மிழ்நாட்டில் கோவையைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியிலும் குடிநீர் விநியோகம் தனியாரின் கைகளுக்குச் செல்லவிருக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 57 வார்டுகளுக்கு 24*7 உயரழுத்த குடிநீர் வழங்கப் போவதாகவும், இதற்கான குடிநீரை முல்லைப் பெரியாறு திட்டத்தில் இருந்து கொண்டு வரப்போவதாகவும் கூறி அதற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்க இருக்கிறார்கள்.

24 மணி நேரமும் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும், பணம் இருந்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற அவல நிலை ஏற்படும். இலவசமாகவும் குறைந்த கட்டணத்தோடும் தண்ணீர் வழங்கும் பொதுக்குழாய்கள் அகற்றப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

மாநகரத்திற்கு தேவையான நீர் விநியோகிக்கும் நீர்த்தேக்கங்களின் பராமரிப்பு மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் பராமரிப்பு அனைத்தும் தனியார் வசம் சென்றுவிடும்.

படிக்க :

தண்ணீர் தாகத்திற்கா… லாபத்திற்கா…?

சிறப்புக் கட்டுரை : உலக வங்கியின் ஆணைப்படி தண்ணீர் தனியார்மயம்

குடிநீர் விநியோகத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் சீராக செய்து வரும் நிலையில் தனியாருக்கு இந்த உரிமையை கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

தண்ணீர் தனியார் வசம் சென்றால் குடிநீருக்கான கட்டணம் பல மடங்கு உயரும். பொலிவியா, லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே போன்ற நாடுகளின் வரலாறே இதற்குச் சான்று.

மதுரையில் இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் ஆகஸ்ட் 12, 2021 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பெரும்பான்மையானோரின் கருத்து தண்ணீர் தனியார் வசம் செல்லக்கூடாது என்பதாகவே இருந்தது.

ஆனால் இதனை கருத்தில் எடுத்துக் கொண்டு இத்திட்டத்தை தடுத்து நிறுத்துமா திமுக அரசு ?

திமுகவின் இரட்டை வேடம் :

2018-ம் ஆண்டில், கோயம்புத்தூர் மாநகராட்சி வரம்பில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 24*7 அடிப்படையில் குடிநீர் விநியோகிப்பதாகக் கூறி பிரெஞ்சு நிறுவனமான சூயஸை அடிமை அதிமுக அரசு தேர்ந்தெடுத்தது. இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு 400 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 2972 ​​கோடி). இத்திட்டத்திற்கான பகுதியளவு நிதியை ஒன்றிய அரசு AMRUT, JNNURM மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் மூலம் அளிக்கும். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) போன்றவையும் இதற்கு நிதியுதவி/கடனுதவி அளிக்கும். 2019-ம் ஆண்டில் முதல் கட்டமாக 646 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த நேரத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்த திட்டத்தை எதிர்த்து
பல்வேறு போராட்டங்களை நடத்தியது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான மாவட்ட வாரியான தேர்தல் அறிக்கையில் கோவையில் ஃபிரான்ஸ் நாட்டை சார்ந்த சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மாநகராட்சியே குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தது.

ஆனால் தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டதால் இத்திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று திமுக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திமுக தனது கார்ப்பரேட் விசுவாசத்தையும் தெளிவாக நிரூபித்துள்ளது.

சூயஸ் நிறுவனத்தைப் பற்றி வாய் திறக்க மறுக்கும் திமுக-வின் கையை மீறி மதுரை மாநகராட்சியின் தண்ணீர் தனியார்மயத் திட்டம் குறித்த கருத்துக் கணிப்பு நடைபெற்றிருக்கப் போவதில்லை. சூயஸ் நிறுவனத்திடம் கோவை மாநகரின் நீர் வழங்கல் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதை  எதிர்ப்பதாக அன்று நாடகமாடிய திமுக அரசு, அன்றைய அடிமை அதிமுக அரசு செய்தது போல தண்ணீரைத் தனியார்மயமாக்கும் கார்ப்பரேட் அடிமை வேலையைச் செய்யத் துவங்கியிருக்கிறது.

