ஈராக்: புல்லுருவி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புபோரை தொடுத்து 20 ஆண்டுகள் நிறைவு!

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 20 ஆண்டுகள் ஆகியும் 2,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் ஈராக் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. தற்போது அவர்கள் கூறும் காரணமோ ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது. ஆனால், ஐ.எஸ் அமைப்பு உருவாவதற்கு காரணமே அமெரிக்கா தான் என்பது உலகறிந்த விசயம்.

க்ரைன் ரசிய போரால் தாம் கொல்லப்பட்டுவிட்டால், தமது குழந்தைகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக முதுகில் முகவரிகளை எழுதிய பெற்றோர்களின் காட்சி நமது நெஞ்சை உலுக்கியது. இத்தகைய கொடூரமான சம்பவம் தான் மார்ச் 20, 2003 அன்று ஈராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட போர் பிரகடனம். அக்கொடிய நிகழ்வு தொடங்கி 20 ஆண்டுகளை கடந்துவிட்டோம். பிணந்தின்னி ஏகாதிபத்திய அமெரிக்கா தொடுத்த போரினில் கழுத்தறுக்கபட்டு உடலில் இரத்தம் சொட்ட சொட்ட குற்றுயிரும் குலையுயிருமாக உயிரைவிடும் நிலையில் இருந்தது ஈராக். இன்றும் சொட்டும் இரத்தத்தை குடித்து கொண்டுதான் இருக்கிறது அமெரிக்கா.

இந்த மறுகாலனியாக்க நடவடிக்கைக்கு உலக யோக்கியன் புஷ் அன்று இட்ட பெயர் “ஈராக்கிய விடுதலை நடவடிக்கை’’ (Operation Iraqi Freedom). ‘அதிபர் சதாம் உசேனின் ஈராக்கை நிராயுதபாணி ஆக்குவது; பேரழிவு ஆயிதங்களை (Weapons of mass destruction) அழிப்பது’ – இதன்மூலம் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு அபாயத்தை நீக்குவது என்று முழங்கியது புஷ் – பிளேர் கும்பல்.

ஆனால் எதார்த்தத்தில் நடந்ததோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னிடம் இருந்த பேரழிவு ஆயுதங்களை சோதித்தறிய வாய்ப்பாக ஈராக்கை பயன்படுத்திக் கொண்டது தான். இதன்மூலம் தனது ஆயுத சந்தையை விரிவுபடுத்திக் கொண்டது.

சதாம் உசேனின் கொடுங்கோல் ஆட்சியை நீக்கிவிட்டு ஜனநாயகத்தை நிறுவுவதே தனது நோக்கம் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவது தான் அமெரிக்காவின் நோக்கம் என்பது உலகிற்கு அம்பலப்பட்டு போனது.


படிக்க: ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை


இந்தப் போர் 2003-ஆம் ஆண்டு தொடங்கப்படவில்லை; இதற்கு முன்னர் 1991-ஆம் ஆண்டிலேயே பல்வேறு முனைகளில் சிறுசிறு அளவுகளில் தொடங்கப்பட்டுவிட்டது. ஐ.நா விதித்த பொருளாதார தடையினாலும் அமெரிக்க தாக்குதலாலும் உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு 6 லட்சம் குழந்தைகள் செத்து மடிந்தனர். போர் காலங்களில் தினமும் 1500 முறைக்கு மேல் விமானங்கள் மூலம் பல ஆயிரம் டன் குண்டுகளை பாக்தாத் நகர் மீது வீசப்பட்டது.

அமெரிக்கா பயன்படுத்திய துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகள், ஏவுகணை முனைகள் அனைத்திலும் நுண்ணிய யுரேனிய அணுசக்தி துகள்கள் பயன்படுத்தப்பட்டன. போரின் போது இராணுவத்தினர் மட்டுமல்ல போருக்கு பின் ஆயிரம் ஆயிரம் குடிமக்களும் செத்து மடிந்தனர். ஈராக் மக்கள் மட்டுமல்ல அமெரிக்க கூலிப்படையினரும் நோய்க்கு பலியானார்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 67 சதவீத குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். 2003 – 2011 இடைப்பட்ட காலத்தில் மட்டும் 4,61,000 பேர் இறந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது.

“ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் அவர்களின் வர்க்க நலன் அடங்கி இருக்கிறது” என்பதற்கேற்ப புஷ் முழங்கிய வார்த்தைக்கு பின்னும் ஒரு வர்க்க நலன் அடங்கி இருந்தது. அமெரிக்காவை உலக ஒற்றை துருவ மேலாதிக்க வல்லரசாக நிறுவிக்கொள்ளவும் உலக ஏகபோக நிறுவனங்களின் மறுகாலனியாக ஈராக்கை மாற்றுவதே அது.

