யர் பணவீக்கம், வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை இன்று இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் மூன்று அடிப்படைப் பிரச்சினைகளாகும். இதன் விளைவாக, மனித வளர்ச்சியானது இரத்த சோகை முற்றிய நோயாளியின் நிலைக்குச் சென்றுள்ளது. கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு சீர்குலைந்து வருகிறது.

இந்த பிரச்சினைகளில் இருந்து மீளும் வழியில் இந்தியப் பொருளாதாரத்தை வழிநடத்தும் திட்டம் ஏதும் மோடி அரசிடம் இல்லை. மாறாக, உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அதிகரிப்பதன் மூலம், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக, நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஒட்டச் சுரண்டுகிறது.

நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஏழை எளிய மக்கள், சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பட்டினியில் பரிதவிப்பவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளிடம் மிச்சம் மீதமிருக்கும் இரத்தத்தைக் கூட உறிஞ்சி எடுக்கிறது ஜி.எஸ்.டி வரி.

இதன் மூலமாவது பொருளாதாரம் முன்னேறுமா? மோடி அரசின் இந்த பாசிச பொருளாதார நடவடிக்கைகள் ஒட்டுமொத்த நாட்டை முன்னேற்றிவிடுமா? என்று சில முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை.

படிக்க : ஜி.எஸ்.டி வரி உயர்வு: மக்களை வாட்டிவதைக்கிறார்கள் | மக்கள் நேர்காணல்

“ஒரு தேசம், ஒரு வரி, ஒரு சந்தை” என்ற மோடி அரசின் திட்டம் என்பது பிராந்திய, மாநில மற்றும் உள்ளூர் அளவிலான பன்முகப் பொருளாதாரத் தன்மை கொண்ட நமது நாட்டின் பெரும் பொருளாதாரச் சூழலை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஏகபோகமாக்கல் திட்டமே. இந்த ஏகபோகங்களின் வளங்களைக் கொள்ளையடிக்கும் நிதி ஆதிக்கக் கும்பல்களாக குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளியக் கும்பல் இருக்கும்.

அரசியலில் இந்துத்துவா (ஆர்.எஸ்.எஸ்-பாஜக) மேலாதிக்கம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் அம்பானி-அதானி கார்ப்பரேட் முதலாளியக் கும்பலின் ஆதிக்கம் ஆகிய இரண்டும் மக்களின் வாழ்வாதாரங்கள், உற்பத்தி சக்திகள், கண்டுபிடிப்புகள் மற்றும் பிற வருமானம் உருவாக்கும் திறன்களின் அடிப்படையில் அனைத்து படைப்பு திறன்களையும் உழைப்பு சக்தியையும் பிழிந்தெடுக்கும் ஹைபிரிட் பாசிசமாகும்.

இந்துத்துவா என்பது முதன்மையாக இந்தியாவில் உள்ள உயர் வர்க்க மற்றும் உயர் சாதி மக்களின் பொருளாதார நலன்களை நிலைநிறுத்தும் ஒரு கலாச்சார திட்டமே. கலாச்சார தேசியம் என்ற பெயரில் மக்களை மத ரீதியாக அணிதிரட்டுவது, இந்தியர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பணயம் வைத்து அம்பானி, அதானி கார்ப்பரேட் முதலாளியக் கும்பலுக்கு சேவை செய்யும் அரசியல் தந்திரமே.

புதிய வேலைவாய்ப்புகள், புதிய தொழில் வளர்ச்சிகளை நாட்டின் கீழ்மட்டங்களில் சிறிய அளவில் கூட உருவாக்கவில்லை. இருக்கின்ற வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிராக இளம் இந்தியா திரும்பிவிடாமல் இருப்பதற்கு அவர்களை தீராத போதை மயக்கத்தில் ஆழ்த்த வேண்டியுள்ளதை ஆர்.எஸ்.எஸ்-பாஜக மற்றும் அம்பானி-அதானி கும்பல் நன்குணர்ந்துள்ளது.

வேலையின்மை இல்லை என்று சங்கிகள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தாலும் வேலையின்மையால் உருவாகியிருக்கும் பெரும் அளவிலான ஒரு ரிசர்வ் பட்டாளத்தைக் கண்டு மோடி அரசு அஞ்சுகிறது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகவும், கள்ளக்குறிச்சியிலும் ஆயிரக்கணக்கில் திரண்ட இளம் பட்டாளமே அதற்கு சிறந்த சான்று. ஆங்காங்கே இந்த இளம் பட்டாளம் சங்கப் பரிவாரக் கும்பல்களால் அணிதிரட்டப்பட்டாலும், அவர்களிடம் வேலையின்மையால் ஏற்படும் குமுறலை அடக்கிவிட முடியவில்லை.

