நிக்கொலாய் கோகல்
நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 08

ந்த உதவித் தலைமை எழுத்தனோ மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தான். மாடிப்படிக்கு மேலே விளக்கு எரிந்து கொண்டிருந்தது, அவன் இருப்பிடம் இரண்டாவது மாடியில். நடைக்குள் புகுந்ததுமே அக்காக்கிய் அங்கே ரப்பர் மேல்காலணிகள் வரிசை வரிசையாக வைத்திருப்பதைக் கண்டான். அவற்றுக்கு இடையே, சீறிக்கொண்டும் ஆவிப் படலங்களை வெளிவிட்டுக் கொண்டும் அறை நடுவில் நின்றது ஒரு சமோவார். சுவர்கள் மேல்கோட்டுக்களாலும் குளோக் எனப்படும் போர்வைகளாலும் மூடப்பட்டிருந்தன. அவற்றில் சில நீர்நாய்த்தோல் காலர்களும் மகமல் முகப்புக்களுங்கூட வைத்தவை. சுவரின் மறுபுறமிருந்து பேச்சும் கூச்சலும் கேட்டன. காலித் தேநீர் கிளாசுகளும், க்ரீம் ஜாடியும் பிஸ்கட்டுகளும் வைத்த டிரேயுடன் பணியாள் அறைக் கதவைத் திறந்துகொாண்டு வரவும், சத்தம் தெளிவாகக் கணீரென ஒலித்தது. எழுத்தர்கள் கொஞ்ச நேரமாகவே அங்கே கூடியிருக்கிறார்கள் என்பதும் முதல் முறை தேநீர் அருந்தி ஆயிற்று என்பதும் துலக்கமாகப் புலப்பட்டது.

அக்காக்கிய் மேல்கோட்டைக் கழற்றி மாட்டி விட்டு அறைக்குள் நுழைந்ததுமே மெழுகுவத்தி விளக்குகளும், எழுத்தர்களும், சுங்கான்களும், சீட்டாட்ட மேசைகளும் எக்காலத்தில் அவன் பார்வையில் பளிச்சிட்டன. அவன் காதுகளோ, அறையின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்த இடையறாத உரையாடல்களின் குழம்பிய ஒலிகளாலும், நாற்காலிகள் நகர்த்தப்படும் அரவத்தாலும் நிறைந்தன. அவன் அறை நடுவே அசடுவழிய நின்றுகொண்டு என்ன செய்வது என்று மூளையைக் குழப்பிக்கொண்டான். ஆனால், கூடியிருந்தவர்கள் அவன் வந்ததைக் கவனித்துப் பெருங்கூச்சலுடன் அவனை வரவேற்று, அவனது மேல்கோட்டை மறுமுறை பார்வையிடும் பொருட்டு ஒரு மொத்தமாக நடைக்குச் சென்றார்கள். அக்காக்கிய் ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டாலும் களங்கமற்ற உள்ளம் வாய்ந்தவனாதலால் எல்லாரும் தன் மேல்கோட்டைப் புகழ்வதைக் கேட்டு உச்சி குளிராமலிருக்க அவனால் முடியவில்லை. அப்புறம் எல்லாரும் அவனையும் அவன் மேல்கோட்டையும் அறவே மறந்து விட்டு, எதிர்பார்த்தது போலவே சீட்டாட்ட மேசைகளைச் சுற்றிக் குழுமினார்கள்.

அக்காக்கிய்க்கோ இந்தச் சத்தம், பேச்சு, ஆட்களின் கூட்டம் எல்லாமே புதுமையாகவும் விந்தையாகவும் இருந்தன. என்ன செய்வது, கைகளையும் கால்களையும் உடல் முழுவதையுமே எங்கு வைப்பது என்று விளங்காமல் தத்தளித்தான். முடிவில் அவன் சீட்டாடுபவர்கள் அருகே உட்கார்ந்து, சீட்டுக்களைப் பார்ப்பதும் ஆட்டக்காரர் முகங்களை ஒன்று மாற்றி ஒன்றாக நோட்டமிடுவதுமாக இருந்து விட்டு, சிறிது நேரம் சென்றதும் சலிப்புற்றுக் கொட்டாவி விட ஆரம்பித்தான் – அகாலமாகிவிட்டது, அவன் வழக்கமாகத் தூங்கும் வேளை எப்போதோ கடந்துவிட்டதாகையால். அவன் விடை பெற்றுகொண்டு வெளியேறத் துடித்தான். ஆனால் அவனுடைய புதிய மேல்கோட்டுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டுத் தலைக்கு ஒரு கிளாஸ் ஷாம்பெயின் பருகுவது அவசியம் எனக் கூறி எல்லாரும் அவனைத் தடுத்துவிட்டார்கள். ஒரு மணி நேரத்திற்கெல்லாம் உணவு பரிமாறப்பட்டது: ஸலாத் எனப்படும் காய்கறிக் கூட்டு, பொரிக்காத கன்றிறைச்சி, இறைச்சி வடை, க்ரீம் கேக்கு, ஷாம்பெயின் ஆகியன.

