விடுதலைப் போராட்டத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இறுதிமூச்சு வரை போராடிய வீரர் சந்திரசேகர் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 23-ஐ முன்னிட்டு தி வயர் இணையதளத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்களான ஹர்ஷவர்தன் மற்றும் பிரபாகரன் அகர்வால் ஆகியோர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  சற்று நீளமான கட்டுரைதான்.. ஆனாலும் ஆசாத்தின் வாழ்வில் நாம் அறிந்திராத பல விசயங்களை, அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல விசயங்களை இந்தக் கட்டுரை பேசுகிறது! படியுங்கள் ! அனைவருக்கும் பகிருங்கள் !!

000

தாய் நாட்டின் விடுதலைக்காக தன் உயிரையே துச்சமென தியாகம் செய்த ஆசாத் இந்திய மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவராவார். இந்த நாட்டின் விடுதலையானது வெளியிலிருந்து வரக்கூடிய உதவியால் அல்ல; மாறாக உள்நாட்டிலே ஒடுக்கப்பட்ட மக்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

முறுக்கிய மீசையோடும் கட்டுமஸ்தான உடல் அமைப்போடும் இருக்கக் கூடிய சந்திரசேகர் ஆசாத்தின் படத்தைப் பார்த்தாலே நம்முள் ஒரு வீரஉணர்வு பொங்கி எழும். ஆங்கிலேயரிடம் சிக்காமல் இருப்பதற்காக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துபோன அவருடைய நினைவுகள் இப்பொழுதும் நம் நினைவிலேயே இருக்கும்.

லஜபதிராயை அடித்துக் கொன்ற போலீஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸ் கொலை வழக்கிலும், காக்கோரி ரயில் கொள்ளையிலும் சம்பந்தப்பட்டிருந்த அவர் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்ற அமைப்பின் தலைமை கமாண்டராக இருந்தார். இதன் காரணமாகவே நாம் அவருடைய பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் நாம் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.

படிக்க :
♦ பகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை !
♦ பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?

யார் இந்த சந்திரசேகர ஆசாத்? எதற்காக அவர் போராடினார்? அவரின் தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக போராடினாரா? இந்த 115-ம் ஆண்டு பிறந்த நாளில் (ஜூலை 23, 2021) சந்திரசேகர் ஆசாத்தின் புரட்சிகர பயணங்களில் இருந்து சிலவற்றை கற்க முயற்சி செய்வோம்.

1906-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி ஆசாத் அலிராஜ்பூர் என்ற சுதேசி அரசில் உள்ள  பவரா என்ற கிராமத்தில் பிறந்தார். இந்த இடமானது இப்பொழுது மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜாபூகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவருடைய பெற்றோர்கள் உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அங்கிருந்து மத்தியப் பிரதேசத்தில் குடிபெயர்ந்தவர்கள் ஆவர். ஆசாத்தின் தந்தையான சீதாராம் திவாரி தோட்ட வேலை செய்து வந்தார். அவருடைய தாய் ஜாக்ரணி தேவி ஆவார்.

அவர் இருந்த கிராமமானது பில் பழங்குடியின கிராமங்கள் சூழ அமைந்திருந்தது. அதனால் இயல்பாகவே பில் பழங்குடியின சிறுவர்களுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த பில் பழங்குடியின மக்களிடம் இருந்து வில் வித்தையைக் கற்றுதுடன் அதிலே மிகச்சிறந்த தேர்ச்சி பெற்றார்.

மிகச் சிறு வயதிலேயே பெற்றோரின் பொருளாதார ஏழ்மை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். அவருடைய ஆசிரியர் தாசில்தார் அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். ஒவ்வொரு முறையும் உயர் அதிகாரிகள் வரும்பொழுது தலைகுனிந்து அவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்பது பழக்க வழக்கமாக அங்கே இருந்ததால் இயல்பிலேயே சுயமரியாதை உணர்வு கொண்டிருந்த ஆசாத் இச்செயல்பாடுகளை வெறுத்தார். சில காலம் அங்கேயே வேலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

