வரலாறு மீண்டும் திரும்புகிறது! உலகெங்கும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் நாள்தோறும் வெடித்தெழுகின்றன. செங்கொடி உயர்கிறது. சர்வதேச தொழிலாளர் தினமான மே 1 அன்று உலகெங்கும் நடந்த போராட்டங்களே அதற்கு சிறந்த சான்றுகளாகும்.
அதன் தொடர்ச்சியாக, உலக இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் வரைமுறையின்றி உறிஞ்சிக் கொழுக்கும் ஏகாதிபத்திய அமெரிக்காவில், வரலாற்றில் முதன்முறை எனும் அளவிற்கு வெடித்திருக்கிறது, வாகன (Automobile) உற்பத்தி ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம். கார் உற்பத்தி நிறுவனங்களில் மிகப்பெரும் மூன்று பகாசுர நிறுவனங்களான, ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெல்லண்டிஸ் ஆகிய ஆலைகளில் தான் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் மிக்சிகன், மிசோரி மற்றும் ஓகியோ ஆகிய மாநிலங்களில் மூன்று ஆலைகளில் பணிபுரியும், அமெரிக்க வாகனத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 13,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் 2023 செப்டம்பர் 14-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், முன்னதாகவே, புதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் தொழிலாளர்கள் போராட்டமானது வெறும் ஊதிய உயர்வுக்கானது மட்டுமல்ல.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தத்தாலும், ஆலைகளில் உற்பத்திக் குறைப்பாலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. அதுமட்டுமின்றி, இந்த ஆலைகளில் நிரந்தப் பணியும் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, தயாரிக்கப்பட்ட எரிபொருள் வாகனங்களுக்குப் பதிலாக, மின்சார வாகனங்களைத் தயாரிக்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதால், நிரந்தர வேலையின்மை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
படிக்க: லிபியா பேரழிவு: இரத்தவெறிபிடித்த அமெரிக்காவும் நேட்டோவுமே முதல் குற்றவாளிகள்!
ஜெனரல் மோட்டார் நிறுவனத்தில் 5 முதல் 10 சதவிகிதம், ஸ்டெல்லண்டிஸில் 12 சதவிகிதம் மற்றும் ஃபோர்டு நிறுவனத்தில் 3 சதவிகிதம் என ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும், இந்நிறுவனங்களில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையோ மிகவும் கொடூரமானது. ஒரு நாளைக்கு 12 மணிநேரம் என வாரத்திற்கு 7 நாட்கள் வேலை செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கான பாதுகாப்போ, வேலை உத்தரவாதமோ, போதிய ஊதியமோ இல்லை. அவர்களது எதிர்காலத்திற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. அமெரிக்கத் தொழிலாளர்களின் இந்த உத்தரவாதமற்ற வாழ்க்கைச்சூழல்தான் அவர்களைப் போராட்டக்களத்திற்கு தள்ளியிருக்கிறது.
ஸ்டெல்லண்டிஸ் நிறுவனத்தில் மூன்றாண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாக பணிபுரியும் 45 வயதான டெனிஷா ஹோட்ஜஸ், “மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு 15.78 டாலருக்கு வேலைக்கு சேர்ந்த எனக்கு தற்பொழுது ஒரு மணி நேரத்திற்கு 17.53 டாலர்தான் ஊதியமாகத் தரப்படுகிறது” என்று தனது ஊதிய இழப்பு கொடூரத்தைக் குறிப்பிடுகிறார்.
எனவே, 40 சதவீத ஊதிய உயர்வு, 32 மணி நேர வேலைக்கு 40 மணி நேர வேலை சம்பளம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக்களுக்காக போராட்டத்தை அறிவித்திருக்கிறது, அமெரிக்கத் வாகனத் தொழிலாளர்கள் சங்கம்.
88 ஆண்டு கால பாரம்பரியமிக்க இந்தச் சங்கத்தில் அமெரிக்கா முழுவதிலும் உள்ள 1,50,000 நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
அமெரிக்கத் தொழிலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கும், அமெரிக்க வாகன தொழிற்சங்கத் தலைவர் ஷாவ்ன் ஃபெய்னோ, “நாங்கள் பணத்திற்காக அல்ல, தொழிலாளர்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்.
அதனால்தான், மிக்சிகன், மிசோரி மற்றும் ஓகியோ மாநிலங்களில் உள்ள வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளில் நடந்த போராட்டம், அமெரிக்காவில் உள்ள 20 மாநிலங்களில் 38 தொழில் நிறுவனங்களில் தீயாய் பரவியிருக்கிறது. கிட்டத்தட்ட 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதிதாக போராட்டக் களத்தில் குதித்திருக்கின்றனர்.
படிக்க: ஈராக்: புல்லுருவி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புபோரை தொடுத்து 20 ஆண்டுகள் நிறைவு!
வாகனத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் உணவகம் நடத்திவரும் இதர உழைக்கும் வர்க்கத்தினரும் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஃபோர்டு நிறுவனத்திற்கு அருகில் உணவகம் நடத்திவரும் ஜெனிபர் மற்றும் டேவிட் ரொமிரோ, “எங்களுக்கு அருகிலிருப்பவர்கள் நீலக் கழுத்துப்பட்டை தொழிலாளர்கள். அவர்கள் வேலை செய்யாமல் போனாலோ பணம் செலவழிக்காமல் போனாலோ எங்களால் சம்பாதிக்க முடியாது” என்று தொழிலாளர் போராட்டத்தினை ஆதரிக்கின்றனர்.
அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவுடன், தொழிலாளர் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மூன்று பகாசுர கார் உற்பத்தி நிறுவனங்களோ 20 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே கொடுக்க முடியும் என்கின்றனர். 40 மணி நேர வேலை நேரத்தைக் குறைக்க முடியாது என்கின்றனர். இக்காரணத்தால் அமெரிக்கத் தொழிலாளர்களின் போராட்டம் தற்போது ஒரு முடிவுக்கு வராது என்ற நிலையே நீடிக்கிறது.
நீண்ட காலத்திற்குப் பிறகு அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் போராட்டத்தில் குதித்திருப்பது தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒரு முன்னேற்றகரமான நிலைமையாகும். ஐந்து மாதங்களாக நடந்துவந்த அமெரிக்க ஹாலிவுட் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் போராட்டம் வெற்றி அடைந்திருப்பது இத்தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகும்.
படிம எரிபொருள் வாகனங்களை மின்கல வாகனங்களாக மாற்றும் ஏகாதிபத்தியங்களின் திட்டமானது, புதிய சந்தையையும் குறைந்த கூலியையும் மலிவான கச்சாப் பொருட்களையும் வேட்டையாடும் ஏகாதிபத்திய லாபவெறிப் போட்டியின் விளைவாகும்.
ஆகையால், தொழிலாளர்கள் தங்களது உரிமைகளைத் தக்கவைக்க, ஏகாதிபத்தியங்களின் மக்கள் விரோத காலனியாதிக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். அந்தவகையில், அமெரிக்கத் தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிப்பது இந்திய உழைக்கும் மக்களின் கடமையுமாகும்.
அப்பு
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)