நம் தேசம் வளரவேண்டும் என்றால் பெண்களை மதிக்க வேண்டும். பெண் சக்திக்கு துணையாக இருக்க வேண்டும். அதுதான் இந்திய வளர்ச்சிக்கு தூண் என்று போலி சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறியிருந்தார் மோடி.
தற்போது வெளிவந்திருக்கும் தேசிய குற்ற ஆவணகாப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 31,677 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 87 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று அந்த அறிக்கை மோடியின் இந்தியா மீது காறி உமிழ்ந்துள்ளது. உலகிலேயே பெண்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ராய்ட்டர்ஸ் பவுண்டேசன் அறிக்கையும் எடுத்து கூறியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதாவது பாலியல் வன்கொடுமை, ஆசீட் வீச்சு, கணவர்களால் கொடுமை, மேலும் குடும்ப வன்முறை போன்ற பிரிவின் கீழ் 4,28,278 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவ்வறிக்கை கூறுகிறது. 2020 ஆம் ஆண்டைவிட 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது.
படிக்க : ஆதிவாசி பணிப் பெண்ணை சித்திரவதை செய்த பாஜக-வின் சீமா பத்ரா!
குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாக நடந்துள்ளது என்பதை அறிக்கையின் விவரங்களில் இருந்தே நாம் பார்க்க முடியும். நாடு முழுவதும் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட மொத்தம் 31,677 பாலியல் வன்கொடுமை வழக்குகளில், ராஜஸ்தானில் 6337 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 2947 வழக்குகளும் உத்திரப் பிரதேசத்தில் 2845 வழக்குகுகளும் பதிவாகியுள்ளன. அசாமில் 1835 வழக்குகளும், மற்ற வடகிழக்கு மாநிலங்களில் 100-க்கும் குறைவான வழக்குகள் பதிவாகியுள்ளன.
இவ்வறிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள், பெரும்பாலும் அவர்களின் உறவினர்கள், ஆன்லைன் நண்பர்கள், அவருகளுக்கு நெருக்கமானவர்களே அதிகம் என்கிறது. 89 சதவீதம் குடும்ப நண்பர்கள், பணியிடத்தில் வேலை செய்யும் முதலாளிகள், அறியப்பட்ட நபர்களால் நடந்தவை.
நாடு முழுவதும் பதியப்பட்ட வழக்குகளில் 10 சதவீதம் சிறுமிகள், 64 சதவீதம் பெண்கள் 16-30 வயது உடையவர்கள். நாட்டின் பெருநகரங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஜெய்பூர், சென்னை போன்ற நகரங்களில் அதிகம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. தேசிய தலைநகரம் டெல்லியில் பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களில் அதிகமாக 1226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், என்.சி.பி.ஆர் அறிக்கை நாடு முழுவதும் 6589 வழக்குகள் வரதட்சனை கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை வரதட்சனை கொடுமை காரணமாக 6628 பேர் இறந்துள்ளனர் என கூறுகிறது.
தற்போது அரசால் கொடுக்கப்பட்ட விவரம் என்பது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அன்றாடம் செய்திதாள்களில் தினம்தினம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறதை பதிவு செய்கின்றன. பள்ளிக்கூட சிறுமிகள், கல்லூரி மாணவர்கள், கூட்டு பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடைபெறுகின்றன.
அரசுகள், குற்றத்தை தடுப்பதற்கு ஏராளாமான கமிட்டிகள் அமைக்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் விசாக கமிட்டி, போலீசுத்துறையில் புகார் அளிப்பதற்கு புகார் எண்கள், நிர்பயா பெண் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் பேருந்துகளில் கேமாராக்கள் பொருத்துவது போன்ற நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இந்த முயற்சிகள் எதுவும் குற்றங்களை தடுக்கபோவதில்லை. இந்த குற்றம் அதிகரிப்பதற்கு காரணமான அடிப்படையை மாற்றியமைக்கமால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைய போவதில்லை.
ஒருபுறம் காஷ்மீரீல் ஆசிஃபா என்ற சிறுமியை பாலியல் வன்கொலை, உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை, பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்ததை வெடிவைத்து கொண்டாடுகிற நிகழ்வு போன்றவை அரங்கேறுகின்றன.
மறுபுறம் பெருகிவரும் நகரமயமாக்கம், அந்நகரங்களில் புகுத்தப்படும் மறுகாலணியாதிக்க பண்பாட்டு சீரழிகள், நுகர்வு கலாச்சாரம், பெண்களை ஒரு போதை பொருளாக பார்க்க கூடிய சிந்தனை ஆகியவை அதிகரிக்கின்றன.
இவையனைத்தும் குடும்ப உறவு, சமூக விழுமியங்கள், பெண்களை மதிக்க வேண்டும் என்ற உணர்வை சீரழித்து அடிமைகளாக பார்க்கும் – நுகர்வு பொருளாக பார்க்கும் மனநிலையை – கெட்டிப்படுத்துகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதரிக்கின்ற பார்ப்பன ஆணாதிக்க சமூக கட்டமைப்பையும், பெண்களை முற்றிலும் நுகர்வு பொருளாக மாற்றி சீரழிக்கிற மறுகாலனியாதிக்க கலாச்சாரத்தையும் முறியடிக்கும் போராட்டதை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும். ஆண், பெண் சமத்துவ சமூகத்தை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுத்த நிறுத்த முடியும்.
ராமசாமி
இதற்கு எல்லாம் சமூகத்திலும், பள்ளிக் கல்வியிலும் ஏற்படுத்தும் சிந்தனை மாற்றத்தின் மூலமே தீர்வு காண முடியும்.