Monday, September 16, 2024
முகப்புஉலகம்அமெரிக்காலிபியா – அமெரிக்காவின் மற்றுமொரு புதைகுழி ?

லிபியா – அமெரிக்காவின் மற்றுமொரு புதைகுழி ?

-

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தை லிபியா டான் (லிபிய விடியல்) என்ற இசுலாமிய குழுக்களின் படைகள் கைப்பற்றியிருக்கின்றன.

திரிபோலி அமெரிக்க தூதரகம்
லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகம்

லிபியாவில், மிசுராத்தா என்ற கடலோர நகரத்தைச் சேர்ந்த இசுலாமிய போராளிகளைக் கொண்ட லிபிய விடியல் குழுவிற்கும், ஓடிப்போன ஜெனரல் காலிஃபா ஹிஃப்டருடன் சேர்ந்திருக்கும் கிழக்குப் பகுதி மற்றும் மேற்கத்திய மலை நகரமான சிந்தானைச் சேர்ந்த போராளிகள், கடாஃபியின் முன்னாள் வீரர்கள் ஆகியோருக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது.

எதிரெதிராக பிரிந்துள்ள ஆயுதம் தாங்கிய இந்த குழுக்களுக்கிடையேயான சண்டை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் அமெரிக்க தூதரக அதிகாரிகள் லிபியாவை விட்டு அண்டை நாடான துனிசியாவுக்கு ஓடிவிட்டார்கள். நிலைமை மேம்படும் வரை தூதரக நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்திருந்தது.

முன்னதாக, 2012-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் அமெரிக்கத் தளம் ஒன்றில் நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ், கடற்படை அதிரடி வீரர்கள் டைரோன் வுட்ஸ், கிளென் டோரத்தி, வெளியுறவுத் துறை தகவல் தொடர்பு அதிகாரி சோன் ஸ்மித் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்.

இப்போது, லிபிய விடியல் குழு திரிபோலி விமான நிலையத்தை கைப்பற்றியிருக்கிறது. லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் ஜெனரல் காலிஃபா ஹிஃப்டரின் படைகளுக்கு எதிராக லிபிய விடியல் குழுவினர் வெற்றி பெற்று வருகின்றனர்.

திரிபோலி விமான நிலையத்தில் லிபிய விடியல் அமைப்பு கைப்பற்றிய 11 ஜெட் விமானங்கள் செப்டம்பர் 11, 2001-ல் அமெரிக்காவில் நடத்தப்பட்டது போன்ற தாக்குதல்களை நடத்த பயன்படுத்தப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இசுலாமிய குழுவினர் விமானங்களின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு இணையத்தில் வெளியிடுகின்றனர். அவர்கள் வசம் ஏர்பஸ் 319 (பறக்கும் திறன் 3,700 நாட்டிக்கல் மைல்), ஏர்பஸ் 320 (3,300 நாட்டிக்கல் மைல்), ஏர்பஸ் 330 (4,000-7,000 நாட்டிக்கல் மைல்), ஒரு ஏர்பஸ் 340 (7,900 நாட்டிக்கல் மைல்) வகையிலான விமானங்கள் சிக்கியிருக்கின்றன. இந்த விமானங்களின் பறக்கும் திறன் லண்டன், பாரிஸ், வாஷிங்டன் டிசி, நியூயார்க் போன்ற மேற்கத்திய நகரங்களை எட்டும் அளவிலானது.

லிபிய விமானங்கள்
கைப்பற்றப்பட்ட விமானங்களுடன் இசுலாமிய குழுவினர்

இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் அவரது நாடு, இது வரை இல்லாத அளவு தீவிரமான, ஆழமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக கூறிக் கொண்டு அமெரிக்கா தமது மூக்குகளையும், ஆயுதங்களையும் நுழைத்த லிபியா இன்று அராஜகத்திலும், வன்முறையிலும் மூழ்கிக் கொண்டிருப்பது குறித்து, தனது முன்னாள் தூதரக வளாகம் கூட இசுலாமிய தீவிரவாதிகள் வசம் போய் விட்டது குறித்து கருத்து கூறிய அமெரிக்க வெளியுறவுத் துறை கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சாதிக்கிறது.

“நாங்கள் செய்திகளையும், வீடியோக்களையும் பார்த்தோம், கூடுதல் விபரங்களை திரட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரம் வரை தூதரக வளாகம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், கள நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்கிறார் ஒரு மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி. “லிபிய அரசுடனும் தொடர்புடைய மற்ற குழுக்களுடனும் தொடர்ந்து உரையாடி வருகிறோம். வாஷிங்டனிலிருந்தும், வலெட்டாவிலிருந்தும் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் அவர்.

