மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து அம்மாநில கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தீர்ப்பில் இவ்வழக்கை அரிதினும் அரிதான வழக்காகக் கொள்ள முடியாது என்றும் இவ்விவகாரத்தில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளி என்றும் நீதிமன்றம் தெரிவித்திருப்பது மருத்துவ மாணவர்கள், கொல்லப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு குரல் கொடுத்து வந்த ஜனநாயக சக்திகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதனையடுத்து இத்தீர்ப்பை ஏற்க மறுத்தும் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டும் கொல்கத்தா மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைக் கண்டு அதிர்ந்துபோன மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் சி.பி.ஐ. கூட்டு, குற்றவாளி சஞ்சய் ராய்க்கு தூக்குத் தண்டனை வாங்கித் தரப் போவதாகச் சவடால் அடிக்கிறது. அதாவது இக்குற்றத்தில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளி என்பதை நிறுவுவதற்கான அடுத்தகட்ட முயற்சியில் இறங்க உள்ளது.
ஆனால், மருத்துவ மாணவியின் மரணம் என்பது ஒரு தனிப்பட்ட பெண் மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மட்டுமல்ல. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் மருத்துவக் கட்டமைப்பு கிரிமினல்மயமானது இக்கொலைக்கான முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், இவை குறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லை. குற்றத்தை மூடிமறைக்கும் நோக்கிலேயே மேற்குவங்க அரசும் பா.ஜ.க. கும்பலும் செயல்பட்டு வருகின்றன. இத்தீர்ப்பும் அதற்குச் சாதகமாகவே அமைந்துள்ளது.
இந்நிலையில், மருத்துவ மாணவியின் மரணத்திற்குக் காரணம் மருத்துவ கட்டமைப்பு கிரிமினல்மயமாகி இருப்பதும் அரசும்தான் என்பதை நிறுவும் விதமாக 2024 செப்டம்பர் மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான “கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!” என்ற கட்டுரையை இங்கு பதிவிடுகிறோம்.
***
2012-ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை பொதுசமூகத்தில் ஏற்படுத்தியது. தற்போது, கொல்கத்தா பாலியல் வன்கொலை சம்பவத்திற்கு பிறகு பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள் அதிக கவனம்பெற தொடங்கியுள்ளன. ஆனால், கொல்கத்தா மருத்துவ மாணவி வன்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளின் கோரத்தை மட்டுமின்றி மருத்துவத்துறை கிரிமினல்மயமாகியுள்ளதையும் ஆளும் அரசுகள் அதற்கு பக்கபலமாக இருப்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
குற்றவாளிகளைப் பாதுகாக்கும் மம்தா அரசு
ஆகஸ்ட் 9-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் அக்கல்லூரியின் கருத்தரங்க அறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது கண், வாய், வயிறு, கழுத்து, இடது கால், வலது கை, பிறப்புறுப்பு போன்ற அனைத்து உடலுறுப்புகளிலும் ரத்தம் கசிந்திருந்த நிலையில் மாணவியின் உடலில் காயங்கள் இல்லாத பாகமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிருகத்தனமாக தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டிருந்தார். அவரது இடுப்பு எலும்புகளும் கழுத்து எலும்பும் உடைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இதனையடுத்து, மாணவியை வல்லுறவு செய்த சஞ்சய் ராய் என்பவனை போலீசு கைது செய்துள்ளது.
மாணவிக்கு இழைக்கப்பட்ட இக்கொடூரத்திற்கு நீதிகேட்டும் மருத்துவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்புக் கோரியும் அக்கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள் முன்னெடுத்த போராட்டம் இந்தியா முழுவதும் பற்றிப் பரவியது. ஒரு மாதத்திற்கும் மேலாக கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இவ்வழக்கை தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், “முதலில் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். நீங்கள் பணிக்கு திரும்பிய பிறகு, அதிகாரிகள் உங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என நயவஞ்சகமாக நாடகமாடி மருத்துவக் கட்டமைப்புக்கு எதிரான மருத்துவர்களின் இப்போராட்டதைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
அதேபோல், மருத்துவ மாணவி கொலை சம்பவம் நடைபெற்றதிலிருந்தே மேற்குவங்கத்தின் மம்தா அரசு குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதமாகவே செயல்பட்டு வருகிறது. இக்கொலைக் குறித்து 9-ஆம் தேதியன்று காலை 10.10 மணியளவில் போலீசு குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது; ஆனால் இரவு 11.45 மணிக்குத்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; சந்தேக மரணம் என்று போலீசு பதிவு செய்வதற்கு முன்பாகவே கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் உடற்கூராய்விற்கு அனுப்பப்பட்டது; மாணவி கொல்லப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் இக்கொலைக் குறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை; இவ்வாறு அடிப்படையான சட்ட வழிமுறைகள்கூட இவ்விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை. இவற்றிலிருந்தே கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு அம்மாநில அரசு முயற்சிப்பது நிரூபணமாகிறது.