1920-களில் பம்பாயில் அவர் பிச்சைக்காரன் ஆகவும் துறைமுகத்தில் கூலியாகவும் இருந்திருக்கிறார். அவர் மும்பையில் இருக்கும் பொழுதுதான் உழைக்கும் வர்க்கத்தின் சொல்லொணாத் துயரங்களை முதன் முறையாக நேரில் கண்டார். அப்படிப்பட்ட அந்த தொழிலாளிகளோடு நெருக்கடி மிகுந்த இடத்தில்தான் தங்கியிருந்தார். இப்படிப்பட்ட நெருக்கடி மிகுந்த இடத்தில் தங்குவதை தவிர்ப்பதற்காகவே திரைப்படங்களுக்கு இரவு நேரத்தில் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

“கப்பல் துறைமுகத்தில் அவர் வாரத்தில் ஆறு நாட்கள் வரை வேலை செய்வார். அவ்வாறு வேலை செய்து பணம் ஈட்டிய உடனே புது சட்டையையும் திரைப்படத்துக்கு செல்வதற்கான டிக்கெட்டையும் வாங்குவார். ஒரு வாரம் முழுவதும் பயன்படுத்திய பிறகு அந்த சட்டையை தூக்கி எறிந்து விடுவார்.” ஆசாத்தின் பம்பாய் அனுபவங்களைப் பற்றி அவருடன் இணைந்து வேலை செய்த, ஆசாத்தின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய விஸ்வநாத் வைசாம்பயன் இவ்வாறு கூறுகிறார்.

பம்பாயின் ஒரே மாதிரியான இந்த வாழ்க்கை முறை அவருக்கு மிகவும் சோர்வை ஏற்படுத்துகிறது. மீண்டும் தன்னுடைய முன்னாள் ஆசிரியரை நாடியதன் விளைவாக பெனாரசில் உள்ள காசி வித்யா பீடத்தில் சேர்கிறார். இங்கேதான் அவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது என்று கூறலாம். 1921-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கி வைக்கிறார். 15 வயது சிறு இளைஞனான அவர் அந்த இயக்கத்தில் பங்கு கொள்கிறார். அந்த இயக்கம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக போலீசால் கைது செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தப்படுகிறார்.

இதோ அங்கே மாஜிஸ்ட்ரேட்டுடன் நடைபெற்ற விவாதம்,

 உன்னுடைய பெயர் என்ன?

“ஆசாத்”

உன்னுடைய தந்தை பெயர் என்ன?

நீ எங்கே தங்கி இருக்கிறாய்?

“சிறையில்”

சந்திரசேகர் ஆசாத்தின் பதில்களைக் கேட்டு மிகவும் கோபமடைந்த அந்த மேஜிஸ்ட்ரேட்,  15 வயதான அந்த சிறுவனுக்கு 15 கசையடிகள் தண்டனையாக கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

ஒவ்வொரு கசையடி விழும் பொழுதும் ‘பாரத் மாதா கி ஜெய்’ இன்று மன உறுதியோடும் அழுது கொண்டே உரத்து முழங்கினார். இந்த சம்பவமானது சந்திரசேகர் என்ற அவருடைய பெயர் ஆசாத் என்று மாறும் அளவுக்கு பெனாரசில் அவரை மிகவும் பிரபலமாக்கியது.

அந்த நாட்களில் காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்ற மேடைகளில் சந்திரசேகர் ஆசாத் என்றே அறிமுகப்படுத்தப்படுவார். அவரும் பெயர் காரணம் வந்ததற்கான நீதிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்தை அங்கு விளக்கிப்பேசுவார். இவ்வாறு ஆசாத் காங்கிரஸ் மேடைகளில் ஒரு அங்கமாகி போனார். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்று இருந்த சந்திரசேகர ஆசாத், காந்தியினால் ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டது கண்டு, கடும் மனத்துயரம் அடைந்தார். அவர் ஆயுதம் தாங்கிய புரட்சிகர இயக்கத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கு இந்த சம்பவம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

அந்த நேரத்தில் பெனாரஸ் என்பது புரட்சியாளர்களின் ஒரு முக்கியமான மையமாக இருந்தது. ஜோகேஸ் சந்திர சட்டர்ஜி, ராம்பிரசாத் பிஸ்மில் ஆகியோருடன் இணைந்து சசீந்திரனாத் சன்யால் ஹிந்துஸ்தான் ரிபப்ளிகேன் அசோஷியேஷன் என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கினார்.

