Saturday, August 20, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் நோக்கியா மூடல் – மோடியின் மேக் இன் இந்தியா சாதனை !

நோக்கியா மூடல் – மோடியின் மேக் இன் இந்தியா சாதனை !

-

old wineழைய சரக்கு புதிய மொந்தை. இது குப்தர் காலம் தொட்டு மக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படும் ‘தொழில் நுட்பம்’. அதுவே மோடியின் பாஜக அரசு என்றால் மொந்தையைப் பற்றி நாற்பது விதமான பஞ்ச் டயலாக்குகளை தயார் செய்வார்கள். பிறகு அதை நால்வகை – அச்சு, காணொளி, ஒலி, வதந்தி – பிரச்சார கருவிகள் மூலம் திகட்டத் திகட்ட ஐம்புலன்களையும் ஆக்கிரமிப்பார்கள்.

எஸ்.வி.சேகரின் கடி காமடிக்கு சிரிப்பவர்கள் மோடியின் புது மொந்தை எஃபெக்ட்டுக்கு செவிசாய்க்க மாட்டார்களா என்ன?

மோடி பிரதமராகி செங்கோட்டையில் கொடியேற்றும் முதல் சுதந்திர தினம். வித்தியாசமாக என்ன செய்யலாம்? காவி கிச்சன் கேபினட் குழு யோசிக்கிறது. விளைவு “மேக் இன் இந்தியா”. “மேட் இன் இந்தியா”-வில் இங்கே தயாரிக்கப்பட்டது என்றால் மேக்கில் இங்கே தயாரிக்க வேண்டும் என்று பன்னாட்டு முதலாளிகளுக்கு கோரிக்கையாம். இதனால் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கொட்டோ கொட்டும் என்று திரைக்கதை வசனத்துடன் வெளியிட்டார்கள்.

ஏகாதிபத்தியங்களின் உலகமய ஆக்கிரமிப்பில் “இது இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது” என்பது மூலதனம் காட்ட வேண்டிய சட்டபூர்வமான ஒரு வெற்று சடங்கு மட்டுமே. வேலை வாய்ப்போ இல்லை அந்த நாட்டின் பொருளாதார சுயசார்போ இதில் இல்லவே இல்லை. மாறாக அந்த நாட்டின் அனைத்து வளங்களும் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தால் சுருட்டி அபகரிக்கப்படுவதே இந்த மேட் இன் சவடாலின் சூட்சுமம்.

என்னடா கம்யூனிஸ்டுகளின் வழக்கமான ஏகாதிபத்திய அச்சுறுத்தல் என்று சிலர் சலிக்கலாம். பரவாயில்லை இன்றோ நேற்றோ நீங்கள் பயன்படுத்தியிருக்கும் நோக்கியா செல்பேசியை எடுங்கள். மேட் இன் இந்தியா வாசகத்தை பெருமையுடன் பாருங்கள். அது மங்கள்யான் பெருமையாகவே கூட இருக்கட்டும். கூடவே மேக் இன் இந்தியாவையும் நினையுங்கள். பிறகு இனி வரும் செய்தியையும் படியுங்கள்.

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கவர்ச்சிகரமான பெயர்களின் ஒன்று நோக்கியா, இரண்டு ஹுண்டாய். செல்பேசி பயன்பாடு அத்தியாவசியமாக மாற்றப்பட்ட காலத்தில் நோக்கியாதான் அதன் குறியீடு.

நோக்கியா ஆலை இங்கே ஆரம்பித்த போது இந்த குறியீடு அதன் உச்சத்தை தொட்டது. “கனக்டிங் பீப்பிள்” விளம்பரங்களை பார்த்தவர்கள் அந்த கனெக்ஷன் நம்மூரிலேயே தயாரிக்கப்படுகிறதா என்று துள்ளிக் குதித்தார்கள்.

அப்பேற்பட்ட பரவசத்தை சல்லிசாக அளித்த நோக்கியா வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் செல்பேசி உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பலருக்கும் வேலை ‘வாய்ப்பளித்த’தாக போற்றப்பட்ட இந்த மேக் இன் இந்தியா, கில் இன் இந்தியாவாக மாறிப்போனது. ஏன்? அதுவும் மோடி பன்னாட்டு முதலாளிகளிடம் புதிய மொந்தை கோரிக்கை வைக்கும் நேரத்தில் பழைய சரக்கு நாறுவது ஏன்?

