2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, வெறும் 1 சதவிகித பெரும்பணக்காரர்களிடம் இந்திய நாட்டின் மொத்த சொத்தில் 40.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாக இன்று (ஜனவரி 16, 2023) வெளியாகியுள்ள ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கை (Survival of the Richest: The India Supplement) கூறுகிறது. அடித்தட்டில் உள்ள 50 சதவிகித மக்களிடம் வெறும் 3 சதவிகிதத்திற்கும் குறைவான சொத்துகளே உள்ளன. உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) டாவோஸ்-இல் நடந்ததும் மாநாட்டின் முதல் நாளான இன்று இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், முதல் 100 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு ₹54.12 லட்சம் கோடி ஆகும். மேலும், முதல் 10 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் ₹27.52 லட்சம் கோடி ஆகும்; இது கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 32.8 சதவிகிதம் அதிகமாகும்.
2020 ஆம் ஆண்டு, இந்தியாவிலுள்ள பெரும்பணக்காரர்களின் (billionaires) எண்ணிக்கை 102-ஆக இருந்தது. அது 2021 ஆம் ஆண்டில் 142 ஆகவும், 2022-இல் 166 ஆகவும் உயர்ந்துள்ளது. பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் 22.89 கோடி பேர் இந்தியாவில் வறுமையில் வாடுகின்றனர். உலகிலேயே அதிக வறியவர்களைக் கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
வருமானத்தின் அளவிற்கு ஏற்ப வருமான வரி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் மறைமுக வரிகளோ (indirect taxes) ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வசூலிக்கப்படுகிறது.
படிக்க: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு
“மதிப்பு கூட்டு வரி (Value Added Tax – VAT) போன்ற நுகர்வு வரிகள் அதிகம் விதிக்கப்படுவதால் ஏழைகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் வருமானத்தின் பெரும் பகுதியை மறைமுகவரியாக செலுத்த வேண்டி இருப்பதால் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது” என்று அவ்வறிக்கை கூறுகிறது.
வருமானத்தின் அளவையும் அவர்கள் செலுத்தும் வரியையும் ஒப்பிடும்போது, அடித்தட்டில் உள்ள 50 சதவிகித மக்கள் மேல்தட்டில் உள்ள 10 சதவிகித மக்களை விட 6 மடங்கு அதிகமாக மறைமுக வரி செலுத்துகிறார்கள். 2021 — 2022-இல் வசூலான மொத்த ஜிஎஸ்டி-யில் அடித்தட்டு 50 சதவிகித மக்களின் பங்களிப்பு 64.3 சதவிகிதம் ஆகும்; மேல் தட்டில் உள்ள 10 சதவிகிதத்தினரின் பங்களிப்பு வெறும் 3 சதவிகிதமே ஆகும்.
இவ்வறிக்கை பணக்காரர்கள் மீதான சொத்து வரியை அதிகரிக்க பரிந்துரை செய்கிறது. 2017 – 2021 ஆண்டுகளில் மட்டும் அதானியின் விற்பனை செய்யப்படாத சொத்துகளின் மதிப்பு (unrealised gains) ₹1.79 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இத்தொகையை கொண்டு 50 லட்சம் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களை ஒரு வருடத்திற்கு பணிக்கு அமர்த்தலாம்.
“இந்தியாவின் 166 பெரும்பணக்காரர்களின் (billionaires) மொத்த சொத்துகளின்மீது ஒருமுறை 2 சதவிகிதம் வரி விதித்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கத் தேவையான நிதியை (அதாவது ஆண்டிற்கு ₹40,423 கோடி) பெறமுடியும். முதல் 10 பெரும்பணக்காரர்களுக்கு ஒருமுறை 5 சதவிகித வரி விதித்தால், 2022 – 2023 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (₹86,200 கோடி) மற்றும் ஆயுஸ் அமைச்சகம் (₹3,050 கோடி) ஆகியவற்றின் தேவையை விட ஒன்றரை மடங்கு அதிக நிதி கிடைக்கும்” என்று அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி-யை குறைத்து, சொகுசு பண்டங்கள் மீதான வரியை கூட்ட வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் பரிந்துரைக்கிறது.
படிக்க: ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !
இவ்வறிக்கை குறித்து பேட்டி அளித்த ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் (Amitabh Behar) “பணக்காரர்கள் செழிப்பதற்கான இந்த அமைப்பால் தலித்துகள், பழங்குடிகள், முஸ்லீம்கள், பெண்கள், முறைசாரா தொழிலாளர்கள் ஆகியோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய சொத்து வரி, வாரிசுரிமை வரி போன்ற வரிகள் விதிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
ஏற்றத்தாழ்வையே உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கி வரும் இந்த பொருளாதார அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு, அதில் சில மாறுதல்களை மட்டும் செய்து பிரச்சினைகளை சரி செய்து கொள்ளலாம் என்று நினைப்பது மூடத்தனம். ஏற்றத்தாழ்வை ஒழித்துக்கட்ட இந்த பொருளாதார கட்டமைப்பையே ஒழித்துக் கட்டுவது அவசியமாகிறது.
பொம்மி