கடனில் மூழ்க காத்திருக்கும் தமிழ்நாடு மின்வாரியம்

அரசுக்கு உதவும் வகையில் ஒரு பகுதி தனியாருக்கு என்று தொடங்கியவர்கள் இன்று அரசு உற்பத்தியை விட 225% கூடுதலாக உற்பத்தி செய்கிறார்கள். மின்வாரியங்களோ உற்பத்தி பணியை வெறுமனே உள்ளதை உள்ளபடி பராமரிப்பது என்கிற அளவில் நிறுத்திக் கொண்டு விட்டன.

கடனில் மூழ்க காத்திருக்கும் தமிழ்நாடு மின்வாரியம்
அபகரித்துக் கொள்ள காத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள்!

மிழக அரசின் பொதுத்துறையான மின்சார வாரியத்தின் ஆண்டு வரவு செலவு கணக்கிலிருந்து தமிழ் இந்து பத்திரிகை சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2022-23 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரவுக்கும் கூடுதலாக செலவு மிகுந்ததால் ஏற்பட்ட நட்டம் 13 ஆயிரத்து 811 கோடி என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

ஒரு10×10 செமீ அளவில் உள்ள இந்த செய்தியின் மூலம் இவர்கள் வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புவது மின்சார வாரியம் நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான். இந்தக் கருத்தை தான் இவர்கள் மக்களிடம் தொடர்ந்தும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மின் கட்டணம் தான் இவ்வளவு வசூலிக்கிறார்களே பிறகு எப்படி கடன் வருகிறது? அதுவும் பல்லாயிரம் கோடிகளில் என்பது தான் புதிர்.

அவ்வளவுக்கும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பெருமக்களின் லஞ்ச ஊழல் தான் காரணம் என்கிறார்கள் சிலர். ஆனால் லஞ்சம் என்பதெல்லாம் மக்களிடம் தானே கறக்கிறார்கள் அதனால் வாரியத்துக்கு எப்படி நட்டம் ஏற்பட முடியும்? எனில் மின்வாரியத்தில் என்னதான் பிரச்சினை?

என்பது குறித்தெல்லாம் இந்த செய்தியை படித்து எதுவும் தெரிந்து கொண்டு விட முடியாது. அப்படி தெரிந்து கொண்டு விடக் கூடாது என்பதும் அவர்களின் நோக்கம். ஆனால் செய்தியை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் அதாவது நட்டத்தில் இயங்குகிறது மின்வாரியம் என்கிற செய்தி மட்டும் போய்ச் சேர வேண்டும். அதனால் தான் இந்த மின்வாரியத்தில் நட்டம் என்கிற குட்டிச் செய்திக்கு “செய்தி உள்ளே” என்று முதல் பக்கத்தில் சிவப்பு வண்ணத்தில் கட்டம் கட்டி விளம்பரம். இந்த செய்தி சொல்வது என்ன?

ஒரு நான்கு இனங்களில் வரவு இன்னொரு நான்கு இனங்களில் செலவு இரண்டையும் ஒப்பிட்டு செலவு மிகுந்து மின்வாரியத்தில் கடன் ஏற்பட்டு விட்டது என்பதுதான். இதன் மூலம் மின் கட்டண உயர்வு தொடர இருக்கிறது. மேலும் அது தவிர்க்க முடியாததும் கூட என்பது அவர்கள் முன் மொழியும் தகவல். எனில் உண்மை நிலவரம் தான் என்ன? மின்சார வாரியம் அரசு நடத்தும் ஒரு பொதுத்துறை நிறுவனம். இந்த நட்டத்திற்கு யார் பொறுப்பேற்பது?

அரசு மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை என்ன? அதிகாரிகள் முன் வைக்கும் ஆலோசனைகள் தான் என்ன? இவற்றைப் பற்றி ஒரு கருத்துக்கு வர வேண்டும் என்பது தானே முக்கியம். ஆனால் இங்கே கொடுத்திருக்கும் புள்ளி விவரங்களை பார்க்கும் யாரும் அப்படி எதையும் எளிதில் புரிந்து கொண்டு விட முடியாது. விளக்கங்கள் தவிர்க்கப்பட்டு வெறும் எண்களால் கூட்டிக் கழித்து கணக்கு காட்டுகிறார்கள்.


படிக்க: மின்சார திருத்த மசோதா 2022: மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு!


எனினும் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களையே சுருக்கமாக ஆய்வு செய்து பார்ப்போம். வரவு குறைந்து இருக்கிறது எனில் காரணம் என்னவாக இருக்க முடியும்? மக்களிடம் இருந்து மின் உற்பத்திச் செலவுக்கேற்ற கட்டணம் வசூலிக்கப்படவில்லை அதாவது இப்போதைய மின் கட்டணம் குறைவு என்பது தான். கூடவோ குறைவோ அது யாருக்கு என்பதில் தான் விஷயம் இருக்கிறது. பொதுவாக மக்களுக்கு என்று கூறி விட முடியாது.

