ஜூலை 24 அன்று இந்த ஆண்டிற்கான “உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலவரம்” (‘State of Food Security and Nutrition in the World – SOFI) அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவில் 19.46 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதாக இவ்வறிக்கை அதிர்ச்சியளிக்கும் தகவலைக் கூறியுள்ளது.
ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (Food and Agriculture Organization – எஃப்.ஏ.ஓ) இந்த அறிக்கையைத் தயாரிக்கப்பட்டு, விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம் (International Fund for Agricultural Development – ஐ.எஃப்.ஏ.டி), ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund – யுனிசெஃப்), உலக சுகாதார அமைப்பு (World Health Organization – டபிள்யூ.எச்.ஓ) மற்றும் உலக உணவு திட்டம் (World Food Programme – டபிள்யூ.எஃப்.பி) ஆகிய நான்கு ஐ.நா அமைப்புகளுடன் இணைந்து இவ்வறிக்கை கூட்டாக ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் பசியால் தவிப்பவர்கள் பற்றிய விபரங்கள் மட்டுமின்றி, உணவு கிடைத்தாலும், அது போதிய ஊட்டச்சத்து உள்ளதாக இல்லாமையால் உடல் நலக்குறைவுகள் ஏற்படுவதால், அதைப் பற்றிய புள்ளி விபரங்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குடிமக்களுக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்குவதில் வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், மாலத் தீவுகள் ஆகிய நாடுகளை விடவும் இந்தியா மோசமான நிலையில் இருப்பது இந்த அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2022 நிலவரப்படி, 55.6 சதவிகித மக்கள், அதாவது 79 கோடி பேர், ஊட்டச்சத்துள்ள உணவைப் பெற முடியாத அளவுக்கு இந்தியாவின் விலைவாசியும், வறுமையும் தடுப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், அவ்வாறு ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள உணவைப் பெறுபவர்களின் அளவு, மாலத் தீவுகளில் வெறும் 1.6 சதவிகிதமாகவும், பூட்டானில் 5.3 சதவிகிதமாகவும், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் 41.1 சதவிகிதமாகவும், வங்கதேசத்தில் 48.2 சதவிகிதமாகவும் உள்ளது. ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கூட இந்த விகிதம் 54.1 சதவிகிதம் தான் என்பது, இந்தியா எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.
படிக்க: பட்டினியால் வாடும் 78.3 கோடி மக்கள் – புழுத்து நாறும் முதலாளித்துவம்!
உலகின் மிகப்பெரிய இலவச உணவு தானியத் திட்டம் இந்தியாவில்தான் நடைமுறையில் உள்ளது. அதன்படி சுமார் 81 கோடி மக்களுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், உணவு தானியங்களால் வெறும் மாவுச்சத்தை மட்டுமே வழங்க முடியும்.
ஆரோக்கியமான உடல் நலத்திற்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவை காய்கறிகளிலிருந்தும், புரதம், கொழுப்பு ஆகிய சத்துகள் மாமிசம், பால் பொருட்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றிலிருந்தும் தான் கிடைக்கும். ஆனால், காய்கறிகளின் விலை வாசி, எளிய மக்கள் அணுக முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதால்தான் இவ்வளவு மோசமான ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவுகிறது.
இந்தியாவின் நோயாளிகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமானோருக்கு, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவை உட்கொள்வதே நோய்க்கான காரணமாக இருப்பதாக, இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (Indian Council of Medical Research) துணை அமைப்பான, ஊட்டச்சத்துக்கான தேசிய நிறுவனம் (National Institute of Nutrition) கடந்த மே மாதம் எச்சரித்தது.
எளிய மக்களின் உணவில் 50 முதல் 70 சதவிகிதம் வரை, உணவு தானியங்கள் மட்டுமே இருப்பதாகவும், பிற சத்துகளை அளிக்கும் உணவுகள், அதாவது காய்கறிகள், மாமிசம், பருப்பு போன்றவை, எடுத்துக் கொள்ள வேண்டிய அளவில் பாதியளவு கூட எடுத்துக்கொள்ளப் படுவதில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலவசமாக வழங்கப்படும் உணவு தானியங்கள் பசியைத் தீர்க்க உதவினாலும், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்காமல் விலைவாசி உயர்வு தடுக்கிறது என்பதுதான் உண்மை நிலையாக இருக்கிறது.
படிக்க: இந்தியாவில் 56 சதவிகித மக்களுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கும் அவலம்!
ஆண்களுக்குப் போதிய உணவை அளித்த பின்னரே பெண்கள் உண்ணும் மிகப்பிற்போக்கான பழக்கம் நம் நாட்டில் உள்ள நிலையில், விலைவாசி உயர்வு போன்றவற்றால் உணவை அதிகம் குறைத்துக்கொள்வது பெண்கள்தான்.
அதனால், இந்தியாவில் இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2012-இல் இருந்ததைவிட, 2022-இல் 9 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதன் விளைவாக, எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, உலகின் மிகவும் பின் தங்கிய, ஏழை நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது.
உலகிலேயே மிகவும் பின்தங்கிய பகுதியாகக் கருதப்படும் சகாரா பாலைவனத்திற்குத் தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகளிலேயே சராசரியாக ஒரு கோடிக்கு 54 குழந்தைகள் எடைக் குறைவாகப் பிறக்கிற நிலையில், இந்தியாவில் 63 என்பது மிகவும் அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. அத்துடன் வேறு உணவுகளை வாங்க வசதியில்லாமல், தாய்ப்பால் மட்டுமே அளிக்கப்படுகிற கைக்குழந்தைகளின் எண்ணிக்கையும், இந்தப் பத்து ஆண்டுகளில் 22 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்பது, மக்களின் நல்வாழ்வில் பாசிச மோடி அரசு எவ்வித கவனத்தையும் செலுத்தவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. அது முன்வைக்கும் ‘வளர்ச்சி’யை தோலுரித்துக் காட்டுகிறது.
இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுவதை மிகப்பெரிய சாதனையாக மோடி அரசு குறிப்பிட்டுக் கொண்டாலும்கூட, ஒருபுறம் அது போதுமான அளவாக இல்லை என்பதும், மறுபுறம் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்க முடியவில்லை என்பதும் தான் உண்மை. அப்படியான ஊட்டச்சத்துக் குறைவான உணவே உடல் பருமனுக்குக் காரணம் என்று குறிப்பிடுகிற ஐ.நா. அறிக்கை, இந்தப் பத்தாண்டுகளில் உடற்பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 112 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. பருமனாக உள்ளவர்கள் தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்பவர்கள் என்பது போன்ற பார்வை பொதுவாக நம்மிடையே இருந்தாலும், தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்காமையே பருமனுக்கு முக்கியக் காரணம் என்று இன்றைய மருத்துவ உலகம் பார்க்கிறது. அதனாலேயே ஐ.நா அறிக்கைகூட, இந்தியாவில் உடற்பருமன் அதிகரிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.
மொத்தத்தில், ஊட்டச்சத்துக் குறைபாடு, உடற்பருமன், பெண்களிடையே இரத்த சோகை, எடைக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் என்று அனைத்து வகையிலும் ஆரோக்கியமற்ற வாழ்வாக எளிய மக்களின் வாழ்வை பாசிச மோடி அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube