ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனம் 1994-ம் ஆண்டு மூடப்பட்ட பின்னர், கடந்த 1998-ல் நவீன தொழிற்நுட்பத்துடன் தமிழ்நாட்டிலும், குஜராத்திலும் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தியைத் துவக்கியது. அதன் முதலீடு இன்றைய மதிப்பீட்டின்படி, ரூ.14,000 கோடி. இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் சுமார் 4,000 பேர்; குஜராத்தில் சுமார் 4,500 பேர். இவர்கள் அனைவரும் நிரந்தர தொழிலாளர்கள்.
மேலும், உதிரிபாக உற்பத்தியாளர்கள், போக்குவரத்து, கேண்டீன், துப்புரவு இன்னும் பல பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் சேர்த்தால் இரு மாநில நிறுவனங்களில் பணியாற்றும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 50,000 ஆக இருக்கும்.
இந்தளவு உழைப்பாளர்களைக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தை வருகிற 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மூடப் போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
படிக்க :
♦ ஃபோர்டு பவுண்டேசனுக்கு தில்லானா வாசிக்கும் வைத்தி மாமாக்கள்
♦ ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !
இதற்கு முன்பு மகேந்திரா என்ற நிறுவனத்துடன் தொழில்கூட்டு ஏற்படுத்திக் கொண்டு கார் உற்பத்தியைத் தொடர முயற்சித்தது ஃபோர்டு நிறுவனம். ஆனால் அந்த முயற்சி சாத்தியமாகவில்லை. தன் நிறுவனம் ரூ.14,000 கோடி அளவிற்கு நட்டம் அடைந்திருப்பதே உற்பத்தியை நிறுத்துவதற்கான காரணம் என்கிறது ஃபோர்டு நிறுவனம்.
நோக்கியா நிறுவனமும் இதே காரணத்தை கூறிவிட்டுதான், தனது உற்பத்தியை நிறுத்திக்கொண்டு, அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.21,000 கோடி வரியை ஏய்த்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியது.
“வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். ஆனால், இந்த முறை ஓர் ஆண்டுக்கு மட்டுமே ஊதிய உயர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. அப்போதே ஏதோ நடக்கப்போகிறது என்று எங்களுக்கு சந்தேகம் இருந்தது. இப்போது நடந்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் போட்ட முதலீட்டை காட்டிலும் பல மடங்கு லாபத்தை எடுத்துவிட்டது, ஃபோர்டு நிறுவனம். எங்கள் உழைப்பின் மூலம் பெரும் லாபத்தை அடைந்துவிட்டு இன்றைக்கு வேறு யாருக்கோ இந்த நிறுவனத்தை கைமாற்றி விட முயற்சி செய்வது மிகவும் தவறானது” என்று தற்போது போராடிவரும் சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
000
2018-ல் ராயல் என்ஃபீல்டு, MSB, ஹூண்டாய், நிசான் போன்ற நிறுவனங்கள் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரியதற்காக ஆட்குறைப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றியும், நிறுவனங்களை மூடப்போவதாக மிரட்டியும் தொழிலாளர்களை பணிய வைத்தன.
தற்போது, ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. நட்டம் எனக் கணக்கில் காட்டி முடிந்த அளவிற்கு தொழிலாளர்களை மிரட்டி, கட்டற்ற சுரண்டலை மேற்கொள்வதோடு, அதன் பின்னர் மொத்தமாக நிறுவனத்தை மூடிவிட்டு தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டுவிடுகிறது.
நம் நாட்டின் நீர் வளத்தை உறிந்து, வரி ஏய்ப்பு, வரிச்சலுகை மூலம் மக்கள் வரிப்பணத்தை வாரிச் சுருட்டி, சிறுநீர் கழிக்கக் கூட நேரம் கொடுக்காமல் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உருவாக்கப்பட்ட இந்த ஆலை, தற்போது மூடப்போவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பால், நிரந்தர மற்றும் இதர தொழிலாளர்களையும் நிர்கதியான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது.
தொழிலாளர்களின் உழைப்பை, இயற்கை வளங்களை கொள்ளையடித்துதான் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய ஆலை மூடல் காரணமாக ஃபோர்டு நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
ஆனால், ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை நிறுத்தும் பட்சத்தில் கூலியை நம்பியே வாழும் தொழிலாளர்கள் வாழ்வை இழந்து நடுத்தெருவில் நிர்க்கதியாக நிற்க போவது உறுதி. வேறு வேலைகளைத் தேடுவதற்கான வாய்ப்பும், நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக அடைப்பட்டுவிட்டது. அப்படியே கிடைத்தாலும் ஏற்கெனவே பெற்றுவந்த கூலியை பெற முடியுமா என்றால் அதற்கும் உத்திரவாதம் இல்லை. ஏனெனில் உபரித் தொழிலாளர்கள் நிரம்பி வழியும் இன்றைய நிலையில் அதுவும் சாத்தியமில்லை.
ஏற்கெனவே வேலைவாய்ப்புகள் சுருங்கி வேலையற்றவர்களின் எண்ணிக்கை 7.5 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. தற்போது ஃபோர்டு நிறுவனத்தின் ஆலை மூடல் அறிவிப்பு, மேலும் பல உபரித் தொழிலாளர்களை உருவாக்கும். பிற நிறுவனங்கள் / ஆலைகளுக்கு குறைந்த கூலியில் தொழிலாளர்களை அமர்த்துவதற்கும், ஏற்கெனவே வேலை பார்க்கும் தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைப்பதற்கும் முதலாளிகளுக்குக் கிடைத்த ஒரு ‘பொன்னான’ வாய்ப்பாகும்.
படிக்க :
♦ நோக்கியா மூடல் – மோடியின் மேக் இன் இந்தியா சாதனை !
♦ பூவிருந்தவல்லி தூசான் ஆலை தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய சதி ! || பு.ஜ.தொ.மு
மூடப்படும் நிறுவனங்களை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோருவதை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்கிறது மோடி அரசு. ஏனெனில், “தொழில் நடத்துவது அரசின் வேலை இல்லை” என்று தனது கொள்கையாகவே மோடி அரசு அறிவித்ததோடு, அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் தற்போது ஒன்றிய அரசின் கீழ் இயக்கப்பட்டு வரும் அனைத்து பொதுத்துறை மற்றும் அரசுத் துறை நிறுவனங்களையும் பங்கு விற்பனை, குத்தகை என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகிறது.
தனியார் தான் திறமை என்றும், அவர்கள் தான் தொழில் நடத்த முடியும் என்றும் கூறிவரும் முதலாளித்துவ வாதிகளின் ‘ஜூம்லா’க்கள் பல்லிளித்து பல காலம் ஆகிவிட்டது. இனியும் தனியார் ஆலைகளுக்கு நிலம், நீர், வரிச்சலுகை என சலுகைகளை அள்ளி வழங்கி, அவர்களுக்குச் சாதகமான வகையில் தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக மாற்றும் அரசின் நடவடிக்கைகளைக் கண்டும் காணாமல் செல்ல முடியாது.
அரசு தன் நிலைப்பாடு சரி என்று நிரூபிக்க, இவ்வாலையை மீண்டும் இயக்க வேண்டும்.
நிச்சயமாக மறுசீரமைப்புசெய்ய முடியும். ஆலை ஊழியர்கள் அதற்கானக்கான வரைவு திட்டம் தீட்ட வேண்டும்.
இதற்கு நல்ல உதாரணம், மாருதி நிறுவனம்.