உழைக்கும் மக்களின் இளம் பிரிவான இந்த ரிசர்வ் பட்டாளம் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு வகைகளில் மோடி அரசின் திட்டங்களுக்கு எதிராக தன்னெழுச்சியாக திரள்கிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இந்தப் பட்டாளத்தை வேகமாக அடக்கி ஒடுக்க முயற்சின்றன. இந்த மக்கள் போராட்டங்கள் வெடித்த உடனே மிகப்பெரும் அளவில் போலீசை ஏவி கைது நடவடிக்கைகளை மோடி அரசு மட்டுமின்றி, இந்துத்துவ எதிர்ப்பு பேசும் அரசுகளும் மேற்கொள்கின்றன.

இதுமட்டுமின்றி, கார்ப்பரேட் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும், அவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடையவே செய்கின்றன.

இப்போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசு மக்கள் மீதான வன்முறையை தீவிரப்படுத்துவது மட்டுமின்றி, ஒருபுறம் இந்துத்துவா என்ற மதவெறி போதையை ஏற்றி மக்களைப் பிளவுப்படுத்துகிறது. மற்றொருபுறம், கஞ்சா, அபின் போன்ற பல்வேறு வகையான போதைக் கலாச்சாரங்களை திட்டமிட்டு ஊக்குவிக்கிறது. இவை கீழ் மட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவு இளைஞர்கள் மற்றும் மாணவர்களையும் சென்றடைந்துள்ளது. எந்த விழுமியங்களும் இல்லாத பொறுக்கி கும்பல் கலாச்சாரம் இவர்கள் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.

படிக்க : உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!

கார்ப்பரேட் நலன்சாரந்த இந்துத்துவப் பொருளாதாரம் மக்கள் மீது ஒரு கொடிய வரி பயங்கரவாத ஆட்சியை உருவாக்குகிறது. பெயரளவிலான ஜனநாயகம் என்று அழைக்கப்படும் மக்கள் நல அரசைக் கூட’ ஒழித்து, உழைக்கும் மக்களால் நெருங்க முடியாத அரசாங்கத்தையும் (மாட்சிமை தாங்கிய மன்னராட்சியை), மக்கள் போராட்டங்களால் நெருங்க முடியாத வகையில் பாதுகாக்கப்பட்ட மற்றும் கார்ப்பரேட்மயமாக்கப்பட்ட அரசையும் உருவாக்குகிறது. பாலியல் ஒழுக்கக்கேடு, சுற்றுச்சுழல் அழிப்பு, லஞ்சம், ஊழல், கடத்தல் மற்றும் கறுப்புச் சந்தை போன்றவை ஆட்சிப்புரியும் ஒரு சமுதாயத்தையும், அதற்கு தலைமை தாங்கும் அரசையும் உருவாக்குகிறது.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் “ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை” என்ற மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டம் என்பது உற்பத்தி மற்றும் நுகர்வு மீதான ஆதிக்க அரசியலாகும்; ஜி.எஸ்.டி. மற்றும் பிற வரிவிதிப்புகளின் உயர்வு இந்த திசையில் நாட்டை கொண்டு செல்லும் ஒரு வழிமுறையாகும். இது இந்தியாவின் கீழ்மட்ட மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டச் சுரண்டுவதன் மூலம் அவர்களை எதிர்த்து நிற்க முடியாதவர்களாக மாற்றி பட்டினிக் கொடுமைக்கோ, மதக் கலவரங்களுக்கோ, அரச வன்முறைக்கோ இறையாக்குகிறது.

அம்பானியும் அதானியும் இராம லெட்சுமணர்கள். ஆர்.எஸ்.எஸ்.யும் பா.ஜ.க.வும் சுக்ரீவன், அனுமன் போன்ற வானரப்படைகளாகக் காட்சியளிக்கும் இந்த இந்துராஷ்டிர ஆட்சியின் வரிக் கொள்கையே ஜி.எஸ்.டி.!


பரமேஷ்
மூலக்கட்டுரை: frontierweekly

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க