மதிய உணவு

சில நாட்களுக்கு முன்னால் ஒரு நண்பர் இன்பாக்சில் வந்தார். தான் ஐடிஐ (தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனம்) ஒன்றில் ஆசிரியப்பணி செய்வதாக அறிமுகம் செய்து கொண்டார். கல்வி நிதிக்கு உதவ முடியுமா என்று கேட்டார். விவரம் அனுப்புங்கள், யோசிப்போம் என்று பதிலளித்தேன். சுமார் பத்து மாணவர்களின் ஒரு பட்டியலை அனுப்பினார். ஒவ்வொரு மாணவனின் பெயருக்கும் நேராக, ரூபாய் 2000 அல்லது 2500 அல்லது 3000, பெற்றோர் இல்லை / அப்பா இல்லை / குடிகாரத் தந்தை போன்ற விவரங்களை எழுதியிருந்தார்.

என்ன இது பொத்தாம்பொதுவாக எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டு தொலைபேசியில் உரையாடினேன். அப்போது தெரிய வந்த விவரம் இதுதான் :

“ஐடிஐக்கு படிக்க வருகிறவர்கள் பெரும்பாலும் ஏழைகள்தான். பத்தாவது அல்லது ப்ளஸ் டூவுடன் மேற்கல்வி கற்க முடியாதவர்கள், சில மாதங்கள் மட்டுமே பயிற்சி பெற்று, சம்பாதித்து குடும்பத்துக்கு ஆதரவளிக்க நினைப்பவர்கள்தான் ஐடிஐக்கு வருவார்கள்.

சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏழை மாணவர்கள் பலர் வருகிறார்கள். அது தனியார் ஐடிஐ. அரசு கட்டணம் செலுத்தி விடுகிறது என்றாலும், அவர்களில் பலர் மதியம் சாப்பிடக்கூட ஏதுமில்லாமல் பட்டினி கிடப்பார்கள். மதிய வகுப்புகளும் முடிந்து வீடு போக வேண்டும்.

சிலர் இரண்டு பஸ் மாறி வர வேண்டியிருக்கும். ஆனால், குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு பஸ்சுக்கு மட்டுமே பாஸ் கிடைக்கும். அதனால் வீட்டிலிருந்து 3-4 கிமீ நடந்து வந்து, பஸ் பிடித்து ஐடிஐ வந்து விட்டு, பஸ்சிலிருந்து இறங்கியபிறகு மீண்டும் நடந்து கிராமத்துக்குப் போக வேண்டும். பட்டினி வயிற்றோடு எப்படி இதெல்லாம் சாத்தியம்…”

மாதிரிப்படம்

பேசப்பேச உள்ளுக்குள் கலங்கியது. அதே நேரத்தில், கல்விநிதி என்பது கல்லூரிக் கட்டணம் போன்ற திட்டமான செலவுகளுக்கு மட்டுமே நாம் வழங்கி வருகிறோம் என்பதும் நினைவில் வந்தது. கல்லூரிக் கட்டணத்துக்கு நிதியுதவி செய்தபிறகு, கட்டிய ரசீதின் நகலை வாங்கி வைக்க முடியும். எந்தக் கணக்குக்கும் உட்படாத செலவை எப்படிச் செய்வது? நண்பர்களுக்கு எப்படி கணக்குக் காட்டுவது? அதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா ? நடந்து வரும் பையனுக்கு சைக்கிள் வாங்கித் தரலாமா? இதுபோல ஏதாவது யோசித்துவிட்டு, மீண்டும் வாருங்கள். நிச்சயமாக உதவி செய்வோம் என்றேன்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மதியம் சாப்பிடும்போதெல்லாம் பட்டினி கிடக்கும் மாணவர்களின் நினைவாகவே இருந்தது. சக மாணவர்கள் சாப்பிடும்போது தான் மட்டும் சாப்பிடாமல் இருப்பது, சாப்பிட ஏதும் இல்லாமல் இருப்பது எப்படிப்பட்ட சோதனை என்பதை நன்றாகவே அறிவேன். வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளி இருந்தால், நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வருகிறேன் என்று டிராமா காட்டிவிட்டு, வீடு போய் ஒரு செம்புத் தண்ணீர் குடித்துவிட்டு வந்து விடலாம். ஆனால் பள்ளி தூரமாக இருந்தால்…?

