சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் சிங்கிதரை கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மதியம் 2 மணிக்குப் பிறகு கொதிகலனை டர்பைனுடன் இணைக்கும் உயர் அழுத்தக் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அதிக வெப்பமுள்ள நீராவி தொழிலாளர்களைத் தாக்கியதில் சில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையாக தீக்காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மற்றும் போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏப்ரல் 14 ஏற்பட்ட பயங்கர விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் மறுநாளே பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பலியானவர்களில் ஐந்து பேர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; ஆறு பேர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்.
பயங்கர வெடி விபத்திலிருந்து உயிர் தப்பித்த தொழிலாளர் அஷுதோஷ் தாஸ் “வெடிப்பு தரை தளத்தில் நடந்தது. நான் இரண்டாவது தளத்தில் இருந்தேன். திடீரென கீழே தரை அதிர்வது போல உணர்ந்தேன். கீழே இறங்கியபோது முழு இடமும் அடர்த்தியான புகையால் மூடப்பட்டிருந்தது. நாங்கள் உள்ளே செல்ல பயந்தோம். சிறிது நேரத்தில் தீபங்கரும், சித்தரஞ்சன் துலாயும் காணாமல் போயிருப்பது தெரிந்தது. பல மணி நேரம் கழித்து அவர்களது உடல்கள் மிகவும் எரிந்த நிலையில் கிடப்பதைப் பார்த்தோம்” என்று சம்பவத்தின் கொடூரத்தை விவரித்துள்ளார்.
படிக்க: ஒடிசா: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 12 நோயாளிகள் பலி – பா.ஜ.க-வின் மற்றொரு “மருத்துவமனைப் படுகொலை”
குறிப்பாக கடந்த மாதம், சத்தீஸ்கர் பா.ஜ.க அரசு, சட்டசபையில் தெரிவித்த தகவல்: கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் தொழிற்சாலை விபத்துகளில் 296 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 248 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இதிலிருந்தே தொழிலாளர்களின் பாதுகாப்பில் பா.ஜ.க அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் காட்டுகின்ற அலட்சியப் போக்கைப் புரிந்து கொள்ள முடியும்.
ஜனவரி 31 2026 வரை, சத்தீஸ்கரில் செயல்படும் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 7,324 ஆக உள்ளது. இவற்றில் 948 தொழிற்சாலைகள் “ஆபத்தானவை” என்றும், 32 தொழிற்சாலைகள் “அதி ஆபத்தானவை” என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தொழில் அமைச்சர் லகான் லால் தேவாங்கன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
கொடூர விபத்தினால் ஏற்பட்ட தொழிலாளர்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்கும், தங்களுடைய கூட்டுப் படுகொலையை மறைப்பதற்கும் வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனமும் பா.ஜ.க அரசும் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகைகளை அறிவித்துள்ளன. அத்துடன் பா.ஜ.க அரசு விபத்து குறித்து விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தப்ரா துணை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
முக்கியமாக தங்களது வாழ்வாதாரத்திற்காக குடும்பத்தைப் பிரிந்து மற்றொரு மாநிலத்தில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கு அனுதினமும் கத்தியின் மேல் நடப்பதுபோல்தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபத்தை ஈட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றன. அதற்கு அடித்தளமாக உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கிடையாது.
எனவே 20 அப்பாவி தொழிலாளர்களின் உயிர்கள் பறிபோனது விபத்தல்ல; அது தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத வேதாந்தா நிறுவனமும், தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா, தொழிலாளர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளாத பாசிச பா.ஜ.க அரசும் இணைந்து நடத்தியுள்ள கூட்டுப் படுகொலையாகும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











