தி, ராஜராஜ சோழன் மற்றும் ஏனைய விமர்சிக்கப்படும் அரசர்களின் நிலைப்பாட்டில் நின்று வாசிக்க வேண்டும்.

  ஒவ்வொரு சமூகத்தின் உருவாக்கமும் மற்றொரு சமூக‌த்தின் அழிவிலிருந்தே தொடங்கப்படுகிறது

  வெளிப்படையாகப் பேசினால் வாசகர்கள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த அல்லது தாங்கள் அறிந்த அல்லது தங்களுக்குக் கூறப்பட்ட கருத்தை வைத்தே கற்பனை ஓவியத்தை வரைந்துக் கொள்கின்றனர். 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சரித்திர நிகழ்வுகளை வாசிக்கும் போது முறையான ஆராயப்பட்ட கற்பனை கொண்ட பார்வையாக இருப்பது நலம். ‌

  தற்போதைய நிலைமையில் பதிவைப் படைப்பதென்பது கற்பனையுடன் மட்டுமே உள்ளது.

  வினவு அவர்களே, தாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளது முழுவதுமாக ஏற்கப்பட வேண்டியதா அல்லது ஒதுக்கப்பட வேண்டியதா என்பதை விட நாம் ஒவ்வொருவரும் விமர்சிக்கும் ராஜராஜ சோழனது நிலைப்பாட்டில் நின்று ஆராய்வது நலம்.

  அன்றைய சூழலை இன்றைய காலகட்டத்துடன் நோக்குவதே தவறு. ‌

  நான் மேற்குறிப்பிட்டதைப் போல, மன்னன் ஒருவன் பிறநாட்டாரின் ஆக்கிரமிப்புகளிலிருந்து தங்களது நாட்டையும் மக்களையும் காக்க ‘போர்’ என்ற அழிவின் பாதையை கையாண்டதை எவறும் தவறாகக் குறிப்பிட முடியாது.

  தாங்கள் இப்பதிவில் குறிப்பிட்ட சோழர்களின் இருண்ட பகுதியை விட அவர்கள் செய்த நல்லனவற்றையும் பாராட்ட வேண்டும். மற்றொரு வலைதளத்தில் கூறப்பட்ட செய்தி:‍‍

  //தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் சோழர் காலத்தில், ராஜராஜனின் பாட்டாவான இராதித்த சோழனால் வெட்டப்பட்டதுதான். வீரநாராயண மங்கலம் ஏரி என்பது அதன் பெயர். இந்த ஏரி அக்காலத்தில் இருபது கி.மீ நீளமும் ஐந்து கீ.மீ அகலமும் கொண்டது. ஐம்பதாண்டுகளாக அதை தூர்வாரவே நம் ஜனநாயக அரசுகளிடம் நிதி இல்லை என்கிறார்கள். அதை நம்பியே இன்றும் சென்னைகூட வாழ்கிறது. அது எப்பேர்ப்பட்ட வைப்புநிதி என்பதை நாம் யோசிப்பதேயில்லை. இன்று அதன் மதிப்பு பல்லாயிரம்கோடி ரூபாய்! எத்தனைகோடி வரிப்பணம், எவ்வளவு உழைப்பு!

  குமரிமாவட்டத்தில் மட்டும் சோழர்கள் வெட்டிய ஏரிகள் இருபதுக்கும் மேல். தமிழகத்தில் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டிருக்கலாம். இன்றைய தமிழகத்தின் ஆகப்பெரிய பாரம்பரியச் சொத்தே இந்த ஏரிகள்தான். இவை இல்லையேல் நாம் பாலைவன மக்கள். ஆயிரம் வருடங்களாக நாம் குடிப்பது சோழன் அளித்த குடிநீரை. உண்பது அவர்கள் உருவாக்கிய விளைநிலங்களின் சோற்றை.அதை நாம் மறக்கக் கூடாது.

  சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததா? ஆம் இருந்தது. அடிமைமுறைகூட இருந்தது என நாம் இன்று கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். ஆனால் தமிழகத்தில் சங்க காலம் முதலே சாதிமுறையும், அடிமைமுறையும் இருந்தன. இழிசினர், தொழும்பர், உரிமைமாக்கள் என்றெல்லாம் நம் இலக்கியங்கள் சொல்கின்றன. ஆனால் அன்று உலகமெங்கும் அதே பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடும், அடிமை முறையும், இருந்தன என்பதே வரலாறு. மக்களில் ஒருசாராரை அடிமைகொண்டு கட்டாய உழைப்புக்கு ஆளாக்கி அவர்களை சுரண்டி அவர்களின் உழைப்பு உருவாக்கிய உபரியால்தான் உலகத்தின் எல்லா நாடுகளும் தங்களை நாடுகளாக ஆக்கிக்கொண்டன. பண்பாட்டை வளர்த்துக்கொண்டன.//

  குறைகளையே கண்டறியும் உங்களைப் போன்றோர் சோழர் ஆட்சிகாலத்தில் ஒரு நன்மை தரக்கூடிய நிகழ்ச்சியும் நடைபெறவில்லை என்பதை சான்றுடன் கூற முடியுமா??????????????

