சில சமயங்களில் புத்தகம் எழுதுவதுகூட சிலரது வாழ்வை நாசமாக்கிவிடும். அதற்கு உதாரணம், வரலாற்றுப் பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா.

1998-ல் சுஷில் ஸ்ரீவஸ்தவா குஜராத்தில் உள்ள மகாராஜா சாயாஷிராவ் பல்கலைக்கழகத்தில் வரலாறு பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். அப்போது கல்வித்துறை அமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல் – பிறகு குஜராத்தின் முதல்வரானவர் – பா.ஜ.க எம்.எல்.ஏ.வான மது ஸ்ரீவத்ஸவா மூலம் ஒரு செய்தியை அனுப்புகிறார். அதாவது சுஷில் குஜராத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும். அதன் பின் அனில் கானே அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான பிறகு, சுஷிலை அழைத்து “உடனடியாக வெளியேறாவிட்டால் கை, கால்களை உடைத்து விடுவார்கள். ஏன் இப்படியெல்லாம் புத்தகம் எழுதுகிறாய்?” என்று கேட்கிறார்.

பயந்துபோன சுஷில் சீக்கிரமே அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வேலை தேடிக்கொண்டு சென்றுவிடுகிறார்.

அப்படி அவர் என்ன புத்தகத்தை எழுதினார்? “The Disputed Mosque: A Historical Inquiry” என்பதுதான் அந்தப் புத்தகம்.

நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு, எழுதப்பட்ட புத்தகம் இது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பாபர் மசூதி குறித்து துல்லியமான தகவல்களுடன் எழுதப்பட்ட புத்தகம் இது. 1853-க்குப் பிறகுதான், பாபர் மசூதியை சொந்தம் கொண்டாடும் போக்கு ஆரம்பித்தது. அதற்கென ஒரு கதை உருவாக்கப்பட்டது என்பதுதான் இவரது புத்தகத்தின் வாதம்.

அயோத்தியில் முதன் முதலாக அலக்ஸாண்டர் கன்னிங்கம் தொல்லியல் சர்வேயை மேற்கொண்டபோது, அங்கே பௌத்த விகாரைகளின் இடிபாடுகள் இருந்தனவே தவிர, கோவில்களின் இடிபாடுகள் எதையும் அவர் பார்க்கவில்லை என்பதையும் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் சுஷில்.

படிக்க:
♦ நாடுகளின் செல்வம் | பொருளாதாரம் கற்போம் – 54
♦ அமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் !

இந்தப் புத்தகத்தை எழுதியதால் ஏற்பட்ட பிரச்சனைகளால் தனிமைப்படுத்தப்பட்டு, மனம் நொந்து 2018-ல் செத்தே போய்விட்டார் சுஷில்.

இதைவிட கொடூரம் அந்தப் புத்தகம் இப்போது எங்கேயுமே கிடைப்பதில்லை என்பதுதான். Archive.orgல் இரவல் பெற்று வாசிக்கலாம் அவ்வளவுதான்.

சுஷில் ஸ்ரீவஸ்தவா குறித்து ஒரு அட்டகாசமான கட்டுரையை கேரவான் இதழ் வெளியிட்டிருக்கிறது. அதற்கான இணைப்பு:

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க