பெனாரசை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் புரட்சியாளர்களான ராஜேஸ்வர்லகரி, மன்மதனாத் குப்தா ஆகியோரை தொடர்பு கொண்டு பின்னர் அவர்களோடு இணைந்து  புரட்சிகர அமைப்பின் ஒரு செயல் துடிப்புமிக்க உறுப்பினர் ஆனார். தொடக்கக்காலத்தில் துண்டறிக்கைகள் விநியோகம் செய்வதும் கட்சி உறுப்பினர்களுக்கு தபால்களை கொண்டு செல்லும் வேலையையும் செய்திருக்கிறார்.

புரட்சிகர அமைப்பின் செயல் துடிப்புமிக்க செயல் வீரனான பின்னர், புரட்சிகர இலக்கியங்களைத் தேடிப் படிப்பதில் ஆர்வம் கொள்ள தொடங்குகிறார்.  அவருடைய கல்வி அறிவு போதாமை காரணமாக மிக குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே புத்தகங்களை படிப்பதும் மற்ற தோழர்களை புத்தகங்களை படிக்கச் சொல்லி கேட்பது என்று அவர் தன்னை சித்தாந்த ரீதியாக வளர்த்துக் கொள்வதற்கும் போராடியிருக்கிறார்.

HRA முழு நேர ஊழியரான பிறகு, இத்தாலிய தேசியவாதிகளான மாஜினி மற்றும் கரிபால்டி, ஐரிஷ் புரட்சியாளர்களான மேக்ஸ்வினி மற்றும் பான்டே ஜீவன், சச்சிந்திரநாத் சன்யால்  சுயசரிதை ஆகியவற்றை விருப்பமுடன் படித்தார். ரசியா மற்றும் அயர்லாந்தின் புரட்சிகள் பற்றிய புத்தகங்களையும் குரு கோவிந்த் சிங், சிவாஜி, ராணா பிரதாப் ஆகியோரின் சுயசரிதைகளையும் படிக்கிறார். அக்காலத்தில் புரட்சிகர அமைப்பின் புதிய உறுப்பினர்கள் இப்படிப்பட்ட புத்தகங்களைப் படிப்பது கட்டாயமான ஒன்றாக இருந்தது.

தோழர் சிவவர்மாவிடருந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகத்தை ஆசாத் பெறுகிறார். எச்.எஸ்.ஆர்.ஏ-வின் தலைமை கமாண்டராக இருந்தபோது தோழர்கள் அனைவரும் சோசலிசம் பற்றி கற்றுக் கொள்வதற்காக சத்யா பக்த் எழுதிய “ABC OF COMMUNISM” என்ற புத்தகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலும் படிப்பவை அனைத்துமே நடைமுறைக்கானது தான் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

1925-ல் புகழ்பெற்ற காக்கோரி ரயில் கொள்ளையில் ஆசாத் ஈடுபடுகிறார். இதற்கு முன்னதாகவே பல நிலக்கிழார் வீடுகளை கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். காக்கேரி ரயில் கொள்ளை ஆனது, புரட்சியாளர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நேரடியான யுத்தத்தைத் தொடங்கி விட்டார்கள் என்பதை அறிவித்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு புரட்சியாளர்களின் மீது மிகவும் கடுமையான அடக்குமுறை செலுத்தப்பட்டது. பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்; பலர் கொல்லப்பட்டார்கள். எப்படியாகினும் ஆசாத் அதிலிருந்து தப்பித்து ஜான்சியை வந்தடைந்தார். அங்கே சில ஆண்டுகள் மாறு வேடமிட்டு அவர் வாழ்ந்து வந்தார். எப்படிப்பட்ட நேரத்திலும் அவர் தலைமறைவாக சொல்வதில் கெட்டிக்காரராக இருந்ததால் பிஸ்மில் அவருக்கு ‘குயிக்சில்வர்’ என்ற பட்டப் பெயரைக் கொடுத்தார்.

“The Legend of Bagat SIngh” என்ற இந்தி திரைப்படத்தில் ககோரி கொள்ளை தொடர்பான காட்சி

1927-ம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி அஸ்வ குல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் ரோஷன் சிங் ஆகிய புரட்சிகர தலைவர்கள் காக்கோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று கூறி பிரிட்டிஷ் அரசாங்கம் தூக்கு தண்டனை நிறைவேற்றியது.

