உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிப்ரவரி 1 அன்று கைகால்கள் கட்டப்பட்டு கொடூர முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட 22 வயது தலித் சிறுமியின் ஆடை இல்லாத சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 22 வயது தலித் பெண் கடந்த ஜனவரி 30 அன்று இரவு 10 மணிக்கு மத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டுச் சென்ற பெண் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் மகளைக் காணவில்லை என்று போலீசில் ஜனவரி 31 அன்று புகாரளிக்கச் சென்றுள்ளனர். ஆனால் போலீசார் நீங்களே உங்கள் பெண்ணை தேடுங்கள் என்று திமிர் தனமாகத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பிப்ரவரி 1 அன்று முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் கண்கள் தோண்டப்பட்டு கை கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு கால்வாயில் கிடந்த தங்களது பெண்ணின் சடலத்தைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர்.
குடும்ப உறவினர் ஒருவர் கூறுகையில் ”அவள் பக்வத் கதாவுக்கு சென்றாள். ஆனால் வீடு திரும்பவில்லை. நாங்கள் கால்வாயில் ஆடையின்றி, கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அவளது உடலைக் கண்டோம். எலும்புகள் உடைந்திருந்தன; அவள் இரக்கமின்றி கொல்லப்பட்டிருந்தாள்” என்று தெரிவித்துள்ளார்.
உரிய நடவடிக்கை எடுக்காத போலீசு பெண்ணின் சடலம் குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டவுடன் ஜனவரி 31 அன்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது. மேலும் அப்பெண்ணில் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் அதன்படி செயல்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.
படிக்க: ஹரியானா: முஸ்லீம் பசு வியாபாரியை அடித்துக் கொன்ற காவிக் கும்பல்
இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் “ நிர்வாக அலட்சியமே காரணம்” என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ”குற்றவாளிகள் மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கொடூர சம்பவம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பைசாபாத் எம்.பி அவதேஷ் பிரசாத் கண்கலங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. அதில் “என்னை டெல்லி செல்ல விடுங்கள். இந்த விவகாரத்தை மக்களவையில் (பிரதமர் நரேந்திர மோடி முன்) எழுப்புவேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் நான் எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன்” என்று கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய வீடியோ குறித்து உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா “சமாஜ்வாதி எம்.பி நாடகம் நடித்துள்ளார். இந்த வழக்கில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார். ஆனால், தற்போது வரை யாரையும் கைது செய்யாமல் இருப்பது குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பாசிச கும்பல் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிக அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள அயோத்தியிலேயே இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்திருப்பது உ.பி மாடலின் யோக்கியதையை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram