இந்தியாவின் தானிய சேமிப்பு கிடங்கிலிருந்து அரிசி கோதுமை போன்ற உணவு தானிய பொருட்களை இனி மாநில அரசாங்கங்களுக்கு விற்கக் கூடாது என இந்திய உணவு கழகத்திற்கு ஆணையிட்டுள்ளது பாசிச மோடி அரசு. இந்த உத்தரவு மாநிலங்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உணவு கழகமானது (எப்.சி.ஐ) விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்களைச் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைத்து, அவற்றை மாநிலங்களின் உணவுப் பொருட்களின் தேவைக்கேற்ப பிரித்து வழங்கும். இந்த நிலையில்தான் மாநிலங்களுக்கு நேரடியாக எந்த விற்பனையும் செய்யக்கூடாது என எப்.சி.ஐ-க்கு உத்தரவிட்டுள்ளது மோடி அரசாங்கம்.
கர்நாடக தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ இலவச அரசி நியாயவிலைக்கடை மூலம் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. தேர்தல் வெற்றிக்குப் பின் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் முதல் திட்டமாக வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கையெழுத்திட்டது.
அதைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசாங்கம் ஜீன் 9 அன்று இந்திய உணவு கழகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்க உள்ளதால் கூடுதலாக 2.28லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவை இருப்பதாகவும் விலை நிர்ணயம் செய்துள்ள படி குவிண்டாலுக்கு ₹ 3,400 கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும் கூறியிருந்தது.
படிக்க: உணவு தானியங்கள் குறைப்பு: காஷ்மீர் மக்களை பஞ்சத்திற்குள் தள்ளும் மோடி அரசு!
கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ஜீன் 12-ஆம் தேதி இந்திய உணவு கழகம் பதில் கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் ஜீன் 13 ஆம் தேதி, ஒன்றிய மோடி அரசு மாநிலங்களுக்கு அரிசி கோதுமைகளை இந்திய உணவு கழகம் இனி விற்கக் கூடாது என உத்தரவிட்டது. காங்கிரஸ் அரசின் திட்டத்தைத் தடுக்கும் வகையில் அரிசி கோதுமை வழங்குவதை மறுப்பதாகக் கூறி மோடி அரசைக் கண்டித்து கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இது ஏதோ கர்நாடக அரசை மட்டும் பாதிக்கக்கூடிய விஷயம் அல்ல. இந்த அறிவிப்பால் அனைத்து மாநிலங்களின் நியாயவிலைக்கடைகளுக்கு தேவையான அரிசி கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் முறையாகக் கிடைப்பதில் பெரும் பிரச்சினை உருவாகும். ஆனால் இதற்கு விளக்கம் அளிக்கும் ஒன்றிய மோடி அரசோ உணவுப் பொருள்களின் தற்போதைய இருப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் உணவுப் பொருட்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்தவுமே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்கிறது.
இவ்வாறு கூறும் மோடி அரசுதான் 15 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ள எப்.சி.ஐ-க்கு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தப் போகிறார்களாம். ஏற்கனவே தமிழ்நாட்டின் உணவு தானிய பற்றாக்குறை என்பது 50,000 டன் ஆக உள்ளது. இதுபோன்ற ஒன்றிய அரசின் முடிவால் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தமிழ்நாடு அரசு உட்பட அனைத்து மாநிலங்களும் தள்ளப்பட்டுள்ளன.
படிக்க: மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!
ஆனால் உண்மையில் ஒன்றிய அரசிடம் உணவு தானிய இருப்பு பற்றாக்குறையா இருக்கிறதா எனப் பார்த்தால் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. அண்மையில் நிதிஆயோக் அளித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆண்டுக்கு 30.9 லட்சம் டன் உணவு தானியங்கள் உபரியாக அரசிடம் உள்ளதாகவும், பெட்ரோல் போன்ற எரிபொருட்களில் 20% எதான் கலப்பதற்காக 2022-ஆம் ஆண்டில் மட்டும் 1.06 லட்சம் டன் அரிசி விற்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.
மேலும் இவர்கள் முன்வைக்கும் மற்றொரு வாதம் “பருவநிலை மாற்றம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது; எனவே எதிர்வரும் காலங்களுக்காக உணவு தானியங்களைச் சேமிக்கிறோம்; இதில் என்ன தவறு இருக்கிறது” என்பதாகும். ஆனால், உண்மை என்ன என்பதை மத்திய விவசாயத்துறை அமைச்சகமே சொல்லியிருக்கிறது. 2022-2023 ஆம் ஆண்டின் மொத்த அரிசி உற்பத்தி 135 மில்லியன் டன். இது சென்ற ஆண்டு உற்பத்தியை விட 6 மில்லியன் டன் அதிக உற்பத்தியாகும். உற்பத்தி அதிகரித்த போதிலும் தங்களிடம் இருப்பு இல்லை என்று காரணம் கூறுகிறது மோடி அரசு.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் உணவு தானிய உற்பத்தி குறையவில்லை; மாறாக விவசாயிகளிடமிருந்து இந்திய உணவு கழகம் விவசாய பொருட்களைக் கொள்முதல் செய்வதுதான் குறைந்திருக்கிறது. தனியார் நிறுவனங்களை நோக்கி விவசாயிகளை விசிறியடிக்கும் நோக்கத்திலும் விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேற வேண்டும் என்ற நோக்கத்திலும் இதுபோன்ற செயல்களை மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கிறது. மற்றொரு பக்கம் தனியார்மய தாராளமய உலகமய கார்ப்ரேட் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவு.
இதன் வெளிப்பாடுதான் விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டு பற்றாக்குறை நிலவுவதாகக் கூறி நியாயவிலைக்கடைகளை ஒழித்துக் கட்டும் நடவடிக்கை.
சித்திக்