இந்தியாவில் திருமண உறவில் உள்ள பெண்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிலான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அந்த பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்தும் விதமாக சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வது குற்றமில்லை என்கிற தீர்ப்பை வழங்கியுள்ளது. இதற்கு எதிராக சமூக செயற்பாட்டாளர்களும், பெண்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சத்தீஸ்கரில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதியன்று ஒருவன் மனைவியைக் கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறான மிருகத்தனமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தியுள்ளான். அச்சம்பவத்திற்குப் பிறகு அதீத வலியால் மனைவி துடிப்பதையும் கண்டுகொள்ளாத அந்த காமகொடூரன் தன்னுடைய டிரைவர் வேலைக்குச் சென்றுள்ளான்.
தாள முடியாத வலி காரணமாக தன்னுடைய சகோதரிக்கு போன் செய்து அவரது உதவியை நாடி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அப்பெண். ஆனால் அங்கு சென்ற சில மணிநேரங்களிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இறப்பதற்கு முன்பாக ”என்னுடைய கணவர் என்னை இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததே என் உடல்நலம் குன்றியதற்குக் காரணம்” என்று மரண வாக்குமூலத்தில் அப்பெண் தெரிவித்துள்ளார். போலீசாரிடமும் அத்தகைய தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்பு மருத்துவமனை வெளியிட்ட உடற்கூராய்வு அறிக்கையில் மரணத்திற்குக் காரணம் “பெரிட்டோனிடீஸ் மற்றும் ரெக்டல் பெர்ஃபோரேசன்“, அதாவது, வயிறு மற்றும் மலக்குடலில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பெண் அனுபவித்த கொடுமைகளை இதன் மூலம் உணர முடிகிறது.
கணவனால் கட்டாய பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மனைவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கீழமை நீதிமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்பட்டது. “கொலை வரம்பில் வராத மரணம் விளைவித்த குற்றம்“ புரிந்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-இன் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கின் மேல்முறையீடு பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று உயர்நீதிமன்ற நீதிபதி நரேந்திர குமார் வியாஸ் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வாக்குமூலத்தைச் சாட்சிகள் தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொண்டனர் என்று நீதிமன்றம் கூறியது. மேலும் ”திருமண உறவில் நடைபெறுகின்ற பாலியல் வன்கொடுமையை இந்தியா குற்றமாக அங்கீகரிக்கவில்லை. அதனால் மனைவியிடம் இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டதற்காகக் கணவரைக் குற்றவாளியாகக் கருத முடியாது” என்று சட்ட வியாக்கியானம் வழங்கி அந்த கொடூரக்காரனை அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
படிக்க: கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!
இந்த தீர்ப்பு குறித்து பாலியல் உரிமை செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான சுக்கிரிதி செளஹான் ”இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நபர் சுதந்திரமாக நடமாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தீர்ப்பு சட்டப்படி சரியானதாக இருக்கலாம், ஆனால் நியாயப்படியும், தார்மீகமாக ரீதியாகவும் சரியானது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “இதுபோன்ற ஒரு குற்றத்திலிருந்து ஒருவரை விடுவிப்பது, அது குற்றமல்ல எனக் கூறுவது, நமது சட்ட நடைமுறையின் மிகவும் இருண்ட பக்கங்களைக் குறிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் வழக்கறிஞராக உள்ள பிரியங்கா சுக்லா “ஒருவர் கணவர் என்பதால் அவருக்கு உரிமை இருக்கிறது; அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; கொலைகூட செய்துவிட்டுத் தப்பிவிடலாம்” என்ற செய்தியை நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தருகிறது என்று கூறியுள்ளார்.
1860 இந்திய தண்டனைச் சட்டம் 375வது பிரிவு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் குற்றவாளிக்குத் தண்டனை வழங்குகிறது. ஆனால் அதன்படி திருமண உறவில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் அது குற்றம் கிடையாது. மேலும் கணவன் தனது மனைவி 15 வயதுக்கு உட்பட்டவராக இல்லாத பட்சத்தில் (கட்டாயப்படுத்தி) உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தை மாற்றி எழுதிய ஒன்றிய அரசு ”மனைவி 18 வயதுக்கு உட்பட்டவராக இல்லாத பட்சத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்” என்று திருமண உறவில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் இயற்றியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் “திருமண உறவிலான பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக அறிவிப்பது திருமணம் எனும் அமைப்பில் மோசமான குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும்” என்று தெரிவித்திருந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது இந்தியாவின் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. பெண்களுக்குப் பொதுவெளியில் பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலையே உள்ளது.
குறிப்பாக திருமணமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அரசு நடத்திய ஆய்வில் திருமணமான பெண்களில் 32 சதவிகிதம் பேர் அவர்களின் கணவர்களால் உடல்ரீதியான, மன ரீதியான, வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்றும் 82 சதவிகித பெண்கள் தங்கள் கணவர்களிடமிருந்து பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
வெளியே சொன்னால் இந்த சமூகம் தங்களை அவமானமாகப் பார்க்கும் என்கிற அச்சத்தில் பல பெண்கள் புகாரே கொடுப்பதில்லை.
படிக்க: உ. பி: இளம்பெண் பாலியல் வன்கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட கொடூரம்!
இதுகுறித்து வழக்கறிஞர் சுக்லா கூறுகையில் “எனது அனுபவத்தில், ஒரு பெண் புகார் கூறும் போது அவர் நம்பப்படுவதில்லை. அது போலியாகத்தான் இருக்கும் என அனைவரும் சொல்வார்கள். ஒரு பெண் உயிரிழந்தால் அல்லது தாக்குதல் மிகவும் கொடூரமானதாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் சௌஹான் ”அரசமைப்புச் சட்டம் உங்கள் படுக்கையறைக்குள் நுழைய முடியாது என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் அது அனைத்து குடிமக்களுக்கும் வழங்குவதைப் போல பெண்களுக்கும் பாதுகாப்புக்கான அடிப்படை உரிமையை வழங்கவில்லையா? இந்த அளவு வன்முறையை ஒரு பெண் எதிர்கொள்ளும் போது நாம் அமைதியாக இருக்கிறோம் என்றால் எந்த மாதிரியான நாட்டில் நாம் வசிக்கிறோம்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்திய நாட்டுச் சட்டங்கள் திருமண உறவிலான பாலியல் வல்லுறவைத் தண்டனைக்குரிய குற்றமாக அங்கீகரிப்பதில்லை. இச்சட்டங்கள் மனு ‘நீதி’ அடிப்படையில் அமைந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.
ஏற்கெனவே சட்டங்கள் இவ்வாறு இருக்க, பாசிச கும்பல் ஆட்சியதிகாரத்தில் இருப்பதானது பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும்.
பெண்கள் கணவனுக்கு உடைமையாகவும், பிள்ளை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாகவும், பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கான கருவியாகவும் இருக்க வேண்டும் என்பதே மனு ’நீதி’. அதைத்தான் இந்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தீர்ப்பும் நிலைநிறுத்தியுள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram