வேதாந்தாவின் ‘பாக்ஸைட்’ வெறியும் சிதைக்கப்படும் ஒடிசா பூர்வகுடி மக்களின் வாழ்வும்!

கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் பாசிச பா.ஜ.க அரசின் ஏவல் நாய்களாகச் செயல்படும் இந்தக் போலீசின் துப்பாக்கித் தோட்டாக்களும், அதிகார அடக்குமுறைகளும் நிலத்துக்காகப் போராடும் பூர்வகுடி மக்களின் உறுதியை ஒருபோதும் குலைத்துவிடாது.

பா.ஜ.க ஆளும் மாநிலமான ஒடிசாவில், கலஹண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது சிஜிமாலி மலை. பாக்ஸைட் வளம் நிறைந்த இந்த சிஜிமாலி பீடபூமியிலிருந்து ஆண்டுக்கு ஒன்பது மில்லியன் டன் பாக்ஸைட்டை வெட்டியெடுப்பதற்கான சுரங்கக் குத்தகை, லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட கார்ப்பரேட் சுரங்க நிறுவனமான (ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனம்) வேதாந்தாவுக்கு பிப்ரவரி 2023-இல் தாரைவார்க்கப்பட்டது. சுரங்கம் அமைப்பதற்காக 1,549 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது; இதில் 708 ஹெக்டேர் வனப்பகுதியாகும்.

சிஜிமாலி பீடபூமி என்பது இப்பகுதியின் “தண்ணீர்த் தொட்டி” என அழைக்கப்படுகிறது. ஏனெனில், நாகவல்லி மற்றும் வம்சதாரா ஆகிய முக்கிய ஆறுகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் நூற்றுக்கணக்கான வற்றாத நீரோடைகள் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன. வேதாந்தா நிறுவனத்தின் இந்தச் சுரங்கத்திற்காக நாள் ஒன்றுக்கு 7,00,000 லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படவுள்ளது. இதனால், இந்த நீரூற்றுகள் முற்றிலுமாக அழிந்துவிடும். மேலும், ஆண்டுக்கு 18 மில்லியன் டன் வரை உருவாகும் சுரங்கத்தின் நச்சுக்கழிவுகள் மலைச்சரிவுகளில் கொட்டப்படும்போது, அவை ஆறுகளில் கலந்து ஒட்டுமொத்த நீர் அமைப்பையுமே நஞ்சாக்கி விடும்.

‘மறுவாழ்வு’ என்ற பெயரில் நிலப்பறிப்பும் மோதலும்

கார்ப்பரேட் நிறுவனத்தின் கனிமவளச் சுரண்டலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவு ஒருபுறம் இருக்க, மறுபுறம் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. இந்தச் சுரங்கத் திட்டத்திற்காக சிஜிமாலி, மாலிபதர் ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 140 ஆதிவாசி குடும்பங்கள் வெளியேற்றப்பட உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாகக் கூறி, 35 கி.மீ தொலைவிலுள்ள காண்டுவால்மாலி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குர்குட்டி எனும் வனப்பகுதியை அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், குர்குட்டி என்பது மக்கள் வசிக்காத தரிசு நிலமல்ல; அது ஏற்கெனவே 60-க்கும் மேற்பட்ட ஆதிவாசிக் குடும்பங்களின் வாழ்விடமாகவும் அவர்களின் வழிபாட்டுத்தலமாகவும் இருந்து வருகிறது.

ஒடிசாவின் பழங்குடிகள் மலைகளையும் காடுகளையும் தமது தெய்வங்கள் வசிக்கும் இடங்களாகப் பார்க்கும் மரபைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிடத்திலுள்ள ஆதிவாசிகளை வெளியேற்றிவிட்டு, அவர்களை மீள்குடியேற்றம் செய்வது என்ற பெயரில் மற்றொரு இடத்தில் இருக்கும் ஆதிவாசிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பது ஒருபோதும் “மறுவாழ்வு” ஆகாது. இது ஆதிவாசிச் சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பாதையைச் சீரமைத்துக் கொடுக்கும் அரசின் சதித்திட்டமே.

போலி கிராம சபைகளும் தொடரும் அடக்குமுறையும்

இந்திய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணை மற்றும் PESA (1996) சட்டம் ஆகியவை, பழங்குடியினப் பகுதிகளில் கிராம சபையின் அனுமதியின்றி எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது எனத் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால், 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசின் முன்னிலையில் ‘நிழல்’ கிராம சபைகள் நடத்தப்பட்டன. உண்மையான பூர்வகுடி மக்களின் பங்களிப்பின்றி, அதிகார பலத்தால் போலி ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளன. 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், பிரதான சாலையிலிருந்து 42 ஏக்கர் நிலத்திற்கு 12 அடி அகலமுள்ள பாதை ஒன்று புல்டோசர்கள் மூலம் காட்டை அழித்து உருவாக்கப்பட்டது.

