சீனாவின் சுங்கத்துறை பொது நிர்வாகம் (GAC) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியா சீனாவுக்கு இடையிலான வர்த்தகம் கடந்த 6 மாதங்களில் சுமார் 62.7% அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சீனாவில் பிற எந்த நாட்டுடனான வர்த்தகத்தைக் காட்டிலும் இந்தியாவுடனான வர்த்தக வளர்ச்சி விகிதம் தான் அதிகம் என்றும் அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

உலக அளவில் சீனா மிகப்பெரும் பொருளாதாரமாக வளர்ந்து வரும் நிலையில், அந்த நாட்டின் சுங்கத்துறை பொது நிர்வாகம், கடந்த ஆறு மாதங்களுக்கான அந்நாட்டின் வர்த்தகம் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

சீனாவின் முக்கியமான வர்த்தகக் கூட்டாளி நாடுகளான ஆசியான் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வர்த்தகம் கடந்த ஆறு மாதங்களில் முறையே, 38.2% , 37% , மற்றும் 45.7 % மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவுடனான வர்த்தகம் மட்டும் 62.7% அதிகரித்துள்ளது.

படிக்க :
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
♦ குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு இராணுவத்தினர் மத்தியிலான கைகலப்பு மோதல் படுகொலைகளை ஒட்டி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதி பதற்றம் அதிகரித்தது.

அந்த சமயத்தில் இந்தியாவை சீனாவுடனான போருக்கு அமெரிக்கா தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது. இந்தியாவிலும் பல ‘தேசபக்தாள்கள்’ இந்தியா போரில் இறங்க வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தனர். சமூக வலைத்தளங்களில் கொக்கரித்துக் கொண்டிருந்தனர்.

ஆனாலும் இந்தியா ‘அமைதி’ காத்தது. ரசியாவின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கும், அதனைத் தொடர்ந்து படை விலக்கத்துக்கும் இருநாடுகளும் உடன்பட்டன. அன்று இந்தியா அமைதி காக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தற்போது சீனா வெளியிட்ட, இந்தியாவுடனான வர்த்தகம் குறித்த புள்ளிவிவரங்களில் தெரியவருகிறது.

மக்களுக்கு Boycott China – முதலாளிகளுக்கு Bhai – Bhai China (சகோதர சீனா)

இந்தியா சீனாவுக்கு இடையிலான வர்த்தகம் 2021-ம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களில், 57.48பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 4.28 இலட்சம் கோடியாகும். கடந்த 2020-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் நடைபெற்ற வர்த்தகத்தை விட இது 62.7% அதிகரித்துள்ளது.

இந்த 4.28 இலட்சம் கோடியில் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது, 1.09 இலட்சம் கோடியாகும். சீனாவில் இருந்து செய்யப்பட்ட இறக்குமதியின் மதிப்பு 3.19 இலட்சம் கோடியாகும். இருதரப்பு வணிகத்தில் இந்தியா இறக்குமதி செய்வதுதான் அதிகம். அதாவது இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை விட 3 மடங்கு அதிகமாக சீனா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் ஏற்றுமதியின் அளவை விட இறக்குமதி அதிகரித்திருப்பதை வர்த்தகப் பற்றாக்குறை என்று அழைக்கின்றனர். அப்படி கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஆறு மாதத்தில் இருந்த வர்த்தக்ப் பற்றாக்குறையைவிட இந்த ஆண்டு 55.6% வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

மேற்கூறிய புள்ளிவிவரங்கள், இந்திய – சீன வர்த்தக உறவின் நிலைமையை எடுத்துக் காட்டுகின்றன. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த இரும்புத்தாதுக்களில் 90% அளவிற்கு சீனாவுக்கு ஏற்றுமதியாகின்றது. இதைப் போலவே இந்தியாவிலிருந்து பருத்தி உள்ளிட்ட மூலப் பொருட்கள் தான் சீனாவிற்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன.

சீனாவிலிருந்து, மின்னணு சாதனங்கள், அழகுப் பொருட்கள், எண்ணெய், விளையாட்டுப் பொருட்கள், மருந்துகள், உரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய முதலாளிகளால் விற்கப்படுகின்றன.

இந்தியாவின் தாது மூலப் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையாக சீனாவும், சீனாவின் இறுதிப் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியாவும் இருக்கின்றன. இரு நாட்டு முதலாளிகளுக்கும் இரு நாட்டின் வர்த்தகங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றன. அப்படி இருக்கையில் போரைப் பற்றி அந்த நாட்டு அரசாங்கங்கள் பேச முடியுமா ? இல்லை நினைத்துத்தான் பார்க்க முடியுமா?

அதனால்தான் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த இருந்தரப்பு எல்லைத் தகராறைத் தொடர்ந்து, போர் அறிவிப்பையோ, பொருளாதாரத் தடையையோ இரு நாடுகளும் விதிக்கவில்லை.

உள்நாட்டில் தாம் வளர்த்துவிட்ட போர்வெறிக்கு ஆட்ப்பட்ட ‘தேசபக்தாள்களின்’ உள்ளத்தை நோகச் செய்யக் கூடாது எனும் நல்லெண்ணத்தில் தான் சீனச் செயலிகள் மீது ‘கடும்’ தடையை விதித்தது மோடி அரசு. ‘தேசபக்தாள்களும்’ சீனச் செயலி தடையால் ஒரே மாதத்தில் சீனப் பொருளாதாரம் எவ்வளவு வீழ்ச்சியை அடையப் போகிறது என்பதை பல வண்ண சார்ட்டுகளில் படம்போட்டு புளகாங்கிதமடைந்தனர்.

தற்போது சீனாவிலிருந்து வெளியாகியிருக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள், இந்திய சீன வர்த்தக உறவுகள் மேம்பட்டிருப்பதை போட்டுடைத்து விட்டிருக்கின்றன.

படிக்க :
♦ ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்
♦ இந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் !

இராணுவத்தினர் 20 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்காகவாவது இந்திய அரசு போர் தொடுக்காதா ? என்ற கேள்வி எழலாம்.

எத்தனை இராணுவத்தினர் எல்லையில் கொல்லப்பட்டாலும், இந்திய – சீன பெருமுதலாளிகளின் வர்த்தகம் பாதிக்கும் அளவிற்கு எந்தப் போரும் வராது. ஒருவேளை இரு நாட்டு முதலாளிகளின் எந்த ஒரு தரப்பின் வர்த்தகத்திற்கு ஏதேனும் பாதிப்பு வரும் பட்சத்தில் போர் கண்டிப்பாக முன்னெடுக்கப்படும். அச்சமயத்தில் எத்தனை இராணுவப் படையினர் கொல்லப்பட்டாலும் தமது மூலதன ஆதிக்கம் நிலைநாட்டப்படும் வரை இரு நாட்டு முதலாளிகளும் கண்டிப்பாக போரைத் தொடர்வார்கள். இதற்கு சிரியா, உக்ரைன் நாடுகளில் ரசியா, அமெரிக்கா படைகளுக்கு இடையிலான சண்டையே சாட்சி.

இரு நாட்டு வர்த்தகமும் சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் சூழலில், 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டால், போர் நடக்காது. மாறாக கொல்லப்பட்டவர்களின் பிணங்களைக் காட்டி ஏமாளி இந்தியர்களிடம் தேசிய வெறியையும் போர் வெறியையும் தூண்டிவிட்டு, அதைக் காரணம் காட்டியே ரஃபேல் போன்ற பெரும் தொகையிலான ஆயுதத் தளவாட கொள்முதலை நடத்தி அதிலும், அனில் அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கு நமது வரிப்பணத்தை தாரை வார்ப்பதுதான் நடக்கும்.

தேசபக்திப் பெருமிதமும் சீன – பாகிஸ்தான் வெறுப்பும் நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கானவையே அன்றி பெரு முதலாளிகளுக்கானவை அல்ல !!


கர்ணன்
செய்தி ஆதாரம் : தினமணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க