***

பாபாஜான் (அப்பா) ஒருமுறை சந்தைக்குப் போயிருந்தபோது, வழியில் பசி மயக்கத்தில் இருந்த வெளியூர் இளைஞன் ஒருவனைப் பார்த்தார். பரிதாபப்பட்டு, அவனை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். அவனுக்கு பசியாற சோறு போட்டு, படுக்க இடமும் பாயும் தலையணையும் கொடுத்தார். வீடு சிறியது என்பதால் திண்ணையில் படுக்க வைத்தார். அவன் பிழைப்புக்கு என்ன வழி செய்யலாம் என்று இரவு முழுக்க யோசித்துக்கொண்டிருந்தார்.

விடிந்து பார்த்தால், அவன் பாபாஜானின் சைக்கிளை திருடிக்கொண்டு போய்விட்டான். ஊர் எல்லைக்குப் போவதற்குள் ஒரு போலீஸ்காரர் பார்த்து விட்டார். அது சின்ன கிராமம் என்பதால், சைக்கிளைப் பார்த்ததுமே அது யாருடைய சைக்கிள் என்று புரிந்து விட்டது. அவனை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.

பாபாஜான் என்ன செய்தார் தெரியுமா? ‘பாவம் இளைஞன், பிழைத்துப் போகட்டும், அவன் மீது கேஸ் எதுவும் போடவேண்டாம்’ என்று சைக்கிளை மட்டும் வாங்கிக்கொண்டு அவனைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

***

ங்களாபுதூர், தூக்கநாயக்கன் பாளையத்தில் அப்பா ஆசிரியராகப் பணியாற்றியபோது நடந்த இந்தக் கதை அக்கா சொல்லித்தான் எனக்குத் தெரியும். அக்கா எழுதிய ‘அன்புள்ள அனீஸ்’ புத்தகத்திலும் இது இடம்பெற்றிருக்கிறது. நான் அப்போது பிறக்கவில்லை, அல்லது கைக்குழந்தை. அதன்பிறகு வெள்ளகோவில் சென்று பிறகு மடத்துக்குளத்தில் நிரந்தரமாகி விட்டோம். மடத்துக்குளத்துக்கு வந்த பிறகு எங்களிடம் ஒருகாலத்திலும் சைக்கிள் இருக்கவில்லை.

மடத்துக்குளத்தில் வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளி இருந்ததால் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்து விட்டுப்போவார் அப்பா. சில காலம் கழித்து ஒன்றரை மைல் மேற்கே கட்டிடம் கட்டப்பட்டு, பள்ளி அங்கே போய்விட்டது. (உடுமலையில் எம்.எல்.ஏ-வாக இருந்தவனும் என் வகுப்பின் சகமாணவனுமான மணிவாசகத்தின் தாத்தா இலவசமாகக் கொடுத்த இடத்தில்தான் பள்ளி கட்டப்பட்டது.)

நாங்கள் வெள்ளகோவிலில் இருந்த வரையில் பெரிய அளவுக்கு பட்டினியோ வறுமையோ அனுபவித்ததாக நினைவில்லை. ஆனால் மடத்துக்குளத்தில், மடக்கு சேர்கூட இருக்கவில்லை. ஒரு டியூப்லைட்கூட இருக்கவில்லை. ஃபேன் கிடையாது. ரேடியோ அல்லது டிரான்சிஸ்டர் கிடையாது. இந்த நிலையில் சைக்கிளுக்கு வழி ஏது?

நடந்தே சென்று நடந்தே திரும்புவோம். அது பெரிய விஷயமில்லைதான். பல நூறுபேர் ஊர்வலம்போல வெகுதூரத்திலிருந்தும் நடந்தே பள்ளிக்கு வந்து போவதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் மதியங்கள்தான் சோதனை. தினமும் மதியம் டிபன் கட்டிக்கொண்டு போக வழியிருக்காது. என்னைப்போன்ற மாணவர்களுக்கு பெரிய சோதனை இல்லை. சக மாணவனின் சைக்கிள் வாங்கிக்கொண்டு வீடுபோய் திரும்பலாம். அல்லது எல்லாருமாகச் சேர்ந்து இருந்ததை பகிர்ந்தும் தின்னலாம். 

படிக்க:
சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !

