ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு
இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட மக்கள் தலைமீதே வரிகளையும் கட்டண உயர்வுகளையும் சுமத்தி வருகிறது மோடி அரசு. 2020-ல் கொரோனா நெருக்கடியிலும், எரிவாயு சிலிண்டர் (கேஸ்) விலையை ரூ.215 வரை உயர்த்தியது.
ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் ஜனவரி 16, 2022 அன்று நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில், “இந்தியாவில் அதிகரித்துவரும் சமத்துவமற்ற சமூகம்” என்ற அறிக்கையை “ஆக்ஸ்ஃபாம் இந்தியா” என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவிலுள்ள பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை 39% அதிகரித்து 142 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 2020-ல் பெரும்பணக்காரர்கள் 102-ஆக இருந்த நிலையில், 2021-ல் மட்டும் புதிதாக 40 பெரும்பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதேநேரத்தில், 2020-ல் மட்டும் 4.6 கோடி மக்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பெரும்பணக்காரர்களில் பலரின் சொத்துமதிப்பு இந்தக் காலகட்டத்தில் இருமடங்காக உயர்ந்துள்ளது. 142 பெரும்பணக்காரர்களின் சொத்துமதிப்பு மட்டும் 23.14 இலட்சம் கோடி ரூபாயிலிருந்து (313 பில்லியன் டாலர்) 53.16 இலட்சம் கோடி ரூபாயாக (719 பில்லியன் டாலராக) அதிகரித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு 3.13 இலட்சம் கோடி ரூபாயாக (42.7 பில்லியன் டாலராக) இருந்த அதானியின் சொத்துமதிப்பு இருமடங்கு அதிகரித்து தற்போது 6.72 இலட்சம் கோடி ரூபாயாக (90 பில்லியன் டாலராக) உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் அதானி குழுமம் ஒரு நாளைக்கு 1,002 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. 2021ல் 99 ஆயிரம் கோடி ரூபாயாக (13.3 பில்லியன் டாலராக) இருந்த முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு ஆறு மடங்கு உயர்ந்து, தற்போது 7.25 இலட்சம் கோடி ரூபாயாக (97 பில்லியன் டாலராக) உள்ளது.
142 பெரும்பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.53.16 இலட்சம் கோடி ரூபாய்க்கும் (719 பில்லியன் டாலருக்கும்) மேலாக அதிகரித்துள்ளது. நாட்டிலுள்ள 40% மக்களின் (அதாவது 55.5 கோடி மக்களின்) ஒட்டுமொத்த சொத்துக்களை (ரூ.49 இலட்சம் கோடி ரூபாயை – 657 பில்லியன் டாலரை) விட அதிகமான சொத்துக்களை வெறும் 98 பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்கின்றனர்.
முதல் 10 இடங்களில் உள்ள பெரும்பணக்காரர்கள், தங்களிடமுள்ள பணத்தில் நாள்தோறும் ரூ.7.41 கோடி ரூபாய் (10 இலட்சம் டாலர்) செலவு செய்தாலும் கூட முழுச் சொத்துக்களும் கரைந்து முடிய 84 ஆண்டுகள் ஆகும். இந்தியாவின் மொத்த சொத்துக்களில், வெறும் 10% பெரும்பணக்காரர்களிடம் 45% சொத்துக்களும், 50% மக்களிடம் வெறும் 6% சொத்துக்களும் மட்டுமே உள்ளன. “உலக நாடுகளில் பெரும்பணக்காரர்கள் அதிகமுள்ள நாடுகள்” பட்டியலில் அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து 3-வது இடத்திலுள்ள அதேசமயம் மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இடம் பெற்ற 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்தில் (அதாவது நேபாளம், வங்காளதேசத்தை விடவும் மோசமான நிலையில்) உள்ளது இந்தியா.
