குஜராத்தில் 2002-ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது சர்தார்புரா கிராமத்தில் 33 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 17 பேருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே மற்றும் நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது. இக்குற்றவாளிகளை மத்திய பிரதேசத்திற்கு அனுப்பி ‘சமூக’ சேவை செய்யவும்(!) நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
2002, பிப்ரவரி, 27 காலையில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் எரிந்ததில் கரசேவகர்கள் உள்ளிட்ட 59 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு ஒரு நாளுக்கு பிறகு இதை காரணமாக கொண்டு சர்தார்புராவில் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதியான ஷேக் வாஸ் அருகே இந்துத்துவ வன்முறைக் கும்பல் ஒன்று கூடியது. பயந்து போன முஸ்லிம் மக்கள் அங்கேயிருந்த இப்ராஹிம் ஷேக்கின் வீட்டில் தஞ்சமடைந்தனர். வன்முறைக் கும்பல் அந்த வீட்டை கொளுத்தி 33 பேர்களை உயிருடன் எரித்து கொன்றது.
முன்னதாக, சர்தார்புரா கலவர வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 17 குற்றவாளிகள் அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
குற்றவாளிகளில் ஒருப்பிரிவினரை இந்தூருக்கும், மற்றொரு பிரிவினரை ஜபல்பூருக்கு அனுப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆனையிட்டுள்ளது. உள்ளூர் காவல் நிலையத்தில் வாரந்தோறும் வந்து கையெழுத்து போடுவதுடன் வாரத்திற்கு ஆறு மணி நேரம் சமூக(!) சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
குற்றவாளிகள் பிணை நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு இந்தூர் மற்றும் ஜபல்பூரில் உள்ள மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்க பொருத்தமான வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுமாறு மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கோத்ராவுக்குப் பின் நடந்த ஒன்பது கலவர வழக்குகளில் சர்தார்புரா படுகொலை சிறப்பு புலனாய்வு குழுவினால் விசாரிக்கப்பட்ட முதல் வழக்காகும். கோத்ரா கலவரத்திற்குப் பிந்தைய சர்தார்பூரா வழக்கில் 14 பேரை விடுவித்து 17 பேரை குற்றவாளிகளாக குஜராத் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இப்போது அந்த 17 பேர்களையும் உச்சநீதிமன்றம் விடுவித்திருக்கிறது.
படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு !
♦ புத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா !
சிறுபான்மையினருக்கும் தலித் மக்களுக்கும் எதிராக திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்துத்துவா கும்பல்கள் தொடர்ந்து ஆளும் பா.ஜ.க அரசாங்கத்தினால் விடுவிக்கப்படுவதுடன் அதிகாரத்திலும் அமர்த்தப்படுகின்றனர். மறுபுறத்தில் பழங்குடி மக்களுக்காகவும், வன்முறையினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கக்காவும் உரிமை குரல் எழுப்பும் செயற்பாட்டாளர்களையும், அமைப்புகளையும் பிணையில் வர முடியா வழக்குகளில் அடைத்து சித்தரவதை செய்கிறது பிணந்திண்ணி பா.ஜ.க அரசாங்கம்.
சுகுமார்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.