♦ அசோக் லேலாண்ட்-ல் மிகை உற்பத்தி : வாரத்தில் 6-வது வேலைநாள் பறிப்பு – சம்பள வெட்டு – ஆட்குறைப்பு !

♦ நண்டு கொழுத்தால் வளையில் தங்காது ! மூலதனம் கொழுத்தால் தொழிலாளர்களை வாழவிடாது !

டந்த 60 ஆண்டுகளில் அதிகபட்ச உற்பத்தி செய்து அதிகபட்ச இலாபமாக ரூ 1,983 கோடி ஈட்டிய அசோக் லேலண்ட் நிறுவனம் வாரத்தில் 6 வது வேலை நாளில் கதவடைப்பு செய்து வருகின்றது. இரவு, பகல், வெயில், மழை, குளிர் பராமல் ஆண்டு முழுவதும் உழைத்து கொடுத்த பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதியஉயர்வு, போனஸ் வழங்க வேண்டிய நிர்வாகம் வாரத்தில் ஒரு வேலைநாளை பறித்துக்கொண்டு தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து வருகின்றது.

போனஸ் கேட்ட நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சம்பளவெட்டை பரிசாக தந்துள்ளது. நிர்வாகத்தின் சூழ்ச்சிகள் நிரம்பிய பேச்சுவார்த்தைகளால் தொழிலாளர்களை குடுமி சண்டையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது, நிர்வாகம். முதலாளித்துவம் வாழவிடாது என்பதற்கு லேலாண்ட் அறிவித்திருக்கும் சட்டவிரோத லே-ஆஃப் ஓர் சாட்சியாகும்.

Ashok Leylandபணி நிரந்தரமில்லாத சூழலில் அசோக் லேலண்ட்-ன் முதலாளித்துவ லாபவெறி கொள்கையால் வாரத்தில் 6 வது நாள் சம்பளவெட்டுக்கு ஓசூரில் மட்டும் 10,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உற்பத்தியில் பெரும்பான்மையாக ஈடுபடும் கேஷுவல்(CL), காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் தொழிலாளர்களில் பணிக்கு சேர்ந்த சில நாட்களேயான 1,100 பேர் ஆட்குறைப்பும் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, தினந்தோறும் இரண்டு வேளை மட்டுமே உணவு உட்கொள்வதும்; தான் வாங்கும் அற்பக்கூலியில் ஒருவேளைக்கு பட்டினி கிடந்து சிக்கனம் செய்துதான் பெற்றோருக்கு பணம் அனுப்புகின்றனர். குறைந்த கூலியை சமாளிக்க விடுமுறை நாட்களில் சில்லரை வேலையும் செய்கின்றனர். இதனால் சத்துமிகுந்த காய்கறி, மாமிசம், மளிகைப் பொருட்கள் வாங்குவதை குறைத்து விடுகிறார்கள். இத்தொழிலாளர்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் ஏறக்குறைய 40 ஆயிரம் பேர் பட்டினியின் பிடியில் தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக, இந்த ஆலை மூடலுக்கு உற்பத்தி தேக்கத்தை காரணமாக காட்டுகின்றது, லேலாண்ட் நிர்வாகம். சந்தையின் தேவையை கணக்கில் கொள்ளாமல் அதிகபட்ச இலாபத்தை மட்டும் உற்பத்தி கொள்கையாக கொண்ட முதலாளித்துவ மிகை உற்பத்திதான் தேக்கத்திற்கு காரணமாகும்.

படிக்க:
♦ தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !
♦ 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை !

லேலாண்டு நிர்வாகம் கடந்த 11 ஆண்டுகளில் உற்பத்தி கொள்கையையே தலைகீழாக மாற்றிவிட்டது. 2008 – 09-ல் 54,431 வாகனங்கள் என செய்யப்பட்ட உற்பத்தி 2018 – 19-ல் 1,94,366 வாகனங்கள் என உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கம் உற்பத்தியில் பேரம் பேச முடியாத வகையில் ALTS என்கின்ற மைக்ரோசெகண்ட் உற்பத்தி முறையைத் திணித்து; பல மடங்கு உற்பத்தி உயர்த்தியும் 6 நாள் உற்பத்தியை 5 நாளில் செய்தும்; உற்பத்தியின் பெரும் பகுதியை அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட் என்ற பெயரில் ஆலைக்கு வெளியே தள்ளி விட்டும்; அதுமட்டுமில்லாமல் கேஷுவல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என பணி நிரந்தரம் செய்யப்படாத பல ஆயிரம் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் அற்பக் கூலிக்கு நியமித்து அவர்களை சுரண்டித்தான் இந்த அதிகபட்ச உற்பத்தியும் லாபத்தையும் ஈட்டியிருக்கிறது, நிர்வாகம்.

பல லட்சம் வாகனம் தயாரிக்கும் அளவிற்கு உற்பத்தி தளத்தை விரிவு படுத்தியதில் பெரும்பாலும் சட்டவிரோதமான நடைமுறைகளே உள்ளது. தற்போது உபரி உற்பத்தியைக் காட்டி வாரத்தில் ஆறாவது வேலை நாளை பறித்து விட்டது. அடுத்து, ஆட்குறைப்பு என்ற கத்தியை தலைக்கு மேல் தொங்க விட்டுள்ளது, லேலாண்ட் நிர்வாகம்.

மற்றொரு பக்கம், இந்த முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கு முன்னால் சட்டப்பூர்வ உரிமைகளை அடகு வைத்த பிழைப்புவாத தொழிற்சங்கத் தலைமைகள் அம்பலப்பட்டு நிற்கின்றன. தொழிலாளர் உரிமைகளை மறுக்கும், இந்த சமூக அமைப்பையே பட்டினியில் தள்ளும் முதலாளித்துவ கொடுங்கோன்மைகளை அம்பலப்படுத்தி முறியடிக்கும் புரட்சிகர தலைமைகள் இன்றைய தேவைகளாக உள்ளது. மேற்கண்ட முதலாளித்துவ தாக்குதல்களை லேலாண்ட் நிர்வாகத்தின் பிரச்சனையாக மட்டும் பார்த்தால் அது தொழிற்சங்கவாதமாக முடியும்.

இதே போல டாடா, மகேந்திரா, மாருதி என பல ஆலைகளில் 5 லட்சம் கார்களும் 30 லட்சம் டூவீலர்களும் தேங்கி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மிகை உற்பத்தியை தேக்கம் என காட்டியதில் குஜராத்தில் 10, ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஆட்டோ மொபைல் சந்தை மந்தமாக உள்ளது என கார்ப்பரேட் கம்பெனிகள், செய்தி ஊடகங்கள் பூதாகரமாக செய்திகள் வெளியிடுகின்றன.

அடுத்து, பொருளாதார மந்தம் என பொதுவாக ஊடங்களில் பேசுவார்கள். ஆனால் முதலாளிகளின் அதித லாபவெறியால் மிகை உற்பத்தி செய்து சந்தையில் தேக்கத்தை ஏற்படுத்தியதை மறைத்து பொருளாதாரம் வீழ்ந்தது என்று சலுகை பெறுவதும் தொழிலாளர் சட்ட உரிமைகளை பறிப்பதும்; அடக்கு முறைகளை ஏவி விடுவதும் முதலாளித்துவ சர்வதேச கொள்கையாகும். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு தொழில் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதாக (போராடி பெற்ற) 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்பு விதிகளாக மாற்றி தொழிலாளர்களின் உரிமைகளை குப்பை தொட்டிக்கு அனுப்ப தயாராக இருக்கின்றது.

முதலாளித்துவத்தின் கட்டற்ற இலாப வெறி கொள்கையால் மிகை உற்பத்தி செய்யப்பட்டு; உலகின் பல நாடுகள் திவாலாகி, மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த நெருக்கடிகள் பாசிச ஆட்சிக்கும் வழி ஏற்படுத்துகிறது.

படிக்க:
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை
♦ தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் !

