கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்போகும் திராவிட மாடல் அரசாங்கம்!

ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.

ற்போது காவிரி டெல்டா உட்பட தமிழ்நாட்டின் ஆறு இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றது போல் இராட்சத அரவை ஆலைகளை நிறுவி, நேரடியாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து அதனை அரைத்து, அரிசி விநியோகம் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதற்காக வருகிற ஜூன் 27ம் தேதி 15 ஆண்டுகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையானது, நெல்லை சாகுபடி செய்யும் செலவுகளுடன் ஒப்பிடும்போது குறைவு தான். அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்யும்போதே நெல் விவசாயிகளின் நிலை மோசமாக இருக்கிறது.

குறிப்பாக டெல்டா பகுதிகளில் தான் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்தால், இதுவரை விவசாயிகளுக்கு கிடைத்து வந்த குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாமல் போய்விடும். இதனால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள். பின்னர் அந்த விவசாய  நிலங்களை எளிதாக மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அரசும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும்.


படிக்க: ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!


இந்த மாத தொடக்கத்தில் இருந்து பொன்னி, பச்சரிசி, பாஸ்மதி உள்ளிட்ட அனைத்து அரிசி ரகங்களும் விலை உயர்ந்துள்ளன. மூட்டை ஒன்றுக்கு 300 ரூபாய் விலை ஏற்றம் இருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். ஒரு கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளது.

வணிகத்திற்கு தேவையான அளவு தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி இல்லாமல் இருப்பதும் அரிசியை பதுக்கல் செய்வதும் தான் அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்று

அரசு கூறுகிறது. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களால் பல ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளை பதுக்கி அரிசி விலையை செயற்கையாகவே அதிகரிக்க செய்யவும் முடியும்.

மேலும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அரிசியை அதிக விலைக்கு அரசிடமே விற்பனை செய்யக்கூடிய நிலையும் உருவாகும். இதனால்

நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யும் இலவச அரிசியும் ரத்து செய்யப்படும்.

அரசே நெல் கொள்முதல் செய்யும்போதே இந்த நிலை எனில், கார்ப்பரேட் நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்து, அரிசியாக விற்பனை செய்யும் போது நிலமை மிகவும் மோசமாகும்.

ஒருபுறத்தில் அரசு நிர்ணயித்து வைத்துள்ள நெல்லுக்கான ஆதார விலையை விட குறைவான விலையே விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இன்னோரு புறத்தில் அரிசியின் விலை தற்போது உள்ளதை விட இன்னும் அதிகமான விலையில் தான் மக்களுக்கு கிடைக்கும்.


படிக்க: மாநிலங்களுக்கு அரிசி கோதுமையை வழங்க எப்.சி.ஐ-க்குத் தடை!


ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.

கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க- விற்கு சற்றும் சளைக்காமல் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது திராவிட மாடல் அரசாங்கம்.

டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் போராட்டத்தைப் போல, தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடக்கூடிய விவசாயிகளின் போராட்டத்தை கட்டி அமைக்காமல் இது போன்ற கார்ப்பரேட் திட்டங்களை முறியடிக்க முடியாது.

செய்தி ஆதாரம் – தி இந்து தமிழ்


ராஜன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க