ற்போது இந்திய ஊடகங்களில், ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள் / மானியங்கள் குறித்து தீவிரமாக விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த விவாதம், இலவசங்களால் இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று மோடி எச்சரித்ததில் இருந்து தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, டில்லி பாஜக தலைவரும், வழக்கறிஞரும், வகுப்புவாத வெறுப்பு பேச்சுகளுக்குப் புகழ்பெற்றவருமான அஸ்வினி உபாத்யாயா, இலவசங்கள் வழங்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கெனவே குடியுரிமை திருத்தச் சட்டம், கொடூரமான தொழிலாளர் சட்டத் திருத்தம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என பல முக்கிய வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, உச்ச நீதிமன்றம் இந்த மனுவை மட்டும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இப்பிரச்சினை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இம்மனுவில் இலவசங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளவையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் மலிவான ரேசன் விநியோகம், ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA), மின்சார மானியம், பயிர்களுக்கான ஆதரவு விலை, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை குறைப்பதற்கான திட்டங்கள் என ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மானியங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால், இப்பட்டியலில் இதே அரசாங்கத்தால் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் பல்வேறு வரிச்சலுகைகள், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக்கடன் தள்ளுபடிகள் ஆகியவை இடம்பெறவில்லை.

படிக்க : மோடியின் இந்தியா: பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நாடு!

அவ்வப்போது ஏதேனும் சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டு அவற்றை பெரும் விவாதமாக மாற்றுவதில் நிபுணத்துவம் பெற்றவர் மோடி. இதன்மூலம் வேலையின்மை, கடும் விலைவாசி உயர்வு, வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றில் தனது அரசாங்கத்தின் தோல்விகளை மறைப்பதில் திறமைசாலி.

முதலில், இந்த ஒருசில நலத்திட்டங்களை எல்லாம் இலவசங்கள் என்று கூறுபவர்கள் கார்ப்பரேட்களுக்கு வழங்கப்படும் பல்வேறு வரிச் சலுகைகள், இலவச நிலம், குடிநீர், பல லட்சம் கோடி கடன் தள்ளுபடிகளைப் பற்றி வாயை திறக்காமல் இறுக மூடிக் கொள்கிறார்கள்.

இந்தியா மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் அறுபது பில்லியனர்களைக் கொண்ட பொருளாதாரத்தில் ஐந்தாவது பெரிய நாடாக இருக்கிறது என்று பெருமை பீற்றிக் கொள்கின்றனர். ஆனால், மனித வளர்ச்சிக் குறியீட்டில் ஆசியாவில் மட்டுமல்ல தெற்காசிய அண்டை நாடுகளை விடவும் பின்தங்கியே உள்ளது இந்தியா. பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் 101 வது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக கடந்த ஏழரை ஆண்டுகளில் தனியார்மய தாராளமய கொள்கைகளினால் மக்களின் துன்பங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

மலிவான ரேசன், ஊரக வேலை உறுதித் திட்டம், மானிய மின்சாரம் மற்றும் பயிர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான ஆதரவு விலை போன்றவையே பொதுமக்களின் அதிருப்தியை தணிப்பதற்காகவும் பட்டினியால் இறந்துவிடாமல் இருப்பதற்காகவுமே வழங்கப்படுகின்றன. இவையாவும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயத்தில் நட்டமடைதல் ஆகிய காரணங்களால் நலிவுற்ற மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் அளிப்பவையாக இருக்கின்றன.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என்று கூறிக் கொள்கின்றார்கள். இது உழைக்கும் மக்களை சுரண்டியதால் ஏற்பட்ட வளர்ச்சியே. ஆனால் அரசோ அவர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச மானியங்களைக் கூட ரத்து செய்வதன் மூலம் அவர்கள் உயிர் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது.

அரசாங்கத்தின் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு ஜி.எஸ்.டி, பெட்ரோல்-டீசல் மீதான மத்திய கலால் வரி, எண்ணெய் மற்றும் வருமான வரிகள் ஆகியவை மூலம் கிடைக்கிறது. இங்கு ஒவ்வொரு பொருளையும் வாங்கும்போதும் ஒவ்வொரு ஏழையும், அதானி போன்ற கோடீஸ்வரர்களும் ஒரே வரியையே செலுத்துகின்றனர்.