உதாரணமாக முதலாளித்துவ மிகை உற்பத்தியால் தான் அமெரிக்க பொருளாதாரமே 12 ஆண்டுகளாக வீழ்ந்து கிடக்கிறது. ஆனால் இந்த யதார்த்தத்தை மறைத்து “வந்தேறிகள்தான் நெருக்கடிக்கு காரணம்” எனப் பேசியே டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது “வங்கதேச கரையான்களை ஒழிப்பேன்” என்று வெறுப்பு அரசியல் பேசிய அமித்ஷா மேற்கு வங்கத்தில் மட்டும் 18 எம்.பி தொகுதிகளை கைப்பற்ற முடிந்துள்ளது.

முதலாளித்துவ இலாபவெறியால் உண்டாகும் வேலையின்மை, விவசாயம் – சிறுதொழில் – அழிப்பு , பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளை மறைக்க இனவெறி, மதவெறி, சாதிவெறி என திட்டமிட்டு தூண்டி விட்டு பாதிக்கபட்ட மக்களை பிரித்து பாசிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றி விடுகிறார்கள். உலகளவில் மக்களை சுரண்டும் முதலாளித்துவத்தை புரிந்து கொள்ளத் தவறினால் சக மனிதனையே எதிரியாக பார்க்கும் பாசிசம் நம் வாசலுக்கு வந்து நிற்கும்.

donald-trump-amit-shah

ஹெல்மெட் போடவில்லை என்றாலே இரு சக்கரவாகனம் ஓட்டக் கூடாது எனக் கெடுபிடி செய்யும் அரசு, தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் இந்த கார்ப்பரேட் அடக்குமுறையை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் இந்த லாபவெறிக்கு அரசின் அங்கங்களான தொழிலாளர் நலத்துறை, போலீசு, நாடாளுமன்றம் – சட்டமன்றம் உள்ளிட்ட நிர்வாக அமைப்புகள் அனைத்தும் பாதுகாப்பு அரணாக உள்ளது. பண மதிப்பு நீக்கம் முதல் GST வரை சிறு முதலீட்டாளர்களை விவசாயம், தொழில்துறை இவற்றிலிருந்து வெளியேற்றி எல்லாவற்றையும் கார்ப்பரேட் கையில் ஒப்படைப்பது இந்த அரசின் நோக்கமாகும். ஆட்டோமொபைல் வீழ்ச்சியோ, பொருளாதார மந்தமோ இரண்டுமே முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தான்.

தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் லாபவெறிக்கு எதிராக நமக்கு முன்னே இருக்கும் ஓர் வழி – வரலாறு நமக்கு காட்டும் பாதை – ஒன்று திரளுவதும்! உரிமைக்காக குரல் எழுப்புவதும் தான்!. PF சட்ட திருத்தத்துக்கு எதிராக பெங்களூர் ஆயத்த ஆடை பெண்தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடிய ஒரே நாளில் PF சட்டத் திருத்தத்தை வாபஸ் வாங்கியது, மோடி அரசாங்கம்.

அதுபோல ஓசூரில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்த அரசின் சதித் திட்டங்கள் மற்றும் முதலாளித்துவ அடக்குமுறை, உரிமை பறிப்புக்கு எதிராக அணிதிரள்வோம். தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டுவோம்!

♦♦♦

தொழிலாளர்களே!

  • மக்கள் எதிர்கொண்டுள்ள வேலையில்லாத திண்டாட்டம் முதல் திருட்டு, ஏமாற்று, கொலை, கொள்ளை, வன்முறை என இந்த எல்லா சமூக சீரழிவு பிரச்சனைகளுக்கும் முதலாளித்துவ கார்ப்பரேட் சுரண்டல் தான் காரணமாகும்!
  • கார்ப்பரேட் இலாப வெறிக்காக படித்த இளைஞர்கள், தொழிலாளர்கள் நாடோடிகளாக அலைய வேண்டுமா?
  • NEEM, கேஷுவல், காண்ட்ராக்ட், அப்ரன்டீஸ் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப் போராடுவோம்! மக்களை சூறையாடும் பொருளாதாரக் கொள்கையை வீழ்த்தினால் தான் மக்கள் கையில் பணம் புழங்கும்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880 11784.

1 மறுமொழி

  1. கட்டுரை பதிவு செய்யப்பட்ட சில மாதங்களில் கார்ப்பரேட் வரி சுமார் 30% லிருந்து 22% மாக RSS-BJP தலையிலான அரசு அறிவித்துள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க