அன்றிலிருந்து, குர்குட்டிப் பகுதி காலஹண்டி மாவட்ட நிர்வாகம், போலீசு மற்றும் ஆதிவாசி, தலித் மக்களுக்கிடையேயான கடுமையான மோதல் களமாக மாறியுள்ளது. மக்களின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மார்ச் 10, 2026 அன்று குர்குட்டி நிலம் அதிகாரப்பூர்வமாகத் தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடம் (IDCO) ஒப்படைக்கப்பட்டது. நிலைமை பதற்றமாக இருந்த சூழலிலும், மார்ச் 18 அதிகாலை திடீரெனப் புல்டோசர்களுடன் குர்குட்டிக்குள் அத்துமீறி நுழைந்த அரசு இயந்திரம், சுமார் 10 ஏக்கர் நிலத்தைச் சமன் செய்தது. இதைக் கண்டித்து குர்குட்டி கிராமத்திற்கு அருகிலுள்ள தௌகுடா பகுதியில் கடுங்குளிர் மற்றும் மழையிலும் மக்கள் முகாமிட்டுப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்க துணை இராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். போராடும் மக்கள் குளிர்காய மூட்டிய நெருப்பை அணைப்பது, அவர்களின் தற்காலிகக் கூடாரங்களைப் பிரிப்பது என போலீசு அச்சுறுத்தி வருகிறது. தினமும் ட்ரோன்கள் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, தௌகுடா பகுதியைத் திறந்தவெளிச் சிறையாக அரசு உருவாக்கியுள்ளது.

இதன் உச்சக்கட்டமாக, கடந்த ஏப்ரல் 7, 2026 அன்று ராயகடா மாவட்டம் காசிப்பூர் ஒன்றியத்தில், சுரங்கத்திற்காகச் சாலை அமைக்கும் பணியைத் தடுத்த மக்கள் மீது போலீசு கொடூரமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. நள்ளிரவில் போராட்டக் குழுத் தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீசை மக்கள் தடுத்தபோது, அவர்கள் மீது ஈவிரக்கமின்றி தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஒடுக்கியுள்ளது அரசு இயந்திரம். அதிகாரப்பூர்வமாக ‘வெற்றுத் துப்பாக்கிச் சூடு’ (Blank firing) மட்டுமே நடத்தப்பட்டதாக போலீசு நாடகமாடினாலும், மக்களின் மீது நேரடித் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் களச் செய்திகள் தெரிவிக்கின்றன. போலீசின் இந்த வெறிச்செயலில் பல கிராம மக்கள் படுகாயமடைந்துள்ளதுடன், கால்நடை ஒன்றும் பலியாகியுள்ளது. இந்த மோதலில் 58 -க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசாரும் காயமடைந்துள்ளனர் என்று அரசுத்தரப்பு கூறுகிறது. இது, தமது வாழ்நிலத்தைக் காக்க நிராயுதபாணியான மக்கள் எந்தளவுக்குக் கடுமையாகப் போராடி வருகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

போராட்டத்தின் குரலை ஒடுக்குவதற்காக ஆதிவாசி உரிமைகளுக்காகப் போராடும் முக்கியத் தலைவர்களான லிங்கராஜ் ஆசாத் மற்றும் சுரேஷ் பட்நாயக் ஆகியோர் மார்ச் 25 அன்று போலீசால் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நடந்த ‘பிர்சா முண்டா ஜெயந்தி’ விழாவை முன்னெடுத்து நடத்தியது தொடர்பான வழக்கின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட தீவிரமான பிரிவுகளில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசமும் பாசிச ஒடுக்குமுறையும்

இத்தகைய நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துவது என்ன? இன்று ஒடிசாவின் மலைகளில் எதிரொலிக்கும் புல்டோசர்களின் சத்தம், வெறும் மண்ணைச் சமன் செய்யும் சத்தம் அல்ல; அது இந்த நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் பூர்வகுடிச் சமூகத்தின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் போர் முரசு. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா போன்ற பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறிக்காக, சொந்த நாட்டு பூர்வகுடி மக்களையும் இயற்கை வளங்களையும் காவுகொடுக்கும் பாசிச பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை, நவீன காலத்தின் மிகக்கொடூரமான ‘இன அழிப்பு’ வடிவமே அன்றி வேறில்லை.

பெயரளவில் ஜனநாயகம் பேசும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஐந்தாவது அட்டவணை மற்றும் PESA சட்டங்களைக் கூட காலில் போட்டு மிதித்துவிட்டு, துப்பாக்கி முனையில் நிலத்தைப் பறிக்கும் இந்த அரசு, ஜனநாயகத்தின் காவலன் அல்ல – கார்ப்பரேட்களின் ஏவலன் என்பதை நிரூபித்துள்ளது. போராடும் மக்கள் மீது அரசு தொடுத்துள்ள இந்தத் தாக்குதல்கள் மற்றும் மக்கள் தலைவர்கள் மீதான ‘கொலை முயற்சி’ வழக்குகள் ஆகியவை பாசிச திமிரின் உச்சமாகும்.

ஆனால், ஒடிசா மண்ணிற்கு கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும், மக்களின் மகத்தான வெற்றிகளும் புதிதல்ல. கடந்த காலத்தில், இதே வேதாந்தா நிறுவனத்தின் பிடியில் சிக்கிய ‘நியாம்கிரி’ மலைகளைத் தங்களின் உறுதிமிக்க தொடர் போராட்டத்தால் மீட்டெடுத்தவர்கள் ஒடிசாவின் பூர்வகுடி மக்கள். அன்று ஒன்றியத்தில் காங்கிரஸும், மாநிலத்தில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமும் ஆட்சியில் இருந்தபோது அரங்கேறிய அதே கார்ப்பரேட் கனிமவள வேட்டைதான், இன்று ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஆளும் பாசிச பா.ஜ.க அரசாலும் அரங்கேற்றப்படுகிறது. அரசுகளும் கட்சி முகங்களும் மாறலாமே தவிர, இவர்களின் ஆட்சி அதிகாரம் என்பது மக்களுக்கானது அல்ல; அது அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கானது என்பதை இந்தத் தொடர் நிகழ்வுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.

மாவீரன் பிர்சா முண்டாவின் வாரிசுகள் ஒருபோதும் அடக்குமுறைக்கு அஞ்சுபவர்கள் அல்ல. இயற்கை வளங்களைச் சுரண்டி, கார்ப்பரேட் முதலாளிகளின் கஜானாவை நிரப்பத் துடிக்கும் அரசுகளின் இந்தப் போக்கிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டம் எழவேண்டிய தருணம் இது. பாக்சைட், லித்தியம் போன்ற கனிம வளங்களை வேதாந்தா போன்ற பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காண்டுவால்மாலி மலைகள் சிதைக்கப்படுவதைத் தடுப்பதோடு, கைது செய்யப்பட்டுள்ள மக்கள் போராளிகள் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கிராம சபைகளின் இறையாண்மையை நிலைநிறுத்தி, மக்களின் அனுமதியின்றி ஓர் அங்குல நிலத்தைக் கூடக் கார்ப்பரேட்களுக்குத் தரக்கூடாது என ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து முழங்க வேண்டிய தருணம் இது.

பாக்சைட் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துத் தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் களம் காணும் மக்கள் மீது ஈவிரக்கமின்றித் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசின் வெறிச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். கார்ப்பரேட்டுகளுக்கு முட்டுக்கொடுக்கும் பிரதான ஊடகங்கள், மக்கள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச்சூட்டை மூடிமறைத்துவிட்டு, ‘போலீசு மீது மக்கள் தாக்குதல்’ என்று அதிகாரவர்க்கத்தின் குரலாகவே செய்திகளை வெளியிடுவது அவர்களின் பாசிச சேவகத்தையே அம்பலப்படுத்துகிறது.

கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் பாசிச பா.ஜ.க அரசின் ஏவல் நாய்களாகச் செயல்படும் இந்தக் போலீசின் துப்பாக்கித் தோட்டாக்களும், அதிகார அடக்குமுறைகளும் நிலத்துக்காகப் போராடும் பூர்வகுடி மக்களின் உறுதியை ஒருபோதும் குலைத்துவிடாது. ஒடுக்குமுறைகளைக் கண்டு அஞ்சி மக்களின் போராட்டம் பின்வாங்கிவிடாது; மாறாக, அது தனது உரிமைகளை வென்றெடுக்க மேலும் வீறுகொண்டு எழும்!

ஒடிசாவின் அடர்ந்த காடுகளில் இன்று பற்றியெரியும் இந்தப் போராட்டத் தீ, கார்ப்பரேட் பேராசைக்கும் பாசிச அடக்குமுறைக்கும் முடிவுகட்டும் ஒரு புதிய விடியலின் தொடக்கமாக அமையட்டும். நிலம் என்பது விற்பனைக்குரிய சரக்கல்ல; அது ஒரு சமூகத்தின் வரலாறு, அதன் அடையாளம் மற்றும் எதிர்காலச் சந்ததியினரின் உயிர் மூச்சு!


கரிகாலன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க