லிபியா பேரழிவு: இரத்தவெறிபிடித்த அமெரிக்காவும் நேட்டோவுமே முதல் குற்றவாளிகள்!

லிபியாவில் கடாஃபியை ஒழித்துக் கட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. அதன் காரணமாகத்தான் லிபியாவில் தற்போது வரை உள்நாட்டுப் போர் தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போர் சூழலால்தான் லிபியாவில் ஒரு நிலையான அரசு அமையவில்லை. இதனால் லிபியாவின் பெரும்பாலான பகுதிகள் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கியுள்ளன.

0

டந்த செப்டம்பர் 10 அன்று வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் கிழக்கு பகுதியை மத்தியதரைக் கடலில் உருவான டேனியல் புயல் தாக்கியது. இதன் காரணமாக அங்கு பெங்காசி, சூசா, பைடா, அல்-மார்ஜ் மற்றும் டொ்ணா ஆகிய நகரங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் வாடி டெர்ணா (Wadi Derna) ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரண்டு அணைகள் உடைந்தன; 4 பாலங்கள் இடிந்தன. அணைகள் உடைந்ததால் டொ்ணா நகரம் சுனாமி போன்றதொரு வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது.

இவ்வெள்ளத்தில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். டொ்ணா நகரில் 11,300 பேர் இறந்துள்ளதாகவும் 10,100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் லிபிய செம்பிறைச் சங்கம் ( Libyan Red Crescent) கூறியது; கிழக்கு லிபியாவின் மற்ற பகுதிகளில் 170 பேர் இறந்திருக்கலாம் என்றும் கூறியது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் தரவு 3,958 பேர் இறந்துள்ளதாகவும் 9,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் கூறுகிறது. கிழக்கு லிபிய அரசோ இதுவரை 3,283 பேரை புதைத்துள்ளதாகக் கூறுகிறது. எண்ணிக்கை எதுவாயினும் மக்களின் சடலங்கள் இன்னும் கடலில் மிதந்து கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இடிபாடுகளில் சிக்கி மீட்கப்படாத உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டன. உலக வரலாற்றில் இது நிச்சயம் மிகப்பெரிய பேரழிவாக இருக்கும்.

வாடி டெர்ணா (Wadi Derna) ஆறு | நன்றி: பிபிசி

000

கிழக்கு லிபியா பகுதியில் மிக டுமையான மழைப்பொழிவு இருந்தது. டொ்ணா நகருக்கு அருகில் உள்ள அல்-பைடா (Al-Bayda) நகரைப் பொறுத்தவரை, அங்கு செப்டம்பர் மாதத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையின் அளவு என்பது 12.7 மில்லமீட்டர் (மிமீ) தான்; ஆண்டு சராசரியே 543.56 மிமீ தான். ஆனால், செப்டம்பர் 10 காலை 8 மணி முதல் செப்டம்பர் 11 காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு மட்டுமே 414.1 மிமீ. அதாவது, அல்-பைடா நகரில் ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழையில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமான மழை 24 மணி நேரத்தில் பெய்திருக்கிறது.

பெரும் பகுதி பாலைவனமான லிபியாவில் இவ்வளவு மழைப்பொழிவு ஏற்பட்டதற்குக் காரணம் புவி வெப்பமயமாதலும் பருவநிலை மாற்றமும் தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். புவி வெப்பமயமாதலுக்கு ஏகாதிபத்திய சுரண்டலும் லாபவெறியும் தான் காரணம் என்பதைக் கூட முதலாளித்துவ ஊடகங்கள் பலவும் எழுதுகின்றன. இது முற்றிலும் சரியானதே. ஆனால், இந்த ஊடகங்கள் திட்டமிட்டே ஒரு விடயத்தை மறைக்கின்றன, அதைத்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.


படிக்க: லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!


டேனியல் புயல் உருவானதற்கும் அதீத மழைப்பொழிவு ஏற்பட்டதற்கும் மட்டும் தான் புவி வெப்பமயமாதல் காரணம். ஆனால், கொத்துக் கொத்தாக மக்கள் பெருவெள்ளத்திற்கு பலியானதற்கான காரணம் யார் என்பதைத் தான் கிட்டத்தட்ட அனைத்து முதலாளித்துவ ஊடகங்களும் பேச மறுக்கின்றன. அந்த குற்றவாளிகள் யாரென்று தெரியாததால் இவர்கள் பேசாமலிருக்கவில்லை; அவர்களிடம் பொறுக்கி உண்பதால் தான் பேச மறுக்கிறார்கள்.