காக்கோரி ரயில் கொள்ளைக்கு பிறகு புரட்சிகர கட்சியானது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி சிதிலமடைந்தது. சிறைக்கு வெளியே ஆசாத் மட்டுமே புரட்சிகரக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். இப்பொழுது இந்த புரட்சிகர கட்சியை மீண்டும் உருவாக்குவதற்கான தேவை அவர் முன்னே இருந்தது. இந்த அவசியமான நோக்கத்திற்காக அவர் பஞ்சாபினை அடித்தளமாகக் கொண்டு செயல்படக் கூடிய பகத்சிங் மற்றும் சுகதேவ் உள்ளிட்ட புரட்சியாளர்களை தொடர்பு கொண்டார்.

அவர்களுடன் மேற்கொண்ட தொடர்ச்சியான கூட்டு முயற்சியின் பலனாக பிரிட்டிஷ் அரசை வீழ்த்துவதற்கான புதிய உற்சாகத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட சித்தாந்தத்தால்  பல  புரட்சியாளர்கள் அறுவடை செய்யப்படுவதற்கான காலம் கனிந்தது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக வடஇந்தியாவைச் சேர்ந்த பல புரட்சியாளர்கள் இணைந்து ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசாசியேசன் என்ற ஒரு புரட்சிகர  இயக்கத்தை உருவாக்கினார்கள். அந்த இயக்கத்தின் ராணுவ பிரிவுக்கான தலைமை கமாண்டராக சந்திரசேகர ஆசாத் நியமிக்கப்பட்டார். HSRA-ஆனது  HRA-இன் கொள்கைகளோடு இணைந்து மேலும் இது முக்கியமான குறிக்கோள்களை கொண்டிருந்தது.

ஒன்று சோசலிசத்தின் மூலமாக மட்டுமே இக்கட்சியானது தனது இலக்கை அடைய முடியும்.

டர்பன், திலகம், பூணூல் உள்ளிட்ட அனைத்து வகையான சாதி மற்றும் மத ரீதியான அடையாளங்களை அழிக்க வேண்டும்.

லாலா லஜபதிராயை அடித்தே கொன்ற பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி ஜேபி சாண்டர்ஸை சுட்டுக்கொலை  செய்ததே HSRA-ன் முதல் நடவடிக்கையாகும்.

இரண்டாவது நடவடிக்கையாக “பொதுப் பாதுகாப்பு மற்றும் தொழில் தகராறு மசோதாவுக்கு எதிராக மத்திய சட்டசபையில் பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஆகியோரால் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றது. மேற்கண்ட இரண்டு சம்பவங்களின் மூலமாக இந்த புரட்சிகரக் கட்சியானது வெளிச்சத்துக்கு வந்ததுடன் பொது மக்களின் ஆதரவையும் ஏகோபித்த அளவில் பெற்றது.

ஆனால், இந்த சம்பவத்துக்கு பிறகு HSRA-ன் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டும் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

சித்தாந்த பயணத்தில் ஆசாத்

“நான் சிறையிலிருந்து வெளியே வந்து ஆசாத்தை சந்தித்தபொழுது, அவர் சுதந்திர போராட்டம் தொடர்பான கண்ணோட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பெற்றிருந்தார். புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த புரட்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டு தியாகி ஆகியுள்ளனர். இந்த சூழலில் தொடர்ச்சியாக புரட்சிகர இயக்கங்கள் வீழ்ச்சி அடைந்து கொண்டே இருப்பதை குறித்து தீவிரமான ஆராய்ந்தறிந்து புரட்சிகர கட்சியானது கண்டிப்பாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். இயக்கத்தின் பிற்காலத் தேவைக்காக தெரிவுசெய்யப்பட்ட சில நபர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்க வேண்டும்.” என்ற கருத்தை முன்வைத்தார் என்று கூறுகிறார் லாகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அஜாய் கோஷ். 1920-களில் லாகூர் சதி வழக்கில் போதிய சான்றுகள் இல்லை என்று கூறி இவர் விடுவிக்கப்பட்டார். பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார்.

