கார்ப்பரேட் அடிமை மோடி அரசு, கடந்த காலங்களில் சர்க்கரை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொடுத்து வந்த மானியத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக வர்த்தகக் கழகத்தின் வர்த்தகத் தகராறு தீர்ப்பாயக் குழு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் இந்தியா முறையிட்டுள்ளது.
இந்தியா தனது நாட்டு சர்க்கரை ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமான வகையில் உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்குப் புறம்பாக பல்வேறு மானியங்களை வழங்கி வந்ததாக பிரேசில், ஆஸ்திரேலியா, கவுதமாலா ஆகிய நாடுகள் இந்தியாவின் மீது உலக வர்த்தகக் கழகத்தில் வழக்கு தொடுத்தன.
மேற்கூறிய நாடுகளால் தொடுக்கப்பட்ட வழக்கில், சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு இந்தியா அளிக்கும் சலுகையானதும் சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்வதற்கான உலகளாவிய வர்த்தக விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாகவும், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தின் பல்வேறு சரத்துகளுக்கு ஒவ்வாததாகவும், இதர ஒப்பந்தங்களான, வேளாண் ஒப்பந்தம் மற்றும் காட் ஒப்பந்தத்திற்கு எதிரானதாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
படிக்க :
உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?
இந்திய சீன வர்த்தகம் : முதலாளிகளுக்கு மட்டும் ‘தேசபக்தி’ விலக்கு !
சர்க்கரை ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் மேற்கூறிய நாடுகள், உலக வர்த்தகக் கழகத்தில் கடந்த 2020-ல் இந்த வழக்கை தொடுத்துள்ளன. இந்த வழக்கை விசாரித்த உலக வர்த்தகக் கழகத்தின், “வர்த்தகத் தகராறு தீர்ப்பாயக் குழு”, கடந்த டிசம்பர் 2021-ல் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
தனது தீர்ப்பில், தடைசெய்யப்பட்ட இத்தகைய மானியங்களை உடனடியாக இந்தியா நிறுத்த வேண்டும் என்றும், குழுவின் அறிக்கை வழங்கப்பட்டு 120 நாட்களுக்குள் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்தியா உலக வர்த்தகக் கழகத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் இந்தியா மீதான இந்த நாடுகளின் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு சில தவறான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது ஏற்றுக் கொள்ளமுடியாததாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது,
மேலும், வர்த்தகத் தகராறு தீர்ப்பாயக் குழுவின் ஆய்வுகள் உ.வ.க.-வின் விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் இல்லை எனவும், தீர்மானிக்கப்பட வேண்டிய முக்கியப் விசயங்களை புறக்கணித்துவிட்டதாகவும், ஏற்றுமதி சலுகைகளாகக் கூறப்படும் கண்டுபிடிப்புகள் தர்க்கம் மற்றும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாகவும் கூறியிருக்கிறது இந்திய தரப்பு.
சர்வதேச அளவில் பிரேசில் தான் மிக அதிகமாக சர்க்கரையை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடு. அதற்கு அடுத்ததாக இந்தியா வருகிறது. இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பெரும்பான்மையாக தனியார் நிறுவனங்களின் கைகளில் இருக்கிறது.
இந்தியாவில் கடந்த டிசம்பர் 2020, இல் சர்க்கரை ஆலைகளின் 6 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு சுமார் ரூ. 3500 கோடியை மானியமாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் ஏற்றுமதியாகும் டன் ஒன்றிற்கு ரூ. 10,448 -ஐ மானியமாக வழங்கியது.
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலையினர் கட்ட வேண்டிய பாக்கியை அவர்கள் கொடுப்பதற்கு வசதியாக இந்த மானியத் தொகையை வழங்குவதாக இதற்கு நியாயம் கூறிவருகிறது இந்தியா. ஆனால் அரசிடமிருந்து சலுகையாகப் பெறும் இந்த மானியத் தொகையை முறையாக கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை முதலாளிகள் வழங்குவதில்லை என்பதுதான் எதார்த்தம்.
கரும்புக்கான பணத்தை முறையாக விவசாயிகளுக்குக் கொடுக்காமல், இழுத்தடித்து, விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டு, சலுகைகளை மட்டும் பெற்று தனது வயிற்றை நிரப்பிக் கொள்கின்றன சர்க்கரை ஆலை நிர்வாகங்கள். ஆனால் இந்தச் சலுகையும் இல்லாவிட்டால், கரும்பு விவசாயிகளுக்கு துளியளவு பணத்தையும் கூட தந்திருக்க மாட்டார்கள் இந்த சர்க்கரை ஆலை முதலாளிகள்.
உலக வர்த்தகக் கழகம், உலக நாணய நிதியம், உலக வங்கி ஆகியவை தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்டு வரும் மானியங்களை ஒழித்துக் கட்டுவதற்கு அந்தந்த நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாகத்தான் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படும் மானியத்தையும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதே உலக வர்த்தகக் கழகம் தான் அனைத்து வேளாண் பொருட்களுக்குமான மானியத்தை இரத்து செய்ய கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. மேலும் அனைத்து ரேசன் கடைகளையும் மூடுவதையும் இந்தியாவுக்கான நீண்டகால இலக்குகளில் ஒன்றாக வைத்துள்ளது.
உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியா தொடுத்துள்ள மேல்முறையீடு இந்தியாவுக்குச் சாதகமானதாக இருப்பதற்கான சாத்தியம் ஏதும் இல்லை. இதைப் போலவே, வருங்காலத்தில் ரேசன் கடைகள் மூடுவதை தடுத்து நிறுத்துவதையோ, வேளாண் உற்பத்தி மானியங்களை வெட்டுவதை தடுத்து நிறுத்துவதையோ செய்ய முடியாது.  உலக வர்த்தகக் கழகத்தின் கிடுக்கிப் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து வெளியேறு என்று இந்திய அரசை நிர்பந்திப்பதுதான் ஒரே வழி.

கர்ணன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க