லிபியாவுக்கான அமெரிக்க தூதர் டெபொரா ஜோன்ஸ், தூதரக வளாகம் கைப்பற்றப்பட்டதாகத்தான் தெரிகிறது, சூறையாடப்பட்டதாக தெரியவில்லை என்றும் ஜூலையிலேயே அந்த வளாகத்தை விட்டு போய் விட்டதால், அதை அமெரிக்காவின் இறையாண்மைக்குட்பட்ட பகுதி என கருத முடியாது என்று இன்னொரு அதிகாரியும் சப்பைக் கட்டு கட்டுகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு முன்பு லிபியாவின் அப்போதைய சர்வாதிகாரி முவாம்மர் கடாஃபிக்கு எதிரான இசுலாமிய குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி ஊக்குவித்தன நேட்டோ கூட்டமைப்பு நாடுகள். பெங்காசி நகரில் பெருமளவு படுகொலைகள் நடக்கவிருப்பதாக சொல்லி, அதை தடுப்பதற்காக லிபியாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதாகக் கூறி கடாஃபியின் படைகள் மீது வான்வழி, கடல் வழி தாக்குதல் நடத்தின.

லிபிய விடியல் விமான நிலையத்தில்
திரிபோலி விமான நிலையத்தில் லிபிய விடியல் குழு

இறுதியில் கடாஃபியின் தலைக்கு விலை வைத்த நேட்டோ நாடுகள் அவரை பிடித்து கொடூரமாக கொன்றொழித்த இசுலாமிய பயங்கரவாத படைகளை லிபியாவை விடுவிக்க வந்த ஜனநாயக சக்திகள் என்று போற்றினர்.

“பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர்” என்று இளைய புஷ் அறிவித்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக ஆதிக்கத்தை நிலைநாட்டவும், எண்ணெய் வளங்களை கைப்பற்றவும் ஆரம்பித்து வைத்த போரில் பரிதாபமான முறையில் தோற்றுக் கொண்டிருக்கிறது. தனது உண்மையான நோக்கங்களை மறைத்து அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டப் போவதாக பொய் சொல்லி தலையிட்ட ஆப்கானிஸ்தான், ஈராக், இப்போது லிபியா என அனைத்து நாடுகளும் தீராத உள்நாட்டு போரில் சிக்கியிருக்கின்றன. அமெரிக்கா திட்டமிட்டு வளர்த்து விட்ட இசுலாமிய பயங்கரவாத குழுக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புகின்றன.

ஒருவகையில் இத்தகைய நாடுகள் இப்படி உள்நாட்டுச் சண்டையில் முடிவே இல்லாமல் சிக்கியிருப்பது அமெரிக்காவிற்கு உதவவும் செய்யும். அடிமைகளை இப்படி சண்டையிட்டுக் கொள்ள வைப்பது ஆதிக்கம் செய்பவனுக்கு தொந்தரவாக மாறாது. அதே நேரம் அமெரிக்காவின் பிரச்சினையே வேறு.

2001-ம் ஆண்டுக்குப் பிறகு லிபிய சர்வாதிகாரி முவாம்மர் கடாஃபி மேற்கத்திய கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, லிபியாவின் அணுஆயுத திட்டத்தை கண்காணிப்புக்கு உட்படுத்தி, லிபியாவில் மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்கள் நுழைய அனுமதி அளித்தார். ஆனால், முழுமையாக பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு சரணடையவில்லை என்பது அமெரிக்காவின் பிரச்சனை.

அமெரிக்கா கொண்டு வருவதாகச் சொன்ன ஜனநாயகமும் சுதந்திரமும் அந்த மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கானவைதான். கடாஃபியின் ஆட்சியின் கீழ் லிபிய தேசிய எண்ணெய் கழகத்திடம் உரிமம் பெற்று தொழில் செய்ய வேண்டிய அவர்களது அடிமை நிலையை ஒழித்து, லிபியாவின் எண்ணெயை எடுத்து விற்பதற்கான ஜனநாயக உரிமையை ஈட்டிக் கொடுப்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது ஆதாரங்களின் மூலம் அம்பலமானது.

ஈராக்கில், “சாதித்து விட்டோம்” என்று இளைய புஷ் அறிவித்தது போன்று லிபியாவில் கடாஃபி வீழ்ந்தவுடன், “நான் அனைவரும் சேர்ந்து வெற்றியை சாதித்திருக்கிறோம்” என்று அறிவித்தார் நேட்டோ தலைவர். ஆனால், அமெரிக்காவின் ஏகாதிபத்திய விரிவாக்க நடவடிக்கைகள் ஈராக்கைப் போலவே லிபியாவையும் வன்முறை சுழலுக்குள் ஆழ்த்தியுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ராணுவ பலமும் தொழில்நுட்ப வல்லமையும், உலகையே அதற்க்கு அடிமையாக்கும் நோக்கத்துக்கு உதவப் போவதில்லை. ஏகாதிபத்தியங்கள் வெறும் காகிதப் புலிதான் என்பதும் லிபியாவிலும் நிரூபணம் ஆகிக் கொண்டிருக்கின்றது. மற்றொரு புறம் அமெரிக்கா உதவியுடன் விடுதலை பெற்றதாக கூறப்படும் நாடுகளின் யோக்கியதை என்ன என்பதை லிபியாவின் நிலையிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க