அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 54

அத்தியாயம் பதினொன்று | ஆடம் ஸ்மித்: பொருளாதார முறையை உருவாக்கியவர் | நாடுகளின் செல்வம்

அ.அனிக்கின்

1767-ம் வருடத்தின் வசந்த காலத்தின் போது ஸ்மித் ஓய்வுக்காக கெர்கால்டிக்கு சென்றார்; அடுத்த ஆறு வருட காலம் அங்கேயே அநேகமாகத் தொடர்ந்து இருந்தார். இந்தக் காலம் முழுவதையும் தன்னுடைய புத்தகத்தை எழுதுவதில் கழித்தார். ஒரே மாதிரியான வாழ்க்கை முறையும் தன்னுடைய காலத்தையும் சக்தியையும் ஒரே நோக்கத்துக்காக மிகவும் அதிகமாக ஒன்று திரட்டிச் செலவிடுவதும் தன்னுடைய உடல் நலத்தைப் பாதிக்கின்றன என்று தன்னுடைய கடிதங்களில் ஒன்றில் எழுதினார்.

1773-ம் வரு டத்தில் லண்டனுக்குப் புறப்படும் பொழுது தன் உடல் நிலை அதிக பலவீனமாக இருப்பதாக உணர்ந்த படியால், தனக்கு மரணம் ஏற்படுமானால் தன்னுடைய இலக்கிய பாரம்பரிய உரிமைகளை ஹியூம் பெற வேண்டும் என்று எழுதிவைத்தார். தன்னுடைய புத்தக வேலை முடிந்துவிட்டதாக அந்தப் பிரயாணத்தின் போது அவர் நினைத்தார். இதற்குப் பிறகு, அந்தப் புத்தகத்தை முடிப்பதற்கு இன்னும் மூன்று வருடங்கள் அவருக்குத் தேவைப்பட்டன. கிளாஸ்கோ சொற்பொழிவுகள் எனப்படுகிற அவருடைய தொடக்க நிலைப் பொருளாதார ஆராய்ச்சிகளுக்கும் நாடுகளின் செல்வம் புத்தகத்துக்கும் இடையில் கால்நூற்றாண்டுக்கால இடைவெளி இருக்கிறது. நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் உண்மையிலேயே அவருடைய வாழ்க்கையின் மகத்தான சாதனை என்று கூறவேண்டும்.

நாடுகளின் செல்வத்தின் இயல்பையும் காரணங்களையும் பற்றி ஓர் ஆராய்ச்சி என்ற நூல் 1776-ம் வருடம் மார்ச் மாதத்தில் லண்டனில் வெளியிடப்பட்டது. அந்த நூல் ஐந்து பாகங்களைக் கொண்டதாகும். முதல் இரண்டு பாகங்களில் ஸ்மித்தினுடைய தத்துவ அமைப்பின் அடிப்படையான கோட்பாடுகள் விளக்கப்படுகின்றன. அவருடைய அமைப்பு அதற்கு முந்திய நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில, பிரெஞ்சு பொருளியலாளர்களின் கருத்துக்களில் பலவற்றைப் பொதுமையாக்கி முழு நிறைவாக்குகிறது.

முதல் புத்தகம் சாராம்சத்தில் மதிப்பு, உபரி மதிப்பு பற்றிய ஆராய்ச்சியைக் கொண்டிருக்கிறது. உபரி மதிப்பு என்பதை லாபம், நிலக்குத்தகை என்ற ஸ்தூலமான வடிவங்களைக் கொண்டு ஸ்மித் ஆராய்கிறார். இரண்டாவது பாகம் மூலதனத்தின் தன்மையும், குவிப்பும் பயன்படுத்தலும் குறித்து என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. எஞ்சியுள்ள மூன்று பாகங்களிலும் ஸ்மித் தனது தத்துவத்தைப் பிரதானமாக பொருளாதாரக் கொள்கைக்கும் ஓரளவுக்கு வரலாற்றுக்கும் கையாள்கிறார். மூன்றாவது பாகம் அளவில் சிறியது; அது நிலப்பிரபுத்துவத்திலும் முதலாளித்துவ உருவாக்க சகாப்தத்திலும் ஐரோப்பியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆராய்கிறது. நான்காவது பாகம் விரிவானது; அது அரசியல் பொருளாதாரத்தின் வரலாறாகவும் விமர்சனமாகவும் இருக்கிறது. அதில் எட்டு அத்தியாயங்கள் வாணிப ஊக்கக் கொள்கையினருக்கும் ஒரு அத்தியாயம் பிஸியோகிராட்டுகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மிகவும் பெரியதாகவுள்ள ஐந்தாம் பாகம் நிதியைப் பற்றி, அரசு வருமானம், செலவுகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அடர்த்திமிக்க ஸ்தூலமான விவரங்களைக் கொண்ட இந்தப் புத்தகங்களில் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி ஸ்மித்தினுடைய மிகவும் குறிப்பிடத்தக்க கருத்துக்கள் இடம் பெறுகின்றன.

அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றிலேயே அதிக சுவாரசியமான புத்தகங்களில் ஒன்று நாடுகளின் செல்வம் என்பதில் சந்தேகமில்லை. வால்டர் பேஜ்காட் கூறியது போல, அது பொருளாதார ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, “பழைய காலத்தைப் பற்றி மிகவும் வேடிக்கையாக எழுதப்பட்ட புத்தகமாகும்”. கெனேயின் சுவையற்ற பகுப்பாராய்ச்சிகளுக்கும் டியுர்கோவின் தேற்றங்களுக்கும் ஆழமான சூக்குமப்படுத்தலைக் கொண்டிருக்கும் ரிக்கார்டோவின் நுட்பம் நிறைந்த கோட்பாடுகளுக்கும் ஸ்மித்தின் நூலுக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது. அதில் விரிவான புலமையும் நுட்பமான காட்சிப் பதிவும் தற்சிந்தனையான நகைச் சுவையும் இருக்கின்றன.

நாடுகளின் செல்வம் நூலைப் படிப்பவர்கள் குடியேற்றங்களையும் பல்கலைக் கழகங்களையும், யுத்தத்தையும் வங்கித் தொழிலையும், வெள்ளிச் சுரங்கங்களையும் கடத்தலையும் பற்றி, இன்னும் அதிகமான பொருள்களைப் பற்றி சுவாரசியமான பல விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். நவீனச் சிந்தனையின்படி பார்க்கும் பொழுது இவற்றில் பெரும்பாலானவைகளுக்கும் பொருளாதாரத் தத்துவத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் ஸ்மித் அரசியல் பொருளாதாரம் என்பது எல்லாவற்றையும் தழுவிய சமூக விஞ்ஞானம் என்று நினைத்தார்.

படிக்க :
நடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் !
♦ HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !

அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான ஆராய்ச்சி முறை தர்க்க ரீதியான சூக்குமப்படுத்தல் என்பதாகும். பொருளாதாரத்தில் அடிப்படையான ஆரம்ப இனங்களின் சில தொடர்வரிசைகளை நிறுவி ஆதாரமான சார்பு நிலைகளின் மூலம் அவற்றைத் தொடர்புபடுத்தினால், மென்மேலும் சிக்கலான, ஸ்தூலமான சமூக நிகழ்வுகளை ஆராய்வதை நோக்கி ஒருவர் முன்னேற முடியும். ஆடம் ஸ்மித் இந்த விஞ்ஞான முறையை வளர்த்துச் சென்றார். அவர் உழைப்புப் பிரிவினை, பரிவர்த்தனை, பரிவர்த்தனை மதிப்பு போன்ற இனங்களை ஆதாரமாகக் கொண்டு தன்னுடைய அமைப்பை நிறுவுவதற்கு முயற்சித்தார். பிறகு அவற்றிலிருந்து முக்கியமான வர்க்கங்களின் வருமானங்களுக்கு முன்னேறினார்.

அவருடைய நூலில் எண்ணற்ற வர்ணனைகளும் பிற செய்திகளை விரிவாகக் கூறுதலும் இடம் பெற்றுள்ளன. ஆனால் மேலே சொன்ன அர்த்தத்தில் பார்க்கும் பொழுது அவை குறிப்பிட்ட பிரத்யட்ச மதிப்பைக் கொண்ட பொருள் விளக்கங்கள் என்று கருதலாம். ஆனால் விஞ்ஞான ஆராய்ச்சியில் உயர்வான தரத்தை ஸ்மித் நெடுகிலும் கையாள முடியவில்லை. வர்ணனைகளும் மேலெழுந்த வாரியான கருத்துக்களும் அவரை உந்தித்தள்ளிக் கொண்டு சென்றபடியால் தனது ஆழமான பகுப்பாராய்ச்சி முறையை அவர் அடிக்கடி கைவிட்டார். இந்த இரு பக்கத்தன்மை புறநிலையில் அந்தக் காலத்தின் கூறுகளாலும் விஞ்ஞானத்தில் ஸ்மித்தின் இடத்தினாலும், அகநிலையில் அவருடைய அறிவின் தனிவகையினாலும் நிர்ணயிக்கப்பட்டது.