ஆனால் அப்பா…? டீச்சர்ஸ் ரூமில் மற்றவர்கள் சாப்பிடும்போது சும்மா உட்காரவும் முடியாது. டிபன் கட்டிக்கொண்டுவர வழியில்லை என்பது சக ஆசிரியர்களுக்குத் தெரிந்தே இருக்கும் என்றாலும் சாப்பிடாமல் ரூமில் உட்கார்ந்திருக்க முடியாது. வயிறு சரியில்லை என்று தினமும் பொய் சொல்ல முடியாது.

மதிய உணவு இடைவேளைக்குள் வீட்டுக்கு நடந்து வந்து திரும்பிச் செல்லவும் முடியாது. மேகாற்று வீசும் மாதங்களில் கிழக்கே போவது மிக எளிது. சைக்கிளில் உட்கார்ந்தால் போதும், காற்றே தள்ளிக்கொண்டுபோய் சேர்த்துவிடும். ஆனால் திரும்பிவரும்போது காற்றை எதிர்த்து பெடல் மிதித்து, மேடேற முடியாதபோது சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்து நாக்கு வறண்டுபோய் பள்ளிக்கு வந்து சேர்வதைவிட, சாப்பிடப் போகாமலே இருக்கலாம்.

அப்படியே போவதாக இருந்தாலும், சக ஆசிரியர்களிடம் தினமும் சைக்கிள் இரவல் கேட்பதும் தர்மசங்கடமான நிலை. மாணவர்களிடம் சில நாட்களில் இரவல் கேட்டு வாங்கிச் செல்லலாம். அதிலும் யாராவது என் சைக்கிள்ல காத்துப் போயிடுச்சு சார் என்று சொல்லி விட்டால் அதன் பொருளே வேறு. யாரிடம் இரவல் கேட்கலாம் என்று யோசிப்பதும்கூட அவலமான நிலைமைதான். அப்படியே வீட்டுக்குப் போனாலும் அங்கே சாப்பிட ஏதாவது இருக்குமா என்பதும் நிச்சயமில்லைதான். சில நாட்கள் ஸ்கூலை ஒட்டி சாலையின் மறுபக்கம் சின்னதாய் டீக்கடை வைத்திருந்த பியூன் கடையில் வடையும் டீயும் சாப்பிட்டு விட்டு வருவார்.

மேலே சொன்ன ஐடிஐ மாணவர்களின் மதிய உணவு விஷயம் கடந்தகால நினைவுகளை தோண்டிக் கிளறிப் போட்டுவிட்டது.

58 வயதில் ஓய்வுபெற்று அடுத்த இரண்டே ஆண்டுகள்தான் இருந்தார். 60 வயதில் விடைபெற்றுக்கொண்டார். 12-3-1979. இன்றோடு நாற்பது ஆண்டுகள் கழிந்து விட்டன.

அவருடைய மூன்றே மூன்று புகைப்படங்கள்தான் உண்டு. ஒன்று, இந்த குரூப் போட்டோ. மற்றொன்று, பென்ஷனுக்காக அம்மாவுடன் எடுத்த படம். கடைசி ஓரிரண்டு ஆண்டுகளில் தாடி வைத்திருந்தார். இருந்தாலும் தாடி வைத்த முகம் எனக்கு நினைவில் இருப்பதில்லை. யோசித்துப் பார்க்கிறேன்… இப்போது அப்பாவின் ஜாடை ரொம்பவே எனக்கு வந்துவிட்டது போலத் தெரிகிறது.

இத்தனை வறுமைக்கு இடையிலும் கம்பீரத்தை விடாதிருந்தவர் அப்பா. என்ன இருந்ததோ இல்லையோ, பிள்ளைகளுக்குக் கல்வியைத் தரத் தவறவில்லை. மகள்களை பர்தாக்களுக்குள் அடைக்கவில்லை. அதன் பயனை இப்போதும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

அன்று எதுவும் இல்லாதிருந்தோம். அப்பா இருந்தார். இன்று எல்லாம் இருக்கிறது. அப்பாதான் இல்லை.

***

அந்த ஐடிஐ ஆசிரியரும் இந்தப் பதிவைப் படிப்பார், அடுத்து என்ன செய்யலாம் எனத் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி : ஃபேஸ்புக்கில் ஷாஜகான்


இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க