மக்கள் எனப்படுவோர் வாக்காளர் அட்டையில் மட்டும் தான் ஒரு வாக்கு ஒருவருக்கு என்பதில் தான் சமம். பிற எவற்றிலும் சமமில்லை. உடமை வர்க்கம் வேறு உழைக்கும் வேறு. ஒன்று முதலாளி வர்க்கம் இன்னொன்று தொழிலாளி வர்க்கம். ஒன்று கூலி பெறும் வர்க்கம் இன்னொன்று லாபம் பார்க்கும் வர்க்கம் என்பதை மறந்து விடக்கூடாது.

வெளிநாட்டு கார் உள்ளிட்டு பல்வேறு பொருள் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் மின்கட்டணச் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகள் பத்து ஆண்டுகள் என்று குறைந்த கட்டணத்துக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. பல ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அவ்வாறு குறைந்த கட்டணத்தில் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இப்போது சாலைகளில் குவிந்து வரும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர மின் வாகனங்களுக்கான மின்சாரத் தேவை இப்போது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பிறகு ஏன் தான் இவ்வளவு மின்சார வாகனங்களை சாலையில் இறக்குகிறார்கள்? இவற்றுக்கான விவரங்கள் எப்போதும் மின்வாரியமோ அரசாங்கமோ கார்ப்பரேட் நிறுவனங்களோ வெளியிடப் போவதில்லை.

புலனாய்வு பத்திரிக்கைகள் எவையும் கூட அவற்றைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வரப் போவதில்லை. மக்களுக்கு என்னவோ ரெண்டு மின் விசிறி நாலு எல்இடி பல்புகளுக்கென்று கொடுக்கப்படும் சில நூறு யூனிட் மின்சாரம்தான்.

பெரும் கார்ப்பரேட் தொழிற்சாலைகளுக்கும் பெருநகரக் கடைவீதிகளில் கார்ப்பரேட் மால்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் பிற வர்த்தக நிறுவனங்களுக்கும் தான் இரவு பகல் என்று வேறுபாடு இல்லாமல் இருபது மணி நேரத்துக்கு மேலாக பல நூறு கோடி யூனிட்டுகள் மின்சாரம் சப்ளை ஆகிறது.


படிக்க: நேரத்திற்கு ஏற்ப மின் கட்டணம்: அதானி மயமே மோடியின் இலட்சியம்!


ஆனாலும் மக்கள் பயன்படுத்தும் இந்த லைட்டுக்கும் ஃபேனுக்குமான கட்டணத்தை உயர்த்துவது எப்படி என்பது பற்றித்தான் அரசாங்கம் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவுதான் இந்த பத்திரிக்கை செய்தி.

நூறு கோடிரூபாய் ஆண்டு வருமானம் பார்க்கும் ஒரு தனியார் முதலாளியிடம் மின் கட்டணமாக ஒரு பத்து கோடியை வசூலித்து அவனுடைய லாபம் 90 கோடி என்று ஆக்கினால் குடியா முழுகி விடும்? அதேபோல் ஆயிரம் கோடி லாபம் பார்க்கும் நிறுவனத்திடம் 100 கோடியை மின் கட்டணமாக வசூலித்து லாபத்தை 900 கோடியாக குறைத்தால் தலையில் இடியா விழுந்து விடப்போகிறது?

ஐய்யய்யோ லாபமல்லவா குறைந்து விடும். விபரமே தெரியாமல் பேசுகிறீர்களே! அவர்கள் ஏற்கனவே அதிகமான கட்டணம் செலுத்தி விட்டார்கள் என்பதுதான் அவர்களின் அலறல்.

கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அவர்களுக்கு வேலை செய்யும் ஏவலாளான அரசாங்கத்திற்கும் எப்போதும் கண்களை உறுத்துவது அடித்தட்டு மக்களின் லைட் ஃபேன் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் 100 யூனிட் மின்கட்டணக் கழிவும் விவசாயத்திற்கு வழங்கப்படும் பம்பு செட்டுகளுக்கான இலவச மின்சாரமும் தான். நடுத்தர வர்க்கத்தின் சுயநலப் பிரிவு ஒன்றும் அப்படியேதான் எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கிறது. எப்போதும் அதைப்பற்றி தான் விவாதம்.

ஆனால் அவர்கள் கொடுத்திருக்கும் புள்ளி விவரங்களில் இருந்து கூட சற்றே கூர்ந்து கவனித்தால் அவர்களின் பித்தலாட்டம் அம்பலாமாகிவிடும். அடித்தட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்படும் மானிய விலை மின்சாரத்திற்கு என்று அரசாங்கம் பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து மின்சார வாரியத்துக்கு ஒரு பெருந்தொகையை மானியமாகக் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் அரசின் மானியமாக ரூ 12,688 கோடி கொடுத்த பின்னர் தான் இந்த ரூ13,811 கோடி நட்டம் என்று கணக்கு காட்டியிருக்கிறார்கள். எனில் செலவு எப்படித்தான் அதிகரிக்கிறது?

மின் வாரியம் மின்சாரம் உற்பத்தி செய்த வகையில் ஆண்டு செலவு ரூ 22,247 கோடி. அதே சமயம் தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்த வகையில் செலவு ரூ 51,460 கோடி. அதாவது மின்வாரிய உற்பத்தியை விட தனியார் கொள்முதல் இரண்டு மடங்கை விட அதிகம்.

இப்போது யாருக்கும் இயல்பாக எழுகின்ற கேள்வி ஏன் மின்வாரியமே தேவையான மின்சாரம் அனைத்தையும் உற்பத்தி செய்யக்கூடாது? என்பதுதான். ஒரு 20 , 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படித்தானே இருந்தது. பிறகு ஏன் தனியார் உற்பத்தி செய்ய அனுமதித்து விட்டு பின்னர் எதற்காக அவனிடமிருந்தே கொள்முதல்செய்ய வேண்டும்? நட்டம் அடைய?

அப்படி அவன் உற்பத்தி செய்யும் மின்சாரம் அனைத்தையும் அவன் சொல்லும் விலைக்கே அரசாங்கம் கொள்முதல் செய்து கொள்வது என்பதுதான் இரு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் இதுதான் அரசாங்கத்தின் கொள்கை முடிவு.

கார்ப்பரேட் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு கொள்ளைக்கான இந்த கொள்கை முடிவு குறித்து இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேசப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சினையை மக்களிடம் கொண்டு சென்றதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் மின்வாரிய பொறியாளர் சங்கத் தலைவராய் இருந்த காந்தி அவர்கள். என்றாலும் எந்த அரசு வந்தாலும் இந்த கொள்கை முடிவில் மட்டும் எந்த மாற்றமும் செய்ததில்லை அதே சமயம் இந்த தனியார் கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்கள் தாமே எந்த தனியாரிடமும் மின்சாரத்தை விற்பனை செய்வதில்லை. அரசு கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் “யாராலும் மீற முடியாத” அந்த இறுதி முடிவான ஒப்பந்தம்.

விலை அவர்கள் வைத்தது தான் என்பதை தனியே சொல்லத் தேவையில்லை. மின் உற்பத்தியில் எவ்வளவு கொள்ளை லாபம் என்பதைப் மருத்துவத் துறையில் கொடி கட்டிப் பறக்கும் அப்பல்லோ மருத்துவமனை முதலாளியும் கூட மின் உற்பத்தியில் இறங்கி லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.


படிக்க: மகாராஷ்டிரா: மின்சாரம் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக மின் ஊழியர்கள் போராட்டம்!


சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் மின் தேவை அனைத்தையும் உற்பத்தி செய்வதை விநியோகிப்பதை அந்தந்த மாநில அரசுகள் தான் ஏற்றுக் கொண்டிருந்தன. அரசுக்கு உதவும் வகையில் ஒரு பகுதி தனியாருக்கு என்று தொடங்கியவர்கள் இன்று அரசு உற்பத்தியை விட 225% கூடுதலாக உற்பத்தி செய்கிறார்கள். மின்வாரியங்களோ உற்பத்தி பணியை வெறுமனே உள்ளதை உள்ளபடி பராமரிப்பது என்கிற அளவில் நிறுத்திக் கொண்டு விட்டன.

மின்வாரியம் காட்டும் செலவு கணக்கில் இருக்கும் இன்னொரு முக்கியமான அம்சம் கடன். இந்த கணக்கில் சொல்லப்பட்டிருக்கும் கடனுக்கான வட்டி தொகை ஆண்டக்கு ரூ 6359 கோடி.

ஓராண்டு வட்டி மட்டும் 6359 கோடி என்றால் அந்தக் கடன் தொகை எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிட்டு பாருங்கள் லட்சம் கோடியை தாண்டும். எனில் நூறாண்டுகளாக மின்வாரியம் சேமித்து வைத்திருக்கும் பல லட்சம் கோடி சொத்துக்களை எல்லாம் கடன்காரர்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தான்.

மின்சாரம் உற்பத்தியும் விநியோகமும் தனியார் என்று ஆகிவிட்டால் அந்த நிலைமையை யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாது. மின்வாரியங்களின் அந்த அடிக்கட்டுமான சொத்துக்களை குறி வைத்துதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுணுக்கமாக வேலை செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால் மின்வாரியமும் அரசாங்கமும் வகுத்துக் கொண்டிருக்கும் மின்வாரியக் கொள்கை என்பது அதை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.


தி ஆதித்தன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க