மும்பை இரசாயன ஆலை விபத்து: தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கு அரசே காரணம்!

இராயன ஆலை இயங்குவதற்கு அடிப்படையான பாய்லர் மற்றும் இன்னும் பிற சாதனங்கள் - கருவிகளை பரிசோதிக்க தவறியது, புதியவற்றை வாங்க மறுத்தது என்ற முதலாளித்துவ லாப வெறிதான் பத்து தொழிலாளர்கள் மரணத்திற்கு காரணம்.

மும்பை இரசாயன ஆலை விபத்து:
ஆலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கும்,
தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கும் அரசே காரணம்!

மும்பையில் தானே மாவட்டத்திற்கு உட்பட்ட எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டையில் இயங்கும் அமுதன் இரசாயன ஆலையில் கடந்த 23.05.24 அன்று பாய்லர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் சிதறி பலியாகினர். அறுபது (60) பேர் காயமடைந்துள்ளனர் .

தொழிற்சாலை அருகில் இருந்த வீடுகள் அதிர்ந்து கண்ணாடி உள்ளிட்ட பிற பொருட்கள் உடைந்துள்ளது. மூன்று முதல் நான்கு கீ.மீ வரை அதிர்வுகள் ஏற்பட்டிருக்கிறது.

தீ அணைப்பு படையினர் மட்டும் அல்ல, பேரிடர் மீட்புப் குழுவும் நிவாரண வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுருக்கிறது என்றால் அதன் பாதிப்பின் பரிமாணத்தை உணர முடிகிறது.

முதலாளித்துவ ஊடகங்கள், பத்திரிகை – தொலைக்காட்சிகள் அனைத்தும் முதலில் விபத்து என தலைப்பிட்டு செய்தியை விவரித்துள்ளனர்.

முதற் கட்டமாக அம்மாநில துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் விபத்து குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுருப்பதாக தெரிவித்துள்ளார். ஆலை நிர்வாகம் எட்டு அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மேற்படி அமுதன் இரசாயன ஆலை செயல்படாமல் இருந்துள்ளது (எத்தனை ஆண்டுகள் என்ற விவரம் திரட்ட முடியவில்லை). கடந்த சில வாரங்களாகத்தான் ஆலை இயங்கி வருகிறது என்று சுற்றுப்புற கிராம மக்கள் கூறுவதை பார்க்கையில், உற்பத்தியை விரைவாக துவக்க திட்டமிட்டு பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் காற்றில் பறக்க விட்டிருக்கிறது ஆலை நிர்வாகம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இராயன ஆலை இயங்குவதற்கு அடிப்படையான பாய்லர் மற்றும் இன்னும் பிற சாதனங்கள் – கருவிகளை பரிசோதிக்க தவறியது, புதியவற்றை வாங்க மறுத்தது என்ற முதலாளித்துவ லாப வெறிதான் பத்து தொழிலாளர்கள் மரணத்திற்கு காரணம்.

இறந்த தொழிலாளர்களின் குடும்ப உறவுகள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் துயரங்களுக்கு, வாழ்வாதார பிரச்சனைக்கு யார் பொறுப்பு என நினைக்கையில் நெஞ்சம் கணக்கிறது.


படிக்க: பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வலிகளும் வேதனைகளும்! | கவிதை


தொழிலாளி வர்க்கத்திற்கு குறைந்த பட்சம் தொழிற் சங்க உரிமை, பணியிட பாதுகாப்பு, வேலை நிரந்திரம் வழங்கிய சட்டங்களை எல்லாம் பாசிச மோடி அரசு பறித்ததின் விளைவாக முதலாளித்துவ லாப வெறிக்கு தொழிலாளர்கள் பலியாவது அதிகரித்துள்ளது.

கடந்த 2019-இல் குஜராத் மாநிலம் பாருச் மாவட்டத்தில் யஷாஸ்வி இரசாயன ஆலையில் நடந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 2023-இல் மும்பையில் தற்போது விபத்து நடந்துள்ள அதே எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டை இரசாயன ஆலை ஒன்றில் நடந்த விபத்தில் ஒருவர் பலியாகி ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். 2024 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் ஃபார்மா என்ற மருந்து தயாரிக்கும் ஆலையில் பாய்லர் வெடித்ததில் நான்கு பேர் இறந்தனர்.

இவற்றையெல்லாம் விபத்தாக சித்தரிப்பதை ஏற்க முடியாமா? சாலையில் நடைபெறுவதும் ஆலையில் நடைபெறுவதும் இரண்டும் ஒரே விதமான விபத்தாக கருத முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஏனெனில், உற்பத்தி சார்ந்த நடவடிக்கை திட்டமிட்ட விதிமுறைக்கு உட்பட்டு பயணிக்கும் நடைமுறையாகும். அங்கு நடப்பது எப்படி எதிர்பாராமல் நடக்கும் விபத்தாகும்?

முதலாளித்துவ லாப வெறி உழைப்பை சுரண்டுவதுடன் உயிரை பறிக்கும் நடைமுறை தன்னகத்தே கொண்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அது அன்றாட நிகழ்வாகி வருகிறது.

2017 முதல் 2020 வரையிலான காலத்தில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலையில் ஒவ்வொரு நாளும் மூன்று பேர் இறப்பதாகவும், 11 பேர் காயமடைவதாக தொழிலாளர் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் பொது தொழிற்சாலை ஆலோசனை சேவை மற்றும் தொழிலாளர் நிறுவனங்களின் (Directorate General Factory Advice Service & Labour Institutes – DGFASLI) தரவுகள் தெரிவிக்கும் மற்றொரு செய்தியின்படி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் ஆலைகளில் இறந்த தொழிலாளர்கள் 3331 பேர். இதற்காக கைது செய்யப்பட்டவர்கள் வெறும் 14 பேர் மட்டுமே. இது மோடியின் ஆட்சி கார்ப்பரேட் முதலாளிகளுக்காகத்தான் என்பது சொல்லாமல் சொல்லும் செய்தியாகும்.

தொழிலாளி வர்க்கத்தின் நிலையில் இருந்து மட்டும் அல்ல, விவசாயிகள் இதர உழைக்கும் மக்கள் நிலையில் இருந்து பார்த்தாலும் நிலவும் பாசிச ஆட்சி தனது அடக்குமுறை மற்றும் கருப்பு சட்டங்கள் வழியாக போராடும் மக்களை ஒடுக்கி கார்ப்பரேட் முதலாளிகளை வாழ வைக்கிறது.

தொழிலாளி வர்க்கம் அமைப்பு ரீதியாக திரள்வதும், ”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!” என போராடுவதும் மட்டுமே இப்படிப்பட்ட அநீதிகளுக்கு முடிவு கட்டும்.

பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு அமைக்க அணிதிரள்வோம்!


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க