அந்தக் குற்றவாளிகள் யார் தெரியுமா? அமெரிக்க ஏகாதிபத்தியமும் நேட்டோவும் தான்.

2011-ஆம் ஆண்டு ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு நேட்டோ படையைக் கொண்டு லியியா மீது ஆக்கிரமிப்புத் போரைத் தொடுத்தது. நாற்பத்திரண்டு ஆண்டுகளாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வந்த முவாம்மர் கடாஃபியை (Muammar Gaddafi) வீழ்த்தி லிபியாவில் ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்கு உதவுவதாக அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியது. ஆனால், எண்ணெய் வளத்திற்காகவும் பெட்ரோ டாலரின் மேலாதிக்கத்தைக் காத்துக்கொள்வதற்காகவும் தான் 25,000 லிபியர்களைக் கொன்று அப்போரை நடத்தியது.

போரின் இறுதியில் கடாஃபி கொல்லப்பட்டார். ஆனால், அன்று முதல் இன்று வரை லிபியாவில் உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எண்ணெய் வளமிக்க நாடான லிபியா தற்போது ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரினால் லிபியாவில் தற்போது இரண்டு அரசாங்கங்கள் உள்ளன: ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட திரிபோலி (Tripoli) நகரைத் தலைநகராகக் கொண்டு மேற்கு பகுதியில் இயங்கும் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் (Government of National Unity), கிழக்கு பகுதியைக் கட்டுப்படுத்தும் பெங்காசியை (Benghazi) தலைமை இடமாகக் கொண்ட லிபிய தேசிய ராணுவத்தின் (Libyan National Army) தலைவர் கலீஃபா ஹப்தார் (Khalifa Haftar) தலைமையிலான அரசாங்கம். இன்னும் சில பகுதிகள் பயங்கரவாதிகள் மற்றும் பழங்குடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது பாதிக்கப்பட்டுள்ள டெர்ணா லிபியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லிபியாவை கட்டுப்படுத்தும் அரசாங்கங்கள் | நன்றி: டி.டபுள்யூ நியூஸ்

முன்னதாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வுடன் நெருக்கமாக இருந்த கிழக்கு பகுதியைக் கட்டுப்படுத்தும் கலீஃபா ஹப்தார் தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளோடு நெருக்கம் காட்டி வருகிறார்.

மேலும், டெர்ணா பகுதியில் சில இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களும் அமெரிக்க உளவாளிகளும் செயல்பட்டு வருவதால் அப்பகுதியை ஹப்தார் கண்டுகொள்ளவில்லை. தற்போது உடைந்துள்ள இரு அணைகளிலும் விரிசல்கள் இருந்ததை முன்னரே அறிந்திருந்தும் கவனம் செலுத்தவில்லை.

லிபியாவில் கடாஃபியை ஒழித்துக் கட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. அதன் காரணமாகத்தான் லிபியாவில் தற்போது வரை உள்நாட்டுப் போர் தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போர் சூழலால்தான் லிபியாவில் ஒரு நிலையான அரசு அமையவில்லை. இதனால் லிபியாவின் பெரும்பாலான பகுதிகள் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கியுள்ளன. “கடாஃபி இறந்ததிலிருந்தே இதுதான் எங்களுடைய நிலை இதுவாகத்தான் உள்ளது” என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.


படிக்க: லிபியா – அமெரிக்காவின் மற்றுமொரு புதைகுழி ?


லிபியாவின் இந்த அவலநிலைக்கும், தற்போது அணைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் அணை உடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் அமெரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோ கூட்டணி நாடுகளும்தான் காரணம்.

லிபியாவின் இந்த நிலைக்குக் காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியம் தற்போது லிபியாவின் நிவாரணத்துக்காக 12 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 26 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. ஆனால், 2011-ஆம் ஆண்டில் லிபியா மீதான ஆக்கிரமிப்பு போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகையோ 1.1 பில்லியன் டாலர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் நிவாரண உதவிகளை வழங்கி மனித முகம் கொண்டதாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும், முதலாளித்துவ ஊடகங்கள் இப்பேரழிவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கு குறித்துப் பேச மறுத்தாலும் இந்த பேரழிவால் ஏற்பட்ட மரணங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் நேட்டோ கூட்டணியும்தான் காரணம் என்பதை மறைக்க முடியாத உண்மை. எவ்வளவு நிதியுதவி அளித்தாலும் தங்கள் கரங்களில் படிந்துள்ள இரத்தக்கரையை இவர்களால் மறைக்க முடியாது.


பொம்மிவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க