மேக் இன் இந்தியாவின் சூட்சுமமே இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதல்ல, இந்திய வளங்களைச் சுரண்டுவதுதான். 2006-ம் ஆண்டு துவங்கப்பட்ட நோக்கியா நிறுவனத்திற்காக மத்திய மாநில அரசுகள் அளித்த சலுகைகள் ஏராளம். மலிவு விலை நிலம், தடையில்லா மின்சாரம், பல வழிகளில் வரிச்சலுகை, இதர வசதிகள், தொழிலாளர் சட்டம் செல்லுபடியாகாத விதத்தில் ஏற்பாடுகள், குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள்…இவைதான் மக்களை ‘இணைத்த’ நோக்கியா நமக்கு வேலை வாய்ப்பளித்த லட்சணம்.

இதற்கு மேலும் பல்வேறு முறைகேடுகளோடு தொழில் செய்த நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிச் சென்றது. அதிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய குறைந்த பட்ச வருமான வரியைக் கூட கட்டவில்லை.

உள்நாட்டு தேவைக்காக உற்பத்தி என்று அனுமதி வாங்கிய நோக்கியா அதை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஏமாற்றியது. அதாவது ஏற்றுமதிக்கான வரியை செலுத்த அது தயாரில்லை. அது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவிற்கும் கட்டுப்படவில்லை.

nokia-india-microsoftஇடையில் நோக்கியா நிறுவனத்தை பில்கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. வாங்கும் போதே வரி ஏமாற்றி வழக்கில் உள்ள சென்னை நிறுவனத்தை மட்டும் கையகப்படுத்தாமல் கவனமாக தவிர்த்து விட்டது. மாறாக, செல்பேசியை வாங்குவதாக மட்டும் சென்னை ஆலையுடன் ஒப்பந்தம் போட்டது. முறைகேடான வணிக உத்திகளில் பிரபலமான பில் கேட்ஸ்சுக்கு இதெல்லாம் ஜூஜூபி. பிறகு ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கேள்வியின்றி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.

தற்போது இந்த ஆலையுடன் ஒப்பந்தம் செய்த மைக்ரோசாஃப்ட் அதை ரத்து செய்துவிட்டது. பிறகு? மிச்சமிருக்கும் 800 தொழிலாளிகளுக்கும் இனி வேலையில்லை.

நோக்கியாவை பில்கேட்ஸ் வாங்குவாராம். அதில் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய சென்னை ஆலையை மட்டும் வாங்காமல், உள் ஒப்பந்தம் போட்டு சரக்கை மட்டும் வாங்குவாராம். ஆனால் இருதரப்பும் நோக்கியா பேரை பயன்படுத்துமாம்.

பிறகு, நம்ம ஆலைக்கு வரி ஏய்ப்பு வழக்கில் பேரம் படியவில்லை என்று தெரிந்த பிறகு அந்த உள் ஒப்பந்தத்தை ரத்து செய்வாராம்.

கவனியுங்கள், ஒரு முதலாளிக்கு சிறு இழப்பும் ( சுரண்டுவதில் பாதிப்பு) வரக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் சட்டத்தை, தொழில் நடத்தும் அமைப்பு விதிகளை வடிவமைத்திருக்கிறார்கள்? திருடன் பிடிபடக்கூடாது, தண்டிக்கப்படக் கூடாது என்பதே சட்டங்களின் சாரம்! அதுதான் பங்குச் சந்தை, மேலாண்மை படிப்பு, ஆக்ஸ்போர்டு பல்கலை, உலக வங்கி, வளர்ச்சி, மோடி வித்தை என்று பல்வேறு வகைகளில் உலா வருகிறது.

முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் உலகமயத்தின் விளைவுகள் இதன்றி வேறென்ன? என்ரான் தொட்டு யூனியன் கார்பைடு பட்டு கோக் பெப்சியில் முழுகியது வரை எத்தனை எத்தனை எடுத்துக் காட்டுகள்?

மோடி அண்ட் கோவின் “மேக் இன் இந்தியா” பாட்டின் அறிமுக விழாவே எழவு வீடாக மாறிவிட்டது!