“ஈராக்கிய விடுதலை நடவடிக்கை’’ என்று முழக்கியது எல்லாம் பிற அரபு நாடுகளில் உள்ளதை போன்று ஈராக்கிலும் ஏகாதிபத்திய அடிவருடி கும்பலுக்கு சேவை செய்யும் உல்லாச – ஊதாரிகள் அடங்கிய ஒரு பொம்மை ஆட்சியை அமைப்பதைதான். அன்று அதிபர் புஷ் பிணக்குவியல் மீது ஏறி நின்று ஈராக்கின் எண்ணெய் வளங்கள் அந்நாடு மக்களின் எதிர்கால நலனுக்காக பாதுகாக்கபட்டுவிட்டது என்று கூச்சலிட்டதெல்லாம் பெட்ரோலிய எரிபொருள் துறையில் அமெரிக்காவின் உலக ஏகபோக சந்தை ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதைதான்.

அமெரிக்கா ஈராக் மீது போர் புரிந்ததன் உண்மையான நோக்கமே, ஈராக் உலகிலேயே இரண்டாவது எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதே. ஏற்கனவே பிற எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை தனது ஆளுகைக்கு கொண்டு வந்து விட்ட நிலையில் ஈராக்கையும் தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வரவும், வீழ்ச்சி அடைந்து வந்த அமெரிக்க டாலர் மதிப்புக்கு முட்டுக் கொடுக்கவும் அமெரிக்கா வெறித்தனமாக செயல்பட்டது. ஈராக், லிபியா என்று தனது உலக மேலாதிக்கத்திற்கு அடிபணியாத நாடுகள் மீது ஏதாவது ஒரு போரை தொடுத்து அடிபணிய வைப்பதே அமெரிக்காவின் நோக்கம்.


படிக்க: இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. அமெரிக்கா வீசிய குண்டுகளுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள மூலை முடுக்குகளில் இருந்து அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரை எதிர்த்து முழக்கங்கள் எழும்பின. உலகெங்கிலும் இருந்து கோடான கோடி உழைக்கும் மக்கள் ஈராக்கின் ஆக்கிரமிப்பு போருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உலகப் பாட்டாளி வர்க்க கட்சியின் தார்மீக கடமைக்கிணங்க தமிழகத்திலும் “உலக மேலாதிக்க போர் வெறியன் புஷ்சே ஈராக் மீது கை வைக்காதே! ” என்ற முழக்கத்தின் அடிப்படையில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு மற்றும் பு.மா.இ.மு போன்ற புரட்சிகர அமைப்புகள் சார்பாக திருச்சி, சென்னை, பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் போர் எதிர்ப்பு முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 20 ஆண்டுகள் ஆகியும் 2,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் ஈராக் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. தற்போது அவர்கள் கூறும் காரணமோ ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது. ஆனால், ஐ.எஸ் அமைப்பு உருவாவதற்கு காரணமே அமெரிக்கா தான் என்பது உலகறிந்த விசயம்.

உலகம் சிவப்பதற்கு எதிராகத்தான் (அதாவது சோவியத் ரஷ்யா விரிவாக்கத்திற்கு எதிராக) நேட்டோ கூட்டணிகள் என்று முழங்கியது அமெரிக்கா. ஆனால் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னரும் நேட்டோ ஏன் இன்னும் களைக்கப்படவில்லை? இன்றும் ஏன் நேட்டோ கூட்டமைப்பை வைத்து ரஷ்ய-உக்ரைன் போர் மூலம் பதிலிப் போர் நடத்திகொண்டிருக்கிறது அமேரிக்கா? இதற்கான விடையை தெரிந்து கொண்டாலே ஏன் இன்றும் ஈராக்கில் அமெரிக்காவின் துருப்புக்கள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இரண்டின் நோக்கமுமே ஒன்றுதான்; அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நிறுவுவதும் அதனை தக்கவைப்பதும் தான். அதனை சரிய விடாமல் முட்டுக் கொடுக்கத்தான் அமெரிக்க துருப்புகளும் நேட்டோவும்.

அன்றைய ஈராக் போர், இன்றைய உக்ரைன் பதிலி போர் என அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கரங்கள் உலகம் முழுவதும் நீண்டுள்ளன. தனது ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 800 ராணுவ தளங்களை அமைத்துள்ளது. உலக பாட்டாளி வர்க்கத்தின் பிரதான எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்த ஒன்றிணைவோம்! வீழ்த்துவோம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க