அதேபோல், மாணவியின் கொடூரமான கொலையை ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷும் மருத்துவமனை நிர்வாகமும் முதலில் தற்கொலை என்றே சித்தரிக்க முயன்றனர். மாணவியின் பெற்றோரிடமும் அவ்வாறே தெரிவிக்கப்பட்டது. சக மருத்துவர்களின் எதிர்ப்பு தீவிரமடைந்ததால் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் பதவியை ராஜினாமா செய்தாலும் நான்கு மணி நேரத்திலேயே அவர் தேசிய மருத்துவக் கல்லூரியின் மருத்துவராக நியமிக்கப்பட்டதும் அவரை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே.
அதுமட்டுமின்றி, கடந்த ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற இரவுப் போராட்டத்தின் போது, தடயங்களை அழிக்கும் விதமாக குண்டர்களால் மருத்துவமனை சூறையாடப்பட்டுள்ளது. இத்தாக்குதலை மம்தா கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் நடத்தியிருப்பார்கள் என்று பா.ஜ.க-வினரும், பா.ஜ.க. குண்டர்கள் நடத்தியிருப்பார்கள் என்று திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக இவ்விரு கட்சியைச் சேர்ந்த குண்டர்களே மருத்துவமனையை சூறையாடியிருக்கலாம்.
மேலும், இக்கொலையால் பெண்கள் மத்தியில் மம்தாவிற்கான செல்வாக்கும் குறைந்திருக்கிறது, எதிர்க்கட்சிகள் இவ்விகாரத்தைக் கையிலெடுத்திருப்பதால் மம்தா அரசிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, தனது கையில் படிந்துள்ள ரத்தக்கறையை மறைப்பதற்காக பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கு நீதிகேட்டு நடத்தப்பட்ட பேரணியில் மம்தா கலந்துக்கொண்டார்.
மேலும், திரிணாமுல் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாளில் பேசிய மம்தா, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தூக்கு தண்டனைக் கொடுப்பதற்கேற்ப சட்டம் நிறைவேற்றுவதற்கு சிறப்புக்கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம், மம்தா பெண்கள் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவராக தன்னை காட்டிக்கொள்ள முயல்கிறார் என்று நாம் கருதினால் அது உண்மையில்லை. அவசர அவசரமாக ‘விசாரித்து’ தூக்குத்தண்டனை கொடுப்பது குற்றத்தின் பூதாகரமான பல உண்மைகளை மறைத்து உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கே உதவும் என்பதையும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் விசாரணை நடப்பதால்தான் குறைந்தபட்ச உண்மைகளாவது வெளிச்சத்திற்கு வருகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஒரு பாலியல் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக மம்தா அரசு இவ்வளவு தீவிரமாக செயல்படுகிறதா? என்றால் அங்குதான் நாம் விவாதிக்க வேண்டிய விவகாரமே உள்ளது. மருத்துவ மாணவியின் மரணத்தை சஞ்சய் ராய் என்ற தனிநபர் தொடுத்த பாலியல் வன்முறையாகவே மேற்குவங்க அரசும் ஊடகங்களும் சித்தரிக்க முயற்சிக்கின்றன. ஆனால், உண்மையில் கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையின் பின்னணியில் கிரிமினல்மயமான மருத்துத்துறை – அரசின் கூட்டுச் சதி அடங்கியுள்ளது.