“ஏழ்மையையும் கடுமையான ஏற்றத்தாழ்வையும் வளம் கொழித்த செல்வந்தர்களையும் ஒருங்கே கொண்டிருக்கும் நாடு இந்தியா” என்று நமது ‘பாரத தேசத்தின்’ பெருமையைப் பறைசாற்றுகிறது “உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2021”.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் புகுத்தப்பட்டபோது, திருகுமுனை சுழற்சியிலான பொருளாதாரம் (Trickle-down economics) என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. அதாவது மூலதனம் பெருகுவதற்காக வரிச்சலுகைகள் இதர தளர்வுகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கும்போது, நாட்டில் வேலைவாய்ப்பு பெருகி அதனால் வறுமையும் ஏற்றத்தாழ்வும் குறையுமாம். இது எல்லோருக்கும் நன்மை பயக்குமாம். ஆனால், 30 ஆண்டுகளில் நடந்திருப்பதோ வேறு. இதுவரை மனிதகுலம் கண்டிராத கடைக்கோடித்தனமான ஏற்றத்தாழ்வையே இம்மறுகாலனியாக்கக் கொள்கை உருவாக்கியுள்ளது. கோடிக்கணக்கான மக்களை வறுமையிலும் பட்டினிச் சாவிலும் தள்ளியுள்ளது.
இன்னொருபுறம், கொரோனா காலகட்டத்தில் கோடிக்கணக்கான தொழிலாளிகள், விவசாயிகள், குறு-சிறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரம் அதல பாதாளத்துக்குப் போய், அவர்கள் வறுமையிலும் பட்டினிச்சாவிலும் உழன்று கொண்டிருக்கும்போது, அவர்களுக்காக எந்தவிதமான கூடுதல் செலவீனங்களையும் (Additional Spending) செய்யத் தயங்கிய மோடி அரசு, கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகளையும் கடன் தள்ளுபடிகளையும் வாரிவாரி வழங்கியது, இலாபவீதம் சரிகிறது என்று கூறிக்கொண்டே பல நிறுவனங்கள் ஆட்குறைப்புகளையும் இதர செலவீனங்களை வெட்டுவதையும் செய்தன – இவற்றின் விளைவாகவே இவர்களின் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த சிந்தனைக் குழாமான (think tank) இந்திய நுகர்வோர் பொருளாதரம் பற்றிய மக்கள் ஆய்வு (People’s Research on India’s Consumer Economy – PRICE) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வானது, கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் 20% அடித்தட்டு ஏழை மக்களின் வருமானம் 53% (அதாவது பாதிக்கும் மேல்) வீழ்ந்துள்ளதாகக் கூறுகிறது. கொரோனா காலகட்டம் என்பது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளியுள்ள அதேசமயம் கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இருந்துள்ளதையே மேற்சொன்ன புள்ளி விவரங்கள் எல்லாம் காட்டுகின்றன.
மேலும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறும் விவரங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த 142 பணமுதலைகளுக்கு அரசு சொத்துவரி விதித்தால், ஆண்டுக்கு 58 ஆயிரம் கோடியே 56 இலட்சம் ரூபாய் (7,830 கோடி டாலர்) வருவாய் ஈட்டமுடியும். இதன் மூலம், ஒன்றிய அரசு சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியிருக்கும் செலவுத் தொகையை 271 சதவிகிதம் உயர்த்த முடியும். இவர்களில், வெறும் 100 பேரின் சொத்துக்களை வைத்து தேசிய கிராமப்புர வாழ்வாதார திட்டத்துக்கும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் அடுத்த 365 ஆண்டுகளுக்கு நிதியுதவி செய்ய முடியும். இந்த 142 பேருக்கு 1% கூடுதல் விதித்தால், நாடு முழுவதும் தடுப்பூசி திட்டத்துக்கான ரூ.50,000 கோடி ரூபாய் (6.8 பில்லியன் டாலர்) நிதியைத் திரட்ட முடியும். 10 % பேர் மீது 1% கூடுதல் வரி விதித்தால், 17.7 இலட்சம் கூடுதல் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்க முடியும்.
இவர்களில், 98 பேருக்கு வெறும் 4% சொத்துவரி விதித்தால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநலத்துறைக்கு நிதி ஒதுக்க முடியும். கல்வியில் சமத்துவமின்மை குறித்து ஆய்வில், இவர்களில் 98 கோடீஸ்வரர்கள் மீது 1% சொத்துவரி விதித்தால், ஒன்றிய கல்வித்துறைக்கு தேவையான ஆண்டு செலவீனத்தை சமாளிக்க முடியும். 4% வரி விதித்தால், அடுத்த 17 ஆண்டுகளுக்கு மதிய உணவு திட்டத்துக்குத் தேவையான நிதி அல்லது 6 ஆண்டுகளுக்கான சம்ஹாரா சிக்ஸயா அபியான் திட்டத்துக்கான நிதியை வழங்கலாம். 4% வரி விதிப்பின் மூலம், “மிஷன் போஷான் 2.o திட்டம், போஷான் அபியான், வயதுவந்த பெண் குழந்தைகள் திட்டம், அங்கன்வாடி திட்டம்” ஆகியவற்றுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான நிதியை வழங்க முடியும்.
