கத்சிங் மற்றும் அவரது தோழர்கள் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி லாகூர் மத்திய சிறையில் ஆங்கிலேயே அரசினால் தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். அதற்கு அடுத்து மார்ச் 24-ம் தேதி அவர்களது தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் முழு கடை அடைப்பை நடத்த முயன்றனர். தொடர்ந்து இந்து மற்றும் இசுலாமிய கும்பல்களால் நடந்த வன்முறை மற்றும் பதில் வன்முறையால் 400 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் கான்பூரே சூறையாடப்பட்டது.

அதற்கடுத்த ஆறு நாட்கள் மார்ச் 30 வரை இரு மத வழிப்பாட்டு தலங்கள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த வன்முறையில்தான் ஐக்கிய மாகாண காங்கிரசு அமைப்பின் (United Province Congress Committee) தலைவரும் பகத்சிங்கின் நண்பரும் தீரமிக்க விடுதலை போராட்ட வீரருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி (Ganesh Shankar Vidyarthi) தன்னுடைய இன்னுயிரை இழந்தார். மார்ச் 25-ம் தேதி வன்முறையினால் பற்றிக்கொண்ட நெருப்பிலிருந்து அப்பாவி இந்து மற்றும் முஸ்லீம் மக்களை காப்பாற்றும் முயற்சியின் போது அந்த துயரம் நடந்தேறியது.

கான்பூர் கலவரம் குறித்த சித்திரம் (கோப்புப் படம்).

படுகொலைக்கு சில நாட்களுக்கு முன்பு காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான 1931, மார்ச் 5-க்கு பிறகு சிறையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். பகத்சிங் மற்றும் தோழர்களது விடுதலை குறித்து அவ்வொப்பந்தம் எதுவும் பேசவில்லை. ஆனால், நாடு முழுவதும் வலுவாக வீசிய பகத்சிங் அலையின் காரணமாக அவரை விடுதலை செய்யக்கோரி இர்வினிடம் காந்தி வேண்டியதாகவும் ஆனால், அது வெற்றி பெறவில்லை என்றும் நேரு தன் வரலாறில் எழுதியுள்ளார்.

காந்தி மற்றும் இர்வினிடையே உடன்படிக்கை நடந்து கொண்டிருந்த சமயத்தில் பகத்சிங் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களை பற்றி ஒப்பந்தத்தில் என்ன இருந்தது என்று பகத்சிங்கின் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கழக (Hindustan Socialist Republican Association) ஆயுதப்படை தலைவரான சந்திர சேகர் ஆசாத் கேள்வி எழுப்பினார். ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னரே அலகாபாத்தில் உள்ள அல்பிரட் பூங்காவில் பிப்ரவரி 27, 1931-ல் ஆசாத் கொல்லப்பட்டார்.

போலீசு மற்றும் நீதிமன்றங்களின் மூலம் கலவர வன்முறையில் ஈடுப்பட்டவர்களை வெள்ளையர்கள் விடுதலை செய்ததில் வியப்பேதுமில்லை. வன்முறை கலாச்சாரம் இந்தியாவின் கொள்ளை நோய் என்றும் இந்தியாவிற்கு அமைதியை வழங்க ஆங்கிலேயே அரசு கண்டிப்பாக தேவை என்ற காலனிய கற்பிதத்திற்கு இது வலு சேர்த்தது.

இங்கே நமக்கு இன்றியமையாத கேள்வி ஒன்று வருகிறது. பகத்சிங் ஒரு வெளிப்படையான நாத்திகவாதி, புரட்சியாளர் மற்றும் மதச்சார்பற்றவர் எனில் அவருக்கு அஞ்சலி செலுத்த இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களது குரல்வளைகளை ஏன் பிடித்துக் கொள்ள வேண்டும். பகத்சிங்கை தூக்கிலிட அழைத்து செல்லும் போது சிறைக்காவலரான சரத் சிங் கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்குமாறு பகத்சிங்கிடம் கிசுகிசுத்தார். அதற்கு புன்னகையுடன் பதிலளித்த பகத்சிங், “என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் நான் கடவுளை வழிபட்டதில்லை. இப்போது கடவுளிடம் நான் மன்னிப்பு கேட்பேனானால், ‘இதோ பார்… சாவு நெருங்குவதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை’ என்று அவர் கூறுவார்” என்றார் பகத் சிங்.

கான்பூரில் இந்து மற்றும் இசுலாமிய மதவாத அமைப்புகளால் 1920-களின் முடிவில் தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி நடவடிக்கைகள் வளரத் தொடங்கியதுதான் வகுப்புவாத வன்முறைகளுக்கு காரணம் என்று “சமூக பிணைப்புகள், மத உறவுகள் : இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கான்பூரின் ஜவுளி தொழிலாளர்கள் (Bonds of community, ties of religion: Kanpur textile workers in the early twentieth century)” என்ற ஒரு ஆய்வு கட்டுரையில் சித்ரா ஜோஷி இதற்கு பதிலளிக்கிறார்.

கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை.

கான்பூரில் தாய்மதத்திற்கு திரும்பும் சுத்தி (shuddhi) இயக்கத்தை ஆரிய சமாஜம் பெரும் ஆர்வத்துடன் தொடங்கியது. அதில் ஆர்வமற்றவர்கள் கதா மண்டலை (Katha Mandal)  உருவாக்கினர். அது தற்காப்பு பயிற்சிகள் மற்றும் மதமாற்ற நடவடிக்கைகள் செய்ய முற்பட்டது. போட்டியாக முஸ்லீம்களும் டப்லை-உல்-இஸ்லாம் (Tabligh-ul-Islam) என்ற அமைப்பைத் தொடங்கினர். வெறுமனே மதம் தொடர்பான கூட்டங்களுக்கு பதிலாக ஒருவரையொருவர் வெறுப்புணர்ச்சியூட்டவே இவை பயன்பட்டன.

காங்கிரசில் இருந்த பல்வேறு உள்ளூர் தலைவர்கள் ஆரிய சமாஜம் மற்றும் இந்து மகாசபாவின் நடவடிக்கைகளில் பங்கேற்றது காங்கிரசு இந்துக்களுக்கு ஆதரவான அமைப்பு என்ற எண்ணத்தை முஸ்லீம்களிடம் ஏற்படுத்தியது. காங்கிரசில் உண்மையிலேயே மிகச்சிறுபான்மையினர் தான் மதச்சார்பற்றவர்களாக இருந்தார்கள் என்று வன்முறை குறித்த காங்கிரசு கமிட்டியின் அறிக்கையில் சேர்க்கப்பட்ட ஜபருல் முல்க்கின் (Zafarul Mulk) மாற்றுக்கருத்து அம்பலப்படுத்துகிறது.

வெள்ளையர்களின் பிரித்தாளும் கொள்கையின் விளைவாக வாக்காளர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. விதிவிலக்காக இங்கு அனைத்து சமூகத்தினரின் ஒருமனதான ஆதரவை பெற்றவர் கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி மட்டுமே.

கான்பூர் வன்முறைக்கான காரணங்களை ஆய்வு செய்யும் போது ஒரு உண்மை தெரிய வருகிறது. தலைவர்களாக இருந்தவர்கள் மதச்சார்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பிற மதத்தினரிடையே அவருக்கு இருக்கும் மதசார்பற்ற நன்மதிப்பு சீர்கெடுகிறது. கான்பூரில் கணேஷ் வித்யார்த்தியின் பழைய நடவடிக்கைகளாலும் அவருடைய கொள்கை மற்றும் பகத்சிங்கிடம் அவருக்கு உள்ள தொடர்பினாலும் அவரது மதச்சார்பற்ற தன்மையை யாரும் சந்தேகிக்கவில்லை.

படிக்க:
நூல் அறிமுகம் : பகத்சிங் சிறைக் குறிப்புகள்
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்

இந்நிலையில் இங்கே ஒரு கேள்வி எழுவது காலத்தேவையாக இருக்கிறது. விடுதலையடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் இந்தியா ஏன் இன்னும் பிளவுபட்டு கிடக்கிறது? யாருக்குமே மகிழ்ச்சியில்லை. பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என இருவருமே மனநிறைவற்று வாழ்கின்றனர்.

அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தலைவர்கள் கடைபிடிக்கும் ‘ஒருவிதமான’ மதச்சார்பின்மை, பெருந்திரளான மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இதில் மாற்றம் தேவைப்படுகிறது என்பதுதான் அதன் பொருள். நாட்டில் 97 விழுக்காடு மக்கள் மத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் நிலையில் அவர்களில் சிலர் (தலைவர்கள்) அதை பொதுவெளியில் வெளிக்காட்டும் சூழலில் தத்துவத்திலும் நடைமுறையிலும் கட்டுக்கோப்பான மதச்சார்பின்மை ஒன்று இங்கே தேவைப்படுகிறது.

பொதுமக்கள் குறிப்பாக தலைவர்களின் மத அடையாளங்களை தனிப்பட்ட நம்பிக்கை என்ற அளவிற்கு குறுக்குவதன் மூலம் உருவாக்கப்படும் மதச்சார்பின்மை மற்றும் ஒன்றுபட்ட இந்தியா என்ற கட்டமைப்புதான் பகத்சிங் மற்றும் கணேஷ் வித்யார்த்தி இருவருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

கட்டுரையாளர் : Avinash Mohananey
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : thewire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க