மருத்துவக் கட்டமைப்பின் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராகப் போராடிய மாணவி
மாணவி கொலைச் செய்யப்பட்ட ஆர்.ஜி.கர். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெறும் சட்டவிரோத கிரிமினல் குற்றங்கள் குறித்தும் இம்மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் குறித்தும் அம்மாநில அரசிடம் 2023-ஆம் ஆண்டிலிருந்தே பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளரான அக்தர் அலி, “ஆர்.ஜி.கர்.மருத்துவமனையில் உரிமைகோரப்படாத மற்றும் அடையாளம் தெரியாத சடலங்களை கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் விற்பனை செய்து வந்தார். அத்துடன் மருத்துவக் கழிவுகளை வங்கதேசத்துக்கு கடத்தும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். இது தொடர்பான விசாரணைக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இந்த விசாரணைக்குழுவில் சந்தீப் கோஷ் குற்றவாளி என ஆதாரங்களுடன் நிரூபித்தோம். ஆனாலும் சந்தீப் கோஷ் மீது மேற்குவங்க அரசு எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. மாறாக, இந்த அறிக்கையை சமர்ப்பித்த நாளிலேயே நான் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். எந்த ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் சந்தீப் கோஷுக்கு 20 சதவிகித கமிஷன் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்பது எழுதப்படாத ஒன்றாக இருந்தது” என்று கிரிமினல் சந்தீப் கோஷ் மற்றும் மேற்குவங்க அரசின் முகத்திரையை கிழித்துள்ளார்.
மேலும், சந்தீப் கோஷ் சில முன்னாள் மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களைக் கொண்டு சட்டவிரோத பாலியல் மற்றும் போதைப்பொருள் வியாபாரமும் செய்து வந்தார் என்றும் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்து வந்தார் என்றும் இதற்காக பல மருந்து நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி பணியிட மாறுதலுக்காக ரூ.20-30 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாகவும், அப்பணத்தை அம்மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் சிலர் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டுகள் எழுந்துள்ளன.
கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி இந்த சட்டவிரோத கிரிமினல் குற்றங்களுக்கு எதிராகப் போராடியிருக்கிறார். அதனால் அவரது மருத்துவப் படிப்பிற்குரிய ஆய்விற்கு ஒப்புதல் வழங்கவில்லை; இரவு நேர பணியே ஒதுக்கப்பட்டது; அவரைப் பழிவாங்குவதற்காகவே தொடர்ச்சியாக 36 மணி நேர பணி தரப்பட்டதாக அவருடன் பணியாற்றும் சக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் “சம்பவத்தின் போது கருத்தரங்கு அரங்கில் மருத்துவ மாணவி தனியாக இருப்பது கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி சஞ்சய் ராய்க்கு எப்படித் தெரியும்” என்றும் மருத்துவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
மருத்துவர்களின் கூற்றை நிரூபிக்கும் விதமாக மாணவியின் பெற்றோரும், “தங்கள் மகள் தனது துறையில் ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கலாம்” என்று கூறியுள்ளனர். மேலும், தனது மகள் கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு வரை மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, மருத்துவ மாணவியின் மரணம் என்பது மருத்துவக் கட்டமைப்பின் கிரிமினல் குற்றங்களைத் திட்டமிட்டு மூடிமறைப்பதற்காக நடத்தப்பட்ட படுகொலையாகும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பெயரில் பச்சிளம் குழந்தைகளை நரவேட்டையாடியது அம்மாநில பா.ஜ.க. அரசு. இதற்கு எதிராக தனது சொந்த செலவில் ஆக்சிஜன் உருளைகளை வாங்கி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றப் போராடியதோடு, ஆக்சிஜன் உருளைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கத்தை வலியுறுத்தியும் வந்தார் அம்மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் கபீல்கான். இதற்காக கபில்கான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பல்வேறு காரணங்களைக் கூறி அவரை விடுதலை செய்ய மறுத்தது உ.பி. அரசு. பல்வேறு மக்கள் – சட்டப்போராட்டங்களுக்குப் பிறகே கபில்கான் விடுதலையானார். உ.பி.யில் மருத்துவக் கட்டமைப்பின் கிரிமினல்மயத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கபீல்கான் சிறை வைக்கப்பட்டார் என்றால் மேற்குவங்கத்தில் மருத்துவமனை கிரிமினல் குற்றங்களை எதிர்த்ததற்காக பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மேலும், பெண் என்பதால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதே உண்மை.