  தங்களுக்கு அத்தகைய அரசுரிமை அளிக்கப்பட்டால் தாங்கள் எவ்விதமாக நடந்து கொண்டிருப்பீர்கள் என்பதை கற்பனை செய்துகொள்ளப் பணிக்கிறேன்.

  இறுதியில் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள், அன்றைய அரசர்களையும் (1000 ஆண்டுகளுக்கு முன் அரசாட்சி நடத்திய) இன்று அரசியல் நடத்துபவர்களையும் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டுகிறேன்.

 17. அருள்மொழிவர்மன் சொல்லிய கருத்தோடு ஒத்துப் போகிறேன். பிற்காலச் சோழர் காலத்தில் வைதீக சமயம் காலும் கையும் ஊன்றி மக்களை சாதி சாதியாகப் பிரித்து வைத்தது. சோழ அரசர்கள் அதனை அடிப்படையில் தான் ஆட்சி செய்தார்கள். இந்த சாதிப் பிரிவினை இந்தியா முழுதும் பரவி இருந்தது. இடக்கை வலக்கை சாதிக் கலவரங்களினால் சோழப் பேரரசு பலவீனம் அடைந்தது.
  ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இந்தச் சாதிப் பிரிவினையை ஒழிக்க முடியாமல் இருக்கிறது. இந்து தமிழர்கள் (தலித் உட்பட) தாமாகவே பார்ப்பனர்கள் உயர்சாதியினர் (வருணத்தவர்) அவர்களுக்கே பிறப்பின் அடிப்படையில் கோயில்களில் பூசை செய்ய உரியவர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அருள்மொழிவர்மன் “ஆனால் தமிழகத்தில் சங்க காலம் முதலே சாதிமுறையும், அடிமைமுறையும் இருந்தன. இழிசினர், தொழும்பர், உரிமைமாக்கள் என்றெல்லாம் நம் இலக்கியங்கள் சொல்கின்றன. ஆனால் அன்று உலகமெங்கும் அதே பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடும், அடிமை முறையும், இருந்தன என்பதே வரலாறு” என்று சொல்வது சரியென்றாலும் சங்க காலத்தின் முற்பகுதியில் பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கப்படவில்லை. நிலம் அல்லது திணைப் பாகுபாடு மற்றும் செய்தொழில் அடிப்படையிலேயே பிரிவினை இருந்தது.இத் தொழில் பிரிவுகள், பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவில்லை. தொழில் செய்வோர்க்கு இடையே உயர்வு தாழ்வு கற்பிக்கப்படவில்லை. சங்ககாலப் புலவர்களின் பெயர், ஊர், குலம் முதலியனவற்றை நோக்கும்போது, அவர்கள் பல பல இனத்தவராகவும் குலத்தவராகவும் (குயவர், கூழவாணிகர், பாணர், அரசர், ஆசிரியர்….) இருந்தர்கள்.
  பேரூர்களில் மட்டுமன்றிச் சிற்றூர்களில் வாழ்ந்தவராகவுங் காணப்படுகின்றனர். பலர் நாகரினத்தைச் சேர்ந்தவராவர். சங்ககாலத் தமிழ் நாட்டிற் பரந்த கல்விமுறை இருந்ததுமன்றி அது உயர்ந்த மட்டத்திலும் இருந்திருக்க வேண்டும்.

 18. தேவரடியார் என்ற சொல்லே தேவுடியா என மருவியிருக்கும் என தோன்றுகிறது.
  அந்த கால கட்டங்களில் இப்பெண்களின் நிலை மிகவும்………..

 19. இராச ராசனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே. அக்காலத்தில் மிகுந்த அறிவுடன் இருந்த அந்தணர்களை தன்னுடன் அமைச்சராக துணைக்கு வைத்துக்கொண்டாரே தவிர, ஒரு அந்தணரையும் குறுநில மன்னராகக்கூட நியமிக்கவில்லை. அந்தணர்களின் அறிவை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார் அவ்வளவே!

  • சரிங்க நண்பரே… அதற்க்கு முன் சேரியும், ஆக்கிரகாரமும் எப்படி உருவானது என்று தாங்கள் கூறுங்கள் நண்பரே .

 20. 504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
  மிகைநாடி மிக்க கொளல்

  TESTING OF MEN FOR CONFIDENCE

  504 Good and evil in man weigh well
  Judge him by virtues which prevail.

  பதவுரை:
  குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் – குணத்தை ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை ஆராய்ந்து அதிகமானது எதுவோ அதைக்கொள்ள வேண்டும்.