படிக்க :
நூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)
போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்

அக்காக்கிய் இரண்டு கிளாஸ் ஷாம்பெயின் அருந்தினான். அப்புறம் அறையில் குதூகலம் அதிகரித்துவிட்டதாக அவனுக்குப்பட்டது. எனினும் நள்ளிரவாகிவிட்டது என்பதையும் தான் எப்போதோ வீடு திரும்பியிருக்க வேண்டும் என்பதையும் மாத்திரம் அவனால் மறக்கவே முடியவில்லை. விருந்தளப்பவன் எதாவது சாக்குப் போக்கு சொல்லித் தன்னைப் போகாது தடுத்துவிடக் கூடாதே என்பதற்காக யாரும் கவனிக்காத படி நழுவி, நடைக்கு வந்து தன் மேல்கோட்டைத் தேடி எடுத்தான். அது தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டு அவனுக்கு நெஞ்சு சுரீர் என்றது. அதை எடுத்து உதறி, ஒரு பொட்டு தூசி இல்லாமல் தட்டித் துடைத்துத் தோள் மேல் போட்டுக்கொண்டு மாடிப்படியிறங்கித் தெருவுக்கு வந்தான். தெருவில் இன்னும் வெளிச்சமாயிருந்தது. செல்வர் வீட்டு வேலைக்காரர்களுக்கும் பலரக மக்களுக்கும் ஓயா அரட்டைக் கூடங்களாக விளங்கிய சில சிறிய பலசரக்குக் கடைகள் திறந்திருந்தன. மூடியிருந்த கடைகளுக்குள்ளிருந்தும் கதவிடுக்கு வழியாக வந்த ஒளிக்கீற்று உள்ளே ஆட்கள் இருப்பதைக் காட்டியது – பணிப் பெண்களும் பணியாட்களும் அவர்கள் எங்கே போய்த் தொலைந்தார்கள் என்று தெரியாமல் எசமானர்கள் தவிக்கும்படி விட்டு விட்டு, மிச்ச அரட்டையை அடித்து முடித்துக் கொண்டிருந்தார்கள் போலும். அக்காக்கிய் உள்ளம் மகிழ நடந்து சென்றான்; மேனியின் ஒவ்வோர் அங்கமும் அசாதாரணச் சலனத்துடன் இயங்க மின்வெட்டுப் போலத் தன்னைக் கடந்து சென்ற சீமாட்டி ஒருத்தியின் பின்னே, எதற்காகவோ தெரியவில்லை, ஓடக் கூடத் தலைப்பட்டான்.

ஆனால் அக்கணமே நின்று, இந்தத் திடீர் விரைவாற்றல் எங்கிருந்து வந்தது என்று எண்ணியவனால் மீண்டும் மிக மிக மெதுவாக நடக்கலானான். சிறிது நேரத்திற்கெல்லாம் முடிவேயின்றி வெறிச்சோடிக் கிடந்த தெருக்களை அடைந்தான். பகல் வேளையிலேயே இவை அழுது வழியும், இரவிலோ கேட்கவே வேண்டியதில்லை. இப்போது அவை இன்னும் வெறுமையாகவும் ஏகாந்தமாகவும் தோற்றமளித்தன; தெரு விளக்குகள் குறைவாயிருந்தன, அப்படித் தென்பட்ட ஒரு சிலவும் அணைந்து போயிருந்தன. நகரசபை அதிகாரிகள் எண்ணெயை மிச்சம் பிடித்தார்கள் போலும். மரவீடுகளும் வேலிகளும் உள்ள பகுதிக்கு அவன் வந்து விட்டான்.

சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஓர் ஆளைக் காணோம், வெண்பனி மட்டுமே தெருக்களில் ஒளிர்ந்தது. சன்னல்களின் பலகைக்கதவுகள் அடைக்கப்பட்டு இருளடைந்து கிடந்த தாழ்ந்த குடில்கள் அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தவை போன்ற தோற்றத்துடன் அவலம் பிடித்த கரிக்கோடாய் நெடுந்தொலை வரை சென்றிருந்தன. அக்காக்கிய் அக்காக்கியெவிச் தெருவின் குறுக்கே எல்லையற்றது போலப் பரந்து கிடந்த விசாலமான மைதானத்தை நெருங்கினான். மைதானத்தின் மறு கோடியிலிருந்த வீடுகள் மங்கலாக, பட்டும் படாமலும் தெரிந்தன. இந்த மைதானம் அவனுக்குப் பயங்கரமான பாலைவனம் போலக் காணப்பட்டது.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க