மும்பை கனமழை ரெட் அலர்ட்: உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பு

கார்ப்பரேட் கொள்ளைக்காக மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கலில் உழைக்கும் மக்கள் தான் பலியிடப்படுகிறார்கள். உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பாகவே தற்போது கொடுக்கப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பை (ரெட் அலர்ட்) பார்க்க வேண்டியுள்ளது.

0

காராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புனே நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை நீடிப்பதால் மும்பை மாநகரின் புறநகர் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலைக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மும்பையின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் இருக்கின்றனர்.

கனமழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் இரண்டு ஏரிகள் நிரம்பி இருக்கிறது. அதோடு சயான், குர்லா ,செம்பூர் மற்றும் அந்தேரி போன்ற பகுதிகள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தேரி சுரங்கப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அது மூடப்பட்டுள்ளது.

பாந்த்ரா-குர்லா வளாகத்தில் வாகன போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சயான் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் ஓடுதளத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. அதோடு விமான நிலையத்தில் வெளிச்சமும் குறைவாக இருப்பதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அதீத மழை பெய்து வரும் நிலையில், இன்னும் கடுமையான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இன்று ரெட் அலர்ட்டை அறிவித்துள்ளது.


படிக்க: மழைவெள்ளத்திற்குக் காரணம் காலநிலை மாற்றமா? தொழில்நுட்ப பிரச்சினையா?


மும்பை மட்டுமல்லாது தானே மற்றும் மும்ப்ரா பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தானே நிம்ஜ நகரில் மழை நீரில் சிக்கிக்கொண்ட 70 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். புனேயில் ஏக்தா நகர், வார்ஜே, சிங்காட் பகுதியில் மழை நீர் தாழ்வான பகுதியில் இடுப்பு அளவை தாண்டி தண்ணீர் காணப்பட்டது.

இதனிடையே, புனே மாவட்டத்தில் மழை தொடர்பான விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர்; தள்ளுவண்டியை நகர்த்த முயன்றபோது மின்சாரம் தாக்கி மூவரும், நிலச்சரிவில் சிக்கி ஒருவரும் இறந்துள்ளனர். கடந்த 24 மணிநேரமாக பெய்த மழையின் காரணமாக மட்டும் மாநிலம் முழுவதும் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்; 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மே 15 முதல் ஜூலை 25 வரையிலான காலகட்டத்தில், மின்னல் தாக்குதல்கள், நிலச்சரிவுகள், மரங்கள் விழுவது, வெள்ளம், கட்டிட இடிபாடுகள் போன்ற பருவமழை தொடர்பான பேரிடர்கள் காரணமாக மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 94 பேர் இறந்துள்ளனர்; நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்; 145 பேர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறைந்தது 306 விலங்குகள் இறந்துள்ளன, எட்டு விலங்குகள் காயமடைந்துள்ளன.

மும்மை மாநகரில் பெருவெள்ளம் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இங்கு தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக, ஜூலை 24, 2005 அன்று பெய்த கனமழையை யாராலும் மறக்க முடியாத ஒன்று. 24 மணிநேரத்தில் 944 மில்லி மீட்டர் பெய்த அதீத மழைப்பொழிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அந்த மழைவெள்ளம் பல்வேறு விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

முறையாகத் திட்டமிடப்படாத நகரமயமாக்கலின் விளைவுகள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. நகரமே மூழ்கிப்போனதற்கு அங்குள்ள பழமையான, சரிவரப் பராமரிக்கப்படாத வடிகால் அமைப்பு முக்கியக் காரணமாக அமைந்தது.

அதேபோல், உள்கட்டமைப்பு வளர்ச்சி என்ற பெயரில் மித்தி நதி மற்றும் மாஹிம் கழிமுகத்தை ஒட்டி இருக்கும் சதுப்புநில காடுகள் அழிக்கப்பட்டு வருவதும் ஒரு முக்கியக் காரணமாகும். சான்றாக, கோரேகான் (Goregaon) மற்றும் மலாட் (Malad) பகுதிகளில் உள்ள இன் ஆர்பிட் மால்கள் (Inorbit Mall) நகரத்தின் கணிசமான அளவு சதுப்புநிலங்களை அழித்துக் கட்டப்பட்டவை தான்.


படிக்க: மும்பை : தண்ணீரின்றி தவிக்கும் நகர உழைக்கும் மக்கள் | படக்கட்டுரை


2005 ஆம் ஆண்டு வெளிப்பட்ட இப்பிரச்சனைகள் தற்போது வரை சரி செய்யப்படவில்லை. ஏனென்றால், அப்போதும் சரி இப்போதும் சரி வெள்ளங்களால் அதிகம் பாதிக்கப்படுவோர் மும்பையின் சேரிப் பகுதிகளில் உள்ள அடித்தட்டு உழைக்கும் மக்கள் தான். அதனால் தான் அரசு துரிதமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கார்ப்பரேட் கொள்ளைக்காக மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கலில் உழைக்கும் மக்கள் தான் பலியிடப்படுகிறார்கள். உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பாகவே தற்போது கொடுக்கப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பை (ரெட் அலர்ட்) பார்க்க வேண்டியுள்ளது.

கார்ப்பரேட் கொள்கைகள் வெள்ளத்தில் நகரமே மூழ்குவதற்குக் காரணமாக அமைகிறது. அதேபோல், இது போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகமாக ஏற்படுவதற்கு முதலாளித்துவம் அதிவிரைவாக இயற்கையை அழித்துவருவது காரணமாக அமைகிறது.

முதலாளித்துவத்தின் இலாப வெறியால் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தால், மிகச்சிறிய கால இடைவேளையில் அதீத மழைப்பொழிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவது இயல்பாகி வருகிறது. தற்போதெல்லாம் மழைப்பொழிவு மட்டுமல்ல, வறட்சியும் கொடூரமானதாகவே இருக்கிறது.

எனவே, மனிதகுலத்தின் எதிரியாக இருக்கும் முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவதே காலநிலை மாற்றத்தைச் சரிசெய்வதற்கான ஒரே தீர்வாகும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க