மகாராஷ்டிரா: மின்சாரம் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக மின் ஊழியர்கள் போராட்டம்!

மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மின் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒடிசா, தில்லி போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மின் விநியோகம் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது.

0

டந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அதானி எலக்ட்ரிசிட்டி நவி மும்பை லிமிடெட் நிறுவனம் (Adani Electricity Navi Mumbai Limited‌) இணை மின்விநியோக உரிமம் (parallel licensing) வழங்கக்கோரி மகாராஷ்டிர மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தது. அதானி நிறுவனத்துடன் டொரண்ட் பவர் (Torrent Power) நிறுவனமும், டாடா பவர் (Tata Power) நிறுவனமும் மகாராஷ்டிராவின் வேறு சில பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்ய விண்ணப்பித்து இருந்தன. இதனை எதிர்த்து மகாராஷ்டிர மாநில மின்வாரியத்தின் 86 ஆயிரம் ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்தத்தை ஜனவரி 4 நள்ளிரவில் துவங்கினர்.

அன்று (ஜனவரி 4) பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மின் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிடுவதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மாநில அரசின்கீழ் மாநில மின்விநியோக கம்பெனி லிமிடெட் (Maharashtra State Electricity Distribution Co. Ltd), மின்சார உற்பத்தி கம்பெனி லிமிடெட் (Maharashtra State Electricity Generation Co Ltd) மற்றும் மாநில மின் தொகுப்பு கம்பெனி லிமிடெட் (Maharashtra State Electricity Transmission Co Ltd) ஆகிய மூன்று நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதானி நிறுவனம் இணை உரிமம் கேட்டு விண்ணப்பித்ததானது இந்த அரசு நிறுவன ஊழியர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

மின்‌ துறையை தனியார்மயப் படுத்தினால் குறுக்கு-மானிய (cross subsidy) முறை ஒழித்துக் கட்டப்படும் என்றும், அதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் போராடிய ஊழியர்கள் தெரிவித்தனர். குறுக்கு மானிய முறை என்பது நகர்ப்புறம் மற்றும் தொழிற்சாலை சார்ந்த நுகர்வோருக்கு அதிக விலையில் மின்சாரத்தை விற்று, அதன்மூலம் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மானிய விலையில் மலிவாக மின்சாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடாகும்.


படிக்க: உ.பி: ஊதிய முரண்பாடுகள் மற்றும் மின்துறை தனியார்மயமாவதை எதிர்த்து மின் ஊழியர்கள் போராட்டம்!


இப்பிரச்சினை குறித்து நியூஸ் கிளிக் நிறுவனத்திற்கு பேட்டியளித்த மகாராஷ்டிர சுயமரியாதை மின் தொழிலாளர் சங்கத்தின் (Maharashtra Electricity Swabhimani Workers Union) துணை பொதுச்செயலாளர் விவேக் மஹாலே, “அதானி நிறுவனம் நவி மும்பை மற்றும் தானே போன்ற பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்ய இணை உரிமம் கேட்டுள்ளது. இப்பகுதிகள் மாதத்திற்கு ரூ.1350 கோடி வருமானம் ஈட்டித்தரும் பகுதிகளாகும். தனியார் நிறுவனங்கள் தாமாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், அரசு உருவாக்கியுள்ளவற்றை பயன்படுத்திக் கொண்டு லாபம் ஈட்டப் பார்க்கின்றன; அதிலும் குறிப்பாக, அதிக இலாபம் தரும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து மின் விநியோகம் செய்ய உரிமம் கோருகின்றன. ஏற்கெனவே பெரும் கடன்களை பெற்றுள்ள அதானி நிறுவனம் தனது கடன்களை நுகர்வோர் மீது சுமத்தும் அபாயமும் உள்ளது” என்று கூறினார்.

மேலும், “35,000 தொழிலாளர்கள் இணைந்து நாக்பூர் சட்டமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அதைத்தொடர்ந்து சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் 12,000 தொழிலாளர்களைக் கொண்டு பேரணி நடத்தினோம். எங்களை சந்திக்க வந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்-யிடம் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்ற வேண்டியது அவரது கடமை என்று வலியுறுத்தினோம்” என்று கூறினார்.

அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) மகாராஷ்டிர மாநிலச் செயலாளர் அஜித் நவாலே “மின்சார கட்டணங்கள் உயர்ந்தால் உணவு உற்பத்திக்கு தேவையான பொருட்களின் விலைகள் உயரும். ஏற்கெனவே விதை, யூரியா, பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றின் விலைகள் அதிகமாகத்தான் உள்ளன. இந்நிலையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டால், அது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறினார். மேலும், “கல்வி, சுகாதாரம், மின்சாரம் போன்றவற்றை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து AIKS இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கின்றது. கொரோனா சமயத்தில் அரசு மருத்துவமனைகள் ஆற்றிய பங்களிப்பு பற்றி நமக்கு தெரியும். எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுத்துவிட்டால் ஏழைகளால் எந்த சேவையையும் பெற முடியாது” என்று கூறினார்.

சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் தனது அறிக்கையில், “ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றத் துடிக்கிற புதிய மின்சார திருத்த சட்ட மசோதா 2022, இந்திய மின்சாரத் துறையை முழுமையாக அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கு வழிவகை செய்கிறது என்பதை மகாராஷ்டிர அரசின் நடவடிக்கை உணர்த்துகிறது” என்று சுட்டிக்காட்டினார்.


படிக்க: மின்சார திருத்த மசோதா 2022: மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு!


மகாராஷ்டிர அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் (Maharashtra Essential Services Maintenance Act, 2017 – MESMA) போன்ற அரக்கத்தனமான சட்டங்களைக் கொண்டு தொழிலாளர்களை சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) – பா.ஜ.க கூட்டணி அரசு அச்சுறுத்திப் பார்த்தது. ஆனால், போராட்டத்தின் வீரியத்தைக்கண்டு தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மின் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒடிசா, டெல்லி போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மின் விநியோகம் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட மின்சார சட்டம் 2003, போட்டியை ஊக்குவிப்பதாகக் கூறி தனியார் நிறுவனங்களுக்கு மின்விநியோகத்திற்கான இணை உரிமம் வழங்க அனுமதி அளித்தது. இந்நிலையில், மோடி அரசால் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூர்ந்தாய்வில் உள்ள மின்சார திருத்தச் சட்டம் 2022 அமலுக்கு வந்தால், மின்துறை முற்றிலுமாக தனியார்வசம் சென்றுவிடும். ஏழை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்படும் மானிய-இலவச மின்சாரம் ஒழித்துக் கட்டப்படும். அதானி போன்ற தனியார் முதலாளிகள் லாபம் கொழிப்பதற்கான வழிவகை சட்டரீதியாகவே ஏற்படுத்தப்படுகிறது. இதுதான் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை!

பொம்மி
நன்றி: நியூஸ் கிளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க