மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!

எந்த மேய்தி இன மக்களை தங்களது இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு வளைத்துப் போட நினைத்தார்களோ, அம்மக்களே இன்று அமைதி வேண்டி வீதியில் திரள்கிறார்கள். மோடியை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.

வேதனை அளிக்கும் இந்த வன்முறையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, ராணுவம், மத்திய அமைப்புகள் உட்பட அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக” ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மணிப்பூரின் அமைதியை பற்றி ஆர்.எஸ்.எஸ்க்கு திடீர் அக்கறை ஏன் வருகிறது. அக்கறையெல்லாம் ஒன்றுமில்லை, அது மோடி அரசுக்கு விடுக்கும் எச்சரிக்கை செய்தி!

எங்கள் மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, அது குறித்து மோடி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ரேடியோ பெட்டியை உடைத்து “மன்கி பாத்” நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் மணிப்பூர் மக்கள், தீப்பந்தம் ஏந்தி போராடினார்கள் பெண்கள். போராடுபவர்கள் எல்லாம் மேய்தி இன மக்கள் என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்கது.

நான் தொட்டதெல்லாம் எரிந்து சாம்பலாக வேண்டும் என்று வரம் கேட்டவன், தன் தலையிலேயே கை வைத்துக் கொண்டதுபோல் ஆகியிருக்கிறது காவிக் கும்பலின் நிலை.

எந்த மேய்தி இன மக்களை தங்களது இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு வளைத்துப் போட நினைத்தார்களோ, அம்மக்களே இன்று அமைதி வேண்டி வீதியில் திரள்கிறார்கள். மோடியை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.


படிக்க: எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!


டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டமாக  உருத்திரண்டு எழுந்தபோது, “அரசுக்கு எதிரான நீண்ட காலப் போராட்டம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களிடையே பிளவை அதிகரித்து விடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்றது ஆர்.எஸ்.எஸ். (இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளக் கட்டுரை 20.11.2021)

தற்போது மணிப்பூர் வன்முறை குறித்து ஆர்.எஸ்.எஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையையும் இதனோடு இணைத்துத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இரண்டுமே பீதியின் வெளிப்பாடுகள். தங்களது நிகழ்ச்சி நிரல் தங்களுக்கே எதிராய் மாறிப்போவதை எதிர்கொள்ள முடியாத அச்சத்தின் வெளிப்பாடுகள்!

மதவெறி பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம். ஆனால் உழைக்கும் மக்களோ அமைதியை விரும்புகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!

புதிய ஜனநாயகம் முகநூலிலிருந்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க