நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 09

நெடுத்தூரத்திற்கு அப்பால் – எங்கேயோ, ஆண்டவனே அறிவான் – போலீஸ் நிலையத்திலிருந்து ஒளிக்கீற்று வருவதை அக்காக்கிய் அக்காக்கியெவிச் கண்டான். அந்த நிலையம் உலகின் மறு கோடியில் இருப்பது போன்று அவனுக்குப் பிரமையுண்டாயிற்று. மைதானத்தில் அடி வைத்ததுமே அவனுடைய குதூகலம் பெருமளவு மறைந்து போயிற்று. எதோ கெட்டது நிகழப் போகிறது என்று நெஞ்சுக்குள் உணர்ந்தவன் போலத் தன் வசமின்றியே எழுந்த திகிலுடன்தான் அவன் மைதானத்தில் புகுந்தான். பின்னே பார்த்தான், அப்புறம் இரு மருங்கிலும் நோக்கினான். நாற்புறமும் கடல் சூழ்ந்திருப்பது மாதிரிப்பட்டது. “பார்க்காமலிருப்பதே மேல்” என்று எண்ணியவனாய், கண்களை மூடிக்கொண்டு நடந்தவன், மைதானத்தின் மறு எல்லை நெருங்கி விட்டதோ எனத் தெரிந்து கொள்வதற்காக விழிகளைத் திறந்ததுமே, இன்னாரென்று தெரியாத இரண்டு மீசைக்காரர்கள் தன் முகத்திலிடிப்பது போல அவ்வளவு அருகே நிற்கக் கண்டான்.

அவன் கண்கள் இருண்டன, நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொண்டது. எதிரே நின்றவர்களில் ஒருவன் அவன் கோட்டுக் காலரைப் பற்றியவாறே, “இதோ பார், என் கோட்டுத்தான்!” என்று இடிக் குரலில் முழங்கினான். அக்காக்கிய் அக்காக்கியெவிச் “ஆபத்து, காப்பாத்துங்க!” என்று கத்த வாயெடுப்பதற்குள் இரண்டாமவன், எழுத்தனது மண்டையை விடப் பெரிய முட்டியை அவன் மூஞ்சிக்கு நேரே காட்டி, “கூச்சல் போட்டாயோ, தொலைந்தாய்!” என்று பயமுறுத்தினான். அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்குத் தெரிந்ததெல்லாம் அவர்கள் தன் மேல்கோட்டைக் கழற்றிக்கொண்டு கொடுத்த உதையில் தான் வெண்பனியில் தடாரென்று விழுந்தது தான். மேற்கொண்டு எதுவுமே அவன் உணர்வில் படவில்லை.

சில நிமிடங்களுக்குப் பின் ஓரளவு சுய நினைவடைந்து அவன் எழுந்தபோது ஒருவரையும் காணோம். மைதானத்தில் ஒரே குளிராயிருப்பதையும் மேல்கோட்டு இல்லை என்பதையும் உணர்ந்துகொண்டு கூச்சலிடத் தொடங்கினான், எனினும் மைதானத்தின் மறுஎல்லை வரை எட்டுவதற்குக் குரலில் தெம்பு இல்லை என்று பட்டது. புகலற்ற ஆவேசத்துடன், கத்துவதை நிறுத்தாமல் மைதானத்தின் குறுக்காக போலீஸ் நிலையத்தை நோக்கி நேராக ஓடினான். அதன் அருகே, நீள்பிடிக் கோடரி மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்த போலீஸ்காரன், என்ன இழவுக்காக ஒருவன் காததூரத்திலிருந்தே காட்டுக் கூச்சல் போட்டுக்கொண்டு நம்மைப் பார்க்க ஓடிவருகிறான் என்று எண்ணியவனாய் ஓடிவருபவனை ஆவலுடன் நோக்கினான்.

அக்காக்கிய் அவனை நெருங்கியதுமே, “நீ என்ன ஒன்றையுமே பார்க்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறாயா, கண்ணெதிரே மனிதனை வழிப்பறி செய்கிறார்கள், அது கூடப் பார்வையில் படவில்லையோ?” என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கத்தத் தொடங்கினான். போலீஸ்காரனோ, தான் எதையும் பார்க்கவில்லை என்றும், தனக்குக் கண்ணில் பட்டதெல்லாம் யாரோ இரண்டு ஆட்கள் மைதானத்தின் மத்தியில் அவனை நிறுத்தியதை மட்டுமே என்றும், அவர்கள் அவனுடைய நண்பர்கள் போலும் எனத் தான் எண்ணிக் கொண்டதாகவும் சொல்லி விட்டு, இங்கே நின்றுகொண்டு வீணாகத் தன்னைத் திட்டுவதற்குப் பதில் மறுநாள் காலை போலீஸ் இன்ஸ்பெக்டரைப் போய்ப் பார்ப்பது பயனுள்ளதென்றும், அவன் கோட்டைப் பறித்துக் கொண்டவர்களை இன்ஸ்பெக்டர் கட்டாயம் கண்டுபிடித்து விடுவாரென்றும் அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு யோசனை கூறினான்.