இந்த 98 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்கள், ஒன்றிய அரசால் ஒட்டுமொத்த நாட்டிற்கே போடப்பட்ட பட்ஜெட் மதிப்பைவிட 41% அதிகமாகும். இந்த பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இறுதியிலுள்ள 10 பேருடைய சொத்துமதிப்பில் பாதிக்கும் குறைவான தொகையைத்தான் “பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான” நிதியாக ஒன்றிய அரசு ஒதுக்கியிருக்கிறது. இந்தியாவின் வெறும் பத்து கார்ப்பரேட் பணமுதலைகளின் சொத்துக்களை வைத்து மொத்த நாட்டுக்கும் 25 ஆண்டுகளுக்கான இலவச கல்வியை (ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை) வழங்கமுடியும்.
இவற்றையெல்லாம் செய்வதைப் பற்றி சிந்தித்தும் பார்க்காத, இதற்கு நேர் எதிரான திசையில் மக்கள் மீது வரி போட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு அதிரடியாக சேவை செய்கிற கும்பல் தான் மோடி – அமித்ஷா தலைமையிலான பா.ஜ.க. அரசாகும். 2020 இல் கொரோனா முதல் அலையை எதிர்கொள்ள பணக்காரர்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த ‘குற்றத்திற்காகவே’ 50 இளம் ஐ.ஆர்.எஸ். (IRS – Indian Revenue Service) அதிகாரிகள் மீது விசாரனைக்கு உத்தரவிட்டதோடு, தாம் அவ்வாறு செய்யப்போவதில்லை என்று வெளிப்படையாகப் பேசி தனது கார்ப்பரேட் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது மோடி அரசு.
மாறாக 2019-ல் கார்ப்பரேட் வரி விகிதங்களை 30% இலிருந்து 22% ஆக குறைத்துள்ளது மோடி அரசு. இந்தியா, ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையில் உள்ள நிலையில், இவ்வரி விகித குறைப்பின் விளைவாக மட்டும் அரசுக்கு, ஆண்டுக்கு 1.45 இலட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட மக்கள் தலைமீதே வரிகளையும் கட்டண உயர்வுகளையும் சுமத்தி வருகிறது மோடி அரசு. 2020-ல் கொரோனா நெருக்கடியிலும், எரிவாயு சிலிண்டர் (கேஸ்) விலையை ரூ.215 வரை உயர்த்தியது. 2021, செப்டம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.101.19.ஆக உயர்த்தியது. தேங்காய் எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியது. இதனால் மட்டும் தென்னை உற்பத்தியாளர்கள் மற்றும் அதைச் சார்ந்துள்ள குடிசைத் தொழில்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. சுங்கக் கட்டணம் முதல் சமையல் எண்ணெய் வரை மக்களின் பயன்பாட்டுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி ஏறிக்கொண்டே வருகிறது.
கொரோனா, ஊரடங்கினால் வாழ்வாதாராத்தையே இழந்து, அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் மக்கள் விழிபிதுங்கிய நிலையிலும் விவசாயம், கல்வி, தொழில், வீடு, போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக வாங்கிய கடனைக் கட்ட முடியாத ஏழை எளிய மக்களை அடியாள்படை வைத்து மிரட்டுவது, கொச்சையாக பேசுவது, வங்கியில் புகைப்படங்களை வைத்து அவமானப்படுத்துவது போன்ற ஈவிறக்கமற்ற செயல்களை மேற்கொண்டு வரும் மோடி – ஷா அரசு தான், கடந்த ஏழு ஆண்டுகளில் பெரும்பணக்காரர்களின் ரூ.10.72 இலட்சம் கோடி வாராக்கடன்களைத் தள்ளுபடி (ரைட் ஆஃப்) செய்து கார்ப்பரேட்டுகளுக்கு அதிரடியாகச் சேவை செய்து வருகிறது.
எந்த தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, அவர்களை ஏழ்மையிலும் பட்டினிச் சாவிலும் தள்ளி, மனித குலம் இதுவரை கண்டிராத கடைக்கோடித்தனமான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியதோ, அதையே தீவிரமாக அமலாக்கி, நாட்டை மறுகாலனியாக்கும் திசையில் சென்று கொண்டிருக்கிறது மோடி அரசு.