ன்றிய அரசு வடமாநிலங்களில் இருந்து பச்சரிசியை வழங்குவதால், தர்மபுரி மாவட்டத்திற்கு கடந்த சில மாதங்களாக நெல் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 85 அரவை ஆலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளதால், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, வரட்டாறு, நாகாவதி அணை, தும்பல அள்ளி அணை, கேசர்குழி அணை, ஈச்சம்பாடி அணைகள் உள்ள பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, மாரண்ட அள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் விளையும் நெல், தர்மபுரி மாவட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், டெல்டா மாவட்டத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்ட மக்கள் பச்சரிசியை உணவாக சாப்பிடுகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மாதந்தோறும் 10 ஆயிரம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்து, தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் ஒரு லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்.


படிக்க: WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!


ஆனால் வெறும் 10 ஆயிரம் டன் நெல் மட்டுமே தற்போது தர்மபுரி மாவட்டத்திற்கு வந்துள்ளது. இந்த நெல் மூட்டைகளை நம்பி, தர்மபுரி மாவட்டத்தில் 85 நெல் அரவை ஆலைகள் உள்ளன. இதில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே, தர்மபுரி மாவட்டத்திற்கு நெல் வரத்து இல்லை. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இதை நம்பி கடன் வாங்கி இயங்கிவரும் ஆலைகள் நலிவடைந்து வருகின்றன. இந்நிலையில் தர்மபுரி மாவட்ட நெல் அரவை முகவர்கள் நலச்சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில், புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 50 ஆண்டுகளாக நெல் அரவை செய்து வரும் எங்கள் ஆலைகள் நசிந்து, அதனை நம்பியுள்ள சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்திற்கான பச்சரிசி தேவையை பூர்த்தி செய்ய, சுமார் 85 அரவை ஆலைகள் தர்மபுரியில் இயங்கி வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் பெறப்படும் நெல் ஒதுக்கீடு, தற்போது ஒன்றிய அரசு நிர்ப்பந்தத்தால் நிறுத்தப்பட்டு அரவை ஆலைகள் செயல்பாடு முடங்கியுள்ளது.

இதனால் ஆலைத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தரமான அரிசி வழங்கிக் கொண்டிருக்கிறோம். அரசு வழங்கும் நெல்லைத் தவிர தனியார் நெல் ஒருபோதும் அரவை செய்வதில்லை. கடந்த 50 ஆண்டுகளாக இந்த தொழிலை தொய்வின்றி தொடர்ந்து வருவதால், தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வேலை கொடுத்து வந்தோம்.

தர்மபுரி மாவட்ட அரவை ஆலைகளில் அரவை செய்து பெறப்படும் பச்சரிசி உற்பத்தியை நிறுத்தி விட்டு, இந்திய உணவு கழக கிடங்குகளில் உள்ள இருப்பு பச்சரிசியை பொதுவிநியோக திட்டத்திற்கு வழங்க, ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக பஞ்சாப், அரியானா, சட்டீஸ்கர் மாநிலங்களில் உள்ள ஆலைகளையும், முகவர்களையும் ஊக்குவித்து, பச்சரிசி தயார் செய்து அதனை தமிழ்நாட்டில் உள்ள இந்திய உணவுக் கழக கிடங்குகளில் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்படுகிறது.


படிக்க: மாநிலங்களுக்கு அரிசி கோதுமையை வழங்க எப்.சி.ஐ-க்குத் தடை!


இதனால் தமிழ்நாடு அரவை ஆலைகள் குறிப்பாக தர்மபுரி மாவட்ட அரவை முகவர்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் தொழிலாளிகள் வேலை இன்றி தவிக்கிறார்கள். எனவே கலெக்டர் இப்பிரச்சினை மீது கவனம் செலுத்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், உணவுத்துறை அரசு செயலர் ஆகியோரின் நேரடி பார்வைக்கு எடுத்துச் சென்று, ஆலைகளுக்கு தேவையான மாதம் சுமார் 20 ஆயிரம் டன் நெல்லை ஒதுக்கீடு பெற்றுத்தர, ஆவண செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் “ஆலையில் இயந்திரங்கள் நிறுவ, வங்கிகளில் பெருமளவு கடன் பெற்று, அதற்காக கடன் தொகையினை தொடர்ந்து செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். இந்த இயந்திரங்களை இயக்க 40 முதல் 50 ஹெச்பி வரை கூடுதலாக மின் இணைப்பு பெற்று, அதற்காக மினிமம் கட்டணமாக மாதம் ரூ.30ஆயிரம் முதல் ரூ.60ஆயிரம் வரை கூடுதலாக செலுத்த சிரமப்படுகிறோம்,” என்றும் அரவை ஆலை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நிர்வாகிகள் மேலும் கூறுகையில், “வரும் நாடாளுமன்ற தேர்தலை 10 ஆயிரம் தொழிலாளர்களும், அரவை ஆலை உரிமையாளர்கள், அவர்களது குடும்பத்தினர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம்” என்றும் நெல் அரவை முகவர்கள் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

நன்றி: தினகரன்


குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க