தனிக்கல்வி வாரியத்தை உருவாக்கி, வேத மரபுகள் மூலம் நவீன பாடங்களைக் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு எழுத்து பூர்வமாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில், “மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி பகுதியில் உள்ள மகரிஷி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஸ்தான் (MSRVVP), தனியார் கல்வி வாரியம் (அதாவது தனிக் கல்வி வாரியம்) அமைக்கும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
அந்தக் கல்வி வாரியத்தில், வாய்வழியாக கற்பிக்கப்படும் வேத மரபுகள் மூலம் நவீன பாடங்களும் கற்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
படிக்க :
♦ பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
♦ புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?
மகரிஷி ராஷ்டிரிய வேத வித்யா பிரதிஸ்தான்:
ஒன்றிய அரசின் கீழ், சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (NIOS) ஆகிய கல்வி வாரியங்கள் இயங்கி வருகின்றன.
இதில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக, மகரிஷி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஸ்தான் செயல்பட்டு வருகிறது.
இவ்வமைப்பு 1987-ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் பி.வி.நரசிம்மராவ் காலத்தில் கொண்டு வரப்பட்டது.
வேதக் கல்வியின் வாய்வழி பாரம்பரியத்தை பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் அதனை கற்பித்து நாடு முழுக்க விரிவுபடுத்துவது என்ற நோக்கத்தோடு செயல்படப் போவதாக அறிவித்தது.
இவ்வமைப்பு இந்தியா முழுவதும் வேத பாடசாலைகளை நிறுவி கல்வி கற்பித்தும் வருகின்றது, இதன் கீழ் பல பாடசாலைகளும் உள்ளன.
வேதக்கல்வி வாரியம் அமைத்தல் :
மோடி அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் வேதக் கல்வியை விரிவுபடுத்துவதற்காக வேதக் கல்வி வாரியத்தையும் அதற்கென்று தனி பல்கலைக் கழகத்தையும் அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் பாபா ராம்தேவ்.
அதனைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அப்போதைய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சரான ஸ்மிருதிராணி வேத கல்வி வாரியம் அமைக்கபடும் என்று அறிவித்தார்.
இந்த வாரியத்திற்கு தலைவராக பாபா ராம்தேவ் நியமிக்கப்படலாம் என்று 2019-ல் மோடி அரசு கூறியிருந்தது.
மேலும் பாடத்திட்டங்களை உருவாக்குவது, கல்வி நிலையங்களை உருவாக்குவது என அனைத்து பொறுப்புகளும் பாபா ராம்தேவ்வின் யோகா பீடம் அறக்கட்டளைக்கு வழங்கவும் முடிவு செய்து இருந்தது மோடி அரசு.
தற்போதைய தர்மேந்திர பிரதானின் அறிவிபின்படி உருவாக்கப்படவுள்ள இத்தனிக் கல்வி வாரியமானது, “தனியார்” என்ற பெயரில் பாபா ராம்தேவ் போன்ற ஆர்.எஸ்.எஸ்.கும்பல்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இப்புதிய வாரியத்தின் மூலம் வேத பாட சாலைகளை உருவாக்குவது, பள்ளி பாடத்திட்டங்களை வடிவமைப்பது, நிர்வாகம் செய்வது என்ற அனைத்து முடிவுகளையும் ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளான பாபா ராம்தேவ் போன்றவர்களே முடிவுசெய்வார்கள்.
படிக்க :
♦ ரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் ? || தோழர் சுரேசு சக்தி
♦ பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடும் 37 தலைவர்களில் ஒருவர் மோடி !
நவீன கல்வி என்ற பெயரில் இந்து மத புராணங்களையும், அறிவியலுக்கு புறம்பான கட்டுக் கதைகளையுமே பாடத்திட்டமாக அறிவிப்பார்கள். ஏற்கனவே, புதிய கல்வி கொள்கையில், வேத கல்வி முறையை திணிக்கும் வகையில் சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். அதில், குருகுல (வேத பாடசலையை) கல்வி முறையையும் அங்கரிப்பது.
அதற்கு சான்றிதழ் வழங்கி பொறியியல், மருத்துவம் போன்ற பட்ட மேற்படிப்புகள் படிக்க அனுமதி வழங்குவது ஆகிய அம்சங்கள் உள்ளன. வேதக்கல்வி வாரியம் அமைத்து, இந்து மத வேதங்களை கற்பிப்பதானது இந்தியக் கல்வித்துறையின் மீதான மிகப்பெரிய பாசிசத் தாக்குதலாகும்.
எனவே, பல்வேறு வழிகளில் கல்வியை காவிமயமாகவும் கார்ப்பரேட்மயமாகவும் மாற்றி வரும் மோடி அரசிற்கு எதிராக, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் – என அனைவரும் ஓரணியில் திரள வேண்டியது அவசியம்.
சிவா
முகநூலில் : புமாஇமு