கார்ப்பரேட் – காவி கும்பலை விரட்டியடிப்போம் :

நாட்டு மக்களுக்குத் தெரியாமலேயே காட் (GATT) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதை நாடாளுமன்றத்திலும் அங்கீகரித்தது இந்திய அரசு. GATT-ன் நீட்சியான GATS (General Agreement on Trade in Services) ஒப்பந்தம் சேவைத் துறைகளை தனியார்மயமாக்க வழிவகை செய்கிறது. கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, தொலைத்தொடர்பு என அனைத்து சேவைத் துறைகளையும் அரசு தனியாரின் கைகளில் ஒப்படைத்துவிட வேண்டுமென்று உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும் தொடர்ச்சியாக நிர்ப்பந்தித்து வருகின்றன.

உலக வங்கி தண்ணீர் துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் நீராதாரங்களை வணிகமயமாக்கியது. 1992-ம் ஆண்டு “நீராதார மேலாண்மையை மேம்படுத்துவது” (Improving Water Resources Management) என்னும் ஆய்வு அறிக்கையை வெளியிட்டு, கடன் பெறும் நாடுகளை குடிநீர் வினியோகத்தை தனியார்மயமாக்க நிர்ப்பந்தித்தது.

இதற்கு உலக வங்கி கூறும் காரணம் : “பொதுச் சேவையாக விநியோகிக்கப்படும் தண்ணீரில் 40 முதல் 50 விழுக்காடு வீணாகிறது அல்லது திருடப்படுகிறது. இதனால்தான் ஏழை எளிய மக்களுக்கு தேவையான தண்ணீரை அவர்களுக்கு அளிக்க முடியவில்லை. ஆகவே தண்ணீர் விநியோகத்தை திறமையாகக் கையாள தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்”. தான் முதலாளித்துவத்திற்கு சேவை புரிவதை உலக வங்கி எவ்வாறெல்லாம் வெவ்வேறு வார்த்தை ஜாலங்கள் மூலம் நியாயப்படுத்திகிறது என்பதைப் பாருங்கள்!

படிக்க :

பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !

உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?

பொலிவியாவின் கொச்சபம்பா நகர மக்கள் அமெரிக்க ஏகபோக நிறுவனமான பெக்டெல் (Bechtel) எனும் தண்ணீர் விநியோக நிறுவனத்தை எதிர்த்து 2000-ம் ஆண்டு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. அரசின் அடக்குமுறையால் ஒருவர் உயிரிழந்தார்; 175 பேர் காயமுற்றனர். ஆனால் இறுதியில் மக்களின் தீரமிகு போராட்டமே வெற்றி பெற்றது. பெக்டெல் நிறுவனம் விரட்டியடிக்கப்பட்டது.

முதலாளித்துவ சுரண்டலின் கீழ் இந்த நாட்டின் பெரும்பாலான ஏழைகள் ஒரு நேரம் மட்டும் உணவருந்திவிட்டு மற்ற இரு நேரங்களிலும் தண்ணீரைக் குடித்தாவது வயிற்றை நிரப்பி வந்தனர். இனி அந்தத் தண்ணீரும் காசு இருப்பவனுக்கு மட்டும் தான் என்று கொக்கரிக்கிறது முதலாளித்துவ இலாபவெறி. அதற்குச் சேவை செய்கின்றன, பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கார்ப்பரேட் அடிமைக் கட்சிகள்.

தண்ணீர் விற்பனைப் பண்டமாவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சீர்திருத்தவாத – ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை நம்பாமல் நம் உரிமைகளை நிலைநாட்ட ஏகபோக நிறுவனங்களையும் அவற்றிற்கு சேவை புரியும் பாசிச மோடி அரசையும் எதிர்த்துப் போராடுவதே மக்களாகிய நமது கடமை.


அறிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க