இதைப் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்:

“இடைவிடாத முரண்பாட்டில் அதிகமான எளிமையோடு ஸ்மித் முன்னேறுகிறார். ஒரு பக்கத்தில், அவர் பொருளாதார இனங்களுக்கு இடையே இருக்கும் உள்ளார்ந்த தொடர்பை அல்லது முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் தெளிவாகப் புலப்படாத கட்டமைப்பைத் தேடிக் கண்டு பிடிக்கிறார். மறுபக்கத்தில், அதே சமயத்தில் இந்தத் தொடர்பை அது போட்டி என்ற நிகழ்வில் தோன்றுகின்ற விதத்தில் அப்படியே எடுத்துரைக்கிறார்; விஞ்ஞான ரீதியான முறையைப் பின்பற்றாத சாதாரணமான பார்வையாளருக்கு எப்படித் தோன்றுமோ அப்படியும், முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுப் போக்கில் உண்மையிலேயே அக்கறை கொண்டவருக்கும் சம்பந்தப்பட்டவருக்கும் தோன்றுகின்ற விதத்திலும் அப்படியே எடுத்துரைக்கிறார். இக்கருதுகோள்களில் ஒன்று முதலாளித்துவ அமைப்பின் உள்தொடர்பை, அதன் உள்ளமைப்பைத் துருவி ஆராய்கிறது. மற்றொரு கருதுகோள் வாழ்க்கையின் வெளிப்புற நிகழ்வுகளை அவை தோன்றும் விதத்தில், தெரிகின்ற விதத்தில் எடுத்துக் கொண்டு அவற்றை மொட்டையாக வர்ணிக்கிறது, பட்டியல் கொடுக்கிறது, மறு கணக்கிடுகிறது, வடிவ ரீதியான வரையறைகளில் ஒழுங்குபடுத்துகிறது. ஸ்மித்திடம் இந்த இரண்டு விதமான அணுகுமுறைகளும் ஒன்றுக்குப் பக்கம் மற்றொன்று குதூகலமாகச் செல்வதோடு மட்டுமல்லாமல் அவை ஒன்றோடொன்று கலந்து பிணைந்து அடிக்கடி ஒன்றையொன்று மறுத்துக் கொள்ளவும் செய்கின்றன” (1)

இன்னும் மேலே எழுதுகிற பொழுது ஸ்மித்தின் கடமை இரட்டை அம்சத்தைக் கொண்டிருந்த படியால் அவருடைய இரு பக்கத்தன்மை நியாயமானதே என்று மார்க்ஸ் கூறுகிறார். பொருளாதார அறிவை ஒரு அமைப்பாக ஒழுங்குபடுத்த முயற்சிக்கும் பொழுது உள்ளார்ந்த தொடர்புகளைப் பற்றி சூக்குமமான பகுப்பாராய்ச்சியைக் கொடுக்க வேண்டியிருந்ததோடு மட்டுமல்லாமல், முதலாளித்துவ சமூகத்தை வர்ணிப்பதும் அதற்குரிய வரையறைகள், கருதுகோள்களைத் தேர்ந்தெடுப்பதும் அவசியமாக இருந்தது.

படிக்க :
தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !
♦ தமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி

ஸ்மித்திடமிருந்த இரு பக்கத்தன்மை, அடிப்படையான விஞ்ஞானக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில் காணப்பட்ட பொருந்தாத்தன்மை அரசியல் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சியில் அதிகமான முக்கியத்துவம் உடையதாக இருந்தது. ஸ்மித்தை முதன் முதலாகக் குறை சொன்னவர் அநேகமாக டேவிட் ரிக்கார்டோவாகவே இருக்கும். அவர் ஸ்மித் என்ற பகுப்பாய்வாளரை ஸ்மித் என்ற வர்ணனையாளரிடமிருந்து பாதுகாத்தார். ஆனால் ரிக்கார்டோவிலிருந்து வேறுபட்ட பல எழுத்தாளர்களும் நாடுகளின் செல்வத்திலிருந்து மேற்கோள்களைக் கையாண்டார்கள். இவர்கள் ஸ்மித்தின் மேலெழுந்த வாரியான, கொச்சையான கருத்துக்களை வளர்த்துச் சென்றார்கள்.

விஞ்ஞானம் என்ற வகையில் அரசியல் பொருளாதாரத்தின் ஆராய்ச்சிப் பொருளைப் பற்றி ஸ்மித் மிகவும் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார்; அது இன்றைக்கும் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. அரசியல் பொருளாதாரத்துக்கு இரண்டு அம்சங்கள் உண்டு. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பொருளாயத வசதிகளின் உற்பத்தி, விநியோகம், பரிவர்த்தனை, நுகர்வு பற்றிய விதிகளை, மனிதனுடைய விருப்பத்துக்குச் சம்பந்தமில்லாத வகையில் இயங்குகின்ற விதிகளை ஆராய்கின்ற விஞ்ஞானமாகும். இது முதன்மையான அம்சமாகும்.