அக்காக்கிய் தலைகால் புரியாத குழப்பத்துடன் வீட்டுக்கு ஓடிப்போய்ச் சேர்ந்தான். கன்னப் பொருத்தை ஒட்டியும், பிடரிலும் இப்போதும் அடர்த்தியின்றி வளர்ந்து வந்த அவன் தலைமயிர் பறட்டையாக ஒரே அலங்கோலமாயிருந்தது; மார்பிலும் விலாக்களிலும் காற்சட்டை பூராவும் வெண்பனி அப்பியிருந்தது. தடதடவென்று கதவு தட்டும் சத்தத்தைக் கேட்டு விழித்துக்கொண்ட வீட்டுச் சொந்தக்காரி படுக்கையிலிருந்து தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்து ஒற்றை ஸ்லிப்பரை மட்டும் அணிந்தவாறு, நாணம் காரணமாகச் சட்டையை ஒரு கையால் மார்பை மூடிப் போர்த்திய படி வாயிலருகே ஓடிச் சென்றாள். கதவைத் திறந்து அக்காக்கியின் கோலத்தைக் கண்டதுமே அவள் திடுக்குற்றுப் பின்வாங்கினாள்.

நடந்த விஷயத்தை அவன் தெரிவித்ததும் அவள் அட பாவமே என்று கைகளை உதறி, “நேரே மாவட்ட போலீஸ் கமிஷனரிடமே போவது நல்லது, போலீஸ் இன்ஸ்பெக்டர் உன்னை ஏய்த்துவிடுவான். ‘அது செய்கிறேன் இது செய்கிறேன்’ என்று வாய்ச்சவடால் அடித்துவிட்டு நட்டாற்றில் விட்டு விடுவான். மாவட்ட போலீஸ் கமிஷனரிடம் நேரே போவதே எல்லாவற்றையும் விட மேல், அவர் எனக்கு வேண்டியவர் கூட, ஏனெனில் என்னிடம் ஒரு காலத்தில் சமையல்காரியாயிருந்த பின்லாந்துப் பெண் ஆன்னா இப்போது மாவட்ட போலீஸ் கமிஷனரின் வீட்டில் குழந்தைத் தாதியாக வேலை செய்கிறாள். தவிர அவர் என் வீட்டைக் கடந்து வண்டியில் போகையில் நான் அடிக்கடி அவரைப் பார்த்திருக்கிறேன், ஞாயிறுதோறும் அவர் சர்ச்சுக்குக் கூடச் செல்கிறார், பிரார்த்தனை செய்யும்போது சுற்றுமுற்றும் எல்லாரையும் சந்தோஷத்தோடு நோக்குவார், இவற்றையெல்லாம் காணும்போது அவர் தயாள குணமுள்ளவராகவே இருக்க வேண்டும்” என்று சொன்னாள்.

இந்த அறிவுரையை முடிவுவரை கேட்டுவிட்டு அக்காக்கிய் ஏக்கத்துடன் தளர்நடை நடந்து தன் அறைக்குப் போனான். அந்த இரவை அவன் எவ்வாறு கழித்தான் என்பதை, பிறரது நிலையில் தம்மைக் கற்பனை செய்து பார்க்கத் திறன் கொண்டவர்கள் தாமே நிர்ணயித்துக் கொள்ளுமாறு விட்டுவிடுவோம். மறுநாள் அதிகாலையில் அவன் மாவட்டப் போலீஸ் கமிஷனரைக் காணச் சென்றான், ஆனால் அவர் உறங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். மீண்டும் பத்து மணிக்குப் போனான், அப்பொழுதும் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். பதினொரு மணிக்கு அவன் மறுமுறை வந்த போது அவர் வீட்டில் இல்லை என்ற தகவல் கிடைத்தது. மத்தியானச் சாப்பாட்டு வேளையில் அவன் பின்னுமொரு முறை வந்ததும் நுழைவு அறையிலிருந்த எழுத்தர்கள் அவனை உள்ளே போகவிட மனமின்றி, என்ன காரியம், விவரமென்ன, அப்படி என்ன நடந்து விட்டது என்று சொல்லும்படி கேட்டார்கள்.

ஆகக் கடைசியில் அக்காக்கிய் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக அடித்துப் பேசுவதென்று தீர்மானித்து, தான் மாவட்ட போலீஸ் கமிஷனரை நேரில் காண வந்திருப்பதாகவும், தன்னை உள்ளே விடாமலிருக்க அவர்களுக்கு உரிமை கிடையாதென்றும், தான் துறையிலிருந்து அலுவலக விஷயமாக வந்திருப்பதாகவும், தான் மட்டும் அவர்கள் மேல் குறைகூறி மனுச் செய்து கொண்டால் என்ன ஆகும் என அவர்கள் பார்த்துக் கொள்ளலாம் என்றும் முகத்திலறைந்தாற் போலச் சொன்னான். இதை எதிர்த்துப் பேச எழுத்தர்களுக்குத் துணிவு வரவில்லை. அவர்களில் ஒருவன் கமிஷனரை அழைத்துவரச் சென்றான்.

படிக்க :
குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !
2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்

மேல்கோட்டு பறிக்கப்பட்ட கதையைப் போலீஸ் கமிஷனர் கொஞ்சம் விசித்திரமான முறையில் கேட்டான்.

விஷயத்தின் முக்கிய அம்சத்தில் கவனஞ் செலுத்துவதற்குப் பதிலாக அவன் அக்காக்கிய் அக்காக்கியெவிச்சிடம் “நீ அவ்வளவு நேரங்கழித்து வீடு திரும்பியதேன்? முறைகேடான வீடு எதற்காவது நீ போகவில்லை என்பது நிச்சயந்தானா?” என்றெல்லாம் விவகாரத்துக்கு தொடர்பு இல்லாத ஏதேதோ கேள்விகள் கேட்கத் தொடங்கவே அக்காக்கிய் ஒரேயடியாகக் குழப்பமடைந்து, போலீஸ் கமிஷனர் மேல்கோட்டை மீட்டுத் தருவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பானா மாட்டானா என்று தெரியாதவனாய் வெளியேறினான்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க