Sunday, April 2, 2023

தண்ணீர் தாகத்திற்கா… லாபத்திற்கா…?

-

ண்ணீர் இயற்கையின் சொத்து. அதனை யாரும் உருவாக்க முடியாது. ஆனால் நீரை விற்பனைப் பண்டமாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறது காட்ஸ் (GATS) ஒப்பந்தம். இதில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய நீர்க் கொள்கையின்படி நிலம் உங்களுக்கு சொந்தமாக இருப்பினும் அதற்கு கீழே இருக்கும் நீர் அரசுக்குத்தான் சொந்தம். இதுவரை ஆற்று நீரை மட்டுமே முதலாளிககுக்கு தாரை வார்த்த அரசு இப்போது நிலத்தடி நீரையும் தாரை வார்க்க உள்ளது.

thanneer-front thanneer-back

இந்நிலையில் 2005-ம் ஆண்டு வெளியிடப்பட்ட “தண்ணீர் தாகத்திற்கா அல்லது இலாபத்திற்கா” என்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வெளியீட்டை கீழைக்காற்று வெளியீட்டகம் 2-ம் பதிப்பாக கொண்டு வந்துள்ளது.

பெக்டெல், சூயஸ் போன்ற நிறுவனங்களின் உலகளாவிய ஆதிக்கம், மறுபுறம் அரசுத் துறைகளை வேண்டுமென்றே நட்டத்தில் ஓட வைத்து தனியாருக்கு மாற வைப்பது போன்றவற்றை  அம்மா குடிநீருக்கு பழகும் எவரும்  புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். காசு இருந்தால் மருத்துவம், தண்ணீர் என எல்லா சேவைகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை விரிவாக விளக்குகிறது இந்நூல்.

இந்தப் புத்தகம் மணற்கொள்ளை எப்படி ஆற்றின் போக்கை பாதிக்கிறது, நீரை உறிஞ்சி வைக்கும் பாக்டீரியாக்கள் எப்படி காணாமல் போகிறது போன்றவற்றையும் விளக்குகிறது.  நிலத்தடி நீர்மட்டம் குறைவது, ரியல் எஸ்டேட் கொழுப்பது போனவற்றையும் புரிந்து கொள்ள  முடிகிறது.

தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில், பொலிவியாவின் கொச்சபம்பாவும், தென்னாப்பிரிக்க மக்களி “ப்ரீ பெய்டு” முறைக்கு எதிராக நடத்திய போராட்டம்,  பிலிப்பைன்சின் போராட்டங்களையும் விவரிக்கிறது இந்நூல். நீரை உறிஞ்சி லாபம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் முதலாளிகள் எப்படி நட்ட ஈடு என்ற பெயரில் அநியாயமாக மக்களின் வரிப்பணத்தில் இருந்து காசு வாங்கிக் கொண்டு சென்றார்கள் என்பதை புத்தகம் அம்பலப்படுத்துகிறது.

இந்திய அளவில் கோக்கிற்கும், பெப்சிக்கும் தண்ணீர் எப்படி தாரை வார்க்கப்பட்டுள்ளது , குறிப்பாக தமிழகத்தில் காணாமல் போன ஆறுகள் பற்றியும் சென்னையில் மறைந்து போன 48 ஏரிகளைப் பற்றியும் விளக்குகிறார்கள். தில்லி, திருப்பூர், சென்னை என்ற நகர உதாரணங்களும், தாமிரபரணி கோக்கிற்கு தாரை வார்க்கப்பட்டதையும், பெப்சிக்கு பாலாறு தாரை வார்க்கப்பட்டதையும் பற்றி சொல்கிறார்கள்.

தண்ணீர் இனிமேல் விற்பனைப் பண்டம் தான் என்பதை இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டிருக்கிறோம். அதுதான் இந்த பத்தாண்டில் நடந்துள்ள மாற்றம். ஆனால் எல்லா தண்ணீரும் விற்பனைக்குத்தான் என்ற நிலை வந்தால் எப்படி சமாளிக்க முடியும்.

இருக்கும் விலைவாசியில் சாப்பாட்டுக்கு வழியில்லாத ஏழைகள், தண்ணீரை குடித்து பசியாற்றுவது கூட இனி சாத்தியமற்ற நிலை என்ற சூழலில் இப்புத்தகம் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. தனியார்மய காலத்தில் ஓட்டுச்சீட்டு அரசியலால் இதற்கு தீர்வு கிடையாது என்பதையும், ஒப்பந்தங்கள் எல்லாமுமே அதிகாரிகளால் மட்டுமே கையெழுத்திடப்படுகிறது, அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது என்பதை காட் ஒப்பந்தம் மூலமாக நிரூபித்திருக்கிறது புத்தகம்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க கூடாது என்ற நமது மரபும், தண்ணீர் கேட்டவனுக்கு மோரே கலக்கிக் கொடுத்த பழைய மரபும் அழிந்து, ‘தண்ணீர் இல்லை’ என தேநீர்க் கடைகளும் கைவிரிக்கும்படி மாறி வரும் சூழல், நமது தண்ணீர் உரிமையை பாதுகாக்க நம்மை அழைக்கின்றன.

தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா?

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

விலை : ரூ 30/-
பக்கங்கள் : 72

 1. மறுபுறம் அரசுத் துறைகளை வேண்டுமென்றே நட்டத்தில் ஓட வைத்து தனியாருக்கு மாற வைப்பது/////
  இந்த தனியார் மயமாக்குதலுக்கு மிக முக்கிய காரணம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள்தான். இவர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகள் கிடைத்தும் அவர்கள் சரியாக வேலை பார்க்காமல் இருப்பதுதான். இதற்க்கு சரியான எடுத்துக்காட்டுதமிழ்நாட்டு போக்குவரத்து துறை. இங்க்கு 10 வேலை பார்க்கும் ஊழியர்கள் இருந்தால் இவர்களை கண்கானிக்கும் மேலாளர்கள் 5 பேர் இருப்பார்கள். இந்த 10 ஊழியகள் ஈட்டும் லாபத்தை அனைதையும் இந்த 5 ஊழியகள் சாப்பிடுகிறார்கள்.மேலும் இந்த 10 ஊழியர்களும் சரியாக வேலை செய்வது இல்லை.காரணம் அவர்களுக்கு வேலைக்கான அனைத்து உத்திரவாதம் அரசு தருகிறது.இவர்களுக்கு எந்த இலக்கும் நிர்ணயிப்பது இல்லை. ஒரெ ஒரு பயணி பெருந்திற்க்காக நின்றால் அங்கு இவர்கள் நிற்க்காமல் சென்று விடுவார்கள்.ஆனால் தனியார் பேருந்து அனைத்து இடங்களிலும் நிற்க்கும் மேலும் பேருந்தில் நிற்கவே இடம் இல்லைஎன்றாலும் நிண்று அவர்களை ஏற்றிகொண்டு செல்லும். காரணம் அவர்களின் லாப நோக்கு மக்களுக்கும் பயன் படுகிறது.ஆனால் அங்கும் போட்டி இல்லை என்றால் அவர்களும் அப்படித்தான் செய்வார்கள்,

  • “பேருந்தில் நிற்கவே இடம் இல்லைஎன்றாலும் நிண்று அவர்களை ஏற்றிகொண்டு செல்லும்”

   அடிமாட்டுக்கு அழைத்து செல்கிற மாட்டினைகூட அதிக எண்ணிக்கையில் லாரிகளில் ஏற்றகூடாது.மேனகா காந்தி அரசாங்கத்தில் சுப்ரீம் கோர்ட் தடை.

   பேருந்துகளில் மனிதர்களை ஏற்றுவதில் அதுவும்தமிழ் நாட்டில் கணக்கு எதுவும் இருக்கிறதா?
   நீங்கள் தனியார் பேருந்து முதளாளிக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்,
   (தொழிலாளி விருப்பம் இல்லை,தனியார் பேருந்து முதளாளிகள் அராஜாகம்)

 2. தாகத்திற்க்கா தண்ணீ லாபத்திற்க்கா?
  நம் தாயை விற்றால் அது தேசப்பற்றா?

  (தாகத்திற்க்கா தண்ணீ..)

  தண்ணீ என்ன உன் அப்பன் சொத்தா
  தூக்கி பந்தாடனும் எவனும் அள்ளி வித்தா?

  அந்த தாமேல கைய வச்சா கைய வெட்டடா வெட்டடா

  (தாகத்திற்க்கா தண்ணீ..)

  நீர் ஆகாயம் காற்று நம் பூமி நெருப்பு
  பஞ்ச பூதமெல்லாம் அன்னை இயற்கையின் சொத்து

  அந்த தாமேல கைய வச்சா கைய வெட்டடா..! வெட்டடா..!

  தாகத்திற்க்கா தண்ணீ லாபத்திற்க்கா?
  நம் தாயை விற்றால் அது தேசப்பற்றா?

  -மக்கள் கலை இலைக்கிய கழகப்பாடல்

  • கண்டிப்பா வெட்டணும் ! ஓட ஓட விரட்டணும். தண்ணீர் என்பது அனைவருக்கும் பொது. நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு ! எம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமையானது தண்ணீர். எம் சொத்தை திருடி எமக்கே விற்பவனை என்ன செய்தாலும் தகும்.

 3. இந்த வெளியீட்டை நான் படித்திருக்கிறேன். தண்ணீர்க் கொள்ளையின் ஆழ அகலத்தையும் தனியார்மயத்தின் கொடூரத்தையும் சிறப்பாக விக்கியிருப்பார்கள்.

  தண்ணீர் உள்ளிட்ட இந்த பஞ்சபூதங்கள் எந்த தனியொரு மனிதனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதல்ல. மாறாக இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது ஆகும்.

  இன்றைய சமூகச்சூழலில் நம்மிடம் உள்ள மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று தண்ணீர் உள்ளிட்ட இயற்க்கை வளங்களை இம்மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் எப்படி பங்கீடு செய்வது என்பதே. (அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் வரையில் யாருக்கும் கோக்/பெப்சி கிடையாது என்று நாம் கூறினால் இதை சர்வாதிகாரம் என்று தான் கூறுவார்கள்).

  உண்மையில் இங்கு விவாதங்கள் அதை நோக்கி செல்வது நமது புரிதலை அதிகப்படுத்தும் என்று நினைக்கிறன்.

  நன்றி.

 4. என்ன சின்னபுள்ள தனமான கேள்வி ! தண்ணீர் லாபத்துக்குத்தான். படுபாவிகள் போகிற போக்கை பார்த்தால் இனிமே யாரும் நிலத்தடி நீரை எடுக்க கூடாது ! காசு கொடுத்து பன்னாட்டு பன்னாடைகள் விற்கும் பாட்டிலை தான் வாங்கி குடிக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம். தண்ணீரை கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்ட நம் நாட்டில் தண்ணீரை விற்று கோடீஸ்வரன் ஆகும் பாவிகள் நிறைய உருவாகலாம். மக்களுக்கு முதலில் புத்தி வரவேண்டும். அறிவு வளரவேண்டும். அப்போது தான் நம் வீட்டு தண்ணீரை எடுத்து நமக்கே காசுக்கு விற்கும் சதிகாரர்களின் சூழ்ச்சியை புரிந்து கொள்ள முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க