ஸ்மித் தன்னுடைய அறிமுகத்தில் முதல் இரண்டு புத்தகங்களிலும் எதைப் பற்றி எழுதப் போகிறேன் என்று எடுத்துக் கூறும் பொழுது அவர் உண்மையில் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய இந்த அறிவையே விளக்கிக் கூறுகிறார். அவர் சமூக உழைப்பின் உற்பத்தித்திறன் வளர்ச்சியின் காரணங்களை, சமூகத்திலுள்ள வெவ்வேறு வர்க்கங்களுக்கும் குழுவினருக்கும் இடையே உற்பத்திப் பொருளின் விநியோகத்தின் இயற்கையான வரிசைக்கிரமத்தை, மூலதனத்தின் தன்மையை, அதன் படிப்படியான திரட்டலின் சாதனங்களை ஆராய்வதற்கு உத்தேசிக்கிறார்.

இது சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பைப் பற்றிய ஆக்க முறையான, பகுப்பாய்வு அணுகுமுறையாகும். அது யதார்த்தம் எப்படிப்பட்டது என்பதையும் இந்த யதார்த்தம் எப்படி ஏன் வளர்ச்சியடைகிறது என்பதையும் ஆராய்கிறது. ஸ்மித் அரசியல் பொருளாதாரத்தைப் பிரதானமாக சமூகப் பிரச்சினைகளின், சமூக வர்க்கங்களுக்கு இடையே உள்ள உறவுகளின் பகுப்பாய்வு எனப் பார்க்கிறார் என்பது முக்கியமானதாகும்.

ஆனால் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அரசியல் பொருளாதாரம் புற நிலையான ஆராய்ச்சியின் மூலம் செய்முறைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பது ஸ்மித்தின் கருத்தாகும். அது ஒரு பொருளாதாரக் கொள்கையை வலியுறுத்தி சிபார்சு செய்ய வேண்டும். அந்தக் கொள்கை “மக்களுக்கு அதிகமான வருமானத்தை அல்லது வாழ்க் கைக்குத் தேவையான வருமானத்தை ஏற்படுத்த வேண் டும்; அல்லது அவர்கள் தாங்களாகவே அத்தகைய தேவை யான வருமானத்தைப் பெறுவதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும் என்பது இன்னும் பொருத்தமானதாகும்.”(2) எனவே சமூகத்தில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு நிலவ வேண்டும் என்பதை அரசியல் பொருளாதாரம் ஆதரிக்க வேண்டும்.

இது இயல்பான செய்முறை அணு குமுறையாகும். இப்படிப்பட்ட அணுகுமுறையில் பொருளியலாளர் “செல்வம் வளர்ச்சியடைவதற்கு” என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை காண முயல்கிறார்.

இரண்டு அணுகுமுறைகளுமே பொதுவாக இடைத் தொடர்பு உடையவையாகும்; எந்த மாதிரியான பொருளாதாரக் கருதுகோளிலும் ஒன்று மற்றொன்றின் குறையை நிரப்புகிறது. எனினும் பிற்காலத்தில் பிரபலமான அறிஞர்கள் பலருக்கு முதல் அல்லது இரண்டாவது அணுகுமுறை குறியடையாளமாக இருந்தது என்பதை நாம் பின்னர் காண்போம். “ஸேய் மரபு” அதன் “நேர்க்காட்சிவாதத்தைப்” பற்றிப் பெருமை கொண்டு இயல்பான அணுகுமுறையை நிராகரிப்பதை வலியுறுத்தியது; ஆனால் ஸி ஸ்மான்டி பிரதானமாகத் தான் விரும்பிய வழியில் சமூகத்தை மாற்றியமைப்பது எப்படி என்று காட்டுகின்ற விஞ்ஞானமே அரசியல் பொருளாதாரம் என்று கருதினார். ஆனால் ஸ்மித் தனக்குரிய பன்முகத்தன்மையோடு இரண்டு அணுகுமுறைகளையும் அங்கக ரீதியாக இணைத்துக் கொண்டார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :
 (1) K. Marx, Theories of Surplus-Value, Part 11, Moscow, 1968, p. 165.
(2) A. Smith, The Wealth of Nations, Vol. 1, London, 1950, p. 395.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க :

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க