இது குறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நிச்சயமாக இது போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்கப்படுத்துவோம். இது குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த விவகாரமாகும். நாங்கள் இதன் மீது கவனம் செலுத்தி வருகிறோம்” என்று உறுதியளித்தார்.– (தி இந்து செய்தி)

இது போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் – பொருள் என்ன? வரி ஏய்ப்பு எனும் ஒரு சிக்கலில் பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்காத வண்ணம் சட்ட திருத்தம், நீதிமன்ற நடைமுறைகளை மாற்றுவோம் என்பதன்றி வேறென்ன?

இல்லை இது வினவின் அபாண்டமான வியாக்கியானம் என்பார்களா? எனில் நிர்மலா சீதாராமன் என்ன சொல்லியிருக்க வேண்டும்? இங்கே தொழில் நடத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மதித்து முறையாக வரி செலுத்த வேண்டும் என்றுதானே? ஏன் சொல்லவில்லை?

இது குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த விவகாரமாகும் என்று நிர்மலா கூறியிருப்பதிலேயே பொருள் தெளிவாக இருக்கிறது. இவர்களால் ஒரு நிறுவனத்தின் விவகாரத்தில் அதாவது மைக்ரோசாஃப்ட் மற்றும் நோக்கியாவின் திருட்டுக் கூட்டணி முறைகேடுகள் குறித்து ஒன்றும் கேட்ட முடியாது. கோழைத்தனத்தையும், துரோகத்தனத்தையும் வீரமாக சித்தரிப்பதில் பாஜக பாசிஸ்டுகள் கைதேர்ந்தவர்கள்.

ராமனின் கௌரவத்திற்காக சீதை தீக்குளித்தாள். அமைச்சர் சீதாராமனோ முழு இந்தியாவையும் தீக்குளிக்க சொல்கிறார்.

ஆம். மேக் இன் இந்தியாவின் பொருள் கில்லிங் இந்தியாதான். முன்னதை ஏற்பவர்கள் ‘பாரத் மாதாகி ஜெய்’ சொல்வார்கள். பின்னதை உணர்பவர்கள் இந்திய மக்களை காப்பாற்ற போருக்கு தயாராவார்கள்.

நீங்கள் எந்த அணி?

 1. என்ன சார் கொடுமை.
  //இடையில் நோக்கியா நிறுவனத்தை பில்கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. வாங்கும் போதே வரி ஏமாற்றி வழக்கில் உள்ள சென்னை நிறுவனத்தை மட்டும் கையகப்படுத்தாமல் கவனமாக தவிர்த்து விட்டது.//

  நீங்கள் ஒரு நிறுவனத்தை வாங்கும் போது கடன் உள்ள பகுதியையும் சேர்த்துத்தான் வாங்குவீங்களா?

  மற்றும் வரி ஏய்ப்பு நடந்தது 2012ல். காங்கிரஸ் காலகட்டத்தில். அதற்கு மோடி என்ன செய்ய முடியும்.

  • ஆனால் இப்பா மோடி அரசுதன் பதவில் இருக்கு அவர் நினைத்தல் வரியை வசுலிக்க முடியும்.

  • //நீங்கள் ஒரு நிறுவனத்தை வாங்கும் போது கடன் உள்ள பகுதியையும் சேர்த்துத்தான் வாங்குவீங்களா? //

   so you are not ready think about the people working there ??? and about tax issues, the same law still exists, if modi really care about the people ?? Is he ready to take action against nokia ??

   This is an excellent article to show how modi is reinventing the wheel with different jargons.

   • Nope. Modi is more than that. He is supporter of small government and believes Govt is not for business and Govt is for governance.

    I am waiting for him to close Air India to acknowledge if he is in right path…

    I already heard news that he will be closing HMT, HPF….

 2. This is transformation age.

  Nokia lost the market share. They were very in introducing the smart phone and the models they introduced did not attract the customers (including the recently released windows OS)

  They cannot sustain with old phones for a long time.

 3. பன்னாட்டு கம்பெனி அன்னிய முதலீடு எல்லாமே ஒரே தத்துவத்தில் தான் செயல் படுகிறது. கரும்பை நீ கொடு ! வெல்லத்தை நாங்க சாப்பிட்டுக்கிறோம் ! நீ விரலை சூப்பிக்க என்பது தான். பாவம் அப்பாவி இந்தியர்கள் ! கரும்பை கொடுத்துட்டு விரலை மட்டும் சூப்புறது இந்தியர்களின் தலையெழுத்து !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க