ஒரு சாமானியரின் அத்தியாவசிய தேவைகளான உணவுப்பொருட்கள், டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றிற்கு அதிக ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி விதிக்கும் அதே வேலையில் வைரங்கள் மீதான வரி 1.5 சதவீதமாக இருக்கிறது. கோவிட் காலத்தில் கார்ப்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை குறைக்கபட்டது. இதனால் 2021-22 நிதியாண்டில் மட்டும் 1.53 லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தவிர கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற பத்து லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் பணக்காரர்கள் பரம்பரை மற்றும் சொத்துவரிகளை செலுத்தாமல் தப்பித்து விடுகின்றனர். இதனால் மத்திய பட்ஜெட்டில் துண்டு விழுந்து, நடப்பாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பல்வேறு வரிச்சலுகைகளின் மதிப்பு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடி. மேலும் பத்து லட்சம் கோடி அளவிலான வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மலிவான ரேசன் மற்றும் இலவச உணவு, MGNREGA ஆகியவற்றிற்கு ஆகும் செலவோ வெறும் 2.69 லட்சம் கோடிதான். மேலும் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலம்தான் இந்த மானியங்கள் வழங்கப்படுகின்றன. எனவே முதலில் இவற்றை இலவசங்கள் என்று கூறுவதே தவறானது.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் எல்லா அரசாங்கங்களும் WTO, IMF ஆகிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் ஆணைகளுக்கு இணங்கி நாட்டில் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளைக் கடந்த 35 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றன. இவர்களின் பட்ஜெட் முன்னுரிமைகள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சேவைசெய்யும் வண்ணமே உள்ளன.

மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை புதிய விமான நிலையங்களுக்கும் , புல்லட் இரயில் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதற்கும் செலவிட ஒருபோதும் தயங்குவதில்லை. ஆனால் மக்களுக்காக சில கோடிகளை செலவளிக்க தயங்குகிறது.

படிக்க : தெலுங்கானா: ரேஷன் கடையில் மோடி புகைப்படம் வைக்க சொல்லும் நிர்மலா சீத்தாராமன்!

இது மட்டுமன்றி கொரோனா காலகட்டத்தில் சரியான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் லட்சக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகின. பட்ஜெட் ஒதுக்கீட்டில், கல்வி மற்றும் மருத்துவத்திற்காக ஒரு தனிபருக்கு ஒதுக்கப்படும் தொகையானது மிகவும் குறைவாக, அதாவது ஆறு துணை சஹாரா ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா உள்ளது. அனைத்து மக்களுக்கும் சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் வழங்குவது அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் முக்கிய பொறுப்பாகும்.

பாரதிய ஜனதா கட்சி உ.பி சட்டசபை தேர்தலின்போது பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 376 டன் இலவச ரேசன் வழங்கியது. தனது உணவுத் தேவையைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாத நிலையில் மக்கள் இருத்தப்பட்டு இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தன் வெற்றிக்கு பயன்படுத்திக்கொண்ட பிரதமர் இப்போது மட்டும் இவற்றின் பயன் குறித்து கேள்வி எழுப்புகிறார்.

இந்த இலவசங்கள் பற்றிய விவதாங்கள் எல்லாம் மக்களின் உரிமைப் போராட்டங்களைத் திசைதிருப்பும் சூழ்ச்சியே தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறு நலத்திட்டங்கள் மீது போர் தொடுப்பதன் மூலம், ஆளும் பா.ஜ.க அரசு தனது பாசிச நடவடிக்கைகளை மூடி மறைக்கப் பார்க்கிறது. இவ்வாறு மக்கள் மீது அன்றாடம் ஏதேனும் பிரச்சினையைத் திணித்து அவர்களை வாழவிடாமல் செய்யும் இந்த காவி-கார்ப்பரேட் பாசிச பா.ஜ.க அரசை வீழ்த்தாமல் மக்களுக்கு வாழ வழியில்லை.


கிளாரா
நன்றி: Counter Currents

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க