ஒரு முற்போக்கு தேசியவாதியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஆசாத், அதன் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் புரட்சிகர கட்சிக்கு அரசியல் சித்தாந்த ரீதியான வளர்ச்சியின் அவசியத்தை உணருகிறார். அதனால் தான் HRA-ஐ HSRA என்று நேரடியாகவே மாற்றியமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். இவ்வாறு மாற்றியமைப்பதற்கான முக்கியமான மூன்று காரணங்கள்

  1. காலனிய எதிர்ப்பு தேசியவாதம் என்பதில் இருந்து சோசலிசத்தை நோக்கி முன்னேறுதல்
  2. வெகுஜன அரசியலை நோக்கிய ஆயுதப் போராட்டம்
  3. கறாரான நாத்திகத்தை நோக்கிய சாதி மத அடையாளங்கள் துறப்பு

சிறையில் இருந்து வெளியே வந்த அஜாய் கோஷ், ஆசாத்தை சந்தித்தபோது, தொடர்ச்சியாக கட்சியானது முற்றிலும் முடங்கிப்போய்க் கிடந்தது. மத்திய கமிட்டியானது செயலிழந்து போயிருந்தது. HSRA-ன் மாகாண கமிட்டிகள் சொந்த முறையில் வேலை செய்ய வேண்டுமென்று வழிகாட்டப்படுகிறது. புரட்சிகரக் கட்சி மீண்டும் உருவாக்குவதற்கும் வட இந்தியா மற்றும் மேற்கு, தெற்கு ஆகிய பகுதியில் புரட்சிகர இயக்கத்தை வளர்ப்பதற்காக சில தோழர்களை சித்தாந்த பயிற்சிக்காக யஷ்பால், சுரேந்திரநாத் பாண்டே மற்றும் பவானி சிங் ஆகியோரை சித்தாந்த பயிற்சிக்காக சோவியத் யூனியனுக்கு அனுப்ப வேண்டும் எந்த திட்டத்தையும் கொண்டிருந்தார்.

மேற்கண்ட திட்டமானது மீரட் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனான ஆலோசனையில் இருந்து உருவானதாகும். HSRA மீரட் அமைப்பாளரான ராஜேந்திரபால்சிங் வாரியர் மீரட் சதி வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். அவருடைய தம்பி விஜய்சிங்பால் பாதுகாப்பு கமிட்டியின் உறுப்பினராக இருந்தார். இருவரும் மீரட் சதி வழக்கில் முக்கியமான குற்றவாளிகளாக இருந்தனர்.

வாரியர் தனது நினைவுக் குறிப்புகளின் மூலம் HSRA புரட்சியாளர்கள் சோவியத் யூனியன் செல்வதற்காக பம்பாய் சென்று பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்று திட்டமிடப்பட்டு இருந்ததை கூறுகிறார்.

யஷ்பால் பாம்பே சென்று கம்யூனிஸ்ட் செயல்பாடுகளை சந்திக்கிறார். ஆசாத் இறப்பின் காரணமாக இத்திட்டமானது கைவிடப்படுகிறது பின்னாளில் யஷ்பால் மற்றும் பாண்டே ஆகியோர் கைது செய்யப்படுகிறார்கள். HSRA சார்பில் சோவியத் யூனியனுக்கு கேதார் புரட்சியாளரான பிரீத் சிங் சென்று வந்திருக்கிறார். ஆசாத் கொல்லப்பட்ட அதே ஆல்பிரட் பூங்காவில் சில வாரங்களுக்கு முன்பு அவரை சந்தித்திருக்கிறார்.

ஆசாத்தின் இறுதிக் காலங்களில் அவருடைய சித்தாந்தங்களில் அதிகமான கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சோசலிச தத்துவத்தின் அடிப்படையில் ஏற்கனவே நடத்தப்பட்ட புரட்சிகர போராட்டத்தின் பல்வேறு அனுபவங்களை சேகரித்திருக்கிறார்.

“பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடிமைத்தனத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நான் செய்துவரும் போராட்டத்தின் விளைவாக நம்முடைய இன்னுயிரை தியாகம் செய்வதற்கு நாம் ஆவலாக இருக்கிறோம். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக நாம் நடத்தக் கூடிய போராட்டங்களை சுதேச அரசுடன் ஒப்பிட முடியாது. ஒருவேளை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு சுதேச அரசுகள் உருவானால் அங்கே இந்த விலங்குகள் (மன்னர்கள்) 10 முதல் 20 வரையிலான பெண்களுடன் அந்தபுரத்தில் சல்லாபித்துக் கொண்டு இருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு கிடைக்கும் உரிமை எனில்  அவர்கள் நமக்கு என்ன மாதிரியான நீதியை வழங்குவார்கள்” என்று ஆசாத் தன்னுடைய தோழர்களிடம் கூறுகிறார்.

இந்திய தேசிய காங்கிரஸ் ஆகட்டும் அல்லது தேசியவாத இயக்கங்கள் ஆகட்டும் இது நாட்டின் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையான மக்களுக்கு ஒருபோதும் நீதியை கொடுக்க மாட்டார்கள் என்று தன்னுடைய கருத்தை தெரிவிக்கிறார். இதன் மூலம் அவருடைய சித்தாந்தம் அது மென்மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது புரிந்து கொள்ள முடிகிறது. அவர் பரவசமான சூழலில் கீழ்க்கண்ட பாடலை மெல்லியதாக பாடுவார் என்று மன்மத நாத் குப்தா கூறுகிறார்.

“சுதந்திர இந்தியா
அங்கே மக்கள் அனைவருக்கும்
பொதுவான உணவு உண்பதற்கு இருக்கின்றன.
ஆடைகள் உடுத்துவதற்கு இருக்கின்றன.
வீடுகள் தங்குவதற்கு இருக்கின்றன.”

ஆசாத் மிகச்சிறந்த அமைப்பாளராக கட்சியின் தலைமை கமாண்டராக செயல்பட்டார். தத்துவத்திலும் திட்டத்திலும் முன்மாதிரியாக செயல்பட்டார். புரட்சிகர நடவடிக்கைகளை விமர்சித்து காந்தி எழுதிய வெடிகுண்டின் தீமை என்ற கட்டுரைக்கு எதிராக HSRA சார்பில் ‘வெடிகுண்டின் தத்துவம்’ என்ற துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. இது தொண்டருக்கு எனது பகவதி சரண்வோரா, யஷ்பால் மற்றும் ஆசாத் ஆகியோர் இணைந்து எழுதினர்.

ஆசாத்தும் மதமும்

புரட்சிகர நடவடிக்கைகளுக்கு நிதி தேவை என்பதற்காக காசிப்பூர் மடாலயத்தை கொள்ளையடிப்பதற்காக திட்டமிடப்பட்டது. அதற்காக ஆசாத் அந்த மடத்திலேயே நான்கு மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அந்த மடாலயத்தின் தலைமை பீடாதிபதி இறப்பார் அல்லது அவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக காத்திருந்தார்.

மடாதிபதி இறக்காதபோது அவரை கொலை செய்வதற்கு புரட்சியாளர்கள் தயக்கம்  காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இந்தத் திட்டமானது  பின்னாளில் திரும்பப் பெறப்படுகிறது.

முறுக்கிய மீசையோடும் பூணூல் அணிந்த படியும் ஆசாத் இருக்கக்கூடிய படமானது மிகவும் புகழ்பெற்றது. இந்தப் படமானது சமத்துவம் மற்றும் சித்தாந்தம் பற்றிய HSRA நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது.

இது ஜான்சியில் ஆசாத் மாறுவேடத்தில் பிச்சைக்காரனாக ராமாயணத்தை பாராயணம் செய்தபோது எடுத்த படமாகும். அவர் பல காலங்களுக்கு முன்னரே பூணூல் அணிவதையும் மத அடையாளங்களை இடுவதையும் 1928-ஆம் ஆண்டில் மத்திய கமிட்டி எடுத்த முடிவின் அடிப்படையில் தவிர்த்துவிட்டார். பூணூல் தொடர்பாக எழுந்த விவாதத்தின் போது “தேசத்திற்காக நீங்கள் உயிர்த் தியாகம் செய்ய முனைந்தால்  கண்டிப்பாக அதையும் தியாகம் செய்வீர்கள்” என்று பதிலளித்தார்.