  பொழிப்புரை:
  ஒருவனுடைய நல்ல குணத்தை ஆராய்ந்து அவனுடைய கெட்ட குணத்தையும் ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை அறிந்து எது அதிகமோ அதைக்கொண்டு (தீர்மானிக்க வேண்டும்).

  விளக்கம்:
  எல்லாருக்கும் நல்ல குணமும் உண்டு, கெட்ட குணமும் உண்டு. நல்ல குணம் அதிகமாக உள்ளவனை நல்லவனாகவும் கெட்ட குணம் அதிகமாக உள்ளவனை கெட்டவனாகவும் கொள்ள வேண்டும். ‘குணம்’ என்பது ‘நல்ல குணம்’ ‘குற்றம்’ என்பது இங்கே ‘தீய குணம்’.

  அறிஞர் அண்ணாவை பிழைப்புவாதி என்று வசை பாடுவது உங்களது வக்கிர புத்தியையே காட்டுகிறது. ஆரியத்தையும் பிராமணீயத்தையும் தகர்த்த பெருமை அறிஞர் அண்ணாவுக்கு உண்டு. அவரே ஓர் அறிவுசார் தளத்தில் இருந்து கொண்டு ஆரியத்தையும் பிராமணீயத்தையும் புறம் கண்டு தமிழனது மாண்ட புகழையும் தன்மானத்தையும் உலகறியச் செய்தவர். வினவு நாகாக்க வேண்டும். ஒரு இணைய தளம் இருப்பதை வைத்துக் கொண்டு மற்றவர்கள் மீது சேறுவாரிப் பூசும் திருப்பணியை செய்யக் கூடாது.

 21. “பார்ப்பனர்களுக்கு பொற்காலமாக விளங்கிய இக்காலத்தில் மன்னனுடைய மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்களை கூட மனுஸ்மிருதி யின் படி நாடுகடத்த மட்டுமே செய்தான் ராசராசன்”
  மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்கலின் பெயர்கலை சொல்ல முடியுமா.

  • ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சோமன், இருமுடிச்சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பார்ப்பனர்கள்

 22. Many customs that were considered normal and acceptable are inhuman by today’s standards and similarly many practices that are considered acceptable were considered unbecoming of any person during those days (Cholan’s times). This alternative history, with no proof, is solely based on hatred towards a particular community! Cholas encouraged all arts and education; exponents of dance, music, painting, sculpture, devotional music and education (which meant knowledge of Vedas) were encouraged and treated with respect and lived well. The author’s sole problem is “Parpan’s” were also the beneficiaries as het represented the educated in those days! Priests were required to know the history of the religion (mainly Vedas and related works) and the uneducated common man was unsuitable to the task. The author has to get over this fact and be truthful; re-interpreting ancient history is not a tool to spew irrational hatred of a community!

 23. vanakkam , ayya neengal padintha karuthukkal 2017 kku sariyaga irukkum. Neengal 1000 vadu varudathil irunthu parungal. oru etharkkum payanpadatha comunisa sithanthathai vaithu kondu ,ore parvaiyil parkatherkal. Oru velai neengal Raja raja cholanaga ,irundal ungalal ivvalavu nirvagam,vivasayam porulatharam ,pondravatrai sariyaga thirampada nadathi irukka mudiyuma,,,,, endral mudiyadu enbathey yen karuthu.
  200 varuda communisa sinthanaye ungalukku pridu ,,endral. 5000 varuda Tamilan parampariyam sindanai evvalavu periyadu. Yositthu padvu podungal..nandri,

 24. அனைத்து உயிர்களுக்கும் மறுபக்கம் உண்டு..எந்த மனிதருக்குக்கும் இருண்ட மறுபக்கம் உண்டு..இதை எழுதியவருக்குக கூட…

 25. சுமார் 400 பேரை பெரிய கோவிலில் தேவரடியார் என்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தியவன் ராசராசன்.
  அன்புள்ள ஆசிரியரே,
  மேற்கண்ட வாசகம் நீங்கள் எழுதியதே, இதை தாங்கள் எந்தக் கல்வெட்டிலிருந்து எடுத்துள்ளீர்கள்? ஆதாரம் உள்ளதா?
  தமிழர்கள் மீதும் தமிழ் மன்னர்கள் மீதும் பொய்யான கருத்துரைகளை தமிழ் மக்கள் மனதில் விதைத்து தமிழ் கலாச்சாரத்தையும் தமிழர் வீரத்தையும் மழுங்கடிக்கத் துடிக்கும் தங்களின் ஆதிக்க வெறியை இப்போதே நிறுத்திக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
  இதுபோன்ற ஆதாரம் இல்லாத அப்பட்டமான பொய் கட்டுக் கதைகளையும் உங்கள் மனவிகாரங்களையும் கருத்து என்கின்ற போர்வையில் அடுத்தவர் மனதில் திணிக்கப் பார்ப்பதை எப்போதும் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை தாங்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டுமாம் கேட்டுக் கொள்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க