காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 8-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் இசுலாமியப் பயங்கரவாதிகளென எச். ராஜாவும், பொன்னாரும் அனைவரையும் முந்திக் கொண்டு அறிவித்தனர்.

ஊடகங்களும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களென இரண்டு இசுலாமிய இளைஞர்களின் பெயர்களை உச்சரித்தன. அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பில் உள்ளவர்கள் என்று விறுவிறுப்பைக் கூட்டின. இப்போது தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் குற்றப் பின்னணி உள்ள முஸ்லிம் பெயர் தாங்கிய பலரை பிடித்து போலீஸ் விசாரித்து வருகிறது. முதலில் கைது செய்யப்பட்டவர்களும் கூட வேறு சில வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால் இவர்களனைவருமே போலீசின் வளையத்தில் எப்போதும் இருப்பவர்கள் என்று அறிய முடிகிறது.

கொலை நடந்த குறிப்பிட்ட சோதனைச் சாவடியின் வழியாக குமரி மாவட்டத்திலிருந்து பாறைகளை உடைத்து எடுக்கப்படும் எம்/பி – சேண்ட் பொடிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வெவ்வேறு அளவுகளில் உடைக்கப்படும் பாறைக்கற்கள் ஆகியவை கேரளாவுக்கு கடத்தப்பட்ட போது ஏற்பட்ட மோதல் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் பகுதி மக்களுக்கு இருக்கிறது. ஆனால் விசாரணையின் பரப்பெல்லையில் அது வரவில்லை.

இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட திசைவழியில் விசாரணையை கொண்டு செல்ல ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கூட்டம், அரசுக்கும் போலீசுக்கும் வழங்கும் அழுத்தங்களை அம்பலமாக்கி உள்ளது. இந்த வழக்கு அதன் தர்க்க முடிவை எட்டுவது பற்றி ஆர்.எஸ்.எஸ் – பிஜேபிக்கு எந்த கவலையும் இல்லை. எவ்வளவு தாமதமாகிறதோ அவ்வளவு காலத்துக்கு இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சலிட முடியும் என்று கருதுகிறது. அநேகமாக குமரி மாவட்ட சி.எஸ்.ஐ பிஷப்புக்கு பொன்னார் தொலைபேசி செய்து ஆதரவு தெரிவித்திருப்பார். ‘ஒரு பொய்யாவது சொல்லுங்கள் முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு அஞ்சிக் கிடக்கிறோமென; அந்த வாய்ப்பில் ஒரு கலவரத்தை செய்து விடுகிறோம்’ என்று கெஞ்சாத குறையாக தங்கள் சதி நோக்கத்துக்கு கிறிஸ்தவர்களை ஆர்.எஸ்.எஸ் அழைக்கிறது.

எஸ்.எஸ்.ஐ வில்சனை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் இச்சம்பவத்தை பகடையாக பயன்படுத்தி சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கெதிராக ஒரு மனநிலையை குமரி மாவட்ட கிறிஸ்தவர்களிடம் வளர்க்க ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியினர் பகுதியளவில் முயன்று வருவது குறித்த எச்சரிக்கை உணர்வு அவசியம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ -க்கள் மற்றும் எம்.பி ஆகியோர் கிறிஸ்தவரான கொலையுண்ட வில்சனை கைவிட்டு விட்டதாக ஆர்.எஸ்.எஸ் ஒப்பாரி வைக்கிறது. மாநில அளவில் இச்சம்பவத்தை வைத்து தமிழகம் முஸ்லீம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி விட்டதற்கு உதாரணமாக பொன்னார் ஊடகங்களில் கூறி வருகிறார். இச்சம்பவத்தை பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தார்மீக அடிப்படையில் பலமிழக்க செய்வது எச். ராஜா, பொன்னார் வகையறாவின் திட்டமாக இருக்கிறது.

வில்சன் மரணத்துக்கு ‘நீதி’ கேட்டு ஊர்வலம் போவது, கூட்டங்கள் போடுவதை ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி தனது அன்றாட அரசியல் நடவடிக்கையாக குமரி மேற்கு மாவட்டத்தில் மாற்றி உள்ளது. “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழும்” அவலச்சுவையை இந்த போராட்டங்களில் நாம் கண்டுணர முடிகிறது. தம்மிடம் ஆர்.எஸ்.எஸ் கொள்ள விரும்பும் நட்பு தந்திரமும், தற்காலிகமுமானது என்ற புரிதல் கிறிஸ்தவ மக்களிடம் இருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.

படிக்க :
நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !
அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை

எஸ்.எஸ்.ஐ வில்சன் வீடமைந்திருக்கும் வெட்டுமணியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நித்திரவிளையில் எட்வின் ராஜ் என்ற கிறிஸ்தவ இளைஞன் தனது வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தியதற்காக 2012-ம் ஆண்டு பிஜேபி மாவட்டத் தலைவர் தர்மராஜ் என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஏ-1 குற்றவாளியான தர்மராஜுக்கு ஆதரவாக மார்த்தாண்டத்தில் மறியல் செய்தவர் பொன்னார். பின்னர் அந்த நபருக்கு 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த லட்சணத்தில் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி வில்சன் கொலை விவகாரத்தில் தலையிடுவது நீதியின்பாற்பட்டது என்று யார் நம்புவர்?

இசுலாமிய பயங்கரவாத பிரச்சாரத்தை கையிலெடுக்கும் இந்து தீவிரவாதிகள்.

முஸ்லீம்களுக்கு எதிரான  செயல் திட்டத்தில் கிறிஸ்தவர்களை தற்காலிகமாக இணைத்துக் கொள்ள குடியுரிமை திருத்த மசோதாவை ஆர்.எஸ்.எஸ் கையிலெடுத்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து வரும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக கூறி இருப்பதை சாதகமானதாக ரங்கராஜ் பாண்டே போன்றோர் பார்ப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. சில தீவிர கிறிஸ்தவர்கள் மத்தியகால சிலுவைப்போர் நினைவுகளை கொண்டிருப்பதோடு அமெரிக்க – ஈரான் போர்ப் பதற்றத்தை கிறிஸ்தவ – முஸ்லிம் நாடுகளின் பிரச்சினையாக பார்க்க முயல்பவர்கள். தவ்ஹீத்-ஜம-ஆத் போன்ற அமைப்புகளில் இருப்பவர்களும் கிறிஸ்தவ நம்பிக்கையின் மும்மைக் கொள்கையை கேலி செய்பவர்கள்.

அடித்தட்டு மக்களிடம் இந்த பார்வைகள் செல்வாக்கு பெறவில்லை என்றாலும் அந்த மாற்றத்தை மக்கள் அடைய மதவாதிகள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள் என்பதால் ஒரு விழிப்புநிலை எப்போதும் அவசியமாகிறது. கோவையில் கொல்லப்பட்ட போலீஸ்காரர் செல்வராஜ் ஓர் கிறிஸ்தவர். அவர் இறந்த பிறகு அவரை இந்துவாக்கி, முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு பெரும் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். 98–ல் அரங்கேற்றியது. அந்த கசப்பனுபவத்தை நினைவில் கொள்வது நல்லது.

– ராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க