Friday, October 7, 2022
முகப்பு செய்தி இந்தியா உ.பி. : மதிய உணவிற்கு ரொட்டி - உப்பு : அம்பலப்படுத்தினால் சதி வழக்கு !

உ.பி. : மதிய உணவிற்கு ரொட்டி – உப்பு : அம்பலப்படுத்தினால் சதி வழக்கு !

மதிய உணவில் மாணவர்களுக்கு வெறும் ரொட்டியும் உப்பும் மட்டும் பரிமாறப்படுவதை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மீது வழக்கு போட்டு ‘கடமையாற்றியுள்ளது’ உ.பி அரசு.

-

டந்த வாரம் உத்தர பிரதேச மாநிலத்தின் மிர்சாபூரில் உள்ள பள்ளியில் வழங்கப்பட்ட ‘சத்துணவில்’ ரொட்டியும் உப்பும் தரப்பட்டது. இதை வீடியோ செய்தியாக்கியிருந்தார் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த வீடியோவை எடுத்து மாநில அரசின் மானத்தை வாங்கிவிட்டதாக அந்தப் பத்திரிகையாளர் மீதும் அவருக்கு உதவியதாக மற்றொருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது உ.பி. ஆதித்யநாத் அரசாங்கம்.

மிர்சாபூரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்களுக்கு மதிய உணவிற்கு ரொட்டியும், அதற்குத் தொட்டுக்கொள்ள உப்பும் தரப்பட்டுள்ளது. காய்கறிக் குழம்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. இதை வீடியோவாக பதிவாக்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ஜன்சந்தேஷ் டைம்ஸ் என்ற உள்ளூர் பத்திரிகையின் நிருபர் பவன் ஜெஸ்வால்.

“அரசின் உதவியுடன் இந்தக் குழந்தைகள் ‘சத்துணவு’ உண்கிறார்கள். வியாழக்கிழமையின் மெனு ரொட்டியும் உப்பு. மதிய உணவிற்கு பள்ளியில் ரொட்டியுடன் உப்பு, சாதத்துடன் உப்பு என மாறிமாறி வழங்கப்படுவதாக பெற்றோர்கள் கூறுகிறார்கள்” என அந்தப் பதிவில் அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து ‘விசாரணை’ நடத்திய மாநில கல்வித் துறை அதிகாரிகள், இந்த விசயம் வெளியே தெரிய காரணமான அந்தக் கிராமத்தின் தலைவர் ராஜ்குமார் பால், பத்திரிகையாளர், மற்றும் பெயர் தெரியாத மற்றொரு நபர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிந்துள்ளது.

முன்னதாக, மதிய உணவுத் திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள மாவட்ட கலெக்டர் அனுராக் பட்டேல், ஆசிரியர்கள் சிலரின் மோசமான நிர்வாகத்தின் காரணமாக இந்தத் தவறுகள் நிகழ்வதாகக் கூறியிருந்தார்.

படிக்க:
ஜெர்மனி : வேற்றுமையில் ஒற்றுமை – ஆனால் பீஃப் கூடாது !
♦ கிருஷ்ணரும் சில பிய்ந்துபோன செருப்புகளும் !

அந்த வீடியோ உண்மையானதுதான் என்றும், இத்தகைய நிலைக்குக் காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அவர் விசாரித்து தாக்கல் செய்ததன் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரி வழக்கு பதிவு செய்திருக்கிறார். ஆனால், அனுராக் பட்டேல் சொன்னது ஒன்றாகவும் கல்வி அதிகாரியின் நடவடிக்கை வேறொன்றாகவும் இருக்கிறது.

விசயம் கிராமத்தலைவர் ராம்குமார் பாலின் திட்டமிட்ட சதி எனவும் பத்திரிகையாளர் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து ஜெய்ஸ்வால் வீடியோ பதிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

“மதிய உணவில் ரொட்டியும் உப்பும் பரிமாறப்படுவதாக ராஜ்குமார் எனக்கு தகவல் சொன்னார். நான் 12 மணியளவில் பள்ளிக்குப் போனேன். அது உண்மைதான். 10 – 12 மாணவர்களிடம் பேசினேன். அவர்கள் மதிய உணவில் ரொட்டியும் உப்பும், சாதமும் உப்பும் மாறி மாறி வழங்கப்படுவதாகக் கூறினார்கள். பள்ளியின் நிர்வாகி ஒருவரிடமும் பேசினேன், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதையேதான் வழங்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.

“மேலும் அவர்,  இது இப்படி போகட்டும் விடுங்கள் என சில அலுவலர்கள் கூறியதாகவும் மாவட்ட தலைநகரிலிருந்து வெகுதூரம் தள்ளியிருக்கும் இந்த இடத்துக்கு எந்த மூத்த அதிகாரியும் வரப்போவதில்லை எனவும் அவர் கூறியதாக பள்ளி நிர்வாகி என்னிடம் கூறினார்” எனவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அவருக்கு ஆதரவாக கிராமத்து மக்களும் சத்துணவு சமைக்கும் ஊழியரும் உப்பும் ரொட்டியும் வழங்கப்படுவது உண்மைதான் என ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

உண்மை இவ்வாறு இருக்க, இதை வெளிக் கொண்டுவந்த காரணத்துக்காக கதை ஒன்றை புனைந்து, மூவர் மீதும் கிரிமினல் சதி, பொது ஊழியரின் பணியை செய்யவிடாமல் தடுத்தல், பொய்யான ஆதாரத்தை வழங்குதல், ஏமாற்றுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படிக்க:
யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு !
♦ மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !

பத்திரிகையாளர் ஜெய்ஸ்வாலின் நண்பர் ஒருவர், “வழக்கமாக இதுபோன்ற திருப்பம் மிக்க கதையைச் சொல்வது ஆதித்யநாத் அரசாங்கத்துக்கு கைவந்த கலை. மதிய உணவில் ரொட்டியும் உப்பும் பல மாதங்களாக வழங்கப்பட்டு வருவதை முழுமையாக மாவட்ட கலெக்டரின் அறிக்கை மறைத்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் சிலரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

எந்த வகையிலும் ஆட்சி செய்யத் தகுதியில்லாத, கலவரங்களை நிகழ்த்தும் இந்துத்துவ ரவுடிகள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமோ அது உத்தர பிரதேசத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்துத்துவக் குண்டர்களின் ஆட்சி, ‘முசுலீம்’ குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ‘இந்து’க்  குழந்தைகளுக்கும் எதிரானதுதான் என்பதற்கு இது ஒரு சான்று !


கலைமதி
நன்றி: டெலிகிராப் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க