சி.பி.ஐ. வழக்கு விசாரணையும் அதன் திசைவழியும்
கடந்த 13-ஆம் தேதியன்று இவ்வழக்கு விசாரணையை மாநிலக் போலீசுதுறையிடமிருந்து சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது அம்மாநில உயர்நீதிமன்றம். சி.பி.ஐ. இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது ஊழல் வழக்குப் பதிவுசெய்து, அவரது தொடர்புடைய வீடுகளில் சோதனையும் நடத்தி வருகிறது. இக்கொலைக் குற்றவாளியென மேற்குவங்க போலீசுதுறையால் கைதுசெய்யப்பட்ட ஊர்க் காவல்படையை ஒத்த போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் மற்றும் கொலை செய்யப்பட்ட மருத்துவருடன் இரவு உணவருந்திய 4 மருத்துவர்களென 5 பேரிடம் உண்மையறியும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. ஊழல் சோதனை, உண்மையறியும் சோதனை என சி.பி.ஐ. விசாரணை முறையாக நடைபெறுவதுபோல் ஒருபுறம் காட்டப்படுகிறது. மற்றொருபுறம் சஞ்சய்ராய் மட்டும்தான் குற்றவாளியென சித்தரிப்பதற்காக அவன் மருத்துவமனைக்குள் நுழைந்த மற்றும் வெளியேறிய சி.சி.டி.வி. காட்சிகள், மற்றும் அவன் பயன்படுத்திய “ஹெட்போன்” ஆகியவற்றை ஆதாரமாக சி.பி.ஐ. வெளியிட்டிருக்கிறது. உண்மையறியும் சோதனையில் சஞ்சய் ராய் கூறியவை ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. இதிலிருந்து சஞ்சய் ராய் ஆபாச காணொளிகளை அதிகம் பார்ப்பவன், விபச்சாரப் பகுதிகளுக்கு சென்று வரக்கூடிய பழக்கமுடையவன் என்பவையெல்லாம் வெளியாகியிருக்கிறது.
இதன்மூலம், மாணவி மரணம் பாலியல் வன்கொலைதான் என்ற கருத்தைப் பொது சமூகத்தில் கட்டமைக்க சி.பி.ஐ. முயல்கிறது. ஆனால் அதே வேளையில், உண்மையறியும் சோதனையில் மற்ற மருத்துவர்கள் என்ன கூறினார்கள் என்பதையெல்லாம் வெளியிடப்படாதது கவனிக்கத்தக்கது.
கொல்லப்பட்ட மருத்துவரின் உடற்கூராய்வு அறிக்கையில், அம்மருத்துவரின் கைநகங்களில் ரத்தக் கறைகள் இருப்பது, பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள காயங்கள், உதடு, கன்னம் உள்ளிட்டு உட்புறம் மற்றும் வெளிப்புறமாக 25 காயங்கள் இருப்பது ஆகியவற்றை குறிப்பிட்டு மருத்துவர் சுபர்னா கோஸ்வாமி இது ஒரு கூட்டுப் பாலியல் கொலை என்று கூறியிருக்கிறார். ஆனால், மம்தா அரசும், சி.பி.ஐ-யும் தற்போதுவரை இது கூட்டுபாலியல் வன்கொலை இல்லை என சாதித்து வருகின்றன. சஞ்சய்ராயின் பாலியல் இச்சைக்காக இக்கொலை நடந்துள்ளதாகவே வழக்கை நகர்த்துகிறது சி.பி.ஐ.
கிரிமினல்மயமாகியிருக்கும் மருத்துவத்துறை
மருத்துவக் கழிவு கடத்தல், அடையாளம் தெரியாத மற்றும் உரிமைக் கோரப்படாத சடலங்கள் விற்பனை, போதைப்பொருள் மற்றும் பாலியல் வியாபாரம் போன்ற கிரிமினல் குற்றங்கள் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் மட்டும் நடைபெறவில்லை. இத்தகைய கிரிமினல் குற்றங்கள் நாடுமுழுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
அண்மையில், கேரள மாநிலத்தில் லேக் ஷோர் மருத்துவமனையில் உடல் உறுப்பு விற்பனை நடைபெறுவதும், தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கருமுட்டை விற்பனை செய்வதும், குஜராத்தில் வாடகைத் தாய் முறை நடைபெறுவதும் ஊடகங்களில் வெளியாகி நாடே அதிர்ச்சிக்குள்ளாகியது. இதற்காக, கடன்வலையில் சிக்கியவர்களையும், வறுமையில் வாடுபவர்களையும் மூளைச்சலவை செய்வது, கடத்தல், கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுவது என பெரிய மாஃபியா வலைப்பின்னலே செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், வளரும் மற்றும் பின் தங்கிய நாட்டு மக்களை தங்களின் மருத்துவச் சோதனைச் சாலைக்கான எலிகளாகப் பயன்படுத்துகின்றனர். உள்முரண்பாடுகளாலும் தீவிரப் பாதிப்புகள் ஏற்படும் போதும் மட்டுமே இக்குற்றங்கள் பொதுச் சமூகத்திற்கு தெரியவருகிறது என்பதுதான் மிகப்பெரும் கொடூரம்.
இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது இந்திய அரசு அமல்படுத்தும் மறுகாலனியாக்கக் கொள்கையாகும். இக்கொள்கை அமல்படுத்தப்பட்டதிலிருந்து “மருத்துவ சுற்றுலா” என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களுக்கான மருத்துவச் சந்தையாக இந்தியா மாறியிருக்கிறது. அதற்கேற்ப அரசுக் கட்டுமானத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவத்துறை போன்ற சேவைத்துறைகள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆணையங்கள், சமூகப் பாதுகாப்புக் குழுக்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் கும்பலிடம் தாரைவார்க்கப்படுகிறது. இதனால், சேவைத்துறைகள் அனைத்தும் வியாபாரமாகியுள்ளதோடு, மக்களைக் கொள்ளையடிக்கும் துறையாக மாறிவருகிறது. இதற்கேற்ப அரசின் அனைத்துக் கட்டுமானங்களும், துறைகளும் கிரிமினல்மயமாகியுள்ளது. ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள்- உள்ளூர் கார்ப்பரேட் முதலாளிகள் – அரசு அதிகாரிகள் – அரசியல்வாதிகள் – உள்ளூர் கிரிமினல்கள் என மருத்துவத்துறையில் ஒரு கிரிமினல் கூட்டு உருவாகியிருக்கிறது. இதுவே, இத்தகைய குற்றங்கள் சர்வசாதாரணமாக நடைபெறுவதற்கு அடிப்படையாக இருக்கிறது.
மேற்குவங்கத்தில் 2005-ஆம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளை நிர்வகிப்பதற்காக ரோகி கல்யாண் சமிதி என்ற நோயாளிகள் நலக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், என்.ஜி.ஓ-க்கள், அரசு அதிகாரிகள் இருப்பர் என்றும் இக்குழுவின் தீர்மானங்களின் அடிப்படையில் மருத்துவமனையின் சீரான செயல்பாடு மற்றும் சிறந்த தேவைக்கான நிதி ஆதாரங்களை உருவாக்கிக் கொள்ளவும், பயன்படுத்தவும், பரிந்துரைக்கவும் சுதந்திரம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு மருத்துவத்தை வழங்க வேண்டிய அரசு, தன்னுடைய கடமையை கைகழுவுவதோடு, கிரிமினல் கும்பல்களின் பிடியில் மக்களை சிக்கவைக்கிறது.
இத்திட்டத்தின் மூலம், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. கொலைக்குற்றம் நடைபெற்ற ஆர்.ஜி.கர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குரிய ரோகி கல்யாண் சமிதி உறுப்பினரான திரிணாமுல் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாந்தனு சென், பயிற்சி மருத்துவரின் கொலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாகத்தை விமர்சித்ததற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், கள்ளச்சாராயம் காய்ச்சுவதுகூட உள்ளூர் அரசு அதிகாரிகள்-போலீசு-அரசியல் கட்சிகளின் உதவியின்றி செய்ய முடியாது எனும் போது, போதைப்பொருள் வியாபாரம், பாலியல் முறைகேடு, ஒப்பந்தங்களில் கமிஷன் பார்ப்பது, வங்கதேசத்துடனான மருத்துக்கழிவு விற்பனை போன்ற சமூகவிரோதக் குற்றங்களை அதிகார வர்க்கம்-மாநில-ஒன்றிய அரசியல் கட்சிகளின் துணையில்லாமல் நடத்துவது சாத்தியமற்றது. குறிப்பாக, அம்மாநிலத்தின் உள்துறையும் சுகாதாரத்துறையும் அம்மாநில முதல்வரான மம்தாவின் கையில்தான் இருக்கிறது. எனவே, இக்கொலை வழக்கைத் துருவினால் பல கிரிமினல் குற்றங்களும் பல பெரும்புள்ளிகளும் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகும் என்பதாலேயே இம்மருத்துவரின் கொலையைத் தற்கொலையாக முடிவுக்குக் கொண்டுவர எத்தணிக்கிறது மேற்குவங்கக் போலீசுதுறையும் மம்தா அரசும்.
எனவே பயிற்சி மருத்துவரின் கொலைக்கு கார்ப்பரேட்மயமாக்கமும், கிரிமினல்மயமாக்கப்பட்ட அரசுக் கட்டமைப்புமே முதன்மைக் குற்றவாளியாகும். கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் வெறும் அம்பு மட்டுமே.
வாகைசூடி
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram