11.5.2021

பத்திரிக்கைச் செய்தி !

மாண்புமிகு தமிழக முதல்வர், தொழிலாளர் துறை அமைச்சர், தொழிலாளர் மற்றும் பயிற்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோரது கவனத்திற்கு கீழ்க்காணும் பிரச்சனைக் கொண்டுவரப் படுகிறது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் முதலாவது அலையை விட கடுமையானதாக இருப்பதை தமிழக அரசு நன்கறியும். இந்த கொடுந்தொற்றை எதிர்கொள்ளும் பொருட்டுதான் 10.5.2021 முதல் 24.5.2021 வரை மாநிலம் தழுவிய முழுஅடைப்புக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

இந்த முழு அடைப்பின்போது சிறுதொழில், சிறுவணிகம் செய்வோர் முதல், பல்வேறு குறு மற்றும் நடுத்தர ஆலைகள் மூடப்பட்டுள்ளன. பெல் போன்ற மத்திய அரசின் கீழ் வருகின்ற கனரகப் பொதுத்துறை ஆலைகள் கூட மூடப்பட்டுள்ளன.

ஆனால், சென்னை, ஓசூர், கோவை போன்ற தொழில் நகரங்களில் இயங்கும் அமைந்துள்ள வாகன உற்பத்தி ஆலைகள், அவற்றுக்கு உதிரிப் பொருட்கள் சப்ளை செய்யும் ஆலைகள், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் முழுஅளவில் இயங்கி வருகின்றன.

இந்த ஆலைகள் தங்களை அத்தியாவசிய தொழில் துறையாக அறிவித்து, அரசு அனுமதியைக் கேடாகப் பயன்படுத்தி, தொற்று அபாயம் மிகுந்த காலக்கட்டத்தில் கூட இந்த ஆலைகள் முழுஅளவில் இயங்குவதால் தொற்று அபாயம் அதிகரிப்பது உடன் விளைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த ஆலைகளில் ஏற்கனவே கொத்துக் கொத்தாக தொழிலாளர்கள் தொற்றுக்கு ஆளாகி இருப்பதும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தொற்றுச் சிகிச்சை பலனின்றி இறந்திருப்பதும் தங்கள் கவனத்துக்கு வந்திருக்கக் கூடும்.

பேரழிவான இந்த சூழலில், கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக ஆட்டோமொபைல் துறைக்கு வழங்கப் பட்டிருக்கும் அத்தியாவசிய பணி என்கிற பொருத்தமற்ற விலக்கினை ரத்து செய்து அந்த ஆலைகள் முழுஊரடங்கை கடைப்பிடிக்க உத்தரவிடுமாறும், மூடப்பட்ட முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காலத்துக்கு முழுஊதியம் வழங்க உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

அரசு உத்தரவை மீறுகின்ற நிறுவனங்களது உரிமத்தை ரத்து செய்யவும், தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறோம்.

நன்றி!


தங்கள் உண்மையுள்ள,
ஏ.உத்திராபதி,
ஒருங்கிணைப்பாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க