ஒன்றிய அரசு வெளியிட்ட குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பின் (Household consumption expenditure survey) தரவுகளைக் கொண்டு 21 மாநிலங்களில் வறுமை தொடர்பான பகுப்பாய்வை நடத்தி “ஹிந்துஸ்தான் டைம்ஸ்” ஜூலை 17 அன்று செய்தி வெளியிட்டது.
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெரும்பணக்காரர்கள் என அனைத்துத் தரப்பு மக்களிடமும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாட்டில் 44 சதவிகித மக்களுக்கு 3 வேளையும் உணவு கிடைக்கவில்லை. மாநிலங்களுக்கு ஏற்றவாறு இந்த எண்ணிக்கை வேறுபடுகிறது. நாடு முழுவதும் 21 மிக முக்கியமான மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஏழைகள், நடுத்தர குடும்பம், பணக்காரர்கள் என அனைத்து தரப்பிலும் 98 சதவிகிதம் பேருக்கு 3 வேளையும் உணவு கிடைக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் நிலைமை படுமோசமாக உள்ளது. இந்த ஆய்வறிக்கையின் தகவலின் படி மோடியின் சொந்த மாநிலமான குஜராத் கடைசி இடத்தில் உள்ளது. இதேபோன்று, பா.ஜ.க ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் கடைசி 5 இடங்களில் உள்ளன.
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மிக ஏழ்மையான குடும்பங்களைப் பொறுத்தவரை கேரளாவில் 98 சதவிகிதம் பேருக்கும், தமிழ்நாட்டில் 97 சதவிகிதம் பேருக்கும் மூன்று வேளையும் உணவு கிடைக்கிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் 41 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 39 சதவிகிதம், மகாராஷ்டிரா 34 சதவிகிதம், ராஜஸ்தானில் 34 சதவிகிதம், குஜராத்தில் 33 சதவிகிதம் ஏழைகளுக்கு மட்டுமே 3 வேளை உணவு கிடைக்கிறது” என தகவல் வெளியாகியுள்ளது.
படிக்க: இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உணவு பாதுகாப்புத் துறையில் முன்னணியில் இருக்கின்றன. ஆனால், மோடியின் குஜராத்தில் 69 சதவிகிதம் பேர் போதியளவு உணவில்லாமல் தவித்து வருவது அம்பலமாகியுள்ளது.

மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான அளவில் சீர்குலைந்து விட்டது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறியுள்ளதே மோடி அரசின் 10 ஆண்டுக்கால சாதனை ஆகும்.
ஆனால், மோடி அரசோ 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டு விட்டதாக அடிக்கடி பொய்யான தகவலைக் கூறி நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது.
இந்நிலையில், நாட்டில் 56 சதவிகித மக்களுக்கு மட்டுமே 3 வேளையும் உணவு கிடைப்பதாக 21 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவலானது இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube