இந்தியா: கிறிஸ்தவர்கள் மீதான மதவெறி தாக்குதல் 500% அதிகரிப்பு

2014 முதல் 2024 வரை கிறிஸ்தவ மக்கள் மீதான மதவெறித் தாக்குதல் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சராசரியாக ஆண்டுக்கு 69.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

0

டந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று இந்திய பத்திரிகையாளர் மன்றத்தில் (Press Club Of India) கூடிய கிறிஸ்தவ உரிமை ஆர்வலர்கள், பாசிச மோடி ஆட்சியில் கிறிஸ்தவ மக்கள் மீது அதிகரித்துவரும் மதவெறித் தாக்குதல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அவ்வறிக்கையில், 2014 முதல் 2024 வரை கிறிஸ்தவ மக்கள் மீதான மதவெறித் தாக்குதல் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சராசரியாக ஆண்டுக்கு 69.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மேலும், 2014 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடையில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் 139-லிருந்து 834 ஆக அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும், 579 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 39 சம்பவங்களில் மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றில், 76 சதவிகிதத்திற்கும் அதிகமான வழக்குகள் ஐந்து மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளது. அவற்றில் பா.ஜ.க ஆட்சி செய்கின்ற உத்தரப்பிரதேசத்தில் 1,317 தாக்குதல்கள் (31.6 சதவிகிதம்), சத்தீஸ்கரில் 926 மற்றும் மத்தியப்பிரதேசத்தில் 319 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மறுபுறம், தி.மு.க. ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் 322 தாக்குதல்களும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவில் 321 தாக்குதல்களும் அரங்கேறியுள்ளன. சமூக நீதி, மதநல்லிணக்கம், பாசிச எதிர்ப்பு குறித்தெல்லாம் பேசும் எதிர்க்கட்சிகள் ஆளும் இவ்விரு மாநில அரசுகளும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கும், காவி கும்பலிடமிருந்து அவர்களை பாதுகாப்பதற்கும் சட்ட ரீதியான நடவடிக்கைகளைக் கூட எடுக்கத் தயாராக இல்லை என்பதை கிறிஸ்தவ உரிமை ஆர்வலர்களின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய ஐக்கிய கிறிஸ்தவ மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் வில்லியம்ஸ், ஆளும் பா.ஜ.க. அரசு மதமாற்றம் என்ற போலி வார்த்தையை ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று அம்பலப்படுத்தினார்.


படிக்க: சத்தீஸ்கர்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!


பழங்குடி கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்துப் பேசிய வழக்கறிஞர் தெஹ்மீனா அரோரா, “இந்தியா முழுவதும் சுமார் ஏழு கோடி பழங்குடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பஸ்தரைச் சேர்ந்த கனிகா காஷ்யப் என்ற கர்ப்பிணிப் பெண் மதம் மாறியதற்காகக் காவி கும்பலினால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இதனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. தாக்குதல் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தும் போலீசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதவெறி  கலவரங்களின் போது கிறிஸ்தவ பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, கருவைச் சிதைப்பது போன்ற கொடூர வரலாற்றைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். மதவெறி கும்பல், மதமாற்றம் என்ற பெயரில் கிறிஸ்தவ பெண்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர் தெஹ்மீனா அரோரா மேலும் கூறுகையில், “ஜூலை மாதத்தில் ஜாம்ஷெட்பூரில் வீடொன்றில் நடைபெற்ற ஒரு சிறிய கூட்டத்தின் போது, மதமாற்றம்  நடப்பதாகக் கூறிய மதவெறியன் ஒருவனது பேச்சைக் கேட்டு ஒரு கும்பல் அவர்களைத் தாக்கியது. பின்னர், போலீசு விசாரணையில் அது மதமாற்றக் கூட்டம் அல்ல, வெறும் இரவு உணவு கூட்டம் என்று கண்டறிந்தனர். மேலும், ரயிலில் பயணம் செய்வது, இரவு உணவு சாப்பிடுவது, கன்னியாஸ்திரீயாக இருப்பது போன்ற சாதாரண விஷயங்கள் கூட மதமாற்ற குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும். அதனால்தான் இன்று நாங்கள் இங்கே தேநீர் கூட ஏற்பாடு செய்யவில்லை, நாங்கள் மதமாற்றம் செய்ய முயல்கிறோம் என்று யாரும் நினைக்கக்கூடாது அல்லவா?” என்றார். இதிலிருந்தே காவி கும்பலினால் கிறிஸ்தவர்கள் மிகக்கொடூரத் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது தெட்டத் தெளிவாகிறது.

மேலும், பழங்குடி கிறிஸ்தவர்கள் சமூக ரீதியாகப் புறக்கணிக்கப்படுவது குறித்துப் பேசிய அரோரா, “இதுபோன்ற புறக்கணிப்புகளில், சமூக தொடர்பு துண்டிக்கப்படுகிறது. யாரும் கிறிஸ்தவர்களிடம் பேசுவதில்லை. கிறிஸ்தவர்களுடன் பேசினாலோ அல்லது சமூக நிகழ்வுகளுக்கு அவர்களை அழைத்தாலோ அபராதம் விதிக்கப்படுகிறது, வீடுகள் எரிக்கப்படுகின்றன, வயல்கள் அழிக்கப்படுகின்றன, கால்நடைகள் பறிக்கப்படுகின்றன, மக்களுக்கு வேலைகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யக் கூட அனுமதிக்கப்படுவதில்லை” என்று தலித் மக்களைப் போன்று கிறிஸ்தவ மக்களும் தீண்டாமைக்கு இணையான கொடுமை அரங்கேறி வருவதை அம்பலப்படுத்தினார்.

பெரும்பாலும் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்கள் போலீசிடம் புகாரளிக்கச் சென்றால் வழக்கைப் பதிவு செய்யாத போலீசு குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறது என்பதையும் கிறிஸ்தவ ஆர்வலர்கள் அம்பலப்படுத்தினர்.

இந்நிலையில், கிறிஸ்தவ மக்கள் மீது தீவிரமடைந்து வருகின்ற தாக்குதல் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, வருகின்ற நவம்பர் 29 அன்று புதுடெல்லியில் கண்டனப் பேரணி நடத்தப்படும் என்று ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர்.

பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு, இஸ்லாமிய சிறுபான்மை மக்கள், தலித் – பழங்குடியின மக்களுக்கு இணையாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2024-ஆம் ஆண்டு ஒடிசாவில் பாசிச பா.ஜ.க. முதன்முறை ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, கிறிஸ்தவர்களின் புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டியெடுத்து வீசப்படுகிறது, உடல்களைப் புதைக்க மறுக்கப்படுகிறது. சத்தீஸ்கரில் 2023-இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பழங்குடி கிறிஸ்தவர்கள் மீதான மதவெறி தாக்குதல்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இத்தகைய கொடூரங்கள் நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டம் இயற்றப்பட்டு, கிறிஸ்தவர்கள் மீதான மதவெறி தாக்குதல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளன. படுகொலைகளும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

அதேபோல், கிறிஸ்தவர்கள் பழங்குடி மக்களைக் கட்டாய மதமாற்றம் செய்கின்றனர் என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திவரும் காவி கும்பல், ‘கர்வாப்சி’ (தாய் மதத்திற்குத் திரும்புதல்) பழங்குடி மக்களை இந்து மதத்திற்கு மாறும்படி மிரட்டி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுதான் பாசிச கும்பலின் இரட்டை நீதி.

இஸ்லாமிய மக்களைப் போன்று கிறிஸ்தவர்களையும் இந்தியாவின் இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்ற என்ற நோக்கத்தின் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் கிறிஸ்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், கிறிஸ்தவ மக்களால் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையை உருவாக்கி வருகிறது. பாசிசத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் பாசிச எதிர்ப்பு சக்திகள் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் குரலெழுப்ப வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க