ல்வேறு தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த, வெவ்வேறு தொழிற்சங்கங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதியன்று தில்லி பாராளுமன்றத் தெருவில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

நரேந்திர மோடி அரசு தற்போது தொழிலாளர் நலன்களைக் குறித்து நடப்பில் இருக்கும் 44 சட்டங்களைக் கூட்டிக் கலந்து நான்கு சட்டங்களாக திருத்தியமைக்க உத்தேசித்திருப்பதை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சம்பளம், பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிட வேலைச் சூழல், சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாடு உள்ளிட்டவைகளை நேரடியாக பாதிக்கக் கூடியதாக இந்த சட்ட திருத்தம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

labour-cose
டெல்லியில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் போராட்டம். ( படம் : நன்றி – த வயர் )

சுமார் பத்து தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தில் சங்கப்பரிவார “தொழிற்சங்கமான” பாரதிய மஸ்தூர் சங்கம் கலந்து கொள்ளவில்லை. “சம்பளச் சட்டம் – 2019” ஏற்கனவே பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கடந்த மாதமே நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்நிலையில், பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், பணியிட வேலைச் சூழல் குறித்த சட்ட திருத்தம் கீழவையில் அறிமுகம் செய்யப்பட்டு விவாதத்திற்காக காத்துள்ளன.

ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் குழப்பமானதாக இருப்பதாகவும், தொழில் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு அவற்றை எளிமைப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தொழிற்சங்கங்களோ இந்த திருத்தங்கள் முதலாளிகளுக்குச் சாதகமானவை என்கின்றன. ஏற்கெனவே இருந்த தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களையே கணக்கில் கொள்வதாக இருந்த நிலையில், தற்போது கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட திருத்தமானது எல்லா பிரிவு தொழிலாளர்களையும் கட்டுப்படுத்துவதாக உள்ளது. மேலும், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளும் குறுக்கப்பட்டுள்ளது.

படிக்க:
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !
♦ கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம்

அதேபோல “சம்பளச் சட்டம்” பயிற்சிக் காலத்தில் உள்ள ஊழியர்களை (அப்ரண்டீஸ்) தொழிலாளர்கள் எனும் வரையறைக்குள் கொண்டு வரவில்லை என்பதையும் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வழிகாட்டுதலின் பேரில் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்ததை மாற்றி அதை ஒரு கமிட்டியின் பொறுப்பில் ஒப்படைக்கும் அதே வேளையில், வருடாந்திர சம்பள உயர்வையும் கணக்கில் கொள்ளவில்லை என்பதை தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன. குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுவது அல்லது மாற்றப்படுவதைப் பொறுத்தவரை ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் ஒரு முடிவெடுத்தால் போதுமானது என்கிறது புதிய சட்ட திருத்தம். இதில் உலகளவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே குறைந்தபட்ச சம்பளமானது மிகக் குறைவான அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் ஆய்வு அதிகாரி (Labour Inspector) எனும் பதவியை “ஆய்வாளர் மற்றும் செயலாக்குநர்” (Inspector-cum-Facilitator) என மாற்றியுள்ளனர். இது நிர்வாக அதிகாரத்தை மொன்னையாக்கும் நோக்கம் கொண்டது என தொழிற்சங்கவாதிகள் குறிப்பிடுகின்றனர். ஒருவேளை தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அது வழக்காடு மன்றத்திற்கு வரும்போது அரசு தரப்பு வாதம் முதலாவதாக இருக்காது. மாறாக, ஆலை நிர்வாகம் தனது செயல்பாடுகளை “சட்டத்திற்கு உட்பட்டதாக” மாற்றிக் கொள்ள “ஆய்வாளர் மற்றும் செயலாக்குநர்” வாய்ப்புக் கொடுக்கலாம்.

trade-union-protest-change-labour-laws
டெல்லியில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் போராட்டம். ( படம் : நன்றி – த வயர் )

குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மீறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை என இருந்தது தற்போது மாற்றப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது AICCTU தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை. மேலும், வேலை நேரத்தைப் பொறுத்தவரை புதிய சட்டத்தின் பிரிவு 13, உட்பிரிவு 1A வேலை நேரத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசுக்கு கொடுக்கிறது. அதே நேரம் பிரிவு 13 உட்பிரிவு 2 அந்த வேலை நேரத்தை நீட்டிக்கும் அதிகாரத்தை முதலாளிகளுக்கு வழங்குகின்றது. ஆக, சட்டப்பூர்வமாகவே 8 மணி நேர வேலை என்பதை நினைத்தமாத்திரத்தில் முதலாளிகளால் மீற முடியும் – தொழிலாளிகளின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது மோடி அரசு.

தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என்கிற பம்மாத்துகளின் பின்னணியில் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் மற்றும் அந்த உரிமைகளைக் காக்க ஏற்படுத்தப்பட்ட 44 சட்டங்களை ஒரே மூச்சில் நொறுக்கிப் போட்டுள்ளது மோடி அரசு. பல்வேறு தொழில்கள், தொழிற்பிரிவுகள் மற்றும் அவற்றில் ஈடுபட்டுள்ள வேறுபட்ட தொழிலாளர்கள், வேறுபட்ட பணிச்சூழல், பிரத்யேகமான நிலைமைகள், தன்மைகள், முக்கியமாக பரந்துபட்ட நாடு மற்றும் பிரதேச வேறுபாடுகள் என பலபத்தாண்டுகளாக ஒவ்வொரு தனித்தன்மையான சூழலுக்கும் ஏற்ப தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் வேண்டும் என ஒவ்வொரு சந்தர்பத்திலும் போராடியதால் தான் இதுவரை இருந்த பாதுகாப்புச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவையனைத்தையும் ஒரே வீச்சில் ஒழித்துக் கட்டிவிட்டு அனைத்துக்கும் ஒரே சட்டம் என மாற்றுவது சந்தேகமின்றி முதலாளிகளுக்கே சாதகமானது என குற்றம்சாட்டுகின்றன தொழிற்சங்கங்கள்.

படிக்க:
காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !
♦ காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !

”தொழிலாளர் நலச் சட்டங்களை பாராளுமன்றத்திற்கு உள்ளும், சிறுபான்மையினரை பாராளுமன்றத்திற்கு வெளியிலும் கும்பல் கொலை செய்துள்ளது பாரதிய ஜனதா. இதனை அனுமதிக்க முடியாது” என்கிறார் AICCTU தொழிற்சங்கத்தின் தில்லி இணைச் செயலாளர் ராஜேஷ் சோப்ரா. ஆனால், சங்க பரிவாரத்தின் பி.எம்.எஸ் இந்த சட்டங்களை வரவேற்கிறது. அதற்கு பி.எம்.எஸ் சொல்லும் காரணம் இந்தச் சட்டங்கள் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொள்கிறது என்பதே.

ஆனால், ஒருமைப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் உள்ள மொத்த தொழிலாளர்களில் நான்கில் மூன்று பங்கினர் பத்துக்கும் குறைவான ஊழியர்கள் கொண்ட சிறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர் என்கிறார் முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பணகாரியா. அனைத்துத் தொழிலாளர்களையும் காக்கப் போகிறோம் என்கிற முகமூடியில் போடப்பட்டுள்ள புதிய சட்டம் உண்மையில் முக்கால் பங்கு தொழிலாளர்களை ஒதுக்கித் தள்ளியுள்ளது.

தொழிலாளர்கள் தில்லியில் நடத்திய போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (International Trade Union Confederation (ITUC)) “மிக அடிப்படையான சமூக நீதியையும், கவுரவமான வேலைக்கான கோரிக்கையையும் மோடியின் அரசு துச்சமாக மதிப்பதை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இது எமது இந்தியச் சகோதர சகோதரிகளின் போராட்டம் மட்டுமல்ல; எமது போராட்டமும்தான்” என அதன் பொதுச் செயலாளர் ஷரோன் பர்ரோ தெரிவித்துள்ளார்.


கட்டுரையாளர் : Akhil Kumar
தமிழாக்கம் :
சாக்கியன்
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க