பல மாறுவேடங்களில் ஆசாத் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொண்டார். இந்து துறவி, மோட்டார் மெக்கானிக் இப்படிப் பல வேடங்கள். ஆக மத அடையாளங்களை கருவியாகவே தலைமறைவு வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்.

கடைசி நாட்கள்

மத்திய சட்டசபையில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு பல தோழர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகிறார்கள். ஆசாத்தின் கட்சியானது முற்றிலும் முடங்கியது. அப்போதும் கூட அவர் தன்னுடைய நம்பிக்கையை கைவிடாமல் மீண்டும் கட்சியை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். பகத் சிங்கையும் மற்ற தோழர்களையும் எவ்வாறு சிறையில் இருந்து விடுவிப்பது என்பது தொடர்பாகவே அவர் இறுதி நாட்களில் சிந்தித்து வந்தார்.

பகத்சிங் மற்றும் தோழர்களை சிறையில் இருந்து விடுவிப்பதற்காக காங்கிரஸ் தலைவர்களான காந்தி மற்றும் நேரு ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவதற்காக அவர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் அவர்களிடமிருந்து வெற்று வாக்குறுதிகளை மட்டுமே பெற்றார்.

ஆசாத் புதிய பாதையின் வழியாக கட்சியை மீண்டும் கட்டுவதற்கு அதிகப்படியான முயற்சியை செய்தார். அதற்காகவே பம்பாய் (மும்பை) செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டார். அங்கு செல்வதற்கு முன் தன்னுடைய இருப்பிடத்தை அலகாபாத்திற்கு மாற்றிக் கொண்டார்.

“The Legend of Bagat SIngh” என்ற இந்தி திரைப்படத்தில் ஆசாத் மரணம் தொடர்பான காட்சி

1931 பிப்ரவரி 27-ம் தேதி ஒருவரை சந்திப்பதற்காக ஆல்பிரட் பூங்காவில் காத்திருந்தார். அப்பொழுது அவரை சுற்றி வளைத்த போலீஸ் சரணடையுமாறு கூறியது. போலீஸிடம் தான் உயிருடன் கைதாக மாட்டேன் என்று அவர் ஏற்கனவே சபதம் செய்திருந்தார். அவருடைய சபதத்தை நிறைவேற்றுவதற்கான நாளும் நெருங்கிவிட்டது. ஆசாத் மிகவும் உறுதியோடு போலீஸ் பட்டாலியனை எதிர்த்து சில மணிநேரங்கள் தீவிரமான சண்டையிட்டார். பிறகு குண்டுக் காயங்களுடன் அவர் உடல் கைப்பற்றப்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்று மக்கள் கருதுகிறார்கள்.

தாய் நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்களில் மிகவும் நேசிக்கப்பட்டவராக ஆசாத் இப்போதும் இருக்கிறார். வலதுசாரியினர் அவருடைய படத்தை தங்களுடைய போராட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்காக பயன்படுத்துகிறார்கள்.

பல பார்ப்பன இளைஞர்கள் மீசை முறுக்கி விட்டு சாதிப் பெருமையை பறைசாற்றி கொள்வதற்காக சந்திரசேகர் திவாரி என்று தங்களை பெருமையாக அழைத்துக் கொள்கிறார்கள்.

படிக்க :
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
♦ மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்

இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் மூலமாக மட்டுமே விடுதலை அடைய முடியுமே தவிர வெளியிலிருந்து கிடைக்கக் கூடிய உதவியால் அல்ல என்பதை உறுதியாக கடைப்பிடித்த புரட்சிகர இயக்கத்தின் அசைக்க முடியாத அங்கம் ஆசாத். மத அடிப்படையிலான அரசியலை மட்டுமல்ல; மதங்களின் மீது மிகவும் கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். ஒரு மனிதன் இன்னொரு மனிதனையோ ஒரு நாடு இன்னொரு நாட்டையோ சுரண்டாத சமூகத்தை உருவாக்குவதற்காக அவர் போராடினார் என்பதே உண்மை.


கட்டுரையாளர்கள் : ஹர்ஷவர்தன் மற்றும் பிரபாகரன் அகர்வால் – ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள்
தமிழாக்கம் : மருது, மக்கள் அதிகாரம்
செய்தி ஆதாரம் : The Wire